குடிமகனே…. பெருங்குடிமனே!

பகல் நேரத்தில் பேருந்துகளில் பயணித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஏனோ, அதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொள்வதேயில்லை. அன்று பேருந்திலேயே செல்லலாம் என முடிவெடுத்தேன். பவானி பேருந்து நிலையத்தை அடைந்தபோது, நான் செல்ல வேண்டிய ஊர் வழியே செல்வதற்காக B20 அரசுப்பேருந்து மட்டும் நின்று கொண்டிருந்தது. அது மைலம்பாடி வழியே ரெட்டிபாளையம் வரை செல்லும் என்பது நினைவுக்கு வந்தது.

படம் உதவி.. கூகுள்


வெயில் உச்சந்தலையில் ஊசி போல் குத்திக்கொண்டிருந்தது. இருக்கைகள் நிரம்பி, பலர் நின்று கொண்டிருந்தனர். பேருந்து கிளம்பும்போது ஏறிக்கொள்ளலாம் என பேருந்தின் ஓரத்தில் சோம்பலாய் உறங்கிக்கொண்டிருந்த நிழலில் ஒதுங்கினேன். நிழல் போதவில்லை. பாதி உடலை வெயில் சுட்டெரித்தது. 15 நிமிடப்பயணம் தானே, அனுசரித்துப் போய்விடலாம் என நினைத்துக் காத்திருந்தேன்.

ஒருவாறு ஆடி அசைந்து வந்த ஓட்டுனர், இருக்கையில் அமர்ந்து, கதவை அடித்துச் சாத்தினார். பேருந்து பின் பக்கம் வருவதற்காக, நடத்துனர் இரட்டை விசில் கொடுக்க ஆரம்பித்தார். பின்பக்க படியில் ஏறிக்கொண்டேன். வண்டி முழுதும் நெருக்கமாக நின்றவாறு பலர். வாரநாட்களில் மதியத்தில் ஒரு நகரப்பேருந்தில் இவ்வளவு பேரா என ஆச்சரியமாகவும் அயர்ச்சியாகவும் இருந்தது.

பேருந்து மெல்ல ஊர்ந்து வேகத்தடைகளையெல்லாம் கடந்து மேட்டூர் சாலையில் திரும்பியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ஏதுவாக, ஓட்டுனர் மெதுவாக நகர்த்திக்கொண்டிருந்தார். பின்பக்க படி அருகே கிடந்த கூடுதல் டயர் மீது சில மூட்டை முடிச்சுகள் கிடந்தன. கூடவே ஒரு குடிமகனும் சரிந்து கிடந்தார். அந்த ஆள் இடைவிடாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருந்தார். பேச்சு என்பதைவிட கெட்ட கெட்ட வார்த்தைகள் உதிர்ந்து கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

கடைசி இருக்கையின் வலது ஓரம் அமர்ந்திருந்த பெண்மணி, தன் முகத்தில் முந்தானையைப் போட்டு தூங்குவதுபோல் பாவனையிலிருந்தார். பேருந்தின் இயக்கத்தில் அந்த ஆள் உளறுவது விட்டுவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது.

முதல் நிறுத்தமான குருப்பநாயக்கன்பாளையம் வந்தபோதும் நடத்துனர் பின்பக்கம் வந்து சேரவில்லை. பேருந்து நிற்க முன்பக்கம் சிலர் இறங்கினார்கள், பின்பக்க படியில் ஒருவர் இறங்கினார். பின்பக்கம் இறங்கியவர், அவர்பாட்டுக்கு நகர முற்பட நடுப்பேருந்தில் நின்றிருந்த நடத்துனர் வேகமாக பயணிகளை, இடித்தவாறு பின்பக்கம் வந்துகொண்டே “டிக்கெட், அல்ல்ல்லோ சார், டிக்கெட்” என இறங்கிய நபரை சத்தமான வார்த்தையால் சிறைபிடித்தார்.

“டிக்கெட்ட வாங்குங்க சார், டிக்கெட் என்ன லட்ச ரூபாயா இருக்கப்போவுது, வெறும் 3 ரூவாதான் சார்” என சொல்லிக்கொண்டே ஒரு டிக்கெட்டை அனுப்பினார். கீழே இருந்த ஆள் இருண்ட முகத்தோடு சில்லறைகளைக் கொடுக்க, நடத்துனர் டபுள் விசில் கொடுத்தார். 

“3 ரூவா டிக்கெட்டு இப்படிப் ஓடப்பாக்குறாரே, இதுல பேண்ட் சட்டை இன் பண்ணிட்டு வேற வந்திருக்காங்க” என முனகினார் நடத்துனர்.

நெண்டிமுண்டி படிக்கட்டு அருகே வந்தார் நடத்துனர். நிற்கும் ஆட்களை ஒதுக்கி டயர் மேல் கிடந்த மூட்டை முடிச்சுகளுக்கு லக்கேஜ் போட்டார். கடைசி இருக்கையில் பெண்மணி அருகே இருந்த நபர், டிக்கெட்-லக்கேஜ் எல்லாம் வாங்கினார்.

குடிமகன் குனிந்துகொண்டே முனகிக் கொண்டேயிருந்தார். நடத்துனர் கூட்டத்துக்குள் தன்னை ஒருவாறு சாய்த்துக்கொண்டு, அந்த ஆளின் தோளைத்தொட்டு, “டிக்கெட்ட்ட்ட்…. எங்க போவனும்” எனக் கேட்டார்.

தலையை உலுக்கிச் சிலுப்பிய அந்தக் குடிமகன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைச் சுனாமி அடித்தது.

அந்த ஆளைவிட்டு நிமிர்ந்த நடத்துனர், சில விநாடிகள் இடைவெளி விட்டு, ”அண்ணா கொஞ்ச நவுருங்” என வாகாக இடம் ஏற்படுத்திக்கொண்டு கொஞ்சம் பக்கத்தில் நகர்ந்து, அந்த ஆளின் சட்டைக் காலரைப் பிடித்து “என்னய்யா சொன்னே!” என்றார்.

மீண்டும் வார்த்தைச் சுனாமி வீசியது.

”ச்சட்டீர்… ச்சட்டீர்…” என அந்தக் குடிகாரனின் கன்னத்தில் அறைந்தார் நடத்துனர்.

எனக்கு என்னவோ, போலீஸ் என்கவுண்டர் செய்ததுபோல் தோன்றியது.

’ஒரு அரசு ஊழியன், அதும் ஒரு நடத்துனர், எந்த அதிகாரத்தை வைத்து பயணியை இப்படி அடிக்கிறார்’, என எனக்குள் ஏதேதோ மனித உரிமைக் கருத்துகள் ஓடியது. இங்கு ஒரு மனித உரிமை ஆர்வலர் இருந்திருந்தால் இப்போது என்ன நடக்கும் என யோசித்தேன். நான் உட்பட அங்கே ஒரு கூமுட்டைக்கும் மனித உரிமைகள் குறித்துப்பேச, நெரிசலும், வியர்வையும் இடம் கொடுக்கவில்லை என்றும் தோன்றியது. ஆனாலும் அப்போது தோன்றிய  நினைப்புகள் அனைத்தும் அபத்தமானது, அப்பட்டமான செயற்கைத்தனமானது எனவும் தோன்றியது.

”உன்ன என்றா கேட்டேன், டிக்கெட் எடுனுதானே சொன்னேன். பொம்பள உக்காந்திருக்கிறது தெரியாதா உனக்கு, என்ன வேணும்னாலும் பேசுவியா? சோத்துக்கு வதலா எதப்போட்டாலும் திம்பியா நீ” என பொளேரென்று இன்னொன்று விட்டார்.

அடிவாங்கிய வேகத்தில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த ஆளின் கால் மீது சரிந்து விழ, அவரும் முதுகில் ரெண்டு போட்டார்.

“அய்யோ, சாமி, நா ஒன்னுமே பேசலீங்களே” அதுவரை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்த அந்த குடிகாரனின் வாய் வற்றிப்போனது.

”எங்க போவனும்? காசக்குடு” என நடத்துனர் கேட்க
”மைலம்பாடிண்ணா”

“ஆறு ரூவா குடு”

சட்டைப்பைக்குள் மணிக்கட்டு வரை கை திணித்துத் தேடி, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும், “இந்தாண்ணா” என முனகியவாறே நீட்ட

“ஓ.. ஒரு ரூவாயை வெச்சுக்கிட்டுத்தான், இந்த ஆட்டம் போட்டியா” என நீண்ட விசில் கொடுக்க, பேருந்து குலுங்கி நின்றது.

“இந்தா…. எறங்கு மொதல்ல, உன்ன ஒரு ரூபாய்க்கு கொண்டு உடுறதுக்கு ஒன்னும் கவருமெண்ட்ல வண்டி உடல, எறங்கு நீ” என விரட்ட
அந்த ஆள் டயர் மேல் அப்படியே கிடக்க, எழுந்து இறங்கும் வாய்ப்பில்லையெனத் தெரிந்தது.

அப்படியே சட்டையைப் பிடித்து இழுத்த நடத்துனர், படி வழியே வெளியே தள்ள, கூட்டம் ஒதுங்கி வழிவிட்டது. படி வழியே சரிந்து தள்ளாடி நின்று, முன்னும் பின்னும் ஆட்டம் போட்டார் குடிமகன்.

“டேய் தேவிடியா பையா! என்னைய எறக்கியுட்டுட்டு, வண்டி ஓட்டீருவியாடா நீ!?” என தள்ளாடியவாறே பேருந்தைப் பிடிக்க முயலும்போது பேருந்து நகர்ந்திருந்தது.

முன்னும் பின்னும் ஆடியவாறே கை நீட்டி, கத்திக்கொண்டிருப்பது பின்பக்க கண்ணாடி வழியே ஊமைப்படமாய் தெரிந்தது.

நடத்துனரையும், குடிமகனையும் இரண்டு தட்டுகளில் வைத்து மனசு என்னென்னவோ ஊசலாட்டம் நடத்திக் கொண்டிருந்தது. குடிகாரன் பெண்குறியையொட்டிய வார்த்தைகளை வாந்தியெடுத்தபோதோ, நடத்துனர் அடித்தபோதோ, ஐந்து ரூபாய் இல்லையென நடு வழியில் இழுத்து இறக்கியபோதோ, எதாச்சும் செய்திருக்க வேண்டுமோ அல்லது ஆணியே புடுங்காமல் இப்படியே கடந்து போவதுதான் நல்லதோ என சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்போதே….

“எப்பிடியும் ரெண்டு கோட்டரு போட்ருப்பானுங்க” என்றார் பக்கத்தில் நின்றிருந்த ஆள்

ரெண்டு கோட்டர் எவ்ளோ இருக்கும் என மனசு கணக்கிடும்போதே…

அரசாங்கத்தின் டாஸ்மாக்-க்கு சுமார் 150 ரூபாயை  கொடுத்த ஒரு கொடைவள்ளலை, வெறும் ஐந்து ரூபாய் இல்லையென அவமானப்படுத்தி, இறக்கிவிட்டுவிட்டு வரலாற்றின் பக்கத்தில் கரும்புள்ளியை பதித்துக் கொண்டோமே எனும் எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி அந்த B20 அரசுப்பேருந்து ஊராட்சிக்கோட்டையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

-0-

11 comments:

Anonymous said...

"அரசாங்கத்தின் டாஸ்மாக்-க்கு சுமார் 150 ரூபாயை கொடுத்த ஒரு கொடைவள்ளலை,
வெறும் ஐந்து ரூபாய் இல்லையென அவமானப்படுத்தி, இறக்கிவிட்டுவிட்டு
வரலாற்றின் பக்கத்தில் கரும்புள்ளியை பதித்துக் கொண்டோமே"

நகைச்சுவையாய் சொன்னாலும் நாட்டு நடப்பை நன்றாய் சொன்னீர்கள்.

அருமை...அழகு...

vasu balaji said...

எங்கப் போனாலும் பராக்கு பாக்குறது:)))

ப.கந்தசாமி said...

கொடை வள்ளலை இன்னும் கொஞ்சம் மரியாதையா நடத்தியிருக்கலாமோ?

ஓலை said...

Bala sir munthikittaaru. Enga kathir ulla iruntha samooga aarvalar engap poyittaaru?

anandh said...

avar vaandhi eduththirundha therinjirukkum unga manitha urimai!

Kumky said...

தினசரி இப்படி பார்த்து பார்த்து மனசு இறுகியிருக்கும் அந்த நடத்துனருக்கு..

வேறு வழியில்லை என்றாகிற போது கை நீண்டிருக்கும்...

இது ஒரு புறம் இருக்க...இந்த நாட்டில் குடிகாரர்களை மதிப்பதேயில்லையே என்கிற கேள்வி ஒரு பக்கம்...

Unknown said...

நடத்துனர் அடித்த பொழுது எழுந்த மனித உரிமை ஏன் அந்த குடிகாரன் நடத்துனரை திட்டிய பொழுது எழவில்லை..?

everestdurai said...

எனக்கு என்னவோ, போலீஸ் என்கவுண்டர் செய்ததுபோல் தோன்றியது. உண்மை

குரங்குபெடல் said...

" அங்கே ஒரு கூமுட்டைக்கும் "

சந்தடி சாக்குல எல்லாரையும் வாரிட்டிர்களே . . .

நல்ல பகிர்வு

நன்றி

Unknown said...

"குடிப்பதை யாரும் தவறு என்று சொல்லுவது இல்லை.அவனது சொந்த உழைப்பால் வந்த பணத்தை அரசுக்கு நேரடியாக வரியை செலுத்துகிறான்.அந்த சாராயத்தை வீட்டுக்கு வாங்கி சென்று குடித்து இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எவரும் இது போல பேசி இருக்கவும் இல்லை "
இருந்தாலும் கதிர் சார் நீங்க சொன்ன விதம் அருமை ......

Unknown said...

அனுபவங்கள் கூட சில சமயம் இனிப்பும் கசப்பும்

நீரோடை மகேஷ்.