Jun 23, 2016

சவால்தனையது உள்ளம்


எச்சரிக்கை :  இதுவொரு சுயபுராணக் கட்டுரை

ஈரோட்டிற்கு குடி பெயர்ந்து பத்து ஆண்டுகளில் எனக்கென்று மிகப்பெரிதாக இருந்த ஒரு சிறிய கனவு, ’காலையில் நேரத்தில் எழுந்து இந்த உடலின் நல்லதுக்கு எதாச்சும் செய்யனும்’ என்பதுதான். அதற்காக வாக்கிங் (நடைப்பயிற்சி) துவங்கலாம் என பல முறை துவங்குவதும் ஓரிரு நாட்களில் கை விடுவதுமான கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன். அந்தக் கோமாளித்தனம் குறித்து 2009ல் ஒரு கட்டுரை (http://maaruthal.blogspot.in/2009/07/25.html) கூட எழுதிப்பார்த்தும்…. ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை.

வாக்கிங் செல்ல ஒரு துணையிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்க, நான் எது சொன்னாலும் கேட்கும் இளவல் ரமேஷ் சிக்கினார். அவர் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு 5 கி.மீ பைக்கில் வந்து சேர, அதன்பின் இருவரும் கிளம்பினோம். இரண்டு மாத கால அளவில் மொத்தமாக ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்திருப்போம். அதன்பின் பெரியதொரு இடைவெளி… இடைவெளி என்றால் நாட் கணக்கு, வாரக் கணக்கு கிடையாது… மாதக் கணக்கு, வருடக் கணக்குதான். அதன் பின் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு பாதைகள், வெவ்வேறு நேரங்கள் என நடந்துவிட எடுத்த முயற்சிகளும் தோல்விதான்.

இதற்கிடையில்  வீட்டிலேயே யோக கற்றுக்கொள்ள ஆரம்பித்து அதுவும் நான்கைந்து தினங்களில் ஓய்ந்து போனது. ஒரு கட்டத்தில் மனைவியும், என் அம்மாவும் புதிதாக யோகா, உடற்பயிற்சிகள் எனத் தொடங்கி, ஏதேதோ வித்தைகள் செய்ய… “அடச்சே…. நாமெல்லாம் உருப்படவே வாய்ப்பில்ல போல!” என்றாகிப் போனது. எப்படியாவது நாளைக்கு ஆறு மணிக்கு முன்பு எழுந்துவிடவேண்டுமென தீர்மானித்த எல்லா விடியல்களிலும் தோற்றுப்போனேன்.

இந்தச் சூழலில்தான் நீச்சல், சைக்கிள், மாரத்தான் ஓட்டம் எனக் கலக்கிக் கொண்டிருந்த நண்பர் ஷான் கருப்புசாமி தம் 21 நாள் சவாலைத் தொடங்கினார். எதையும் மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாக மாறிப்போகும் சாத்தியமுண்டு என்பதை தீர்க்கமாக நம்புபவன் நான் என்பதாலும், ஷான் மீதான அன்பினாலும் அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவனித்தலில் இயலாமையின் பொறாமையும் இருந்திருக்கலாம்.

அவரின் சவால் நிறைவு தினத்தில் 21 கி.மீ தூரம் ஓடிவிட்டு… புதிதாக சவாலை ஏற்க என்னை அழைத்தார். ஒரு வகையில் நான அந்தச் சவாலுக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் ஆவலிலும், எனக்கான சுய நிர்பந்தத்திலும் இருந்தேன். அவர் அழைத்துப் பேசும்போது, ”செய்றேன் ஆனா, வீடு மாத்துற வேலை இருக்கு, முடிஞ்சவுடன் தொடங்குகிறேன்” எனச் சொல்லிவிட்டு, அவரின் ஃபேஸ்புக் அழைப்பில் என் பதிலாக ”தொடங்குவது குறித்து 21 நாட்களில் அறிவிக்கிறேன்!” என சமாளித்தேன்.

ஜூன் இரண்டாம் வாரத்தில்தான் துவங்கமுடியுமென்றிருந்த மனநிலையை சட்டென மாற்றி ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்த பழைய ஷூவைத் துடைத்து, ஜூன் 3ம் தேதி காலையில் சமரசங்களின்றி துவங்கினேன். முதல் நாள் நடந்து முடித்து வீடு வந்து வியர்வையுடன் அமர்ந்து சிலுசிலுவென காற்று வியர்வையில் உரச… உடல் சிலிர்த்து குழைந்து கிறங்க… “ஒரு உணர்வு வந்துது பாருங்க... ம்ம்ம்... அத எப்படிச் சொல்றது.... எப்படியாச்சும் சொல்லியாகனுமே... ஆங்...

கவுண்டமணிக்கு லாட்டரில காசு விழுந்தவுடனே... “அய்யோ... நான் இப்ப எதையாச்சும் வாங்கியாகனுமே.... அடேய்... இந்த வீதி என்ன வெலைனு கேளுடா” என்பாரே... அந்த மாதிரி ஒரு ஃபீல்ல்ல்!


இரண்டாம் நாள் பேருற்சாகம். மூன்றாம் நாள் மனசு கெஞ்சியது. நான்காம் நாள் மனசு முரண்டு பிடித்தது. மனசு பின் வாங்கு எனச் சொன்னபோதெல்லாம் புத்தி இன்னும் கூடுதலாய் முன் செல் என்றது.

பத்தாம் நாள் அதிகாலையிலேயே ஒரு மலைக்கிராமத்திற்கு பயணம் இருந்ததால், வழக்கத்திற்கு மாறாக முன்பே எழுந்து நடையை முடித்தேன். மலைப்பாதைகளில் வாகனம் தடுமாறிய சில கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு ஏற்றத்தில் நடக்க வேண்டிய சூழலை, குறையேதும் சொல்லாமல் விரும்பி நடந்தேன்.

பதினொராம் நாள் நிறைவில் 21 நாள் சவால் குறித்து ஃபேஸ்புக்கில் எழுத, ”உள்ளத்தனைய உடல்” குழுமத்தில் பலர் இணைந்தனர். அதில் உடற்பயிற்சியில், நடைப்பயிற்சியில் மிகப் பெரிய எல்லைகளைத் தொட்டவர்கள் இருந்தாலும், புதிதாக சவாலைத் துவங்கியவர்கள் எனக்குள் இன்னும் கூடுதல் பொறுப்புகளை ஏற்படுத்தினார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். நடைக்காக ஒதுக்கப்பட்ட நேரங்களில் உழவர் சந்தைக்குச் செல்லவேண்டும் என இரண்டு முறை மனைவி மூலம் சவால் வந்தபோது, அவரை உழவர் சந்தை வரை வண்டியில் சென்றுவிட்டு, அங்கிருந்து நடந்து திரும்பினேன். இரண்டாம் வாரத்தில் பழைய ஷூ நார்நாராய் கிழிந்துபோக, அமேசானில் புது ஷூ வாங்கி அது காலுக்கு வரும் வரை கிழிந்த ஷூவோடு சமாளித்து, புதிய ஷூ காலுக்குப் பழகும் வரை மாறி இரண்டு கால்களிலும் மாறி மாறி கொப்புளங்களை பெற்றதும் உண்டு. 
21ஆம் நாள் குறித்த நினைவுகள் ஒரு பரவசத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தன. திடீரென 21ம் நாளான இன்று அதிகாலை கூடுதல் தூரம் கூடுதல் நேரம் என்ற ஆசையோடு தயாராகி சூரியன் படத்தில் "காந்தக் கண்ணழகி... ஆங்... லெப்ட்ல பூசு.... இந்தா ரைட்ல பூசு" என பூ மிதிக்கப்போன கவுண்டமணி மாதிரி உற்சாகமான மனநிலையோடு வீட்டின் கதவைக் திறக்கையில் சாரல் மழை பொழிந்துகொண்டிருந்தது. சிலபல தயக்கங்களுக்குப் பிறகு, மனைவியின் கண்டிப்புகளையும் மீறி கூடுதலாய் ஒரு தொப்பியோடு துவங்கிவிட்டேன். வழக்கமான அந்தப் பாதைகளில் தென்படும் நபர்களில் ஒரே ஒருவரைக்கூட இன்று பார்க்க முடியவில்லை. பூந்தூறலில் வியர்க்க வியர்க்க இருபது நாட்களில் ஒரு போதும் எட்டாத 6 கி.மீ தொலைவை முன், பின் நடை, மித ஓட்டம் என 50 நிமிடங்களில் முடித்தேன்.





இந்த 21 நாட்களின் இடையில் தோப்புக்கரணத்தை இணைத்துக் கொண்டேன். கடந்த இரண்டு நாட்களாக பின் பக்கமாக நடக்கும்-ஓடும் முயற்சிகளை செயல்படுத்துகிறேன். எந்த இலக்கையும் அடைய, அந்த இலக்கை அடைந்தால் என்ன பலன் கிட்டும் என்பதை அறியவேண்டுமெனச் சொல்வார்கள். ஒவ்வொரு நாள் நடைக்கும் நான் எதிர்பார்த்து காத்திருக்கும் பலன், நிறைவில் உடல் முழுக்க பொங்கி வழியும் வியர்வை. தொப்பலாய் வியர்வையில் நனைந்தபடி ஆசுவாசமாய் சிலுசிலுக்கும் காற்றில் வியர்வை கரையக் காத்திருக்கும் அந்தச் சுகம் வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு கவிதை. அந்த கவிதையான அனுபவம்தான் கூடுதல் தொலைவிற்கும், நடையை விரைவாக்குவதற்குமான காரணங்களாகவும் இருந்தன.

  • இந்த 21 நாட்களில் ஒருபோதும் சவாலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் வரவில்லை. ஆனால் இந்தச் சவால் இல்லாமல் இருந்திருந்தால் குறைந்தது ஐந்து தருணங்களிலேனும் நடையைக் கைவிட்டிருப்பேன். எப்போது 21 நாட்கள் ஆகும் எனும் தவிப்பு இருந்தது உண்மை.
  • இந்த 21 நாட்களில் பல தருணங்களில் மனது கெஞ்சிய போதும், முரண்டு பிடித்தபோதும், கெஞ்சிய மற்றும் முரண்டு பிடித்த மனதிற்கு அபராதமாக நடக்கும் தொலைவினைக் கூட்டினேன்.
  • இந்த 21 நாட்களில் அலாரம் இல்லாவிட்டாலும் கூட 4.45 மணிக்கு விழித்துக் கொள்ளுமளவிற்குத் தயாராகியிருக்கிறேன். சராசரியாக இரவு 10.30 மணிக்குள் தூங்கப் பழகிவிட்டேன். அதில் ஒருநாள் 9.15 மணிக்கே உறங்கிப்போனேன். சராசரியாக 6 – 6.30 மணி நேரங்கள் மட்டுமே தூங்கும் பழக்கத்திற்கு மாறியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் புதியதொரு முயற்சியாக காலை நேரங்களில் எழுதத் துவங்கியிருக்கிறேன். குங்குமத்திற்கு இரண்டு, நம்தோழிக்கு ஒன்று என மூன்று கட்டுரைகளை இந்த சவாலால் எனக்குக் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் கூடுதலாய் ஆங்கில தினசரியொன்று வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.
இனி இது இவ்வாறே தொடரும். சுவாரஸ்யமான புதிய முயற்சிகள் இணையும். சைக்கிள் ஒன்று வாங்குவது அடுத்த ஆசை. நீச்சலும், அருகில் உள்ள மலைகளில் ஏறுதலும் இன்னபிறவும் இணையலாம்.

இதனால் கிட்டிய மகிழ்ச்சி அனைத்திற்கும் நண்பர் ஷான் மட்டுமே காரணம் எனச் சொல்வதிலும் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி் ஷான்… நன்றி ”உள்ளத்தனைய உடல்” குழும நட்புகளே!

நான் நிறைவு செய்ததன் நினைவாக, இந்தச் சவாலை புதிதாய் ஏற்க என்னோடு முதன்முதலில் நடக்க வந்த இளவல் ரமேஷ் @ கோபாலகிருஷ்ணனை அழைக்கிறேன். 21 நாட்கள் சவாலை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த எவரும் முன்வரலாம். அப்படி முன்வருபவர்களை 21 நாட்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த நானும், குழுமத்திலும் பலரும் இருக்கின்றனர்..

உள்ளத்தனைய உடல் என்பது நிதர்சனமான ஒன்றுதான். கூடுதலாக நான் அதில் இணைக்க விரும்புவது ”சவால்தனைய உள்ளம்





அடுத்த 21 நாட்கள் சவாலாக நான் நாளையிலிருந்து தொடங்க விரும்புவது.


  1. ஒரு நாளில் சமூக வலை தளங்களுக்கு ஒதுக்கும் நேரம் மொத்தமாக 60 நிமிடங்கள் மட்டுமே.
  2. தினசரி 60 நிமிடங்கள் புத்தக வாசிப்பை வாசித்த நேரம், பக்கங்களோடு உறுதி செய்வது
  3. இருக்கும் இடத்தில், சூழலில் 30 நிமிடங்கள் எந்தச் செயலும் செய்யாமல், அமைதியாக மட்டுமே இருப்பது


சவால்தனைய உள்ளம் – உள்ளத்தனைய உடலும் செயல்களும்!

-

Jun 21, 2016

வானத்தின் மார்பெங்கும் தழும்புகள்




இந்த இருள் தரும் ஒவ்வாமை
சொற்களால் உணர்ந்திட முடியாதது
வீசும் காற்றிலும்கூட
வெம்மை முறுக்கேறியிருக்கிறது
அறுந்துவிழும் நட்சத்திரமொன்று
என் கையருகே வராமல்
எரிந்து சாம்பாலாகி மிதக்கிறது
வெற்றுப்பாதம் கொழுவியிருக்கும்
ஆதி நிலத்தின் வெப்பம்
துளியும் இளகுவதாயில்லை

இந்த இருள் சொற்கள்தோறும்
மௌனங்களைப் போர்த்துகிறது
எழுதுகோலில் கனத்திருக்கும் மை
நிறமிழந்து கசிகின்றது
பசலையேறிய விட்டில் பூச்சியொன்று
வெளிச்சம் நோக்கிப் பாய்கிறது

இந்த இருள் கடலலைபோல்
மோதிக்கொண்டேயிருக்கிறது
தேய்ந்துபோயிருக்கும் நிலவை
நினைவில் உயிர்ப்பிக்கிறேன்
வானத்தின் மார்பெங்கும் தழும்புகள்!

Jun 9, 2016

தியாகங்களின் நியாயங்கள்


வாழ்க்கையில் அவனைப்போல் ஒரு சுயநலம் பிடித்தவனைப் பார்க்கவே பார்க்க முடியாது” என ஒட்டுமொத்த கிராமத்தினரால் முத்திரை குத்தப்பட்ட ஒருவரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். எல்லோரும் சொல்வதுபோல் அவரின் செயல்பாடுகளை ‘சுயநலம்’ என்ற அடைப்புக்குறிக்குள் அடைப்பது சரியா என்ற சந்தேகமும் எனக்குண்டு. மிக எளிய ஒரு குடும்பத்தின் தலைவன் அவர். கோவணத் துண்டு நீளத்துக்கு நீண்டு கிடக்கும் நிலத்தில் கிணறுகூடக் கிடையாது. மழை பெய்தாலோ, அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டாலோ மட்டும் விவசாயம் செய்யலாம். அவை இரண்டும் இல்லாத காலகட்டத்தில் அருகாமை தோட்டத்துக்காரர் கருணை காட்டினால் காடுகள் தாண்டி தம் வயலுக்கு தண்ணீர் கொண்டு வந்து, வாடி வதங்கிக்கிடக்கும் தென்னைகளைக் காப்பாற்றலாம் என்ற நிலைமை.

இறுக்கிக் கட்டிய கோவணத்தோடு காலையிலும், மாலையிலும் பால் கொண்டு செல்வார். முடிந்தவரை கூலி வேலை அல்லது ஆட்களைத் திரட்டிக் கொண்டு குத்தகை வேலைக்குச் செல்வார். அக்கம்பக்கக் கடைகளில் ஒற்றைப் பைசா செலவழித்து எதையும் வாங்கிவிட மாட்டார். கடைகளில் அவர் டீ, காபி குடித்து யாரும் பார்த்ததில்லை. சைக்கிள் டயர் தேய்ந்துவிட்டால், சைக்கிள் கடையில் பழைய டயரைக் கேட்டு டயர் மேல் டயர் போட்டுக்கொண்டு மிதிக்கமுடியாமல் மிதித்து காடும் மேடும் திரிவார்.

தன் ஒரே ஒரு மகனை ஒருபோதும் காடு கரைகளில் திரிய விட்டதில்லை. ”படுச்சு கரையேறிரு” என்பதுதான் அவரின் இடைவிடாத வேண்டுதல். காலம் எல்லாவற்றையும் நேராக்கும், கலைத்துப்போடும் என்பதுபோல். அவரின் கனவை நேர் செய்தது. மகன் பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்கி, புகழ்பெற்ற கல்லூரியில் மெரிட் சீட் வாங்கி, அங்கு இங்கு என சின்னச்சின்ன வேலைகள் செய்து, பெங்களூரில் ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டு, ஒருநாள் வெளிநாட்டுக்குப் பறந்து போனான். என்ன காரணமென்றே தெரியவில்லை…. அவன் ஆறு வருடங்களாக அந்தக் கிராமத்துக்கு வரவோ, பெற்றோர்களை வந்து பார்க்கவோ, தான் இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைக்கவோ என்று எதையுமே செய்யவில்லை. அப்பா அம்மாவிற்கு பணம் எதுவும் அனுப்பியதாகவும் தெரியவில்லை. எந்தப் பெரிய மாற்றங்களுமின்றி அவரின் வாழ்க்கை அன்று போலவே ஓடிக்கொண்டிருக்கிறது.

மனித உறவுகளும், உறவுகள் சார்ந்த வாழ்க்கையும் பொதுவாக மேம்பட்ட தியாகங்களின் மேல்தான் ஒவ்வொரு முறையும் கட்டமைக்கப்படுகிறது. அந்தத் தியாகம் சரியாக உணரப்படாத இடங்களில், அது எந்தவித உறுதித்தன்மையும் ஏற்படுத்தாமல், மேலே கட்டமைக்கப்படுவதை குலையச் செய்துவிடுகின்றன, அல்லது கட்டமைப்பு தன் கனத்தைக் கொண்டு தியாகத்தையே குலைத்துவிடுகின்றன.

த்தேமாரி எனும் மலையாளத் திரைப்படத்தில் சுமார் நாலேகால் நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய உருக்கமான இறுதிக்காட்சியில் நாராயணன் எனும் கதாபாத்திரத்தின் மரணத்திற்குப் பிறகு தொலைக்காட்சியில் அவரின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பாகும்.

”வேலாயுதன் அண்ணன் பத்தேமாரியில் (படகில்) ஏறி கோர்ஃபஹான் வந்து இறங்கினோம். அங்கே ஒரு சாயபு உதவியோடு சார்ஜா வந்தோம். சார்ஜாவில் இருந்து துபாய்க்கு நடந்து வந்தோம். உயர்ந்த கட்டிடங்கள் அப்போதுதான் எழும்பிக்கொண்டிருந்தன. இப்போது காணும் பல கட்டிடங்களில் என் வியர்வைத் துளியும், கடின உழைப்பும் உண்டு. ’நம்மை நேசிப்பபவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறோம்’ என நினைக்கும்போது சோர்வு வருவதில்லை. நாம் அனுப்பும் காசு ஒரு தேவையை பூர்த்தி செய்கிறதென்பதே மிகுந்த மகிழ்ச்சியானது. எங்களில் பலரும் மனதை நாட்டில் வைத்துவிட்டு உடலை மட்டும் இங்கு வைத்துக்கொண்டு வேலை செய்கிறவர்கள்.

என்ன வேலை, என்ன சம்பளம் என மனைவி கூட அறிந்ததில்லை. எப்படிக் கஷ்டப்படுகிறோம் என்பதைச் சொல்வதில் வெட்கம் ஒன்றுமில்லை, ஆனால் அவர்களுக்கு நம் கஷ்டத்தைச் சொல்ல வேண்டாமென்றுதான் சொல்லாமல் இருக்கிறோம். ஊருக்கு பத்தாயிரம் அனுப்பும்போது, ’இருபதாயிரம் சம்பாதித்துவிட்டு, பத்தாயிரம் அனுப்புகிறார்கள்’ என்று அங்கிருப்பவர்கள் நினைக்கலாம். ஆனால் ஏழாயிரம் கிடைத்தாலும் மூன்றாயிரம் கடன் வாங்கியும் அனுப்புவதுண்டு. ஒரு போதும் ’எனக்கு பலன் திரும்பக் கிடைக்கும்’ என்பதற்காக உதவி செய்ததில்லை. அப்படி எதிர்பார்த்து கொடுப்பது அன்பின்பால் அல்ல, கடன் கொடுத்தல்.

பிறப்பு முதலே கடவுள் பல சௌபாக்கியங்களைக் கொடுத்ததுண்டு. நேசம் மிகுந்த அம்மாவின் மகனாய் பிறந்தது, அன்பான சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், எப்போதும் புரிந்துகொள்ளும் மனைவி, வாழ்க்கை முழுதும் உடன் நிற்கும் நண்பன் என இவர்களை நினைக்கும்போது நான் எல்லா வளங்களையும் பெற்றதாகவே நினைக்கிறேன்.

’எப்போதாவது பரிசுப் பொருட்களோடு வரும் விருந்தினர்களை’ போல பிள்ளைகள் எங்களைக் கருதுவதுண்டு. பிள்ளைகளின் வயதொத்தவர்களைக் காணும்போது, நமக்கு நம் பிள்ளைகளின் நினைவு வரும். அப்பா, அம்மா வயதில் இருப்பவர்களைக் காணும்போது எத்தனை பிள்ளைகளுக்கு தங்களின் அப்பா, அம்மா நினைவுக்கு வருகின்றனர்?

ஒவ்வொருவரும் தம் மனதில் நினைப்பதுபோல்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர். ’இவர் மகிழ்ச்சியோடு வாழ்கிறாரா, வருத்தத்தோடு வாழ்கிறாரா’ என வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொல்ல முடியாது. ’ஊரில் இருக்கும் குடும்பத்தின் அங்கமாய் நாம் இல்லையே’ என்று பல தருணங்களில் நான் வருத்தப்பட்டதுண்டு. சகோதரன் ஸ்கூட்டரிலிருந்து விழுந்து அடிபட்டுக் கிடந்தபோது, மனைவிக்கு தொண்டையில் புண் வந்து சாப்பிட முடியாமல் இருந்தபோது, மகனுக்கு மஞ்சள் காமாலை வந்து படுக்கையில் இருந்தபோது அவர்களோடு உடன் இருக்க முடியவில்லையே என வருத்தப்பட்டதுண்டு. அழுததுண்டு.

எனக்கு வயதாகிவிட்டதே என்று கவலையில்லை, இனி குடும்பத்திற்கு தொடர்ந்து உழைக்கும் அளவிற்கு உடல்பலம் இல்லையே என்பதுதான் கவலை.

உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் காரணமாய் இருந்தால், பெற்ற அம்மாவும் அப்பாவும் மன நிம்மதியோடு உறங்குவதற்கு நீங்கள் காரணமாய் இருந்தால் அதுவே வாழ்க்கையில் சாதித்ததாக கருதப்படும். மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாய் இருந்தோம் என்பதுதான் சாதனை. என் குடும்பம் பட்டியினிலிருந்து மீண்டது, அப்பாவின் கடன்களை அடைத்தது, சகோதரிகளுக்கு திருமணம் செய்துகொடுத்தது, சகோதரனின் தொழிலுக்கு உதவியது என இதெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு முழு வெற்றியாளன் தான்.

இனியொரு பிறப்பு உண்டெனில், இதே மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்; இதே பெற்றோர்களின் மகனாய், இதே சகோதரிகளின் சகோதரனாய், இதே மனைவியின் கணவனாய், என் பிள்ளைகளின் தகப்பனாய், என் நண்பன் மொய்தீனின் நண்பனாகவும் இன்னொரு பிறப்பு வேண்டும்” எனும் காட்சியோடு அந்தப் பேட்டியில் அவர் உருவம் உறைய….காட்சி வேறொன்றோடு கலந்து தேய்ந்து மௌனிக்கிறது.



ஆட்களை கள்ளத்தனமாய் கொண்டு சேர்க்கும் படகில் பயணப்பட்டு தன் இளமைக்காலத்தில் வளைகுடா நாட்டில் கால் வைத்து, ஐம்பது ஆண்டுகள் வேலை செய்து ஏழ்மையிலிருந்து தன் குடும்பத்தை, உறவுகளை மீட்டெடுத்து அங்கேயே இறந்தும்போகும் அந்த நாராயணன் கதாபாத்திரம், அதேபோன்று வாழும் ஆயிரமாயிரம் குடும்பங்களின் மனதில் பெரும் புயலை உருவாக்கியிருக்கும்.

ன்னுடைய இளமை, மகிழ்ச்சி, உறவுகளின் அண்மையெனும் சுகம் உட்பட எல்லாவற்றையும் துறந்து வெளிநாடுகளில், தனித்து வாழும் பல நண்பர்களை அறிவேன். குடும்பத்தின் கடன் சுமையைத் தீர்க்க வேலைக்காக வெளிநாட்டிற்கு, பச்சைப் பிள்ளைகளை விட்டுப்பிரிந்து நான்கைந்து ஆண்டுகள் சென்றிருந்த சில அம்மாக்களையும் அறிவேன்.

சுமார் இருபது ஆண்டுகள் கணவனும் மனைவியும் போராட்டக் களத்தில் போராளிகளாக நின்ற ஒரு பூமியிலிருந்து, தம் வாழ்வை பூஜ்யத்திலிருந்து துவங்கவேண்டிய நிலையில் வேலைக்கென தேடி வெளிநாடு செல்கிறார் கணவர். சில ஆண்டுகள் பணியாற்றி ஊர் திரும்பியவர் இருபது ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டிருந்த தம் பெற்றோர், சகோதரிகளுக்கு தான் சம்பாதித்த முழுவதையும் கொடுத்துவிட்டு குடும்பத்திற்குத் திரும்புகிறார். வாழ்க்கை மீண்டும் அதே பூஜ்யத்திலிருந்து தொடங்கப்படுகிறது.


பொதுவாக வெளிநாடு என்பது காசு கொழிக்கும் களமாகவே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒருவகையில் அது உண்மையும் கூட. குறிப்பிட்ட சில நாடுகளின் வாழ்க்கை நேர்த்தி பிடித்துப்போனாலும், யாருக்காக உழைக்கின்றோமோ அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் எத்தனை கொடிது!. இந்த முரணுக்குள் புதைந்து கிடக்கும் தியாகம்தான் பல்லாயிரம் குடும்பங்களை மீட்டெடுத்து குனிவிலிருந்து  நிமிர வைத்திருக்கின்றது. இந்த தியாகங்களைச் செய்பவர்களுக்கு தியாகங்களுக்கான பலன் தமக்கு உணர்த்தப்பட வேண்டும் என்பதைவிட, தியாகங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படாமலும், வேறு வழிகளில் அது சிதைக்கப்படாமலும் இருந்தாலே போதுமெனத் தோன்றுகிறது.

எதிலும் ’இதுதான் சரி’, ’இதுதான் தவறு’ என்று விரல் சுட்ட முடிவதில்லை. அது காலத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றது. அவரவர் பக்கத்தில் சிறிதாகவோ, பெரிதாகவோ ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும். இன்னும் சில இடங்களில் அநியாயமும்கூட இருக்கலாம். மனிதர்கள் அப்படித்தான்’ மனித வாழ்க்கையும் அப்படியானதுதான். தியாகங்களால் கட்டமைக்கப்படும் இந்த வாழ்வில், தியாகங்கள் குறைந்தபட்சம் அதற்கான பொருத்தமான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுதல் மட்டுமே நலம்!


வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...