ஊரில் இருக்கும் மகளிடமிருந்து அடுத்தடுத்த அழைப்புகள், தன் பள்ளிக்குச் சென்று அவளுடைய சீருடைகளை வாங்கிவருமாறு. அன்று தாமதமாய் மூன்றரை மணிக்கு மேல் சாப்பிடப் போனவன், சாப்பிடாமல் கூட சீருடைக்கான காகிதத்தை எடுத்துக்கொண்டு பெருந்துறை சாலையில் இணைய குமலன்குட்டை செல்லும் வீதியில் வாகனத்தை விரட்டினேன்.
அது கொஞ்சம் குறுகலான வீதி. அந்த வீதியில்தான் அதிரடிப்படை முகாம் காவல்துறைக் கண்காணிப்பாளரின் அலுவலகம் இருக்கிறது. என்னோடு ஐந்தாம் வகுப்புவரை படித்த நண்பன் அங்குதான் பணியாற்றுகிறான். ஒவ்வொரு முறை அந்த வீதியைக் கடக்கும் போது அனிச்சையாய் அந்த அலுவலகத்தை ஒவ்வொருமுறையும் அவன் நினைவோடு பார்ப்பதுண்டு.
இன்றைக்கு அந்த வீதியில் நுழையும் போதே, அலுவலகத்தின் முன்புற வீதியையொட்டி மறுபுறம் இருக்கும் திட்டில் யாரோ உட்காந்திருப்பதைப் பார்த்தேன். தொலைவிலிருந்து பார்க்கும் போதே அவனாக இருக்குமோ எனத்தோன்றியது. அவன்தான். மிக அருகில் வண்டியை நிறுத்தினேன். சிகரெட் வாசம் அடர்த்தியாய் அடித்தது. அலைபேசியில் இறுக்கமான முகத்துடன் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான். சட்டென எழுந்தவன் தன் கவனத்தை முழுக்க முழுக்க போனில் ’ம்’ கொட்டுவதிலேயே செலுத்தியவனாய் எனது இடது கை மணிக்கட்டு அருகே அழுத்தமாகப் பிடித்தான். சில நொடிகள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாய் பார்த்துக்கொண்டோம். என்னைப் பிடித்திருந்த இறுக்கத்தில் இத்தனை வருடமாய் அடைகாக்கும் நட்பின் வெதுவெதுப்பு எனக்குள் ஊடுருவியது போல் உணர்ந்தேன். அவன் கவனம் அந்த அலைபேசி உரையாடலில் இருந்து மீளவில்லை.
”டேய்….. இங்கேதானே இருப்பே”
ஆமாம் எனத்தலையசைத்தான்
”உடனே போய்ட்டு வந்துடுறேன்” என வார்த்தையாலும், சைகையாலும் சொல்லியவாறு கிளம்ப யத்தனித்தேன்.
சரி என தலையை ஆட்டி விட்டு கையை எடுத்தவன், தொடர்ந்து ’ம்’ என போனில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
ஆழ்ந்து இறுக்கமாய்க் கிடந்த அந்த போனில் இருந்து அவனைப் பிரிக்க நானும், என்னுடைய அவசரத்தைத் தாமதிக்க அவனும் விரும்பவில்லை என்பதாக தோன்றியது. சட்டென அவனைப் பார்த்ததும், அவன் இறுக என் கை பற்றியதுமே அப்போதைக்கு மிக நிறைவாக இருந்தது.
பெருந்துறை சாலை இணைப்புக்கு வந்தடையும் வரை என்னோடு அந்த சிகரெட் வாசம் உடன் வருவது போல் உணர்ந்தேன். சட்டென இடது கை மணிக்கட்டை நுகர்ந்து பார்த்தேன். வழக்கமாய் பிடிக்காத சிகரெட் நாற்றம், அப்போது கொஞ்சம் பிடித்த வாசமாகவே இருந்தது. பள்ளிக்கூடத்தை அடையும் வரை வழியெங்கும் மனது அவனையே சுமந்தது. மிக மெதுவாய்ச் சுழலும் ஒரு காற்றாடி போல் மனதுக்குள் கிறுகிறுப்பாய் அவன் குறித்த சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தன.
அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம், தவிர்க்க இயலாமல் அவன் கையைப் பார்ப்பதுண்டு. பார்க்க அடர்த்தியான காரணமுண்டு. மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன், அவன் கையில் நீளமாக பிளேடால் கிழித்துவிட்டேன். பென்சில் சீவிக்கொண்டிருக்கும் போது நடந்ததாக நினைவு, எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. முழங்கைக்கு கீழே மூன்று அங்குலம் நீளம் இருக்கும்., உள்பக்கமாக, தையல் இட்ட தடிப்பு போல் இன்றும் நீண்டு கருத்துக்கிடக்கும் அதன் தழும்பு.
அப்போது அவன் அம்மாயி வீட்டில் வளர்ந்தான். கிழித்த அன்று மாலையே அவனை இழுத்துக்கொண்டு அவன் அம்மாயி எங்கள் வாசலில் நின்றது. என்னனென்னவோ கேள்விகள் திட்டுகள். காலம் கரைந்ததில் அவை எல்லாம் மறந்து போய்விட்டன. மறக்காமல் இருப்பது, அந்தக் காயத்திற்கு அவன் என்னைத் திட்டாதது, குறை சொல்லாதது, பகைக்காதது. அடுத்த நாளில் இருந்து எனக்கு அவனைச் சந்திக்க கூச்சமாயிருந்தது, ஆனால் அவன் மிக இயல்பாக என்னோடு பழகியது இப்போதும் பசுமையாய் நினைவிலிருக்கிறது. நினைவுகளை அலைந்து, சீவி வகிடெடுத்து பூச்சூடி முடிக்கும் போது, பள்ளியை எட்டியிருந்தேன்.
சீருடை வாங்கி, பள்ளித் திறப்பு எப்போது எனக் கேட்டு, பசியோடு வீட்டுக்குத்திரும்பி, மாடியேறி, முகம் கழுவ குழாய் திறந்து குனிந்து கைகளில் தண்ணீர் ஏந்தும் போதுதான் மணிக்கட்டு கண்ணில்பட அவன் நினைவுக்குள் குப்பென பூத்தான், ஏதோ சிந்தனையில் வேறு வீதிவழியாக வீடு வந்தடைந்ததை நினைத்து மெலிதாய் வெட்கம் சூழ்ந்தது. முகத்தில் தண்ணீரை அறைந்துவிட்டு கையைத் திருப்பி முகர்ந்து பார்த்தேன் சிகரெட் வாசம் ஏதும் அங்கில்லை!
அதன் பின் வந்த சில நாட்களுக்கு, இடதுகை மணிக்கட்டைப் பார்க்கும் போதும், சிகரெட் புகை வாசம் எங்கிருந்தாவது பரவி நுகரும் போது அவன் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை
-0-
15 comments:
ஆழமான நட்பின் வாசம்
classic anna..
Excellent. அட்டகாசம் கதிர்.
ஒரு முறை வடகரைவேலன் சார் ரயில் பிரயாணத்தில் மேல் பெர்த்தில் உள்ளவன் செய்த அட்டகாசத்தை காமெடியாக எழுதிருந்தார், நீங்கள் ஆடோக்ராப்பை நெகிழ்ச்சியை!
எப்படித்தான் இப்படியோ :-)
சில ஞாபகங்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடுகிறது.மணிக்கட்டும் சிகரெட் வாசனையும் !
/நினைவுகளை அலைந்து, சீவி வகிடெடுத்து பூச்சூடி முடிக்கும் போது, பள்ளியை எட்டியிருந்தேன். /
டச்சிங்:))
எவ்வளவு அழுத்தம் இந்த நட்பில்... அழகு வாசம்.. என்னைக்கு படிச்சாலும் மலரச்செய்கிற நினைவுகள்..
நல்ல நட்பிற்கு இலக்கணம்
டச்சிங்.
அவ்வப்போது இப்படியும் எழுதுங்களேன் கதிர்.
நன்றி தினேஷ்குமார்
நன்றி காவேரிகணேஷ்
நன்றி சேது சார்
நன்றி ஷர்புதீன்
நன்றி ஹேமா
நன்றி பலாண்ணா
நன்றி க.பாலாசி
நன்றி VELU.G
நன்றி பாரி
மூன்றாம் வகுப்பு படிக்குபோதே பிளேடு போட்ட ஆளா நீங்க ?
அருமையான நட்பின் வாசம் ,காலத்தால் பிரிந்த எனது நண்பனை நினைத்து பார்க்கிறேன்.
நட்பின் வாசம் நன்று.
//ஆழ்ந்து இறுக்கமாய்க் கிடந்த அந்த போனில் இருந்து அவனைப் பிரிக்க நானும், என்னுடைய அவசரத்தைத் தாமதிக்க அவனும் விரும்பவில்லை என்பதாக தோன்றியது.//
இந்த புரிதல், உரிமை நட்புக்கு மட்டுமே சாத்தியம்.
Arumai Sir
அழுத்தமான நினைவுகள்... பசுமையாக எப்போதும்...
அழகு...
நட்பின் ஆழம் கூடட்டும்...
என் நெற்றி தழும்பை தொட்டுபார்கிறேன், இருபத்தி எட்டு வருடம் பின் நோக்கி , பத்தாயிரம் மைல் தொலைவில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நினைவுக்கு வந்து செல்கிறது...
நட்பும் தளும்பும் மாறுவதில்லை. நல்ல பதிவு.
Post a Comment