கடற்கரை மணல் மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு, காற்றை ஆரத்தழுவிக் கொண்டிருக்கும் முன்னிரவு கரையும் நேரம். அக்கம்பக்கத்து மனிதர்கள் பிள்ளை குட்டிகளோடு மணலில் படுத்துறங்க குழுவாக கால்புதைய நடந்து கொண்டிருந்தார்கள். ஏதாவது கொறிக்க வேண்டுமே என்ற நிர்பந்தம் எங்கள் மூவருக்கும் தோன்றிய நேரத்தில், சுண்டல் பெட்டியோடு ஒரு சிறுவன் நெருங்கி வந்தான்.
”கண்ணு, சுண்டல் குட்றா” என நண்பர் கேட்டார்…
முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாத அந்தச் சிறுவன் பெட்டியை கீழே வைத்துவிட்டு, காகிதத்தை எடுத்து கரண்டியில் அள்ளிவைக்கத் துவங்கினான்.
”எவ்வளவுப்பா”
”அஞ்சு ரூவாண்ணே”
”சரி ரெண்டு பொட்டலம் கொடு”
நண்பர்கள் ஆளுக்கொன்றாக கையில் ஏந்திக்கொள்ள நானும் எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தேன். எந்தச் சுவையும் அதில் இருக்கவில்லை. ஏதோ கொறிக்க வேண்டும் என்ற எண்ண நிர்பந்தம் மட்டுமே வாயில் மென்று கரைக்கச்சொன்னது. சுண்டல் கொடுத்தவன் நகரவில்லை. எங்கள் அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.
கடலுக்கு மேல் புறமாய், நகரை நோக்கி ஒரு விமானம் ஊர்ந்து கொண்டிருந்தது. விமானத்தைச் சுற்றிய விளக்குகள் வித்தியாமான வெளிச்சம் பரப்பின, விமானப் புழக்கம் இல்லாத நாங்கள் ஒருவரையொருவர் விமானத்தைப் பார்க்கச்சொன்னோம். புத்திசாலி(!) நண்பர் மட்டும் அது மலேசியன் விமானம் என்று “அடேய் நீ புத்திசாலிடா செல்லம்” என அவரை ஓட்டுவதற்கு அவரே வழிவகை செய்து கொடுத்தார்!
சுண்டல் சிறுவனும் அவனுக்கு தெரிந்த இன்னொரு விமானத்தைச் எங்களுக்குச் சுட்டிக்காட்டினான். அதுவரை அவனிடம் பேசாமல் இருந்த எங்களுக்கும் அவனுக்கும் இடையே இருந்த திரை அகன்றது. நண்பர் கொஞ்சம் மாங்காய்த் துருவல் போடு என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.
அவன் வியாபாரம் பற்றிய பேச்சு திரும்பியது. அடுத்தடுத்து அவன் சொல்வதும் நாங்கள் கேட்பதும் என ஆரோக்கியமான ஒரு உறவு தொடங்கியது.
தேனியைச் சார்ந்த அந்தச் சிறுவனின் பெயர் விஷ்ணு. இங்கு யாரோ சுண்டல் முதலாளி வீட்டில் தங்கி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். அவர்கள் தங்கவைத்து சோறு போடுவதற்காக இவன் தினமும் காலையில் காபி விற்பதும், மாலையில் சுண்டல் விற்பதும் என வேலை செய்து வருகிறான். காலையில் கொடுத்து அனுப்பும் காபியை 300 ரூபாய்க்கும், மாலையில் கொடுத்து விடும் சுண்டலை 700 ரூபாய்க்கும் விற்க வேண்டும். அப்படிச் விற்பனை செய்ய தினமும் 50 ரூபாய் சம்பளம். அதற்கு மேல் விற்றால் வரும் காசை அவனே எடுத்துக்கொள்ளலாம். குறைவான தொகைக்கு விற்றால் திட்டு விழும். உணவு தங்குமிடம் இலவசம். ஊரில் கூலி வேலை செய்யும் அம்மா மட்டும் அப்பா இல்லை, பள்ளியில் படிக்கும் தங்கை.
உடன் வந்திருந்த ஒரு நண்பர் சுண்டலுக்கு கொடுத்தது போக, கூடுதலாய் சில பத்து ரூபாய் நோட்டுகளை அவன் மறுத்த போதிலும் திணித்து பள்ளி நோட்டுகள் வாங்க வைத்துக்கொள்ளச் சொன்னார்.
பகலில் பள்ளி செல்வதும், காலையில் கடற்கரையில் காபி விற்பதும், நள்ளிரவு வரை சுண்டல் விற்பதும் என அவனுக்கு, அவன் வாழ்க்கையை வாழ நேரம் இல்லை என்பதும், அவனுக்கே உரிய பிள்ளைப்பிராயம் கடற்கரைக் காற்றில் கரைந்து போகிறது என்பதும் புரிந்தது. விளையாடித் தீர்க்க வேண்டிய மாலைப்பொழுதில், கற்கக்கூடாத வயதில், கற்கக் கூடாத பாடங்களையும், கடற்கரை அவனுக்குள் கற்றுத் திணிப்பதை, அவன் பேச்சில் உணர முடிந்தது.
தினமும் சம்பளமாகக் கிடைக்கும் 50 ரூபாயை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும், அவ்வப்போது விற்பனையில் அதிகமாகக் கிடைக்கும் தொகையை வைத்து சீட்டுப் போட்டு வருவதாகவும் சொன்னான். அதே சமயம் கடற்கரையில் சிலர் மிரட்டிப் பணத்தை பிடுங்குவது குறித்தும், தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள் குறித்தும் வேறு பட்ட மனநிலைகளோடு பேசிக்கொண்டிருந்தான்.
போகிற போக்கில் பேச்சு வாக்கில் ”எப்படியாச்சும் பத்தாவது முடிச்சுட்டா போதும்ணா” என்றான்.
பணம் கொடுத்த நண்பர் நிமிர்ந்து உட்கார்ந்து, தெம்பாக சொன்னார் “டேய் விஷ்ணு, படிப்பு ஒரு மேட்டர் இல்லடா, பத்தாவது படிச்சவங்க கூட இன்னிக்கு இந்தியா ஃபுல்லா யேவாரம் பண்றாங்க. ஜெயிக்க ஒரு லட்சியம் இருந்தா போதும், ஜெயிச்சுடலாம்டா” என்றார்.
“ஆமாண்ணே, பத்தாவது முடிச்சு எப்படியாச்சும் பால்டெக்னிக் காலேஜ் போகனும்ணே. அதுக்கப்புறம் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கி, கொஞ்ச நாள் டிரைவரா வேலைபார்த்துட்டு கொஞ்சம் காசு சேர்த்து, லோன் போட்டு ஒரு கார் வாங்கி ஓட்டனும்ணே, அதுதான் என்னோட ஆசை” என்றான்.
அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த, என் இன்னொரு நண்பர் தனது சட்டைப் பையிலிருந்து, சில நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அவன் கால்சட்டைப் பையில் திணித்தார். அவன் தடுமாறி எவ்வளவோ மறுத்தான்.
“டேய் நீ சொன்ன உன்னோட லட்சியத்துக்கும், உன்னோட தன்னம்பிக்கைக்கும்தான் இந்தக் காசு, படிக்கிற நோட்டுப் புஸ்தகத்துக்கு வெச்சுக்கோ, உன்னோட அண்ணன் தர்றதா நினைச்சு வெச்சுக்கோ” என்று அவன் மறுக்க மறுக்கத் திணித்தார். தனது முகவரி அட்டையைக் கொடுத்து 10ம் வகுப்பு முடித்தவுடன் கட்டாயம் அழைக்கச்சொன்னார். அதுவரை படிப்பு தொடர்பாக எதாவது உதவி தேவை என்றாலும் அழைக்கச்சொன்னார்.
இருள் கவிழ்ந்த அந்தக் கடற்கரைப் பகுதியில் எதோ வெளிச்சம் பரவியிருப்பது போல், மனதுக்குத் தோன்றியது. அவனுக்குள் தகதகக்கும் அக்னிக் குஞ்சு அவன் லட்சியத்தை நோக்கி நகர்த்தும் என்ற நம்பிக்கையை ஊட்டியது! நேரம் எங்களை அங்கிருந்து நகர்த்தியது, ஆனாலும் அவன் குறித்த பேச்சு நீண்ட நேரம் எங்களிடம் உயிர் வாழ்ந்தது.
நம் அக்கம்பக்கத்தில், முன்னும் புறமும் ஆங்காங்கே சிலபல விஷ்ணுகள் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண பார்வையை கொஞ்சம் கூர்மையாக்குவதும், விசாலமாக்குவதும் தேவைப்படுகிறது. எல்லோருக்கும் எல்லா நேரமும் காசு மட்டுமே தேவைப்படுவதில்லை. பல நேரங்களில் ஏதோ ஒரு அடையாள நம்பிக்கையும், ஆறுதலாய் சில வார்த்தைகளும், மெலிதான தட்டிக் கொடுத்தல்களும் அவசியம் தேவைப்படுகிறது! முடிந்தவரை தட்டிக்கொடுப்போம், தட்டிக்கொடுக்கும் கைகள் வலிப்பதுமில்லை, தாழ்வதுமில்லை.
-0-
23 comments:
:) தன்னம்பிக்கை உள்ளவன் அண்ணா விஸ்ணு நானே பிழைச்சுட்டேன் அவன் பெரிய ஆள வருவான் பாருங்க .
அருமை கதிர்.
(தன்)நம்பிக்கை தான் வாழ்க்கை. எறும்பு போல் தன முன் வரும் தடைகளை அகன்று தன் நோக்கம் நிறைவேற நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் பல.
//எல்லோருக்கும் எல்லா நேரமும் காசு மட்டுமே தேவைப்படுவதில்லை. பல நேரங்களில் ஏதோ ஒரு அடையாள நம்பிக்கையும், ஆறுதலாய் சில வார்த்தைகளும், மெலிதான தட்டிக் கொடுத்தல்களும் அவசியம் தேவைப்படுகிறது! // அதேதாண்ணே!
நெகிழ்ச்சியானதொரு சம்பவம்..தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது.. நண்பர்களின் நேயம் மனிதர்களுக்கான அடையாளம் ரூபாய் கொடுத்ததால் அல்ல,,,,அவனைப் பற்றி அறியவும் பின்னாளில் உதவவும் முற்பட்டதே..விஷ்ணு நீ வெற்றி பெறுவாய் வாழ்த்துக்கள்...
சூப்பர்,எவ்வளவு இருந்தாலும் எதும்மே இல்லையே என்கிற என்னை போன்ற வர்களுக்கு நல்ல தன்னைபிகை தொடர்.
Friend. Kindly give me contact details of Vishnu. mail me at prasannachetty@yahoo.com
// பத்தாவது படிச்சவங்க கூட இன்னிக்கு இந்தியா ஃபுல்லா யேவாரம் பண்றாங்க. //
காத்திக் மொதலாளியோட சொந்த அனுபவம் போல......
நிச்சயம் விஷ்ணுவுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கும்.
பாரட்டுதல்களை தெரிவிக்கிறேன்
இந்த விஷ்ணுவைப்போல் இன்னும் எத்தனைவிஷ்ணுக்கள்தன் லட்சியத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிரார்களோ தெரியவில்லை. அட்லீஸ்ட் இவன் உங்களைப்போல் சில நல்லவர்களின்கண்ணில் பட்டது அவன் அதிருஷ்டம்.அவன் பெரிய ஆளாக வர கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.
Memorable experience for all of you (including vishnu!!!)
ச்ச.. மனதைக் கணக்கச் செய்துவிட்டது. எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கார் நண்பர்.. காசு பணத்தால மட்டுமில்ல அந்த தன்னம்பிக்கைக்கு உயிர் கொடுக்கறமாதிரி அந்த பேச்சு, ஆறுதல் இது எல்லாமே உதவிதான்... ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கத்தான் இத்தனைப் பேரிருக்கோம்.. ஆனா எத்தனைப்பேரு அப்படி வாழறோம்னு தெரியல..
கண்கள் பனிக்கிறது.
:)
Well done,
சென்னையில் இருந்த ஒரு நாளில் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு . நல்லா வரட்டும் அந்த சிறுவன்
அருமையான பதிவு.
உங்கள் மனப்பூர்வ உதவிக்கும், ஊக்குவிப்புக்கும் பாராட்டுக்கள்.
நன்றி.
முடிந்தவரை தட்டிக்கொடுப்போம், தட்டிக்கொடுக்கும் கைகள் வலிப்பதுமில்லை, தாழ்வதுமில்லை.
அருமை சார்
அன்புடன்
நெல்லி பெ.நடேசன்
அமீரகம்
அருமையான, நெகிழ்வாவான பதிவு....(நிச்சயமாய் டெம்ப்ளேட் கமெண்ட் அல்ல)
நெகிழ்ச்சியானதொரு சம்பவம்..தன்னம்பிக்கை பாராட்டத்தக்கது.
பல சமயங்களில் விஷ்ணு போன்றவர்கள் காசு பணம் எதிர்பார்ப்பதில்லை - காசு வாங்குவதை அவமானமாகக் கருதுகிறார்கள். அவர்கள் எதிர் பார்ப்பது மற்ற உதவிகள் தான். அன்பு - பொறுமையாக அவர்களது நிலையினை உணர்வது - மன ஆறுதல் அளிப்பது - ஆலோசனைகள் வழங்குவது - மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது - இவ எல்லாம் தான். நல்லதொரு தலைப்பு - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா
நெகிழ்வான பதிவு
பூங்கொத்துப்பா!
இது அருமை
Excellent article.
Post a Comment