சோறு கண்ட இடமே சொர்க்கம்

மதியம் 12 மணி... சிம்ஸ் பூங்கா... உடனிருந்தவர்கள் குளத்தில்(!) படகுப் பயணத்திற்குச் சென்றுவிட, போக மறுத்த மகளோடு நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பார்க்கில் இருந்து அழைத்துப் பேசிவிடலாம் என்ற நினைப்பில் நகருக்குள் நுழையும்போது ரம்யாவை அழைக்கவில்லை. அழைத்தேன்…

“ஹலோ... சொல்லுங்க… எப்டியிருக்கீங்க”

”ஹவ் ஆர் யூ டாக்டரம்மா!?”

”ஹி…ஹி… நான் நல்லாருக்கேன்… அக்கா பாப்பா எல்லாம் நல்லாருக்காங்களா!?

”நல்லாருக்காங்க… குட்டி எப்படியிருக்கான்!?”

”நல்லாருக்கான்…”

”ஊர்லையா… எங்க இருக்கீங்க?”

”இங்க தான்… நீங்க!”

”நாங்களும் இங்கதான்””

”குன்னூராஆஆஆ!?”

”ம்ம்ம்… சிம்ஸ் பார்க்”

”எப்ப்ப்ப்ப வந்தீங்க!?”

”முந்தா நாள் ஊட்டி போனோம்… வர்ற வழில சிம்ஸ் பார்க் போயே ஆகனும்னு அடம் புடிச்சாங்க”

”செரி… வீட்டுக்கு வாங்க”

”வர்றோம்… கூட அம்மாவா இருக்காங்க!?”

”ஆமா..”

”சரி போகும்போது வந்து எட்டிப்பார்த்துட்டு போறோம்”

”எட்டிப் பார்த்துட்டா…!? சாப்ட்டுதான் போகனும்”

”இப்பதான் 12 ஆகுது… சாப்பாட்டுக்கு மேட்டுப்பாளையத்துல பார்த்துக்குறோம்”

”அதெல்லாம் இல்ல… சாப்ட்டுதான் போகனும்”

”இல்ல… காலைல லேட்டாதான் சாப்ட்டோம்… சாப்ட்டுட்டு இறங்குறது சிரமம்… ”

”அதெல்லாம் ஒன்னும் சிரமமிருக்காது”

”ஒன்னும் சிரமம் வேணாம். நாங்க ஆறு பேர் இருக்கோம்… நீ கம்னு இரு”

”அதெல்லாம் ஒன்னும் சிரமமில்ல”

”சரி… ஒரு டீ மட்டும் குடிச்சிட்டுப் போறோம். விளையாட்டுத்தனம் பண்ணாத. சாப்பாடெல்லாம் எதும் வேணாம்”

”எனக்கு ஆஸ்பிடல் 12.30 முடிஞ்சுடும்… நீங்க வாங்க”

படகுப் பயணம் முடித்து வந்தவர்களிடம்…

“ரம்யாட்ட பேசினேன்”

“எப்படியிருக்காங்களாம்”

நல்லாருக்காங்களாம்… வந்து சாப்ட்டு போகனும்னு அடம் பிடிக்குது”

“ஏங்க…. சாப்பாடெல்லாம் வேணாம்… மேட்டுப்பாளையம் போயிடலாம்”

”டீ மட்டும் போதும்னு சொல்லியிருக்கேன். அம்மா கூட இருக்காங்களாம்… எட்டிப் பார்த்துட்டு போயிடலாம்”

12.45க்குள் இரண்டு முறை அழைப்பு.

ஒவ்வொரு உதகை வருகையிலும் குன்னூரில் பணி நிமித்தம் வசிக்கும் ரம்யா வீட்டிற்கு எட்டிப் பார்த்து விடுவது வழக்கம். வீட்டிற்குள் நுழையும்போதே அம்மா அடுப்படியில் பரபரப்பாக இருந்தார். சாப்பாட்டிற்கான ஆயத்தங்களைச் செய்து விட்டார்கள் எனப் புரிந்தது. குட்டிப்பையன் அழகாய் வளர்ந்திருந்தான். ”மூனு மூனரை வயசாகட்டும்… அப்பப் பாருங்க குறும்பை” என்ற ஆசீர்வாதம் பலித்துவிட்டதா எனும் ஆவல்.

திடீரென தங்கள் கூட்டுக்குள் திமுதிமுவெனப் புகுந்த கும்பலை ஏற்றுக்கொள்வதா, ஒதுக்குவதா என்ற பட்டிமன்றம் அவனுக்குள் நிகழத் தொடங்கியிருக்கலாம். பொம்மை போல் அழகாய் இருக்கும் அவனை வாரி எடுத்தவர்களிடமெல்லாம் கொஞ்சம் ஒவ்வாமையைக் காட்டினான். ஒவ்வாமை தனிந்தவொரு கணத்தில் தன் உலகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டான். எங்கள் பிள்ளைகள் இருவரையும் கை பிடித்து இழுத்துச் சென்று அவன் விளையாட்டுகளை நிகழ்த்திக் காட்ட ஆரம்பித்தான். கழுத்தில் மத்தளத்தை மாட்டிக்கொண்டு அடிக்கத் துவங்கினான். மத்தளத்தை வாங்கி நாம் அடித்தால், அதற்கேற்ப அதிரிபுதிரி ஆட்டம் போட்டான். ”என்னம்மா இப்டிப் பண்றீங்ளேம்மா” வசனத்தை தன் மொழியில் பயன்படுத்திக் கொண்டேயிருந்தான்.

எங்களுக்குப் பசிக்கத் தொடங்கியது. இலங்கைப் பயணத்தில் இருந்தபோது, பல முறை உணவு நேரத்தில் நான் பசியில்லை எனச் சொல்ல, ”அதெல்லாம் சாப்பாட்டைப் பார்த்தா பசி தன்னால வந்துடும்” என்பார்கள்.

கொதிக்கக் கொதிக்கச் செய்த, குழையாத கேரட் துண்டுகளைக் கொண்டிருந்த சாம்பார், காலையில் செய்த சுருக்கென ருசிக்கும் சுரைக்காய் பொறியல், ரசம், அப்பளம், தயிர் என அந்த மதியம் ஒன்றும் அவ்வளவு எளிதில் மறந்துபோகாதது. சாம்பார், ரசத்தோடு போதுமென எழுந்தவனை, ”இதென்ன அதுக்குள்ள எந்திருக்கிறீங்க!” எனத் தடுத்தபோது, ”பாயசமெல்லாம் சாப்பிடுறதில்ல!” எனப் பிரியமாய் கிண்டல் பண்ணும் தோழமையும் பிரியமும் இந்த உறவின் பலம்.

சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்புறோம் என்றவர்களிடம்… ”இப்பப் போனா, கீழ ரொம்ப வெயிலடிக்கும்… வெய்யத்தாழ போலாம் இருங்க” என்றபடியே நேரத்தை நீட்டிக்கும் விதமாய்… ”இன்னும் சித்த நேரம் இருந்து… ஒரு டீ குடிச்சிட்டுப் போங்க” எனும் அன்பையெல்லாம் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒருவழியாய் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம். காலையில் ஊட்டியில் புறப்படும்போதே, ”என்ன செய்வீங்ளோ தெரியாதுப்பா, மேட்டுப்பாளையத்துல ப்ரியாணி வாங்கி கொடுத்தேதான் ஆகனும்” என்ற மகளின் உத்தரவுகள் கரைந்துபோயிருந்தன.

பசியே இல்லாமலிருந்தது குறித்தும், அப்படியொரு பசி வந்து சூழ்ந்தது குறித்தும், அள்ளியள்ளிச் சாப்பிட்டது குறித்துமே பேச்சாய் இருந்தது.

”எனக்கு சாம்பார் ரொம்ப ரொம்ப புடிச்சுப் போச்சுப்பா… மூனு வாட்டி சாம்பார் வாங்கிச் சாப்புட்டேன். சாம்பார் இப்படியிருந்தா சாப்ட்டுட்டே இருக்கலாம்ப்பா” இறங்குவதற்குள் ஏழாவது முறையாக மகள் சாம்பாரின் சுவை குறித்துப் பேசியிருந்தாள், மனைவியும் அந்தச் சாம்பாரின் செய்முறை குறித்தே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார். அதோடு தனக்கு வந்த போன் அழைப்பில் கூட அந்த சாம்பார் தயாரிப்பு குறித்து விவரிப்புகள் ஓடிக்கொண்டேயிருந்தது.

இந்த வாழ்க்கையை, மனிதர்கள் சூழ்ந்ததாய், மனிதர்களால் வடிவமைக்கப்பட்டதாய் மட்டுமே நான் கருதுகிறேன். அதிலும் ஒரு கிராமத்து மனிதனாய், கிராமத்து மனிதர்கள் காட்டும் அன்பில், பிரியத்தில், உபசரிப்பில் ஒவ்வொரு முறையும் உயிர்ப்படைகிறேன். பொதுவாக கிராமத்து மனிதர்களின் விருந்தோம்பல் என்பது சோற்றில் அடிப்பது எனும் வழக்கம் கொண்டது. தம் அன்பின் அளவை பரிமாறும் சாப்பாட்டில் காட்டுவார்கள். நகரத்திற்குள் வந்தடைந்தபிறகு, முதலில் வைக்கும் சோற்றையே இரண்டாக, மூன்றாகப் பிரித்து சாம்பாரில் கொஞ்சம், ரசத்தில் கொஞ்சம் என்றெல்லாம் மாறிப்போன பிறகு, நகரத்திலிருந்து கிராமத்து வீட்டிற்கு வருபவர்களிடம் அம்மா அன்பாய் அளவு கூட்டி சாப்பாட்டைத் தள்ளும்போது “அம்மா… அவங்க சாப்டுற அளவுக்கு மட்டும் வச்சுக்கட்டும்… இப்படி முடியாத அளவுக்குப் போடாதீங்க” என அறிவுரை சொல்வது குறித்து நானே வியப்பதுண்டு.

உணவிற்காக ஒருவரை வற்புறுத்துவது, அளவுகளைக் கூட்டி வழங்குவது என்பது அன்பின் வெளிப்பாடு மட்டுமா அல்லது அன்பின் பெயரால் சற்று சிரமம் தருவதா என்றெல்லாம் மனதிற்குள் பட்டிமன்றம் நிகழ்வதுண்டு. ஆனால் அளவுகூட்டி அமுதூட்டினாலும், வற்புறுத்தி உணவு படைத்தாலும் அதிலிருப்பது அன்பேயன்றி, வேறேதும் உள்நோக்கங்கள் இருப்பதில்லை. அவர்களுக்கு சொற்களைக் கூட்டி, வசமாய் அடுக்கி விதவிதமாக அன்பாய் வெளிப்படுத்தத் தெரிவதில்லை. ஆனால் தம் அன்பையெல்லாம் வற்புறுத்தும் உணவில் வடித்துவிட முடிகிறது.

இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு என் உறவு முறை அண்ணன், ஒருமுறை தன் டாக்டர் மாமா வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கு பலாச்சுளைகளைத் தட்டில் வைத்து, அதில் தேன் ஊற்றிப் பரிமாறியிருக்கிறார்கள். ஒன்றை எடுத்துச் சாப்பிட ருசி ஒட்டுமொத்தமாய் தன் வசம் இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. அங்கிருந்த சூழலில் ஏதோ ஒரு நவீனத்தன்மை தெரிந்திருக்கிறது. அருகில் இருந்தவர் பலாச்சுளையை நுனி விரலில் எடுத்து உதடுகளில் படாமல் கடித்து சாப்பிட்டிருந்திருக்கிறார். ஒன்று இரண்டு மூன்று என்று நம்ம ஆள் வேகமெடுக்க, அருகிலிருப்போர் முதல் சுளையையே முழுதாய் முடிக்காமல் இருக்க “இவனெல்லாம் பலாச்சொளையே தின்னிருக்கமாட்டானோனு, நினைத்துவிடுவார்களோ” என மூன்றோடு கைகளையும், நாவையும் கட்டிப்போட்டு தன்னை அடக்கி, ஒடுக்கி கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். ஊர் திரும்பியவுடன் முழு பலாப்பழமும், தேனும் வேண்டுமென அடம்பிடித்ததெல்லாம் ஒரு பெரிய கதை.

மதியம் 12 மணிக்கு அழைத்து, வந்திருக்கிறோம், போகும்போது பார்த்துட்டு போறேன் என்ற அழைப்புக்கு, சாப்பிட்டுதான் போகனும் எனும் அதீத வற்புறுத்தல் மேலோட்டமாய்ப் பார்த்தால் ஒரு வகையில் வன்முறையாகக்கூடத் தோன்றலாம். இங்கே அதீத வற்புறுத்தல் என்பதை உரிமை என பெயர் மாற்றம் செய்யவிரும்புகிறேன்.  காரணம் அந்த உரிமைதான் உறவுகளின் இரத்தநாளம். அப்படியாகச் செலுத்தப்படும் உரிமை மேலோட்டமாய் பார்க்கையில் பலாப்பழத்தின் மேலிருக்கும் முற்களுக்கு ஒப்பானவையும் கூட. முட்களைக் கடந்து சென்றும் பார்க்க வேண்டும்தானே! முற்களுக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் இயற்கை எத்தனை மகத்தானது. அதனுள் இருக்கும் சுளைகளின் ருசியை எதனோடு ஒப்பிடுவது? அந்த ருசி அலாதியானது. தனித்துவமானது. ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது. சத்து மிகுந்தது. இந்த உறவுக்குள் வழியும் உரிமைகள்தான் பல தருணங்களில் வாழ்க்கையில் பலம் கூட்டித் தந்திருக்கின்றன. எங்கோ, எதன் போக்கிலோ ஓடிக்கொண்டிருப்போரை இழுத்துப் பிடித்து பசியாற்றி, பலம் கூட்டி ஓடு என்று பணிப்பது.

உறவுகள் செலுத்தும் உரிமைகளை அன்பின் வழி புரிந்துகொள்வோம். பெருமையாகக் கொண்டாடுவோம். அதிலிருக்கும் அன்பை வருடிக்கொடுப்போம். ஈட்டும் மகிழ்ச்சியை வழியெங்கும் விதைப்போம்!

-

4 comments:

Kathirvel Subramaniam said...

//இங்கே அதீத வற்புறுத்தல் என்பதை உரிமை என பெயர் மாற்றம் செய்யவிரும்புகிறேன். காரணம் அந்த உரிமைதான் உறவுகளின் இரத்தநாளம்// --> அருமையாகச் சொன்னீர்கள் அண்ணா..எதார்த்தமான பதிவு....

murugesan said...

அன்பையே விதைப்போம்

Nandini Sree said...

மிக அருமையாக சொன்னிர்கள்..நான் படித்ததத்தில் பிடித்தது ..
சளி... காரணங்களும் விடுபட வழிகளும்!
நோயில்லாத சுகமான வாழ்வை விரும்புபவர்களுக்கு manam.online/news/2016-MAY-06/Solutions-for-cold

பரிவை சே.குமார் said...

உறவுகள் கொடுக்கும் அன்பின் மகிழ்ச்சியில் நாம் அன்பை விதைப்போம் அண்ணா.