ஒவ்வொருவருக்கும் நட்பும் உண்டு பகையும் உண்டு. சில நட்புகள் எப்படி உருவானது என்றே தெரியாது, அதேபோல்தான் சில பகைகளும். ஏன், எப்படி, எதற்காக உருவானது எனத் தெரியாமலே அதன் போக்கில் வளர்ந்து நிற்கும். பகை என்றதும் நாடுகளுக்கு இடையில் நிகழும் யுத்தம், மனித உறவுகளுக்கு இடையில் உருவாகும் பிரிவு என்றெல்லாம் எளிதாகத் தோன்றிவிடலாம். இது அம்மாதிரியான பகை குறித்து அல்ல. தம்முடன் மற்றும் தமக்குள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பகை குறித்தே.
தமக்குள் பகையா எனும் கேள்வி வரலாம். ஒருவர் நினைப்பதற்கும் - செய்வதற்கும், விரும்புவதற்கும் - அடைவதற்கும், இருப்பதற்கும்- வாழ்வதற்கும் இடையே இயல்பாக ஏற்படும் முரண், தொடர்ந்து வளரத் தொடங்கினால் அது வேர் விட்டு வளர்ந்து பகையென கிளை பரப்பிவிடும்.
சற்று சிந்தித்துப் பார்த்தால், நமக்குள் ஏற்பட்ட முரண்கள், முரண்களாக மட்டுமே இருக்கின்றனவா அல்லது பகைகளாக மாறிவிட்டவனா என்பது புரிந்துவிடும். பலர் என்னிடம் உரையாடும்போது, அவர்களை அறியாமல் வெளிப்படுத்துவது, அவர்களுக்கு அவர்களோடு இருக்கும் பகை குறித்துதான். தாம் வளர்த்து வைத்திருப்பது தம்முடனான பகை என்பதை அறியாமலே பலரும் இருப்பதுண்டு.
உரையாடும் எல்லாரிடமும், அதனை வெளிப்படையாகப் புரியும்படி உணர்த்திவிட முடிவதில்லை. காரணம், அதனைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை என்பதாகவே உணர்த்துவார்கள். நேரம் இல்லை என்பது மிக எளியதொரு தப்பித்தல். புரிந்துகொள்ள முடியாதது என்பது பெரும்பாலும் நேரம் தொடர்பானது கிடையாது. மனம், அறிவு மற்றும் தேடல் தொடர்பானது.
சமீபத்தில் ஒரு மாலை நேரம், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றினை முடித்துவிட்டு, வாகனத்திற்கு வந்தேன். வாகனத்தை இயக்கும் முன், சில மணி நேரமாக அணைத்து வைத்திருந்த இணையத்தை உயிர்ப்பித்தேன். இடைப்பட்ட நேரத்தில் அனுப்பப்பட்டு காத்திருப்பில் இருந்த சொற்கள் வந்து விழத் தொடங்கின. சொற்கள் என்பவை செய்திகள், தகவல்கள், விசாரிப்புகள், கேள்விகள் மற்றும் பதில்கள் என பல வடிவம் கொண்டவை. அவற்றில் தேவையில்லாதவை சில. ஆனாலும் அவை நம்மை வந்து சேரத்தானே செய்யும். அப்படி வந்து சேர்வதை எந்த மட்டத்தில் நிறுத்துவது என்பது அவரவர் தெரிவு. வந்திருந்தவற்றை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டவைகளில் ஏறத்தாழ எல்லாமே வீட்டை அடைந்த பிறகு, வாசித்தால் போதும். ஆனால் ஒன்று மட்டும் கவனத்தை ஈர்த்தது. அது சில வாரங்களுக்கு முன்பு உரையாடல் தொடங்கியவரிடமிருந்து வந்திருந்தது. திறந்தேன்.
”சார் கொஞ்சம் நாளா பல நேரங்களில் வாழ்க்கையே தோல்வி அடைந்துவிட்டது அப்படின்னு பயமா இருக்கு சார். இந்த எண்ணம் போவதற்கு என்ன செய்வது சார்!”
அவருக்கு சவால் மற்றும் தோல்வி இருப்பது உண்மைதான். முதல் வரியை மீண்டும் மீண்டும் வாசித்தேன். நேரம் இருந்தால் பேசலாம் என்று பதிலளித்துவிட்டு புறப்பட்டேன். சில நிமிடங்களில் அழைப்பில் வந்தார். அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், சொல்லாமல் பொதுவான உரையாடலாக ஆரம்பித்தேன்.
அவர் அனுப்பியது குறித்து எதுவும் கேட்காமல், பொதுவான என்னுடைய கேள்விகளும், , அதற்கு வந்த பதில்களுமென உரையாடல் தொடர்ந்தது. தாம் அனுப்பியது குறித்து நான் நேரடியாக எதுவும் கேட்கவில்லையே என்ற சிந்தனை அவருக்குள் இருந்திருக்கலாம். அதை உரையாடுவதுதான் என் நோக்கமாக இருந்தாலும், அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்தவாறு, அதனைத் தொடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். சில காலமாக அவரைக் கவனித்த வரையில் இரண்டு செயல்களை நான் உணர்ந்திருந்தேன்.
ஒன்று, தன்னை தொடர்ந்து கடந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குள் புதைத்துக்கொள்வது. குறிப்பாக அவருடைய குழந்தைப் பருவம். இன்று வாழும் சூழல் அந்தக் குழந்தைப் பருவத்திற்கு முற்றிலும் நேரெதிரானது. இது அவருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானதுதான். இந்த நிகழ்காலம் அவருக்கு அவ்வளவாக பிடிக்காமலும் இருக்கலாம். என்னிடம் பகிர்ந்தவரையில் அவரின் நிகழ்காலத்தில் சில இயலாமைகள், தோல்விகள் மற்றும் காயங்கள் உண்டு. சொல்லப்படாதவை இன்னும்கூட இருக்கலாம்.
அப்படியான காரணங்களால், நிகழ்காலத்தில் இயங்குவதைவிட, நிகழ்காலத்தை எதிர்கொள்வதைவிட, ஏதோ ஒருவகையில் கடந்த காலத்தின் அவருக்குப் பிடித்ததொரு தருணத்தில் புதைத்துக்கொள்வது சற்றே சமாதானத்தைக் கொடுத்திருக்கலாம். இம்மாதிரியான சமாதானம், ஆசுவாசங்களுக்காக செய்ய வேண்டாத பலவற்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்து வருவோம்.
அவரிடம் நான் அறிந்த இன்னொன்று, தன்னுடைய நிகழ்காலத்தை வெளிப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள். அவற்றில் ஒருவித இயலாமை, சோகம், இறுக்கம், புதிர் தன்மை, தெளிவற்ற நிலை, இருண்மை தனித்தோ பிணைந்தோ இருப்பதுண்டு. பெரும்பாலும் வலிக்குள் அமிழ்த்தி, இருளைக் கயிறாக்கி இழுக்க முயற்சிப்பதுபோல் இருக்கும். அங்கிருந்து அடையாளமற்ற ஏதோ ஒன்றுக்கு தகவல் பகிரும், சவால் விடும் முனைப்பிருக்கும்.
அவரின் அந்த இரண்டு இயல்புகளையும் தொடாமல், உரையாடலைத் தொடர்கிறேன். உரையாடல் என் வசம் நீடிக்க, சிறிது நகைச்சுவை மற்றும் கேள்விகளைக் கொண்டு நகர்த்துகிறேன். உரையாடல் பலம் அடைந்ததும், அவர் எதிர்பாராத கணத்தில் நிகழ்காலத்தைவிட கடந்த காலத்தில் உழல்வதில், ஒருவித இருண்மைக்குள் தன்னை அடைப்பதில் இருக்கும் வசதிகள் யாதென கேட்டேன். சரியாக நாடி பிடித்துக்கேட்டது, சற்றே வியப்பினையோ, மெல்லிய அதிர்ச்சியையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
எதிர்பார்த்தவிதமாகவே பதில்கள் வந்தன. எதிர்பார்த்த விதமாக ஒன்று அமைகின்றதென்றால் அலைவரிசை இசைவாகிறது என்றுதானே பொருள். பதில்களிலிருந்து கவனமாக, ஆங்காங்கே கேள்விகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். சரியான கேள்விகளை இனம் கண்டடைவது உரையாடல் கலையில் முக்கியமானது.
வாழும் காலம் எத்தகையதெனினும், அதனை முற்றிலுமாகப் புறக்கணித்து விடாமல், எவ்வகையிலேனும் எதிர்கொள்வதே சரி என உணர்த்துவதே என் நோக்கம். காரணம் நிகழ்காலம் என்பது பூரணமான உண்மை. ஓர் உண்மை நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அதனை மறைப்பது, புறக்கணிப்பது மற்றும் இகழ்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
அந்த பிடிக்காத உண்மைக்கு எதிர்காலம் சார்ந்த கனவின் வர்ணங்களை சிலர் மட்டுமே பூசுவதுண்டு. பெரும்பாலானோர் நிகழ்காலத்தின் மீது கடந்த காலத்தினை ஒப்பனைகளாகவும், முகமூடிகளாகவும் அணிவித்து ஒருவிதமாக ஆசுவாசம் அடைந்து விடுவதுண்டு. எதிர்காலத்தின் வர்ணம் பூசுவதுகூட சில நல்ல விளைவுகளுக்கு வாய்ப்பாக அமைவதுண்டு. ஆனால் கடந்த காலத்தில் திருப்தியடைவது நிகழ்காலத்தையும் சிதைக்கும், எதிர்காலத்தையும் நோய்மையானதாக்கும்.
ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்கும்போது சிந்தனைகள் படபடக்கும். அது சிந்தனைக் கொந்தளிப்பாகவும் மாறும் ஆபத்துண்டு. ஏதோவொன்றை செய்யத்துடிக்கும். அதன் காரணமாக, நிகழ்காலத்தை சொற்களாக்கி, அதன்மீது ஏற்கனவே இருக்கும் ஒவ்வாமையை இருளாக்கி வர்ணமாகப் பூசும்போது, நிகழ்காலம் எளிதாக இருண்மையடைந்துவிடும். இயல்பாகவே அவற்றிலிருந்து இயலாமையும், சோகமும், பரிதாபமும் துர்நாற்றமாக வீசத் துவங்கிவிடும். அதனை நுகர்வதில் நம்மையறியாமல் ஒரு குரூர பிடிப்பு உருவாகிவிடும். நாம் நாமாக இல்லாமல் வேறொன்றாக மாறியிருப்போம். அப்படி வேறொன்றாக மாறுவதை நம்மோடு நாம் பகையில் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.
மெல்ல அவருடைய குழந்தைப் பருவ முகமூடியையும், சோக இழையோடும் சொல் வங்கியையும் மாற்றி மாற்றித் தொடுகிறேன். ஒருவேளை அப்படியில்லாமல் வேறு மாதிரியாக இருக்க வேண்டுமென்றால், ‘எப்படி இருந்தால் சரியாக இருக்கும்!’ எனும் கேள்விகளைத் தொடுக்கிறேன். அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் தந்துவிட முடியாது. நீண்ட பதில்கள் அளிக்கும்போது அந்தப் பதில்களை உள்ளுக்குள் ஒருமுறை நிகழ்த்துவது அல்லது பயிற்சி செய்வது நிகழும். அந்த நிகழ்த்தலும், பயிற்சியும் அந்தந்த கணங்களில் ஒருவித வாழ்தல்தான்.
அவரின் கடந்த கால நிலைத்தல் மற்றும் சோக இழையோடும் சொல் வங்கி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிகழ்காலம் எனும் உண்மையை திடமாக, நேர்மையாக எதிர்கொள்வது ஏன் சிறந்தது என்பதை உணர்த்துகிறேன். தாமே தம்மோடு பகைத்திருந்ததை எளிய சொற்களில் ஒப்புக்கொள்கிறார். சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் பயண நேரத்திற்குள் அந்த உரையாடல் நிறைவடைந்து விடுகின்றது.
ஒற்றை உரையாடலின் வாயிலாக ஒருவர் முற்றிலும் மாறிவிடுவார் என்று மட்டுமே நான் நம்பி விடுவதில்லை. மாற முடியும் என்பதற்கான விடை மட்டும் ’பளிச்’ என பல நேரங்களில் கிடைத்துவிடும்.
வேதியியல் பரிசோதனையில் வேதிப்பொருட்களின் அளவை, வர்ணச் சேர்க்கையில் வர்ணங்களின் அளவை ஒவ்வொருமுறை மாற்றும் போதும் ஒவ்வொரு விதமான விளைவு, நிறம் கிடைக்கும். அவை நமக்கு சரியானதாகவும் இருக்கலாம், சரியற்றதாகவும் இருக்கலாம். எந்தவொன்றைச் செய்தாலும், நிச்சயம் அதற்கென்று ஒரு விளைவு இருக்கும்.
பிறரிடமோ, தம்மிடமோ பகை கொள்தல் எளிது, களைதல் கடினம். ஆனால் இயலாதது அல்ல. சற்றே விழித்துக்கொண்டால், சரியான நபரை, தேவையான நேரத்தில் துணை கொண்டால் வாழ்வின் போக்கை ஓரளவு தீர்மானிக்க முடியும்.
உரையாடல் நிறைவடைந்த சில நிமிடங்களில் அவரிடமிருந்து, செய்தி ஒன்று வருகின்றது. திறக்கிறேன். ”சார் கொஞ்சம் நாளா வாழ்க்கை சரியாக போய்க் கொண்டிருக்கிறது சார். இன்னும் மென்மேலும் முன்னேறும் என்று நம்புகிறேன்!”
நிகழ்காலம் புன்னகைத்தது. அந்த நாள் அர்த்தமுள்ளதாக மாறியது.
- ஈரோடு கதிர்
- ஈரோடு கதிர்
1 comment:
இந்த உரையாடல் ஏதோவொரு வகையில் எனக்கும் கற்பித்தது. நன்றி
Post a Comment