HR Role in Disruptive Technological Environment


பற்பல சவால்கள் முன் நிற்கும் தொழில்நுட்ப சூழலில் நிறுவனங்களில் மனிதவளத்துறையின் பங்கு. (HR Role in Disruptive Technological Environment).

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) Confederation of Indian Industry (CII) ஈரோடு அமைப்பில் இணைந்திருக்கும் நிறுவனங்களின் மனிதவளத் துறையினருக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எல்லைகளுக்கு சவால் விடுவோம் எனும் தலைப்பில் பேச ஒப்புக் கொண்டிருந்தேன். தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியகள் மத்தியில் இயங்கிக் கொண்டிருந்த எனக்கும், இம்மாதிரியான ஒரு கூட்டம் தேவைப்பட்டது. நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் MBA மாணவர்கள் பங்கெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் உரையாற்ற ஒப்புக்கொண்டதில் இருந்து எனக்குள் கனத்துக் கொண்டிருந்த முதல் சவால் ஈரோட்டில் பேச வேண்டும் என்பதுதான். எனினும் CEO / HR என்பதால் என் தயாரிப்பில் அதீத கவனம் செலுத்திக் கொண்டேயிருந்தேன்.

துவக்கவிழாவிற்கு பிறகு 11.30 மணிக்கு தொடங்கும் முதல் அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நான் செல்லும்போது துவக்கவிழா நடந்து கொண்டிருந்தது. URC தேவராஜன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஈரோடு குறித்தும், இங்கு நிறுவனங்கள் வளர வேண்டிய தேவை மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார்.

துவக்க விழா நிறைந்தவுடன் தேநீர் இடைவேளை விடப்பட்டது. பங்கேற்பாளர்களை நோக்கினால் கணிசமாக நண்பர்கள். அதுவும் 10-20 வருடங்களாகப் பழகி வருகின்றவர்கள். இன்ப அதிர்ச்சியின் உட்சபட்சமாக என் எதிர் வீட்டுக்காரரும் பங்கேற்பாளராய். உள்ளூர் என்பதுதான் சவால் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் நெருக்கமாய் பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாக அறிந்து பழகியவர்கள் என்பது கடும் சவாலாய் மாறிப்போனது.

முதலில் கூறப்பட்டதுபோல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மனிதவளத்துறை அதிகாரிகள் மட்டுமில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இளம் தொழில்முனைவோர், பள்ளி ஆசிரியர்கள், நிறுவனப் பணியாளர்கள், பயிற்சியாளர்கள் என்றிருந்தவர்களை மனதில் நிறுத்தி தயாரிப்பில் இருந்த பலவற்றை மாற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்குமான உரையாக மாற்றிக் கொண்டேன். என்னுடைய அமர்விற்கு திரு.ரமேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.

*


Disruptive Technological Environment என்பதை நேரடியாக பொருள் கொண்டால், நிலை குலையச் செய்யும் தொழில்நுட்ப சூழல் என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது. Disruptive என்கின்ற சொல்லுக்கு நிலை குலைதல் / சீர் குலைதல் என நேரடிப் பொருள் கொள்ளாமல், நேர்மறையாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது காரணம், அதைத் தவிர்க்க முடியாது. அது நமக்கு ஏராளமான எளிமைகளைக் கொண்டு வந்திருக்கின்றது.

‘Disruptive தொழில்நுட்பம்என்பது புதிதாக அறிமுகமாகும் ஒன்று. யாருக்கும் போட்டியாக வராது. ஏற்கனவே இருப்பவற்றின் ஒரு மாதிரியாக எளிமைப்படுத்துவதற்காக வரும். தனக்கென்று பிரத்யேக வழிமுறைகள், செயல்திட்டங்கள் வைத்திருக்கும். திடீரென பிரமாண்டம் காட்டும், ஒருகட்டத்தில் ஏற்கனவே ஆழமாய் காலூன்றி, தவிர்க்க முடியாததாக இருந்த அனைத்தையும் தகர்த்து, தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ளும். இதை வாசிக்கும்போதே அப்படி எளிமையாக, புதுமையாக வந்து ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்த தொழில்கள், தொழில் நுட்ப கருவிகள் மனதிற்குள் நிழலாடுமே.

உதாரணத்திற்கு செல்போன் மற்றும் கிண்டில் மின் நூல் வாசிப்பை மட்டும் குறிப்பிட்டேன்.

ஒரு புத்தகத்தை வாசிக்க, எங்கோ ஒரு மரம் வெட்டப்பட்டிருக்க வேண்டும். வெட்டுக்கூலி, குத்தகை கொடுக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு, காகித ஆலைக்கு வந்து, அங்கு பலரிடம் பல கட்ட வேலைக்காரர்களிடம் வேலை வாங்கி, வெளுக்கப்பட்டு காகிதமாக மாறி, லாரியில் ஏறி பல நிலைகள் மாறி கடைக்கு வந்து, அச்சகத்துக்கு வந்தடையும் காகிதம்தான் புத்தகத்தின் மூலம். அடுத்து அந்தப் புத்தகத்தை வடிவமைத்த பிறகு, அச்சிடுவதற்கு ஃப்லிம்-ப்ளேட் என்ற நிலைகள் உண்டு. அச்சகம் எனும் மிகப்பெரிய, நவீன வசதி தேவை. காகிதம் வந்தது போலவே, அச்சிடும் மை வந்தடையும் வரலாறும் நீளமானது. எல்லாம் இணைந்து அச்சகத்தில் அச்சிட்டு, பைண்டிங் யூனிட்டில் மடித்து, தைத்து / ஒட்டி, கத்தரித்து, கடைகளுக்கு அனுப்பி, அங்கிருந்து ஒரு வாசகனை சென்றடைவது என்பது மிகப் பெரிய உழைப்பு மற்றும் பணம் உள்ளிட்ட பல்வேறு செலவு, செயல்களை உள்ளடக்கியது. இதே புத்தகத்தை மின்-புத்தகமாக நாம் வாசிப்பதன் பின்னே, வடிவமைப்புக்கான உழைப்பு தவிர அத்தனையும் தேவையற்றதாகிவிடுகிறது. அச்சு ஊடகத்தின் எதிரியாக மின் நூல் வரவில்லை. இதுவொரு புது வாய்ப்பாக, வித்தியாசமாக வந்தது. எளிமையானதாக இருந்தது. ஒருகட்டத்தில் மேலே குறிப்பிட்டவற்றில் 90 சதவிகத உழைப்பு, செயல்களை தகர்த்து வருகிறது. இன்னும் தகர்க்கும். இதுதான் Disruptive Technological Environment. இதை நாம் எதிர்க்க முடியாது. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முழுக்க வந்துவிடுமா? தெரியாது. ஆனால் இதன் வளர்ச்சியை தடுக்க முடியாது. தடுப்பது அறமும் அன்று. இது கபளீகரம் செய்யும் இடத்தில் நாம் இருந்தால், இதனைச் சமாளிக்க நாம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? இதேபோல் செல்போன் உதாரணத்தையும் விரிவாகப் பகிர்ந்திருந்தேன். இந்த 20 ஆண்டுகளில் செல்போன் மட்டும் குறைந்தபட்சம் 25 வகைப் பொருட்களை இல்லாமல் ஆக்கியிருக்கின்றது. இதுவும் தவிர்க்க முடியாது.



இப்படியான போட்டியாகத் தெரியாத ஒரு நவீனம் மிகப் பெரிய போட்டியாக வரும் சூழலில் நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டியவற்றில் மனிதவளத் துறை சார்ந்து நான் எடுத்துக்கொண்ட மூன்று புள்ளிகள்.

1. ஆட்கள் நியமனத்தில் மாற்றம்
2. பணியில் இருக்கும் மூத்தவர்களை நிர்வகிப்பது.
3. கட்டாய அலுவலகப் பணி எனும் வழக்கத்தை கேள்விக்குட்படுத்துவது
...ஆகியவை குறித்து விரிவாகப் பேசினேன். நிறுவனத்தில் அதிகாரம் செலுத்தக்கூடிய மனிதவளத்துறை அதிகாரிகளுக்கு இவை யோசிக்க வேண்டிய ஒன்றாக அமைந்திருந்திருக்கலாம். சிறு நிறுவனத்தினர், தொழில் முனைவோருக்கு இது எவ்வளவு தூரம் சாத்தியம் என சொல்லத் தெரியவில்லை.

Disruptive Technological Environment குறித்து மேலும் சிந்திபது மற்றும் அதைச் சமாளிக்க திட்டமிடுவது குறித்து தொடர்ந்து உழைக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.