நம்மைத் தாண்டும் நம் பிள்ளைகள்

நம்பிக்கை மட்டும் வைக்கத் தயாரெனில், மிகத் தைரியமாக சில தீர்மானங்களை எடுக்கலாம். நம்பிக்கை என்பது நம்மீது மட்டும் வைப்பதில்லை. மற்றவர்கள் வைப்பதும் சேர்த்துத்தான். 2017 ஆண்டின் இறுதியில் நம் குழந்தைகள் மேல் ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது எனும் கேள்வி எழுந்தது. நான் யோசித்தது, விரும்பியது ஒன்றே ஒன்றுதான். நம் குழந்தைகள் பேச வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கக் கூடாது. எதுவேணாலும் பேசிக்கொள்ளலாம். அவ்வளவே!

ஆண்டு முழுவதும் ஈரோடு வாசல் குழுமத்தின் வாயிலாக நிறைய வித்தியாசமான முயற்சிகளைப் பரிசோதனை செய்திருந்த நம்பிக்கையை இந்தமுறை குழந்தைகள் மீது நகர்த்த விரும்பினேன்.  ஏறத்தாழ நான்கு வாரங்களுக்கு முன்பே குழுமத்தில் அறிவித்து, அதற்கென ஒரு நடத்துனர் குழு அமைத்து முழுப் பொறுப்பையும் அவர்களிடம் விட்டுவிட்டோம்.

இந்தத் திட்டத்தில் நான் எவ்வகையிலும் தலையீடு செய்யாமல் அதற்காக தாங்களாகவே வந்து விரும்பி பொறுப்பெடுத்து அணியாக செயல்படத்தொடங்கிய மஞ்சு, மகேஷ்வரி, வனிதா, தனபாக்கியம், சுமதி ஆகியோரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுவதே என் தீர்மானமும் கூட.



நிகழ்ச்சி என்பது 6ம் வகுப்பு 12ம் வகுப்பு வரையிலான ‘வாசல்’ பிள்ளைகளை மேடையில் உரை நிகழ்த்த வைப்பது மட்டுமே. சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் பேசலாம். எது குறித்து வேண்டுமானாலும் பேசலாம். குறிப்பிட்ட தலைப்பு, முறையான உரை என எந்த நிபந்தனையும் இல்லை என்பதே நிகழ்ச்சியின் பலம் எனக் கருதினேன். தான் சென்று வந்த சுற்றுலா, பள்ளி, விளையாட்டு, பார்த்த சினிமா, வாசித்த புத்தகம், தன் கிராமம், தனக்குப் பிடித்த உறவு என எது குறித்தும் நிபந்தனைகளின்றி பேசலாம் என அறிவித்தோம். போட்டி கிடையாது, முதலிடம், இரண்டாமிடம் எனும் வகைப்படுத்தல் கிடையாது.

நடத்துனர் குழு தனி வாட்சப் குழுமத்தில் அவர்களாகவே செயல்பட்டார்கள். ’ஈரோடு வாசலில்’ வந்து முட்டி மோதி, பேச்சாளர்கள் பட்டியலைத் தயாரித்தார்கள். யார் வழி நடத்த யார் பின்பற்ற எனக் குழம்பினார்கள். ஒரு கட்டத்தில் திட்டம் உண்டா இல்லையா என (நீள் ஓய்வில்) குழம்பிப்போனார்கள். நிகழ்ச்சிக்கு முந்தைய தினம்தான் எப்படியும் நடத்திவிடுவது என முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து பம்பரமாய் சுழன்று வேலை செய்தார்கள்.

பங்கெடுக்கும் பிள்ளைகளுக்கான அழகிய, மதிப்பு மிகு நினைவுப்பரிசு. மற்ற குழந்தைகளுக்கு நினைவுப்பரிசு. குழந்தைகளுக்கான குளிர்பானம், சிற்றுண்டி. மற்றவர்களுக்கான தேநீர் சிற்றுண்டி என அனைத்தும் அவர்களாகவே முடிவு செய்து ஏற்பாடு செய்து.... நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் நிறைவோடு செல்லும் வகையில் அனைத்தையும் மிகச் செம்மையாக செய்திருக்கிறார்கள்.

6ம் வகுப்பு 2 பேர், 7ம் வகுப்பு 2 பேர், 9ம் வகுப்பு நான்கு பேர் என களம் இறங்க எட்டுப் பேர் தயாராக இருந்தார்கள். முதலில் குழந்தைகளை இயல்பாக்கும் நோக்கத்தோடு அவர்களுக்கான விளையாட்டோடு துவங்கியது. 9ம் வகுப்பில் படிக்கும் நிஷாந்த், நிரஞ்சன், நதிவதனா, அமர்நீதி, 7ம் வகுப்பில் படிக்கும் நித்தின், ஸ்ரீதிக்‌ஷா, 6ம் வகுப்பில் படிக்கும் நேத்ரா, குறளினி ஆகியோர் மட்டுமே மேடையை அலங்கரிக்க, பெற்றோர்களும் உற்றார்களும் அவையில் அமர்ந்திருக்க உரை நிகழ்வு தொடங்கியது.



நம் கைகளுக்கும் கால்களுக்குமிடையே ஓடிக்கொண்டிருந்த நம் வீட்டுப்பிள்ளைகள் இத்தனை திறன் வாய்ந்தவர்களா...என தங்களைப் பேச்சாளர்களாக அறிவித்துக்கொண்ட எட்டுக் குழந்தைகளின் பெற்றோர்களும் ஆச்சரியத்தில் உறைந்து நின்ற தருணம் அது.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை - ஒரே தளத்தில் வைப்பது நீதியன்றுதான்... ஆனால் அந்த எட்டுப்பேரும் அந்த நீதியன்று எனப் போராடவில்லை. யார் ஆறாவது யார் ஏழாவது யார் ஒன்பதாவது என பார்வையாளர்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கான தரமான தயாரிப்பு மற்றும் திறன் வாய்ந்த உரை. மேடைக் கூச்சம், தடுமாற்றம் என எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் சளைக்காமல் அடித்து விளையாடினார்கள். சிலர் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள் மற்றும் உடல் மொழி கண்டு வியந்து நின்றோம்.

எட்டுப் பேர்களில் யாரும் யாரிடமும் போட்டி போடவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இனி போட்டி போடுவார்கள். அவர்களுக்குள்ளாக கற்றுக் கொள்வார்கள். திறன், நுணுக்கம் கூட்டுவார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில்... அவர்களைப் பாராட்ட அன்று அரங்கிலும் சரி... இங்கும் சரி எனக்கு இன்னும் பொருத்தமான சொற்கள் கிட்டவில்லை. அந்த அரங்கில் மிரண்டு போய்தான் நின்றேன். ந்த மிரட்சியைத்தான் மிகப் பெரிய வாழ்த்தாக, பாராட்டாக அவர்கள் தலையில் சூட்டினேன்.

எத்தனையோ மேடைகளில் மாணவர்கள் அல்லாத பலதரப்பட்ட வயதினரை களம் இறக்கிய அனுபவம் உண்டு. வயது முதிர முதுமை கூடுவது போலவே எதிர்மறையும் கூடுவதால், அம்மாதிரியான வாய்ப்புகளில் அவர்களின் தடுமாற்றம் கண்டு பெரும் அயர்ச்சி உணர்வதுண்டு.


ஆனால் இந்தக் குழந்தைகள் தாம் தகுதி வாய்ந்த பேச்சாளர்கள் என்பதை உரக்கச் சொல்லிவிட்டார்கள். வர இயலாத பிள்ளைகள் எதிர்காலத்தில் இவர்களோடு அணி திரள்வார்கள். வாழ்த்தி வரவேற்போம். உடன் துணை நிற்போம். இவர்கள் அனைவரும் நம் எல்லோரையும் தாண்டி உயரம்  போய் சிலிர்க்க வைப்பார்கள்.

3 comments:

Avargal Unmaigal said...

நல்லதொரு முயற்சி... பாராட்டுக்கள் .இங்கே(அமெரிக்காவில்) பள்ளிகளில் after schoolக்கு அப்புறம் பல க்ளப்புக்கள் செயல்படும் அதில் ஒரு க்ருப் UN டிபேட் குருப் அதில் இப்படிதான் பல குழந்தைகளும் பேசும்..வாராத்தில் இரண்டு நாள் பள்ளிக் கூட நாட்களில் செயல்படும் அவர்கள் பேசுவதற்கான தலைப்புகள் அந்த நேரத்தில்தான் தரப்படும் அப்படி பேசுபவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து மற்ற பள்ளிகளுக்கு இடையே நடக்கும் டிபேட்டிற்கும் அனுப்பி வைப்பார்கள் இப்படி செய்வதால் பேசும் திறன் வளர்வது மட்டுமன்றி தன்னம்பிக்கையும் வளரும்

Avargal Unmaigal said...


இப்படி நடக்கும் நிகழ்வுகளை விடியோ க்ளிப்பாக எடுத்து போடலாமே...

அகராதி Aharathi said...

செம்ம ❤