செம்மையா வாழ்வோம் மகேஷ்.


என் பெயருடன் ஈரோடு என ஊர் பெயரைச் சேர்ப்பேன் என்றெல்லாம் 35 ஆண்டுகளில் ஒருபோதும் நினைத்ததில்லை. 2009ல் வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய பிறகு, ஏற்கனவே கதிர்கள் இருந்ததால், வேறுபடுத்திக் காட்டுவதற்காக கதிர், ஈரோடுஎன முதலில் சொல்லி, பிறகு அது எப்படியோ ஈரோடு கதிர்என்றாகிவிட்டது. அதுவே பழகி, இப்போது நானே அப்படியாக என்னை நம்பத் தொடங்கிவிட்டேன்.

ஈரோட்டிலேயே சில நேரங்களில் ஈரோடு கதிர்என்றழைக்கப்படும்போது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். வெளியூர்களில் இது ஊர் மீதான ப்ரியம் என்று நினைத்துக் கொள்வார்கள். அதன் நிமித்தமான பாராட்டுகளும்கூட இணைவதுண்டு. ஊர் பிடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சற்று மூத்தவர்கள் சில இடங்களில் ஈரோடு கதிர் என்றவுடன், ஈரோடு தமிழன்பன் பெயரை நினைவு கூர்வதுண்டு. ஓரிரு இடங்களில் ஈரோடு சௌந்தர் பெயர் கூட அடிபட்டதுண்டு. தமிழகத்தில் எங்கு சென்றாலும், ஈரோடு என்பது ஊரின் பெயர் என்று அறிந்திருப்பார்கள்.

ஆனால் என் இலங்கைப் பயணங்களில் ஈரோடு கதிர் என்று எங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெயர் உச்சரிக்கப்பட்டாலும்... ஈரோடு என்பதை என்னவாக எடுத்துக் கொள்வார்கள் என யோசித்ததுண்டு. என் யோசனைகளை நிறுத்தம் வண்ணமாகஈரோடு மகேஷ் தெரியும். டிவியில் கண்டிருக்கோம், உங்களுக்குத் தெரியுமா!?” எனக் கேட்பார்கள். அந்தக் கேள்வியில், அவர்கள்ஈரோடு மகேஷ்தோளில் கை போட்டு உரையாடும் அளவிற்கான ஒரு நெருக்கத்தை உணர்த்துவார்கள். தமிழ் தொலைக்காட்சிகளின் வீரியம் புரிந்தது.

என்னை அவர்கள் அறிமுகப்படுத்திக் கொள்வதே, ஈரோடு மகேஷ் பெயரை நினைவில் மீட்டித்தான், ஆனால் அந்த மகேஷை எனக்கு தெரியாது என்பதுதான் அதிலிருக்கும் முரண். தெரியாது என்றால் யாரென்றே தெரியாது என்றில்லை. தொலைக்காட்சி வழியே நன்கு தெரியும் ஆனால் நேரடியாக எந்த வகையில், எவ்விதமும் தெரியாது என்பதுதான் அந்தக் குறை.

*

கடந்த வாரத்தில் ஒரு நாள் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பில்வணக்கம் நான் ஈரோடு மகேஷ் பேசுறேன்என்றது அழைத்த குரல். உண்மையில் அவருக்கு நிகரான வேறு யாரொருவர் பேசியிருந்தாலும், மிக எளிதாக அதை எதிர்கொண்டிருப்பேன். இந்தக் குரலுக்குச் சொந்தக்கார மனிதன் ஒவ்வொரு இலங்கைப் பயணத்தின்போதும் உடனிருப்பவர் என்பதால், ஏதோவொரு நெருங்கி வராத நெருக்கத்திற்குச் சொந்தக்காரர் என்பதால் பெரும் ஆச்சரியத்திற்குள்ளும், மகிழ்ச்சிக்குள்ளும் ஆட்பட்டேன்.

அவரே... அவருடைய வழக்கான, வேகமான பேச்சு நடையில் தொடர்ந்தார்.


உங்க புத்தகமெல்லாம் ஈரோடு புத்தக திருவிழாவில் வாங்கினேன். இப்ப இந்த வேட்கையோடு விளையாடு படிச்சிட்டிருக்கேன்.

“............”

என்ன பிரமாதமா எழுதியிருக்கீங்க...! அட்டகாசமா எழுதியிருக்கீங்கணே... ரொம்ப பிரமாதம்... ரொம்ப எளிமையான உதாரணங்கள்... அப்படியே பக்கத்துல இருந்து அந்த இன்சிடன்ட்ட பாக்கிற மாதிரி இருக்கு... நீங்க எழுதின சில இன்சிடன்ட் எல்லாம்... ரொம்ப நல்லாருக்கு.. ரொம்ப நல்லாருக்குணே...

“............”

நீங்க நிறைய எழுதுங்க... நிறைய எழுதனும்... நிறைய எழுதனும்.... நாங்கெல்லாம் பேசுறமே தவிர எழுதுறதில்ல. என்னை எல்லாரும் சொல்வாங்க... நீங்க நிறைய எழுதனும்...

“............”

எழுத்து வந்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். அது என்னால எப்பயுமே ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை... சமூகம் ஏத்துக்கொள்ளக்கூடிய உண்மை. புத்தகம் சமூகத்துல யாராவது ஒருத்தரோட கையில போய் நிக்கும், அந்தப் புத்தகமும், அதில் இருக்கும் வரிகளும், வார்த்தைகளும் அவர் மூலமா சமூகத்தில் நிறைய மாற்றங்களை உண்டு பண்ணும்ங்கிறது என்னோட கருத்து.

“............”

நூலகத்திலேயே கவனிக்கப்படாத நிறைய புத்தகம் இருக்கும், எடுத்துப் படிச்சோம்னா அவ்ளோ விசயம் இருக்கும். அந்த மாதிரி ரொம்ப சிறப்பா இருக்குண்ணே... மனம் நிறைந்த வாழ்த்துகள்ணே...


ஆச்சரிய அலைகளுக்குள் ஆட்பட்டிருந்த எனக்கு சொற்கள் கிட்டவில்லை. ஒற்றைச் சொற்களிலேயே பதில் சொல்லி ஒருவாறு உரையாடலை முடித்து, நனைந்திருந்த ஆச்சரியத்தில் நீண்ட நேரம் வெடவெடத்திருந்தேன்.

அடுத்த நாள் இன்னும் பெரிய இன்ப அதிர்ச்சியாக... வாட்சப் வழியே குரல் பதிவொன்றை அனுப்பியிருந்தார்.

இனிய காலை வணக்கம்.

நேத்து திருச்சியில ஒரு பள்ளியினுடைய ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருந்தேன். ஒரு பதினஞ்சாயிரம் பேரு கூட்டம், பேரன்ஸோட சேர்த்து. அதுல நம்ம புத்தகத்தோட பெயர் சொல்லி, உங்க பெயர் சொல்லி, இந்த மாளவிகா பத்தி எழுதியிருந்தீங்களே வெடி குண்டில் கைகள் இழந்துபோன குழந்தை பத்தி, அந்த இன்சிடன்ட சொன்னேன்.

அத சொல்றதுக்கு முன்னாடி புத்தகம், பேரு, எனக்கு எப்பவுமே அந்தப் பழக்கம். படிச்சதையோ, அடுத்தவங்க கருத்தையோ நான் சொல்ற மாதிரி சொல்ல மாட்டேன், பேரு சொல்லிதான் சொல்வேன். பேரு தெரியலீனா படிச்சே... ஞாபகம் இல்லைனு சொல்லிருவேன். உங்ககிட்ட பேசுனதுங்கிறதால ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுனு குறிப்பிட்டுச் சொன்னேன். மிகப்பெரிய வரவேற்ப பெற்றுச்சு. கல்வியினுடைய முக்கியத்துவத்தை சொல்றப்ப அது சொல்ல வேண்டிய சூழல் கரெக்டா அமைஞ்சுது. நான் அத பதிவு பண்ணேன். அந்த விசயத்தை எல்லாருமே ரொம்ப பாராட்டுனாங்க.

நான் புத்தகத்த சொன்னேன், எல்லாருமே வாங்கிப் படிங்கனு...

நன்றிணே...

இந்த நாள் சிறப்பா அமையட்டும்.

*

அவருக்கு நன்றி பகிர்ந்ததோடு #வேட்கையோடு_விளையாடு புத்தகத்தோடு ஒரு நிழற்படம் அனுப்பினால் மகிழ்வேன் என வேண்டினேன். தயங்காமல் அனுப்பி வைத்தார்.



பேரன்பும் நன்றிகளும் மகேஷ் அவர்களே... ஸாரி ஈரோடு மகேஷ் அவர்களே! 

புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் நான் எப்போதும் ஒரு வசதியான குறுகிய வட்டத்திற்குள் நிற்பவன். அதை உடைக்க வேண்டும், கைகளை நீட்ட வேண்டும் என்பதை உங்களிடமிருந்து இந்த முறை அழுத்தமாக கற்றுக்கொள்கிறேன்.

வேட்கையோடு விளையாடு உதாரணங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதற்காகச் சொல்லவில்லை. நிகழ்கால யதார்த்தங்களை உரையில் கொண்டு வரும் உங்கள் பாங்கு எப்போதும் பிடிக்கும். சமகால படைப்புகளை நானும் பயன்படுத்துகிறேன். இனி இன்னும் கூடுதலாகப் பயன்படுத்துவேன்.

இனி எல்லோரிடமும் ஈரோடு மகேஷ் என் நண்பர் எனச் சொல்வேன் குறிப்பாக அடுத்த இலங்கைப் பயணத்தில் நீங்கள் என் நண்பர் என்பதை பேரன்பும் ப்ரியமும் சூடிச் சொல்வேன்.

வாழ்தல் அறம்.... செம்மையா வாழ்வோம் மகேஷ்.

நன்றி