என்று தணியும்


“சொல்ல மனம் துடிக்குது தேம்பித் தேம்பி
இந்தப் புள்ளக்கறி கேட்டது எந்தச்சாமி
பாழும் திருவுளமே பாழும் திருவுளமே
வாழப்பிடிக்கலையே சோழப்பெருநிலமே

இப்ப அழைச்சதுபோல் இருக்கே ஏம்புள்ள முகம்
எப்போ திரும்பிவரும் ஏம்வீட்டுச் செல்லரதம்
தவழ்ந்த வாசம் இன்னும் தரை விட்டு போகலையே
கண்வளர்த்த தொட்டில் இன்னும் காத்தசஞ்சும் ஆடலையே

பால்வாசம் மாறும் முன்னே பாலூத்த விட்டீகளே
தங்கத்த கருகவிட்டு சாம்பலத்தான் தந்தீகளே
மாடு அலறலையே, வழிகூட மறிக்கலையே
மாடவிளக்கணிச்சு மரணத்த சொல்லையே”



மனசை கலங்கடிக்கும் பாடலோடு துவங்குகிறது பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் இயக்கிய ”என்று தணியும்” என்ற ஆவணப்படம்…

மூன்று வருடங்களுக்கும் மேலாக என் கணினியில் ஒரு மூலையில் சேமிக்கப்பட்டுக் கிடக்கும் இந்தப் படம் பார்க்கும் போதெல்லாம் கண்ணீரை சுரக்கவைப்பதையும், இயலாமையை தூண்டி விடுவதையும், நாள் முழுதும் சோகத்தை மென்று தின்ன வைப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகளை காவு கொடுத்த இரண்டாம் ஆண்டு நினைவுநாள் சோகத்தை முழுக்க முழுக்க உள்வாங்கி, கல்வியென்ற பெயரில் மிக நேர்த்தியாக 94 குழந்தைகளை கொலை செய்ததை மிக அழுத்தமாக பதிவுசெய்கிறது படம்.

இன்றோடு சுமார் 2191 நாட்களைக் கடந்துவிட்டோம், இந்த தேசத்தில் நீதி எப்போதுமே தாமத்தித்துத்தான் கிடைக்கும் அல்லது கிடைக்காமலும் போகும் என்பதை அரசு, நீதி இயந்திரங்கள் மீண்டும் நிரூபித்து வருகிறது.

63 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், பல கல்வியாளர்கள் கல்வி எவ்வளவு மோசமான ஒரு வியாபாரப் பொருளாக போய்விட்டது என்பதையும், இலவசமாக கல்வியை கொடுக்க வேண்டிய ஒரு அரசு எவ்வளவு மூடத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் கல்வி அமைப்புகள் மேல் திணித்துள்ளது என்பதையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

கும்பகோணத்தில் எரிந்தவுடன், கூரைகளை பிரிக்கச் சொல்லி ஆணையிட்டார்கள், பள்ளி வாகனம் பள்ளத்தில் விழுந்தவுடன் வாகனத்தை தணிக்கை செய்யச் சொன்னார்கள். ஒரு பெரும் சோகத்தை அமுக்கிவிட பெரிதாய் ஒரு பரபரப்பை மட்டும் கிளப்புவதை அரசாங்கம், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மிக மிக நேர்த்தியாக, கவனமாக செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

மூன்றாவது தூண் எனும் ஊடகங்கள், வெறும் வெற்று பரபரப்பை கிளப்பி, மக்களை அப்போது மட்டும் பார்க்கவைத்துவிட்டு போவதும் வழக்கமாகப்போய்விட்ட ஒரு ஜனநாயக(!) நாட்டில்தான் நாமும் என்னென்னவோ நம்பிக்கைகளை தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

படத்தில் ஒரு இடத்தில் பேசும் சினிமா இயக்குனர் சந்தானபாரதி, தாங்கள் கும்பகோணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, அங்கு திரளாக கூடிய பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வந்த நடிகர்களை தொட்டுப்பார்க்க, ரசிக்க, கையெழுத்து வாங்க துடித்ததை வேதனையோடு கூறினார்.

தமிழனனின் ரசிப்புத்தன்மையும் கூட வக்கிரமாக மாறிவருவதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், அதே சமயம் சீருடையாய் கருப்பு வண்ண உடையோடு, கண்ணில் குளிர் கண்ணாடியோடு, ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கொரு முறை பெரும் சோகங்கள் நிகழும் போதெல்லாம், அஞ்சலி, மறியல், உண்ணாவிரதம் இன்னபிற விசயங்களைச் செய்து  நாள் முழுக்க தொலைக்காட்சிகளில் நேரலையில் வந்து கொண்டாடி விட்டுப்போவதைத் தாண்டி அவர்களும் தங்கள் கையில் இருக்கும் சக்தி வாய்ந்த ரசிகர்கள் கூட்டங்கள் மூலம் ஒன்றையும் கிழித்துவிடவில்லை.

படம் முழுதும் ஆக்கப்பூர்வமாக பேசியிருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரமாகிவிட்ட கல்வியை விலாவாரியாக பிரித்து மேய்கிறார்கள் கேள்விகளால் துளைக்கிறார்கள், விடைமட்டும் கிணற்றில் போட்ட கல்லாய் மௌனித்துக் கிடக்கிறது.

பள்ளியில் ஒரு குழந்தைக்கு ஒன்பது சதுர அடி இடம் குறைந்தது இருக்க வேண்டும் என்பது சட்டம், நம்மில் எத்தனை பெற்றோர்களுக்கு  தெரியும். குழந்தைகளை பெற்று சீராட்டி வளர்க்கும் நம்மில் எத்தனை பேருக்கு குழந்தைகள் அதிக நேரம் கழிக்கும் பள்ளியின் சுகாதாரம், அங்கு இருக்கும் வசதி குறித்து கேட்டுத்தெளிய ஆர்வம் இருக்கிறது அல்லது ஆர்வம் இருப்பின் பள்ளிகள் அனுமதிக்கின்றன.

சமீபத்தில் அரசாங்கம் கொண்டுவந்த கட்டணக்குறைப்பு முறையை அமுல்படுத்தா பள்ளிகளுக்கு எதிராக குரல் கொடுக்க எத்தனை சதவிகிதம் பெற்றோருக்கும் பொறுமையும் துணிவும் இருக்கின்றது, அல்லது வாங்கும் கட்டணத்திற்கேற்ப வசதி செய்து கொடுக்க பள்ளியை வலியுறுத்த எத்தனை பேருக்கு உரிமை இருக்கின்றது.

எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள, எது வந்தாலும் தாங்கிக்கொண்டு மௌனியாக இருக்க மிக எளிதாக பழக்கப்பட்டு வருகிறோம். வசதியான இடங்களில் மதுக்கடைகளை நிறுவிக்கொண்ட நமக்கு பள்ளிகள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே கிடைக்கின்றன. மது தேசிய உடமையானதைப் பற்றியும், கல்வி முழுக்க முழுக்க வியாபாரமானதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ள பொறுமையில்லை யாருக்கும்.

தனக்கு நடந்தால் அது பெரும் சோகம், மற்றவர்களுக்கு நடந்தால் அது ஒரு சம்பவம் என்ற நம் மனநிலை, தொடர்ந்து எத்தனை சோகம் நிகழ்ந்தாலும் அதை சிறிது காலத்தில் மறக்கடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

சாலைச் சந்திப்புகளில் கோட்டைத் தாண்டி நிற்கும் நடுத்தரவர்கத்திற்கு உடனுக்குடன் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டும் இறையாண்மை மிகுந்த இந்தத் திருநாட்டில், மனிதன் இழைத்த குற்றங்களில் நிகழும் மரணங்களெனும் கொலைகளுக்கு நீதி நீர்த்துப் போய்விடுவதை, அநீதி இழைக்கப்பட்டவர்களைத் தாண்டி யாரும் கேட்கத் தயாரில்லை.

கருகிப்போனது சில ஆண்டுகள் வளர்ந்த குழந்தைகள் மட்டுமா? பல தலைமுறைகளின் ஒட்டுமொத்த கனவும், வரலாறும் தானே?

அலட்சியத்தின்பால் கொலையுண்டு போன பிஞ்சுக்களின் ஆத்மா, நீதி கிடைக்காமல் சாந்தியடைந்துவிடுமா என்ன? தங்களைப் போன்று படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருக்க தங்கள் மரணங்களை ஒரு எச்சரிக்கையாகவே விட்டுவிட்டு போயிருக்கும் அந்த ஆத்மாக்கள் வணக்கத்திற்குரிய காவல் தெய்வங்களாகவே கருதப்படவேண்டும்.

என்று தணியும்… 94 நான்கு குடும்பங்களில் கொதிப்போடு எரியும் இயலாமைத் தீ?

என்று தணியும்… கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் போக்கு?

என்று தணியும்… நீதியின் தாமதப் பசி?

என்று தணியும்… காசுக்காக எதையும் ஆராயாமல் அனுமதித்து விட்டு, மற்றவர்கள் மேல் பழிசுமத்தும் பல அரசு அதிகாரிகளின் பணவெறி?

காலம் பலவற்றை கரைத்துப் போகும், சிலவற்றை அடர்த்தியாக்கிப் போகும். கும்பகோணம் விபத்தின் சோகம் அதில் தொடர்பில்லாத எல்லோருக்குள்ளும் கிட்டத்தட்ட கரைந்தே போய்விட்டது, ஆனால் அதே காலம் நீதி கிடைக்காமல் அலையும் அந்த பெற்றோர்களின் மனதில் இயலாமையையும் சேர்த்து சோகத்தை அடர்த்தியாக்கிக் கொண்டுதானே இருக்கின்றது?

என்றுதான் தணியும் இந்தச் சோகம்?

பொறுப்பி:தலைப்பு, பாடல் மற்றும் சில கருத்துகள் பாரதிகிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் வந்த என்று தணியும் ஆவணப்படத்தில் எடுக்கப்பட்டது.

______________________________________________________

39 comments:

vasu balaji said...

அடிவயிற்றைப் பிசையும் வரிகள். இப்போதும் இத்தகைய பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. என் வீட்டின் அருகில் இருக்கும் 2 மேல் நிலைப்பள்ளிகளுக்கு விளையாட்டுத் திடலே இல்லை. என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மனுசன் இதைச் சீர் செய்ய மாட்டானா என்ற ஏக்கம் மட்டும்:(

ஆரூரன் விசுவநாதன் said...

உள்ளம் கணக்கிறது கதிர். எத்தனை நாட்கள் ஆயினும், நினைக்கும் போதே உடலெங்கும் இனம்புரியாத பயமும், நடுக்கமும் வருகிறது.

விக்னேஷ்வரி said...

:(

Thamira said...

எல்லாவற்றிலும் அலட்சியம், சுயநலம் நம் தேசிய வியாதியாகி ரொம்ப நாட்களாகின்றன கதிர். இதிலிருந்து விடுதலை என்பது எட்டாக்கனியென்பதே சுடும் உண்மை. அவ்வப்போதாவது இதுபோன்ற கொதிக்கும் கட்டுரைகளும், கேள்விகளும் இயன்றவரை அதன் கடமையைச் செய்யட்டும்.

ராமலக்ஷ்மி said...

இன்று பெங்களூர் செய்தித்தாள்களில்..
டி.ஜெ.ஹல்லியிலுள்ள அரசுப்பள்ளியினுள் கட்டிடம் கட்ட எனத் தோண்டி நிரப்பாமல் விட்ட எட்டடி குழியில் நீர் நிரம்பிக் கிடக்க அதில் மூழ்கிக் காலமாகிப் போனான் ஒரு 12 வயது சிறுவன் நேற்று. கடந்து மூன்று மாதங்களில் 8 குழந்தைகள் உள்ளே விழுந்து உயிருடன் மீட்கப்பட்டும், கவனக்குறைவாகவே விடப் பட்டிருந்திருக்கிறது. இன்று இந்தச் சிறுவன்:(! வழக்கம் போலத் தாமதமாக விழித்துக் கொள்ளும் மக்கள். தலைமை ஆசிரியை காண்ட்ராக்டரை குற்றம் சொல்ல அவர் இவரைச் சொல்ல என... நாடெங்கும் இப்படியே.

//என்றுதான் தணியும் இந்தச் சோகம்?//

:(!!

அம்பிகா said...

மிகக் கொடுமையான நிகழ்வு.
-(((

Venkat M said...

//தனக்கு நடந்தால் அது பெரும் சோகம், மற்றவர்களுக்கு நடந்தால் அது ஒரு சம்பவம் என்ற நம் மனநிலை, தொடர்ந்து எத்தனை சோகம் நிகழ்ந்தாலும் அதை சிறிது காலத்தில் மறக்கடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.//

You are absolutely correct Kathir.. We all are like this...

Ministers kids will be always in safe zone.. they run the school for their own kids...

seethag said...

கதிர்,எப்போதெல்லாம் நான் கோவப்படுவதெஎ இல்லை. ஏன் என்றால்,இலவசங்களை பெற்றுகொண்டும் சாதீ வாரியமாகவும் ஓட்டுபொடவும் மக்கள் இருக்கும் வரையில் இதே மக்கள் துன்பம் அனுபவிக்கதானே செய்வார்கள்?நம்மால் ஏன் சரத்பாபு போன்ற இளைஞ்ஞர்களை ஏன் தேர்ந்தெடுக்க முடிவதில்லஇ

அன்புடன் நான் said...

காவல் தெய்வங்கள்தான் கல்வி கொலையாளிகளை தண்டிக்கணும்.

க.பாலாசி said...

எதை விட்டெரிந்தாலும் சற்றே சிலிர்ப்பும், பின் அமைதியாய் அதன்பொருட்டு வேறெந்த சலனமுமற்று அசைந்துசெல்லும் ஒரு எருமையொத்த அரசு, மட்கிப்போன மனிதத்தன்மை... என்ன செய்ய... நானும் படித்துவிட்டு கொஞ்சம் சிந்தலாம் என் கண்ணீரை அவ்வளவே...

செல்வா said...

மிக கொடூரமான நிகழ்வு.. இன்று நினைத்தாலும் மனம் வலிக்கிறது ..!!

r.v.saravanan said...

என் அன்றாட வாழ்வில் எப்பொழுது நெருப்பு எனை தீண்டினாலும் எனக்கு அந்த சிறுவர் சிறுமியரின் ஞாபகம் வரும் என் கண்கள் கலங்கும்

என்னை மிகவும் பாதித்த சம்பவம் இது கதிர்

அந்த மழலைகளுக்கு என் இதய அஞ்சலி
என் குடந்தையூர் தளத்தில் அந்த உள்ளங்களுக்காக இடுகையிடுள்ளேன்

காமராஜ் said...

கடந்து போகமுடியவில்லை கதிர்.அந்தப்பாடல் சுழன்று சுழன்று அடிக்கிறது.நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டுதான் இருக்கிறது. கேட்பாரற்ற நீதி சவலபாய்ந்துகிடக்கிறது. ப்ச்.... என்ன செய்ய ?

க ரா said...

எத்தன வருசம் ஆனாலும் மறக்க முடியாத நிகழ்வு அது. நினைக்க நினைக்க கண்ணுல தண்ணிதான் திரண்டு நிக்குது. :(

http://rkguru.blogspot.com/ said...

கொடுமையின் உச்சகட்டம்....

vasan said...

திரும்பும் திக்கெல்லாம் கோவிலும்,கோபுர‌மும்.
மாபாப‌ம் போக்கும் மாமாங்க‌ தெப்பக்குளம், நித்த‌ம்
நீராட‌ காவேரி. புனித‌ பூமி,
எங்க‌ள் ம‌ழ‌லைப் பூக்க‌ள் ப‌ள்ளியின்
வேள்வியில் வீழ்ந்த‌ பின்,சாப‌ பூமியாய்.

R.Ulages said...

அரசியல்வாதிகளின் உதவியுடன் தற்போதும் இதுமாதிரியான பள்ளிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இறந்த குழந்தைகளை மனதில் நிறுத்தி, மேலும் மேலும் இது மாதிரி நிகழ்வுகள் நடக்காமலிருக்க, முறையான அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியபடுத்தி நடவடிக்கை எடுக்க நாம் உறுதி கொள்வோம். கும்பகோணம் தீ விபத்தில் மற்றும் வேதாரன்யத்தில் குளத்தில் வேன் கவிழ்ந்து இறந்த குழந்தைகளின் நினைவாக என்றும் ............

R.Ulages said...
This comment has been removed by the author.
VELU.G said...

//
சாலைச் சந்திப்புகளில் கோட்டைத் தாண்டி நிற்கும் நடுத்தரவர்கத்திற்கு உடனுக்குடன் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டும் இறையாண்மை மிகுந்த இந்தத் திருநாட்டில், மனிதன் இழைத்த குற்றங்களில் நிகழும் மரணங்களெனும் கொலைகளுக்கு நீதி நீர்த்துப் போய்விடுவதை, அநீதி இழைக்கப்பட்டவர்களைத் தாண்டி யாரும் கேட்கத் தயாரில்லை.
//

மறுக்க முடியாத உண்மை.

மனதைப்பிழியும் அந்த கோர நிகழ்வுக்கு பிறகும் நிறைய பள்ளிகள் இன்னமும் அப்படியேதான் நடக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம்

Anonymous said...

திரும்பவும் ஒரு முறை நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை :((

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
This comment has been removed by the author.
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

என்று தணியும் நம் அலட்சியப் போக்கு.. :(

மிகச் சிறந்த பதிவு கதிர்.

hariharan said...

அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமலும், கட்டடம் இல்லாமலும் கவனிப்பாரற்று கிடந்த நேரத்தில் தெருவெங்கும் மழைக்காலத்தில் முழைத்த காளான்களைப் போல் தனியார் வியாபாரப்பள்ளிகளிடம் அடைக்கலம் கண்ட மக்களுக்கு இன்னமும் விடிவில்லை.

லாபம்,மேலும் லாபம் அதனால் அலட்சியம் குழந்தைகள் மரணம். பணமிருந்தால் நீதியையும் வாங்கலாம்.

பரபரப்பு செய்திகள்..அதை மறக்க சீரியசான தொடர்கள் ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கல்ல அது பெரிய டாஸ்மார்க்.

நிலாமதி said...

துயரம் நிறைந்த பதிவு....வாசகர்களையும் துயரத்தில் ஆழத்திச்செல்கிறது.என்று தணியும் இந்த தாகம்......

*இயற்கை ராஜி* said...

:-((( hmmmmmmmm

பத்மா said...

மனதிலிருந்து எழுதிய பதிவு மனதை உருக்குகிறது

vasu balaji said...

இதுக்கும் மைன்ஸ் குத்தியிருக்கே அந்த தல். சைக்கோவா? என்ன எழவுடா:((

சீமான்கனி said...

//தவழ்ந்த வாசம் இன்னும் தரை விட்டு போகலையே
கண்வளர்த்த தொட்டில் இன்னும் காத்தசஞ்சும் ஆடலையே//

மீண்டும் மீண்டும் உடைந்து போகிறேன்....ஒட்டவைக்க முடியாது என்று தெரிந்த பின்னும்...மீண்டும் மீண்டும் உடைந்து போகிறேன்....
கணம்....:(

கார்த்திகைப் பாண்டியன் said...

மாறவே மாறாதா:-((((((((((

a said...

//
கருகிப்போனது சில ஆண்டுகள் வளர்ந்த குழந்தைகள் மட்டுமா? பல தலைமுறைகளின் ஒட்டுமொத்த கனவும், வரலாறும் தானே?
//.

நிஜம். கோபக்கனல் கொண்ட பதிவு. படிப்பவர்களையும் கோபம் கொள்ள வைக்கிறது.

பா.ராஜாராம் said...

விரட்டும் வாழ்விற்குள், எல்லாவற்றையும் மறந்து போகிறோம் கதிர். யாராவது இப்படி நினைவு படுத்தும் போது அல்லையை பிடிக்கிறது.

அஞ்சலிகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:(((

கலகலப்ரியா said...

.....

பிரேமா மகள் said...

நினைக்கும் போதே ரணங்கள்தான் மிஞ்சும்...

'பரிவை' சே.குமார் said...

மிகக் கொடுமையான நிகழ்வு, உள்ளம் கணக்கிறது கதிர்.

தாராபுரத்தான் said...

இது குறித்து ..வெட்கம்.

'பரிவை' சே.குமார் said...

hai kathir sir
enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com

Thamira said...

நல்லதொரு பிளாஸ்டராக எடுத்துக்கொண்டு நம் தளத்துக்கு பக்கம் வரவும்.

http://www.aathi-thamira.com/2010/07/blog-post_856.html

bharathi krishnakumar said...

நன்றி கதிர் . மிகுந்த துன்பத்தைத் தந்து பாதியிலேயே நிறுத்தி விடலாமா என்று நினைத்த படம் அது . கண்ணீரோடு தான் படம் வளர்ந்து முடிந்தது . உங்கள் பாராட்டுக்கள் மேலும் கண்ணீரை வரவழைக்கிறது . அதுதான் இந்த படத்தின் உள்ளும் புறமுமாக இருக்கிறது ...

பாரதி கிருஷ்ணகுமார்.