தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப் பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்து வைத்திருக்கும் ஏதோவொன்றிலிருந்து விடுபடாமல் சுமப்பவர்கள், அதே இடத்தில் தேங்கியிருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. காரணம் தாம் நம்பிய, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தவொன்றிலிருந்தும் விடுபடுதல் அத்தனை எளிதல்ல.
"கிட்டாதாயின் வெட்டென மற" எனும் ஔவையின் வாக்கு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எத்தனையோ இடங்களில் எளிதில் விடுபட உதவிய மந்திரம் அது. சொல்வதற்கு எதுவும் எளிதுதான். ஆனால் நிகழ்த்துவதென்பது அத்தனை எளிதல்ல என்பது திருவள்ளுவர் கூறியதை வைத்துப் பார்த்தால் இரண்டாயிரமாண்டு அனுபவம் நமக்கு.
தொழில், வேலை, பணம், பதவி, புகழ், உறவு உள்ளிட்ட பலவற்றில் ஏதோவொரு தருணத்தில் விடுபட வேண்டிய, கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்போது மிகச் சரியான, அந்தச் சூழலுக்கு உகந்த முடிவெடுக்க முடியாமல் தடுமாறியதால் ஏற்பட்ட விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும்.
ஏதோவொரு தருணத்தில் எல்லாமும் நமக்கு இணக்கமாக, நமக்கென்றே வாய்த்ததாக இருப்பவை, இன்னொரு தருணத்தில் ஒட்டுமொத்தமாக எதிர்நிலை எடுத்திருக்கும். இணக்கமாக இருந்ததன் கதகதப்பை அனுபவித்ததுபோல், எதிர்நிலைக்குச் சென்றதின் வெம்மையை அத்தனை எளிதில் எதிர்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலுவதில்லை. அதற்கு மிகப் பெரிய திடமும், பக்குவமும், நிதானமும், புரிதலும் தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் பெரும்பாலும் தடுமாறி, உருமாற நேரிடுகின்றது.
சில தொழில்களை மிகப் பெரும் நம்பிக்கையுடன் ஆரம்பித்திருப்பார்கள். ஆரம்பித்தபோது நன்றாக இருந்திருக்கும். காலவோட்டத்தில் பெரிய காரணங்கள் ஏதுமின்றி, சில தொழில்கள் தம் வேகத்தை, திறனை இழந்துவிடும். தொடங்கியவரின் திறமைக் குறைவு, உழைப்புக் குறைபாடு அதற்குக் காரணமாக இருக்க வேண்டியதில்லை. அந்தத் தொய்வு காலத்தின் விளைவு. ஆனால், விரும்பி ஆரம்பித்த அந்தத் தொழில் மீது ஏற்பட்டிருந்த பிணைப்பு, மாற்றி யோசிக்கவோ, சற்று விலகி நின்று பார்க்கவோ அனுமதிக்காது. அதன் காரணமாக விடுபடவோ, வெளியேறவோ தெரியாமல் தொடர்ந்து அதற்குள்ளாகவே உழன்று கொண்டிருக்க வேண்டி வந்துவிடும்.
எதன் ஒன்றிலும் உழல ஆரம்பித்துவிட்டால் நூற்கண்டின் ஒரு முனையை எடுத்துக்கொண்டு மிகக்குறுகிய வட்டத்திற்குள் குறுக்கும் மறுக்கும் ஓடுகின்றோம் என்று பொருள். அவிழ்க்க முடியா சிக்கல் விழுவதைத் தவிர வேறென்ன நிகழும்?. சிக்கல்கள் மிகும்பொழுது, சிக்கல்களால் ஏனையவை முடங்கும்பொழுது, தாறுமாறாக அறுத்தெறிவது தவிர வேறென்ன வழி?
ஏதோவொரு காலத்தில் வேலை கிடைத்திருக்கும், கடையை ஆரம்பித்திருப்பார்கள். ஓர் எல்லையைத் தாண்டி வளரவோ, விரிவடையவோ வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தாலும், அதனை ஒப்புக்கொள்ள ஏராளமான தடைகள் உண்டு. ’ஏன் வேலையை விட்டுட்டே? ஏன் கடையை மூடிட்டே?’ எனும் கேள்விகள் வெகுவாகத் தாக்கும் சாத்தியமுண்டு. அந்தத் தாக்குதல் குறித்த அச்சமே பெரும் மனத்தடையை ஏற்படுத்தும். அதே சமயம், அதுவரை செய்த வேலை அல்லது வியாபாரம் மிகவும் பழகிப்போன, வசதியான ஒன்றாக மனதிற்குள் படிந்து போயிருக்கலாம். குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வளர்ச்சியில்லாத நிலையில், அதிலேயே தொடர்வதா அல்லது வேறொன்றிற்கு மாறுவதா என முடிவெடுக்க முடியாமல், நிலைமையைக் கடினமாக்கிக்கொள்வோர் மிகக் கணிசமாக உண்டு.
தொழில், வேலை, வியாபாரம் ஆகியவையாவது வாழ்க்கையோடு மிகுந்த தொடர்புடையதெனச் சொல்லலாம். நம்மைச் சுற்றிலும் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. தொழில்சார் அமைப்புகளும் உண்டு, சேவை அமைப்புகளும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து கிளை பரப்பிய சில சேவை அமைப்புகள், சங்கங்கள் நம் மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன. அதன் வெவ்வேறு நிலைகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள். சிலர் தம் திறன் என்ன, தம் இடம் எதுவெனத் தெளிவாக இருப்பார்கள். பலருக்கு அதுவரையிலும் குறிப்பாக தம் குடும்பம் மற்றும் சுற்றத்தில் கிடைக்காததொரு பதவி மற்றும் அங்கீகாரத்தை இம்மாதிரியான அமைப்புகள் எளிதில் வழங்கிவிடும். அதுவொரு போதையாகத் தழுவிப் பிணைந்துகொள்ளும். தொடர்ந்து அதீதமாக ஈடுபடுவது, அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொள்வது, விழாக்களைப் பெரும் பொருட்செலவில் ஏற்று நடத்துவது என தன் பிடிக்குள் மெல்ல மெல்ல அந்த அமைப்புகள் மனிதர்களை கபளீகரம் செய்யும். இதற்காகப் பல லட்சங்களை இன்னும் சொல்லப்போனால் கோடிக்கணக்கான ரூபாய் வரை விரயம் செய்தவர்களைக்கூட அறிவேன். அதன் காரணமாக தொழில், குடும்பம் மற்றும் உறவுகள் ஆகியவற்றின் மீது குறைந்தபட்ச கவனம்கூட செலுத்தமுடியாமல் முடங்கி, மிகக் கணிசமான இழப்பினை சந்தித்தவர்கள் உண்டு.
குடும்ப உறவுகள் குறிப்பாக திருமண உறவுகளில் விழும் முடிச்சுகள் அத்தனை எளிதில் அவிழ்க்கப்பட முடிவதில்லை. தமக்குத் துளியும் பொருந்தாத, ஒருபோதும் நிம்மதியை உணர்ந்திடாத இருவர், ஒரே அறைக்குள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இங்குண்டு. அதிலிருந்து விடுபடவேண்டிய நினைப்பே இல்லாதவர்கள் பலர் உண்டு.
மிகத் தன்மையான குடும்பம் அது. ஒரே மகளுக்குத் தேடித்தேடி மாப்பிள்ளை பார்த்து வெகுசிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் பிள்ளைகளின் வாழ்வு அழகியதாகவே தோன்றியது. சில மாதங்கள் கழிந்து, கற்பனை செய்திட முடியாத மாதிரியான சிக்கல்கள் முளைக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் பிள்ளைகளின் உறவு தொடராமல் இருப்பதுதான் நல்லது எனும் முடிவுக்கு எல்லோருமே வருகின்றனர். பெரிய அளவிலான பாதிப்புகள் பெண் பக்கம்தான் விளைந்தன. எனினும் பெண்ணின் அப்பா மிகத் தெளிவாக, நிதானமாக, தேவையான, தங்களுக்கு உகந்த முடிவினை தைரியமாக எடுக்க முனைந்தார்.
உறவுகளாய் இணையும்போது இருக்கும் பிரியம், பரவசம், அன்பு உள்ளிட்ட எதுவுமே பிரியும்போது இருக்காது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனாலும் சம்பந்தி வீட்டாரிடம் ஆச்சரியப்படும் வகையில் மிக நிதானமான உரையாடலைத் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். ’எப்படியும் பிரிவுதான் இருவருக்கும் நல்லது, கீறல்கள் காயங்கள் எதுவுமின்றி பிரிந்துவிடுவோம். யார் குறித்தும், குற்றம் சொல்வதோ, புகாரோ வேண்டாம். பிரிகின்ற இருவருமே அடுத்ததொரு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும். அதனை மனதில் வைத்து எதுவும் சங்கடமின்றி இயல்பாக விலகிட வழி வகுப்போம்’ என்பதை மிகத் தெளிவாகவும், திடமாகவும் சொல்லிவிட்டார்.
பிரிவும் அவ்விதமே நிகழ்ந்தது. இவருக்கு இருந்த நிதானமும், பக்குவமும், தெளிவும் எதிர்தரப்பிற்கு இல்லை. அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாதுதானே!? ஆங்காங்கே அவர்கள் சொன்னதாக ஏதேதோ காதுகளுக்கு வந்தன. மூன்றாம் மனிதர்கள் கூறிய எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. அடர் மௌனம் காத்தார். மகளை இதிலிருந்து மீட்டெடுத்து, அவள் மனச் சமநிலை அடைந்ததும், இன்னொரு சரியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட வேண்டுமென்று தீர்க்கமாக இருந்தார். கீறல்கள் இன்றி மகள் விடுபட்டாள்.
அவர்களின் நெருக்கடியான காலகட்டத்திலும் பேச நினைத்திருந்தேன். சூழலும் வாய்ப்பும் அமையவேயில்லை. அத்தனையும் எனக்கு மிக மேலோட்டமாக அவ்வப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகளின் வாழ்க்கை முறிந்த வலி, வேதனை, பதட்டம் ஆகியவற்றிலிருந்து மீண்டு, மகளின் புதிய வாழ்க்கை குறித்து ஒருவித நிம்மதியோடு இருந்தவர்களிடம், ஆற அமர அமர்ந்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவர்களாகவே கடந்து வந்த அந்தக் கொடூரமான காலத்தைப் பேச ஆரம்பித்தனர். நானாக எதுவும் கேட்கவில்லை. அவர்களுக்கு வெளிப்படுத்தத் தோன்றியிருக்கலாம். தங்கள் மனதைக் கீறி எல்லாவற்றையும் கொட்ட ஆரம்பித்தனர். இதுவரை மூடப்பட்டிருந்த புண் திறக்கப்பட்ட வீச்சம் அவர்களின் பேச்சில் இருந்தது. சீழ் வெளியேறியதை உணர்ந்தேன். நிதானமும், தெளிவும், திடமும், நம்பிக்கையும் எத்தனை முக்கியம் என்பதை இன்னொருமுறை உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடந்து வந்த விதம் மிகுந்த மனநிறைவினைத் தந்தது.
விடுபட வேண்டியவற்றிலிருந்து விடுதலையாகாமல் இருப்பதற்கு தலைவிதியோ, சாபமோ காரணமில்லை. முடிவெடுப்பதில் இருக்கும் போதாமையே மிகப் பெரிய காரணம். முடிவெடுத்தலில் நிகழும் மிகப் பெரிய முரண், தனித்து முடிவு எடுக்க வேண்டியபோது, பலரையும் அதற்குள் திணித்துக்கொண்டு குழம்புவது, துணைபுரிகின்றவர்களோடு தீர்க்க வேண்டியதை தனித்து நின்று போராடிக் களைப்படைவது. முடிவெடுத்தல் மிகப் பெரியதொரு கலை. அதனைக் கற்றுக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்வது மற்றும் தேவையெனின் துணை சேர்த்து செயல்படுவது மிக முக்கியம்.
கடந்து வந்துவிட்டவர்களைத் தள்ளி நின்று பார்க்கும்போது, திரைப்படத்தில் ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மாறிவிடுவதுபோல் கருதி விடுகிறோம். ஆனால் அவர்கள் கடந்து வந்த காலம் என்பது வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிடங்கள், நொடிப்பொழுதுகள் என அதீதமான நீளம் கொண்டவை. ஆனால் ஒட்டுமொத்த வாழ்வில் அதுவொரு பகுதியே.
கடக்கவே முடியாது என அஞ்சியதை, கடக்க முடியுமா எனத் தயங்கியதை ஏதோவொரு வகையில் கடக்கும்போது, வாழ்வு உடனடியாக வெகுமதி அளித்துவிடுகின்றது. அந்த வெகுமதி நமக்கு நாமே பெருமைகொள்வதோ, மற்றவர்கள் நம்மைக் கண்டு வியப்பதோ அல்ல. அந்த வெகுமதிக்கு நிம்மதியென்று ஒரு பெயருண்டு.
No comments:
Post a Comment