அறிந்த மனிதர்களை, அன்பாய் கை நீட்டும் உறவுகளைச் சந்திக்கும் போதேல்லாம் மகிழ்ச்சி வழிந்தோடுவது வழக்கமாகிப்போனது.
நேற்றும் அது போல் ஒரு வழக்கான தினம், ஆனால் மகிழ்ச்சி அதீதமாய் வழிந்தோடியதினம். காரணம் ஒன்றல்ல இரண்டல்ல பல. அதில்….
- நண்பர் பழமைபேசியின் புத்தகம் அறிமுகம்
- நண்பர் ஆரூரன் நடத்தும் விழா
- கோவையில் சட்டென எதிர்பாராமல் கூடிய பதிவர்களின் அருமையான எண்ணிக்கை
- மூத்த பதிவர்கள் மற்றும் பெண்பதிவர்களின் வருகை
- எழுத்தில் மட்டுமே பார்த்த, பதிவர்கள் தமிழ்மணம் காசி, வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் ஆகியோரின் மிகத் தெளிவான உரை
- சேர்தளம் (திருப்பூர் பதிவர்களின்) குறித்த தினமலர் கட்டுரை
- முகப்புத்தக உறவுகளின் வருகை
என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
பழமைபேசியின் ஊர்ப்பழமை அறிமுக விழா குறித்து முடிவானபோதே, எப்படியும் கோவையில் இருக்கப்போகிறோம், எனவே பதிவர்களைச் சந்திக்கும் வாய்ப்பாகவும் மாற்றிக்கொண்டால் என்ற எண்ணத்தில் ஒரு திட்டமிடாத திட்டமாக கோவையில் கூடுவோம் என்று இடுகையிட்ட போது, மிகக் குறைவான எதிர்பார்ப்புகள் மட்டுமே ஆட்கொண்டிருந்தது.
ஆனாலும் ஞாயிறு காலை முதல் மனதுக்குள் கொஞ்சம் சுவாரசியமும் பரபரப்பும் கூட ஆரம்பித்தது. மூன்று மணிக்கு மேல் பதிவுலக நண்பர்கள் ஓரு சிலராய்க் கூடி வட்டமாய் அமர… பின்னர் நிமிடத்திற்கு நிமிடம் வட்டம் பெரிதாகிக்கொண்டே போனது
தமிழ்மணம் காசி, லதானந்த, வானம்பாடிகள் பாலா, க.பாலாசி, சஞ்சய் காந்தி, முனைவர் கந்தசாமி, தாராபுரத்தான், வெயிலான் ரமேஷ், தமிழ்பயணி சிவா, மஞ்சூர் ராசா, வின்சண்ட், பால கணேஷ், மயில் விஜி, தாரணிப்பிரியா, வீட்டுப்புறா சக்தி, ஈரோடு கார்த்திக், லலிதா முரளி, கலாராணி, வடகரை வேலன், செந்தில் நாதன், ராமன் குட்டி, நிகழ்காலத்தில் சிவா, நந்தகோபால், பொன். கருணாநிதி, சுப்பையா வாத்தியார் (மன்னிக்கவும் இன்னும் மூன்று பதிவர்கள் பெயரை மறந்துவிட்டேன்) என பதிவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, பதிவர்கள் அறிமுகப் படலம் நிறைவேறி, முதலில் சந்திப்பவர்கள் ஆச்சர்யங்களில் திளைத்து, வழக்கம்போல் கலாய்த்துக்கொண்டிருக்க அரங்கு நிறைந்தது… விழா தொடங்கியது
மிக நேர்த்தியான விழாவிற்கு கூடுதல் பலம் சேர்த்தது நம் பதிவர்கள் ஆற்றிய உரை. எழுதுவது பலருக்கு எளிது, ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கூட்டத்திற்கு முன்பு ஒலிவாங்கியில் பேச நிர்பந்திக்கும் போது பலரின் உயிரை ஒலிவாங்கி சுருட்டி இழுப்பது போல் தோன்றும். தமிழ்மணம் காசி அவர்களின் புத்தகம் குறித்த அறிமுகவுரை மிக நேர்த்தியாக தெளிவாக இருந்தது விழாவின் வெற்றிக்கு கனம் கூட்டியது. அடுத்து புத்தகம் குறித்து தங்கள் பார்வைகளை பகிர்ந்த வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் காந்தி மூவருமே வேறு வேறு கோணங்களில் புத்தகத்தில் இருக்கும் ஆழ்ந்த எழுத்துக்கான வெகுமதியான வார்த்தைகளை மிக அருமையாக அள்ளித் தெளித்தனர். குறிப்பாக வெயிலானின் தயாரிப்பு மிக அற்புதம்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் திரு.தங்க.விசுவநாதன், திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் திரு. செல்வராஜ், திரு.மருதால அடிகளார், திரு.சுப்பிரமணி, திருமதி. இந்திராணி சுப்பிரமணியம் ஆகியோர் சிறிதும் தடம் பிசகாமல் புத்தகத்தில் உள்ளவற்றையொட்டியே பேசியது விழாவின் வெற்றிக்கு உத்திரவாதம் அளித்தது.
விழாவில் பதிவர் பழமைபேசி, அட்டைப் படங்களை அளித்த கருவாயன் (எ) சுரேஷ்பாபு ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேடையை அலங்கரித்த அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான தினங்களில் நேற்றும் ஒன்று, இந்த இனிய விழாவிற்கு காரணமாய் இருந்த பழமைபேசி, ஆரூரன் மற்றும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.