ஒரு ஆய்வாளரும் இரு முதலாளிகளும்

திருப்பூர் நகரின் ஒரு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம். கணக்குப் பிரிவில் பணிபுரிந்த அந்த நபர் அது வரை நம்பிக்கையானவராகத்தான் இருந்தார். ஆனால், அன்றைக்கு அந்த நேர்மை பிறழ்ந்து போனது. வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச்சென்ற ஏழு லட்சத்து அறுபதாயிரம் பணத்துடன் தன் சொந்த ஊருக்கு ஓடிப்போய்விடுகிறார். உடனடியாக நிறுவன முதலாளி அடுத்த மாவட்டத்தில் இருக்கும் பணத்தை திருடிய நபரின் சொந்த ஊருக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு அலறி அடித்து ஓடி வருகிறார். ஆய்வாளரின் திறமை, அதிரடி நடவடிக்கையில், அடுத்த சில மணி நேரத்தில் பணம் மீட்கப் படுகிறது. மீட்ட பணத்தை ஆய்வாளர் எண்ணிப் பார்த்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். பணத்தை எண்ணிப் பார்த்தவர் பணம் முழுதும் இருக்கிறது என்கிறார். 

“சரியா இருக்கா, சரி போய்ட்டு வாங்க” என்கிறார் ஆய்வாளர்

“சார்ர்ர்ர், உங்களுக்கு எதாவது?” முதலாளி

“அட, அதெல்லாம் ஒன்னும் வேணாம், கிளம்புங்க”

ஒன்றும் பேசாமல் பையிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் கட்டை எடுத்து மேசை மேல் வைத்து விட்டு வெளியேறுகிறார் அந்த முதலாளி.

ரு கிளை அலுவலகத்தில் விற்பனை பிரிவில் இருக்கும் ஆள் பணத்தை ஏமாற்றுகிறார் என நேரடியாக விசாரிக்கச் செல்கிறார் இன்னொரு முதலாளி. விசாரிக்கும் போது அந்த விற்பனை ஆளை ஓங்கி அறைகிறார். அடிவாங்கியவன் நேரடியாக காவல் நிலையம் செல்கிறான். 

முதலாளி அந்தக் காவல் நிலைய ஆய்வாளரின் நண்பரை சிபாரிசு பிடிக்கிறார். அதே சமயம் புகார் கொடுத்த நபரை ”எதுக்கு உன்ன அடிச்சார்?” என்று விசாரித்ததில் தான் செய்த தவறுகளை அடிவாங்கியவன் உளறுகிறான்.

ஆய்வாளரைத் தொடர்பு கொண்ட முதலாளியின் நண்பரிடம் “கம்ப்ளைண்ட் குடுத்தவனே, தப்பை ஒத்துக்கிட்டான். ஒன்னும் பிரச்சனையில்லை, அவர ஸ்டேசனுக்கு வந்துட்டு போகச் சொல்லுங்க, போதும். பேசி அனுப்பிடலாம்” என்கிறார்.

ஏதோ ஒரு எண்ணத்தில் காவல் நிலையத்தை தவிர்க்க விரும்பி முதலாளி நண்பரிடம் ”ஸ்டேசனுக்கு மட்டும் வேணாங்க, எவ்வளவு அமௌண்ட்னு கேட்டுச் சொல்லுங்க, குடுத்துறலாம்” என்கிறார்.

நண்பர் ஆய்வாளரிடம் “சார், அவரு ஸ்டேசன்க்கு வரத்தயங்குறாரு. அமௌண்ட் வேணா குடுத்தறலாம்னு சொல்றார்”.

சிரித்தவாறு ஆய்வாளர் “அதெல்லாம் ஒன்னும் வேணாய்யா. ஸ்டேசனுக்கு வந்துட்டு போகச்சொல்லுங்க, நேர்ல பேசி பிரச்சனைய முடிச்சுருவோம்” என்கிறார்.

“அமௌண்ட் வேணா சேத்தி குடுத்துறலாங்க, ஸ்டேசனுக்கு வேணாங்க” மீண்டும் வேண்டுகோள் வைக்கிறார்.

நண்பர் அதை ஆய்வாளரிடம் சொல்ல, சலித்துக் கொள்ளும் ஆய்வாளர் “சரி….. ஒரு பத்தாயிரம் வாங்கிடுங்க”

பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு முதலாளி நிம்மதியடைகிறார்.

.....................................

ம்ம்ம்ம்ம்……. கொடுத்துச் சிவக்கும் கரங்கள்

_______________________________

18 comments:

அகல்விளக்கு said...

:-((

யாரைக்குற்றம் சொல்வது...

vasu balaji said...

வாங்கின கை சிவக்கலையா?

arasan said...

super sir..

Chitra said...

சரியா போச்சு!

sakthi said...

வானம்பாடிகள் said...
வாங்கின கை சிவக்கலையா?

அவ்வளவு சீக்கிரம் சிவந்துடுமா என்ன!!!!

'பரிவை' சே.குமார் said...

Arumai... Super...

யாரைக்குற்றம் சொல்வது..?


Ippallam namma kadaippakkam alaiyey Kanom?

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இதுதான் இன்றைய நிலைமை - காவல் நிலையம் செல்வது வாழ்விலே ஒரு அவமானமாகக் கருதும் பலர் இருக்கிறோம். காசு கொடுக்கத் தயங்குவதில்லை - என்ன செய்வது ..... யதார்த்தம்

Thenammai Lakshmanan said...

:-(((((

NADESAN said...

இதுதான் இன்றைய நிலைமை என்ன செய்ய வேறு எங்கு செல்ல முடியும் பொருத்து கொண்டு வாழ வேண்டியதுதான்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்

கலகலப்ரியா said...

பணம் பாதாளம் வரைக்கும்...

க.பாலாசி said...

சமீபத்து ஆய்வு ஒன்று கூறுகிறது இந்தியர்கள் 2 ல் ஒருவர் லஞ்சம் கொடுத்தே காரியத்தை சாதிக்கிறார்கள்..

பழமைபேசி said...

அட... மாப்பு சுவராசியமா சொல்றார் பாருங்க...

பழகிப் போச்சுங்க மாப்பு....பழகிப் போச்சுங்க... குடுத்துத்தான்!

Unknown said...

கோவில்ல கோடி கணக்கில போடுவானுங்க. போலீஸ்க்கு வேண்டாம்னாலும் அள்ளி கொடுப்பானுங்க ஆனா தனக்கு வேலை செய்யரவனுக்கு 100 ரூபாய் கொடுக்க மாட்டானுங்க.

ஏங்க்னா! லஞ்சம் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்கனா எத்தனை போலீஸ் ஸ்டேஷன் க்ளோஸ் பண்றாங்கன்னு ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவிங்களா? இதை வைச்சு கொடுக்கரதப் பத்தி யோசிப்பாங்க.

போன வாரம் புதிதாக அறிமுகமானவர் சொல்லிக்கிட்டுருந்தார். அவரது உறவினர் மருத்துவப் படிப்பில் உநிவேர்சிட்டியில் கோல்ட் மேடலிச்ட்ன்னு. ஆனா M D பண்ண 50 லட்சம் கட்டினால் தான் சீட் கிடைக்குமாம். அதுக்கு அந்த உறவினர் சொன்னது, நான் கோல்ட் மெடலிஸ்ட் இல்லன்னா கட்டணமே ஒன்னரை கோடியாம். அந்த புதிய நண்பர் சொல்றார் என்கிட்ட, எப்பிடிங்க இவங்கலஎல்லாம் சுமுதாயத்துக்கு நல்லது பண்ணுங்கன்னு கேட்க முடியும். அப்ப நான் போட்ட பணத்த நீ கொடுக்கிரயானு தான கேட்பாங்கன்னு.

அவரே சொன்னது, அரசாங்கத்தின் உதவி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. குறைந்த கட்டணத்தில் படிக்கும் அரசுக் கல்விகூடங்களிளிருந்து வருபவரிடம் மட்டும் தான் ஒரு சேவை நினைப்போடு லஞ்சம் லாவண்யம் இல்லாத ஒரு அமைப்ப உருவாக்க முடியும்னு.

நீங்க என்ன சொல்றீங்க!

நிகழ்காலத்தில்... said...

விதிவிலக்கான காவல் அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் கை நீட்டுபவர்கள் இருப்பதால் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டியதாக இருக்கிறது..:(((

ஒதுங்க வேண்டியதாகவும் இருக்கிறது..

நிகழ்காலத்தில்... said...

நண்பர் அரசியல்வாதியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நிச்சயம் இதில் பங்கு இருக்கும். முடிந்தால் காவல் அதிகாரியின் பெயரைச்சொல்லி ஆட்டைய போடலாம்:)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்ம்ம்ம்……

தாராபுரத்தான் said...

வேண்டாம் என்றாலும் விட மாட்டோமே..கொடுத்திட்டு வரவில்லை என்றால் நம்ம கௌரவம் என்னாகும்.

VR said...

தன்மான தமிழர்களின் (?) தலையாய விருந்தோம்பல் பண்புகளின் இன்றைய பின் நவீனத்துவ நிலை .... வேண்டாம் என்றாலும் வலிந்து திணிப்பது... இது கூட ஒருவித வன்முறை தான் .....