உதிர்ந்து கொண்டே இருக்கிறது, உறவுகளுக்கிடையே பூசப்பட்டிருந்த பாச வர்ணம். அது ஒரு காலம், மோட்டார் ரூம் மேல் போடப்பட்டிருக்கும் டியூட் லைட் பைப் மேல் அவ்வப்போது அமரும் காகத்தில் ஏதோ ஒன்று கத்தினால் போதும், ”காக்கா கத்தியிருச்சு, ஒறம்பரை வருமாட்ருக்குதே” என யாராவது சொல்வது, பெரும்பாலும் நடந்தேறியிருக்கிறது. காகம் கரைந்து உறவினர் வரும் நாட்கள், காகத்தின் ஒரு வெற்றியாய் திரும்பத் திரும்பப் பேசப்படும். அப்படி காகம் கரைந்தும் உறவினர் எவரும் வராதது தோல்வியடைந்த நாட்களாகவே தோன்றும். காக்கைக்கு ஏற்பட்ட தோல்வி ஆச்சரியமாய் காக்கைக்கு ஒரு போதும் சோர்வைத் தந்துவிடுவதில்லை.
தொலைபேசி என்ற ஒரு கருமத்தை கண்டிராத நாட்கள் அவை. யார் எப்போது வருவார்களெனத் தெரியாத சுவாரசியம் நிறைந்த நாட்கள். காக்கை கரைந்த நாட்களில், கண்ணி வாய்க்கால் நிறுத்தத்திலிருந்து நீளும் தோட்டத்து வரப்புகளை அடிக்கடி கண்கள் சுகித்துக் கொண்டிருக்கும். காக்கைகள் வெற்றி பெறும் தினங்களில் வயல்வெளிகளில் இருக்கும் அம்மாவோ பாட்டியோ, ”அதா பாரு வர்றாங்க” எனும் குரலையொட்டி கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் உருவத்தை வைத்து வருவது ”இவுங்க” “இல்ல அவுங்க” என ஒரு வித பந்தய மனநிலை கோலோச்சும்.
பக்கத்துத் தோட்டத்து எல்லையோரம் இருக்கும் பள்ளத்து ஓரம் வரை ஓடிச்சென்று அழைத்து வர ஓடுவதில் போட்டியும் நிகழும். ஓடிச் சென்று பார்க்க, அவர்கள் வேறெங்கோ செல்பவர்களாய், உறவினர்களாய் இல்லாமல் போகும் கொடுமையும் நடக்கும். அந்த நேரத்தில் துளிர்க்கும் இயலாமை, கோபம், எரிச்சலை அப்படியே பள்ளத்தில் கரைத்து கருமாதி செய்துவிட்டுத்தான் வரவேண்டும்.
உறவினர்கள் வருகையில் குதூகலமூட்டுபவை அவர்கள் வாங்கிவரும் பலகாரமும் பன்னும், விதவிதமான தொனிகளில் இடைவிடாது விழும் அவர்கள் வீட்டுக் கதைகளும். வந்த எவரும் வந்த வேகத்தில் திரும்பியதாக நினைவில்லை. வந்த உறவு ஊருக்குத் திரும்பும் போது, கைகளில் திணிக்கப்படும் நாணயங்களில் உண்டியல்கள் அவ்வப்போது பசியாறும்.
கால ஓட்டத்தில் மோட்டார் சைக்கிள் பரவலான பிறகு, கண்ணி வாய்க்கால் பக்கம் இருந்த கண்கள், தெற்குப்புறமாய் இருக்கும் வண்டிப்பாதையில் பதிய ஆரம்பித்ததோடு காதுகளையும் தீட்டி காத்திருக்க வைத்தது. எப்போதாவது எழும்பும் வண்டியின் ”டுபு டுபு” சத்தத்திற்கேற்ப மனசு தடதடக்க ஆரம்பிக்கும். வண்டியில் வரும் உறவுக்காரர்களின் வருகையும் கூட எப்படியோ காகம் சொன்ன சோசியத்தின் பலனாகவே பலமுறை இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்திற்கு சற்று முன்னர் உள்ளடங்கியிருந்த தோட்டத்திற்கும் தொலைபேசி இணைப்பு வந்ததன் தொடர்ச்சியாய், உறவினர் வருகையின் மேலிருந்த சுவாரசியமும் தொலை தூரத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டது.
விஞ்ஞானம் எல்லாவற்றையும் தந்தது, அதையொட்டிய தேவைப் பிசாசு எல்லாவற்றையும் கலைத்து, பிரித்துப் போட்டது. வெட்டி விட்ட நொங்குக் குலை சிதறியோடுவது போல் குடும்பமும் திசைக்கொருவராய். ஏதோ ஒரு சமாதானம் எல்லாவற்றையும் அனுசரித்துக் கொண்டு பிரிந்து கிடக்க அனுமதிக்கிறது. ஒன்றா இரண்டா, கிட்டத்தட்ட உறவினர்களின் எல்லா வீடுகளிலும் இது போலவே எப்படியோ நடந்தது.
விருந்துகளுக்கு நேரில் போய் அழைக்கும் சாக்கில், உறவினர்கள் வீடுகளுக்கு அவசரகதியாய் ஒரு முறை சுற்றி வரும் முறையும் ”இனிமே நாங்களும் போன் போட்டு சொல்லிர்றோம், நீங்களும் போன் போட்டுச் சொல்லீருங்க, வந்து போயிக்கலாம்” என்ற ஒற்றைச் சமரசத்தில் குத்துயிரும் குலையுயிருமாய்.
காலம் கடந்த தலைமுறை உள்ளடங்கிய அதே கிராமத்தில், நடுத்தர வயதினர் அருகிலிருக்கும் சிறு நகரத்தில், இளம் தலைமுறையினர் பெரு நகரங்களில் என குடும்பமே உறவினர்களாய் சிதைந்து கிடக்கும் நவீன யுகத்தில், இனி குடும்பத்தை ஒன்றிணைக்கவே கத்திக் கத்தி ஓய்ந்து போக வேண்டியிருக்கும் காக்கை கூட்டங்கள்.
அவ்வப்போது உறவினன் போல் போகும் நான், ஏனோ இந்த முறை கவனித்தேன், அழகாய் சுத்தமாய் இருக்கிறது அதே இடத்தில் இடித்துக் கட்டப்பட்ட மோட்டார் ரூம், முன்பு போலவே டியூப் லைட் பைப்பும் இருக்கிறது. ”இப்பவும் காக்கா கத்துதா?” என்று நாக்கின் நுனி வரை வந்த கேள்வியை அப்படியே விழுங்கினேன்.
தோற்கடிப்பது மனிதர்கள்தான் எனத் தெரியாமல் தோற்றுப் போகும் காக்கைகள் பாவம் தானே!!??
-0-
29 comments:
தோற்கடிப்பது மனிதர்கள்தான் எனத் தெரியாமல் தோற்றுப் போகும் காக்கைகள் பாவம் தானே!
உண்மைதான்..
" கைகளில் திணிக்கப்படும் நாணயங்களில் உண்டியல்கள் அவ்வப்போது பசியாறும்"
அருமை..
"குடும்பமே உறவினர்களாய் சிதைந்து கிடக்கும் நவீன யுகத்தில், இனி குடும்பத்தை ஒன்றிணைக்கவே கத்திக் கத்தி ஓய்ந்து போக வேண்டியிருக்கும் காக்கை கூட்டங்கள்"
அருமையான வரிகள்
மறக்க முடியாத கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்த பதிவு.
ம்கும். இப்படி ஒரு இடுகை வர காக்கா கத்த வேண்டியிருக்கு.
/இனிமே நாங்களும் போன் போட்டு சொல்லிர்றோம், நீங்களும் போன் போட்டுச் சொல்லீருங்க, வந்து போயிக்கலாம்/
செல் நம்பர் குறிச்சிக்குங்க. இல்லீன்னா மிஸ்ட் கால் குடுங்க வந்தாச்சு. ஆனாலும் பரபரப்பான உலகம். போக்குவரத்தை நினைச்சாலே பயமாயிருக்கு. காலத்துக்கு ஏத்தாப்புல கைபேசில அழைக்கிறது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று. முக்கியமா அவனூட்ல நேர போயி கூப்ட தெரியுது. நம்மூட்டுக்கு வந்தா கெவுரத போயிரும் தொரைக்குன்னு லாவணி இல்லாம போகுமே.
ஆனா அந்த எதிர்பார்ப்பு, உண்டிக் காசு எல்லாம் நம்ம பசங்களுக்கு போயே போச். ஆட்டைய போட அப்பா சட்ட இருக்குல்ல. அதுங்களும் ஏங்கப் போறதுல்ல.
இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி .
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
இப்படி ஏக்கத்தோடும், ஆற்றாமையோடும், சக்கரத்தை திருப்பி சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
இனி, எப்பவும் திரும்பவே திரும்பாத காலங்கள்தான்! இல்லையா கதிர்!
அருமையான இடுகை!
பதிவுஅருமை.
பிழியப்பட்ட மனம் பின்னோக்கி நகர்கிறது......
அருமை கதிர்.
மனிதர்கள் அதிகம் வெளியில் புழங்காத இங்கு, வீட்டு பின்னாடி காக்கை கரையும் போது, யாராவது மனுஷங்க வெளிபடராங்கலான்னு பார்ப்பதும் உண்டு.
காக்கை கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள
என்பதை தான் நிரூபித்துக் காட்டிவிட்டேர்களே.
பூங்கொத்து!
எங்க ஊரில் பாத்திரம் தவறினா விருந்தாளி!!!
மனிதம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கும் வேளையில் இனி காக்கைகள் வைத்து உறவு பேணும் வாழ்க்கை நமக்கு கிட்டாது.. மனதை அசைபோட வைத்த பதிவு ...
அட, இதெல்லாம் மறந்தே போச்சு அண்ணே!!! அருமையான வரிகள்!!!!
எத்தனை காக்காக்கள் சேர்ந்து கத்தினாலும் காதில்விழவும்
மாட்டாது இனி.சேராத கூட்டு உறவுகள்.எல்லோர் மனதிலும்
இதே ஆதங்கம் கதிர் !
//காக்கைக்கு ஏற்பட்ட தோல்வி ஆச்சரியமாய் காக்கைக்கு ஒரு போதும் சோர்வைத் தந்துவிடுவதில்லை.//
அருமை.
//யார் எப்போது வருவார்களெனத் தெரியாத சுவாரசியம் நிறைந்த நாட்கள்.//
இனிமையான நினைவுகளை மீட்கும், அதே நேரம் ஏங்க வைக்கும் நல்ல இடுகை.
//இனிமையான நினைவுகளை மீட்கும், அதே நேரம் ஏங்க வைக்கும் நல்ல இடுகை//
//அந்த எதிர்பார்ப்பு, உண்டிக் காசு எல்லாம் நம்ம பசங்களுக்கு போயே போச்.//
I started to gone back 20 years back to dream that village life!
nowadays, pocket money must from Parents.
in 1982-84, 5 paise normal ice candy, 10 paise semiya(vermichelli) ice candy, 25 paise paal ice/ Chocolate ice ..ayyo ayyo! ippa ninaichaalum ..,
ithukku kaasellam oorukku vanthu pora thatha, paatti, mama,athai kodukkura 1 rooba, 2 rooba thaan.
எங்கள் நாட்டில் காகங் களைக் காணவும் அரிதாய் இருக்கிறது .மனிதம் செத்து விட்டதேசத்தில் .
பிறக்க இருக்கும் புது வருடம் இனிதாய் அமையட்டும். வாழ்த்துக்கள்.
இன்றைக்கு நிறையவே காக்கைகளின் சத்தம் கேட்கிறது இடுகைகளில் . வருமுன் விருந்தினர்களே சொல்லிவிட்டே வருவதால் காக்கைகளுக்கு வேலை இல்லை என நினைக்கிறேன்.
இனி சொல்லாமப் பொல்லாம மாப்புவோட அலுவலகத்துக்கு போயிற வேண்டியதுதான்! இஃகி!!
25 வருடங்களுக்கு முன் நினைவுகளை நியபகபடுதுகிறது அருமை அருமை
அம்மாவாசை விரதம் இருந்தது கூரை மேல சாதம் போட்டா வர காக்காயே இப்ப எல்லாம் வர காணோம் :(
காகத்தை நாம் உறவினர் வருகைக்கு அறிவிப்பளர்கலாக கருதுவதற்கு காரணம் . பகிர்தல் குறிப்பாக விசேச தினங்களுக்கு முன் தான் நமது பெரியவர்கள் காகம் கரைந்தால் ஓரம்பரை வருவாங்கனு நினைகறேனு சொல்லுவாங்க . ஒருவரோடு ஒருவர் பகிர்தலை கற்றுகொடுக்க காகத்தை உதரணமாக காட்டினார்கள் . நான் அவங்க தர 50 பைசா 1 ருபாய் நாணயங்களை வாங்கி தின்பண்டங்கள் , குறிப்பாக இலந்தை வடை , இலந்தை பொடி , சக்கர மிட்டாய் வாங்கி தின்று விடும் ஆவலில் காத்து இருப்பேன் . இப்ப எல்லாம் அப்படி காகங்களும் கரைவதில்லை உறவினர்களும் வருவதில்லை . நாமும் பகிர்ந்து கொள்ளுவதை பற்றி அக்கறை கொள்வதும் இல்லை . கவனிப்பார் இல்லாத இடத்தில் கவலைகள் தான் இருக்கும் காகம் இருப்பதில்லை .
ஆமா அண்ணா இப்ப எல்லாம் காகம் குருவி செம்பூத்து நாரை கொக்கு பச்சை கிளி ன்னு சாவகாசம நம்ம வயலையும் கூரைளையும் மொட்டுவளையும் உக்காந்து ஊர்கதைகள் பேசும் பறவைகளை அறவே காணோம் .
ஏன் தெரியுமா ?... சில புத்தி ஜீவிகள் அலைபேசி கோபுரங்களின் மீது பலி சுமத்துகிறார்கள் . இன்னமும் அலை பேசி கோபுரங்கள் எட்டி பார்க்காத தொலைவில் உள்ள சிறு கிராமங்களில் கூட இவைகளை பார்க்க முடியவில்லை என்பதை அறியாமல் .
நாம் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தோம் இன்று மருந்தே உணவாகி போனதன் மர்மம் தெரியாமல் விழிகிரார்கள்.
இதோ இப்போது இந்த சிறு பறவை இனங்கள் . ( இவை பொதுவான மக்களுக்கு தெரிந்தது . விவசாயிகளுக்கு உறவாக நண்பனாக இருந்த எண்ணற்ற பூச்சி இனங்கள் எத்தனையோ இல்லாமலே போய் விட்டன . ( இங்கே பார்ம் வேலி விளையாடும் விவசாயிகளுக்கு எங்கே தெரிய போகிறது பூச்சிகளின் சேவை . ) அடுத்து மனிதர்கள் .
காத்திருங்கள் மக்களே இதே போன்ற அழிவின் விளிம்பிற்கு நாம் கொண்டு செல்லபடுவோம் . நமது சந்ததியை பற்றி நமக்கு என்ன அக்கறை . இப்போதே இந்த கணமே வாழ்ந்து விடலாம் .
விவசாயத்தில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகள் உரம் கலைஎடுப்பங்கள் எல்லாம் நமையும் ஒரு நாள் இல்லாமல் செய்து விடும் .
// காக்கைக்கு ஏற்பட்ட தோல்வி ஆச்சரியமாய் காக்கைக்கு ஒரு போதும் சோர்வைத் தந்துவிடுவதில்லை.//
தன்னம்பிக்கை, ஒற்றுமை, உழைப்பு ... இவை போன்று எல்லாவற்றிற்குமே , நமக்கு உதாரணங்களாய்த் தெரிவது பிற உயிரினங்கள் தான் கதிர்.
இதுதான் வாழ்க்கை, இதுதான் விதி.. கூண்டுவண்டியில் புட்டப்பட்ட குதிரைகள்போல ஓடிக்கொண்டேயிருக்கவேண்டியதுதான். அக்கம்பக்கம் பார்வைகள் திருப்பாதவாறு... எத்தனையோ கடந்துவந்தாச்சு...காக்காயாவது குருவியாவது..முடிஞ்சளவுக்கு ஞாபகத்தில இருக்கிற இந்த பழமைகளை எழுதி வைச்சிடுவோம். இதெல்லாமே நம் சந்ததிகளுக்கு வரலாறு...
அடடா.. பீலிங்ஸ்... சேம் பீலிங்ஸ் தான் எனக்கும்..
எனக்கு பழமையண்ணன் யோசனை பிடிச்சிருக்கு ;)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கதிர்
ஒன்றிணைக்கவே கத்திக் கத்தி ஓய்ந்து போக வேண்டியிருக்கும்..அது சரி எங்க ஊருக்கு தை நோன்புக்கு வாங்க.
2010ம் ஆண்டின் முன்னணி வலைப்பதிவுகள் http://www.tamilmanam.net/top/blogs/2010/1
10 வது இடம்.. நல்வாழ்த்துக்கள்..
தோற்றது மனிதமும் ,உறவு முறையும் காக்கை அல்ல..அருமை.
ஆஹா.....படிக்கும் போதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி,முடித்தபின் தொலைத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று என்ற வெருமை மனதில்...ஒரு கலவையான உணர்ச்சி வந்து போகிறது...
காலத்தின் கட்டாயம்....
Post a Comment