ஒரே ஒரு வாழ்க்கைதான்

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மிகச் சரியாக இரண்டு மாதங்கள் முடிவடையும் நிலையில், மாவட்டங்களுக்குள்ளாக பொதுப் போக்குவரத்து தவிர்த்து மற்றவைகள் ஓரளவு சீரடைந்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முன்பு போல் நேர நெருக்கடிகளும், நெரிசல்களும், பதட்டங்களும் இல்லை. சில விற்பனையங்களில் இருந்து தயக்கமான ஓர் அழைப்பு வருகின்றது. வழக்கமான அழைப்புகளின் தொணி முற்றிலும் மங்கி, மிகுந்த அடக்கத்துடன் ‘எங்கள் சேவையைத் தொடங்கிவிட்டோம். உங்களுக்கு தேவையிருப்பின் வாருங்கள்’ என்கிறார்கள்.

ஓரளவு இயல்பிற்குத் திரும்பியது போல் இருக்கின்றது. எனினும் எதிர்கொள்ளும் மிகப் பெரும்பான்மையான முகங்களில் ஓர் இனம் புரியா இருள் வழிந்து கொண்டேயிருப்பது பார்க்க நேர்கின்றது. அதை எதிர்கொள்ள முடியாமல் விழிகளைத் தாழ்த்த வேண்டியதாக இருக்கின்றது.

பொது முடக்கத்திற்கு முன்பாக நாம் வாழ்ந்து வந்த இயல்பு நிலை என்பது, அனைவரும் எதையோ செய்து கொண்டிருந்தோம், அந்த செயல் செய்து வந்ததன் முக்கியக் காரணம் பொருளீட்டுவது. அதுவே குடும்பத்தை நகர்த்தும் விசை, உராய்வு எண்ணெய், வேகத் தடுப்பான், அதிர்வுகளைத் தாங்கும் உபகரணம். அதன் மூலமாகவே நம் கனவுகளில் வர்ணங்கள் பூசப்பட்டன, அதுவே பெரும் நம்பிக்கைகளைக் கொண்டு வந்தது.

ஆனால் இரண்டு மாத முடக்கம், நமது பொருளாதாரத்தின் ஊற்றுக் கண்களை வெகு வேகமாக அடைத்து வருகின்றது. எந்த திசை நோக்கினும் வேலை இழப்புகள், நிறுவன  மூடல்கள், வியாபாரா இழப்புகள் எனும் ஓலம் மெல்ல வலுப்பெறுகின்றது. சொந்த ஊர்ப்பற்று, வேலை இழப்பு, உணவின்மை, தங்க இடமின்மை என வெளி மாநில தொழிலாளர்கள் கால் நடையாய் வெளியேறும் கொடுமைகள் அரங்கேறும் அதே நேரத்தில், இங்கே பல்வேறு மட்டங்களில் வேலை இழப்புகள் குறித்த செய்திகள் தாக்கத் தொடங்கியிருக்கின்றன.

மிகுந்த வருத்தத்தோடுதான் அடுத்த வரியை எழுதுகின்றேன். இது ஆரம்பம் தான், இன்னும் விளைவுகளைப் பார்க்கும் நாட்கள் வரலாம் என்றே தோன்றுகிறது.

ஏனென்றால் நாம் அப்படியான ஒரு கட்டமைப்பில்தான் ஏறத்தாழ இருந்திருக்கின்றோம். தொழில், வர்த்தம், வேலை எல்லாவற்றிலும் ஒரு கண்ணி அறுந்தால் அடுத்தடுத்து அறுந்து போகும் கட்டமைப்பில்தான் இருந்திருக்கின்றோம். ஆக, இதில் யார் தவறெல்லாம் இருக்கிறதென எங்கு விரல் சுட்டினாலும் மீதி மூன்று விரல்கள் நம்மையேதான் சுட்டிக் காட்டும். ஏனெனில் எல்லாவற்றிலும் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாகவே இருந்திருக்கின்றோம்.

சிறு குறு நிறுவனங்கள் பகுதியாக மற்றும் முழுமையாக மூடப்படலாம். நடுத்தர நிறுவனங்கள் பணியாளர்களை வைக்கவும் முடியாமல், நீக்கவும் முடியாமல் தடுமாறலாம். ஓரளவு பெரிய நிறுவனங்கள் இதை சற்றுக் கணித்து, இதுதான் வாய்ப்பு என்றும் தனக்கான சாதகமான முடிவுகளை எடுக்கலாம். கார்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கென்று இருக்கும் விதிகளின் அடிப்படையில் எளிதாக முடிவுகளை அறிவிக்கலாம். இதில் எதுவாக இருந்தாலும், திடீரென வேலையை இழந்து சூன்யமா நிற்கப்போகும் பலருக்கும் ஆறுதல் சொல்லவும் சொற்கள் இல்லை, உடனடியாக பாதை காட்ட வெளிச்சமும் இல்லை.

கையறு நிலை வரும்போது ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது தனக்காக, தன் வாழ்க்கைக்காக உரத்து நிற்பதே. இங்கு நிகழும் அதிகபட்ச துயரமும், வதையும், கொடுமையும், துன்பமும் தம் ஒருவருக்கு மட்டுமேயல்ல.  முன்பெல்லாம் முப்பது முதல் ஐம்பது வயதிற்குள் இறந்து போனதாக சமூக வலைதளங்களில் மாதத்திற்கு ஒன்றெனப் பார்த்த அஞ்சலிப் பதிவுகள், சமீப வாரங்களில் வாரத்திற்கு ஒன்றென மாறியுள்ளது

உணவு, உடை, இருப்பிடம் என்பதே மனித வாழ்வின் அடிப்படைத் தேவை என்றாலும், அது தவிர்த்த பல தேவைகளை நாமாக உருவாக்கி அதற்குள் மூழ்கி, அவையன்றி வாழ்வில் ஏதுமில்லை எனும் நிலைக்குள் சிக்கியிருக்கின்றோம். அவற்றில் பிள்ளைகளின் கல்வித் தேவையும் இணையும்.

பணியிழப்பு, மேல் குறிப்பிட்டவற்றில் எதில் மிகக் கூர்மையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கவனித்து, முதலில் செய்ய வேண்டியது ‘சேதக் கட்டுப்பாடு’.

1. இது நாள் வரை இப்படித்தான் என்பதை மாற்றி இனி நிலைமைகள் சீராகும் வரை தேவையான அனைத்து சமரசங்களையும் ஏற்றுக்கொள்வது.

2. வீடு மாற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால் இருப்பிட மாற்றத்தை ஏற்றுக்கொள்வது.

3. அனைத்து செலவுகளில் தேவையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருதல்.

4. பிள்ளைகளுக்கான கல்வி விசயத்தில் தேவையான, திடமான முடிவினை எடுத்தல்.

5. எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்காமல், கருத்து கேட்டுக் கொண்டிருக்காமல், குடும்பத்திற்குள் அலசி ஆராய்தல் முக்கியம்.

6. ஒரு செயலை, சூழலை உணர்வுப் பூர்வமாக மட்டும் அணுகாமல், யதார்த்தமாக அணுகி முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவரிடம் கலந்து ஆலோசித்து தேவைப்படும் தீர்வுக்கான யதார்த்தமான முடிவினை எடுக்கலாம்.

7. தேவையான முடிவுகள் எடுப்பதில் எதுவும் அவமானம் இல்லை. நமக்கு இதுதான் சரியென்றால் அது நம் உரிமை. யார் என்ன நினைத்தாலும், அந்த யாரில் எவர் ஒருவரும் நம் வாழ்க்கையை வாழப்போவது இல்லை.

இந்த இடைவெளியில், அடுத்த வாய்ப்பிற்காக தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள தேவையானவற்றைச் செய்தல் வேண்டும். சூழ்ந்திருக்கும் நெருக்கடிகள் மனதை இயங்க விடாதுதான், எனினும் நெருக்கடிகளுக்கு இரையாகுவது அல்லது கடந்து கரையேறுவது அவரவர் கையில்தான் இருக்கின்றது.

சோகமாக, வருத்தமாக இருப்பதற்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் தன்னை மிடுக்காக வைத்துக் கொள்ளுதலும் எதிர்காலத்திற்காக தீர்வுகளைக் கொண்டு வந்து தரும்.

எதிர்காலத்தை நோக்கும் அதே நேரத்தில், எதிர்காலத்திற்காக கடந்த காலத்தையும் சற்று நோக்கலாம். கடந்து வந்த பாதையில் ஒவ்வொரு மைல் கல்லாக பின்னோக்கிப் பார்த்தால், நாம் அப்போது கவனிக்காமல் விட்ட ஏதோ ஒரு வாய்ப்பு இன்னும் அங்கே காத்திருக்கும். அதனைத் தற்காலிகமாக முயன்று பார்க்கலாம். அதுவே தீர்வாகவும் அமையலாம். இது

எடுத்தவுடன் பின்னோக்கி ஓடுங்கள் என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டாம். தேடிப் பாருங்கள், இருப்பதைக் கண்டறிந்து, கொஞ்சம் ஆராய்து, அது தீர்வாக இருப்பின் அதை கையில் எடுப்பது மிகப் பெரிய நிம்மதியையும், நம்பிக்கையையும் தரலாம்.

ஒரு கிருமியால், அதன் விளைவாய் எழுந்த முடக்கத்தால் இந்த இயற்கையின் சுழற்சியில் பெரிய மாறுபாடும், முடக்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. உயிருள்ள நாமும் இயற்கையில் ஒரு கண்ணி தானே. ஓர் இரும்புத் துண்டு போல், இயந்திரம் போல், கட்டிடத் தூண்கள் போல் அல்லவே. என்ன, நாம் இயற்கையில் இருந்து பிறழ்ந்து விலகியிருக்கலாம். அவரசமும், பகட்டும், எதையும் வாங்கிக் குவிக்கும் மனோபாவமும், வேலைதான் வாழ்க்கை என்ற எண்ணமும் குவிந்து நம்மை இயற்கையின் கூறுகளிலிருந்து புரட்டிப் புறந்தள்ளியிருக்கலாம்.

எனினும் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். எத்தனை பெரிய நெருக்கடிகளையும் மனித சமூகம் கடந்துதான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கடக்க முடியாது எனத் தீர்மானித்திருந்தால், அந்தக் கணத்தோடு இந்தச் சங்கிலி நின்று போயிருக்கும்.

மிகப் பெரிய நெருக்கடிகள்தான் மிகப் பெரிய திருப்புமுனைகளை, கண்டுபிடிப்புகளை, உருவாக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. பிறிதொரு நாளில் வாழ்ந்து வந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போது, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்காக இந்தச் சூழல் வந்திருப்பதாகக் கருதி அணுகுவோம்.

மனம் ஒன்றி, சுய நம்பிக்கை கொண்டால் வென்றெடுக்க முடியும். இருப்பது ’ஒரே ஒரு வாழ்க்கைதான்’. அதனை எதன் பொருட்டும் இழக்கவும், விட்டுக்கொடுக்கவும் முடியாது.

-



இந்த வார (ஜூன்-4) புதிய தலைமுறை இதழில் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியுள்ளது.

1 comment:

Unknown said...

"உயிருள்ள நாமும் இயற்கையில் ஒரு கண்ணி தானே"
Absolute definition for our lives.