ஆட்டமும் ஆசுவாசமும்



ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ஒரு காணொலிக் காட்சிதான் அது. தரமான ஒளிப்பதிவொன்றும் கிடையாது. கைப்பேசியில் திட்டமிடாமல் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டிருக்க வேண்டும். இரைச்சலான இசை அதிர்கிறது. திறந்திருக்கும் கதவு வழியே ஒரு காவல்துறை அதிகாரி ஆடியபடியே அந்த அறைக்குள் நுழைகிறார். அது அரசாங்க குடியிருப்பு அறை அல்லது ஓய்வு அறையாக இருக்கலாம். கதவின் அருகிலிருப்பவர் அவசரமாகக் கதவை மூடித்தாழிடுகிறார்.

அதிகாரியின் தோற்றம் ஓய்வு பெரும் வயதினை அண்மிக்கிறார் எனச்சொல்கிறது. உள்ளே நுழையும்போதிலிருந்தே நொடிப்பொழுதும் வீணடிக்காமல் மிக நேர்த்தியாக நடனம் ஆடிக்கொண்டேயிருக்கிறார். நடனம் என்பதைவிட ’குத்தாட்டம்’ என்று சொன்னால் அது அந்த ஆட்டத்திற்கு நெருக்கமான பெயராக இருக்கும். ஒரு கையில் தொப்பியை வைத்துக்கொண்டே ஆடுகிறார். அணிந்திருக்கும் பெல்ட், ஷூ அவருடைய பணித்தகுதியை உணர்த்துகின்றன. சட்டையில் மூன்று நட்சத்திரங்கள் மின்னுகின்றன.

தனது தொப்பையையும் பருமனையும் பொருட்படுத்தாமல் குனிந்து நிமிர்ந்து ஆடுகிறார், உடலை வளைத்து நளினம் கூட்டுகிறார், ஒரு கால் தூக்கி ஆடுகிறார். லுங்கியும் பனியனும் அணிந்த ஒரு நபரும் கை பேசியில் அதைப் பதிவு செய்கிறார். பறைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கவனம் குவித்து, புன்னகையோடு நடனம் ஆடுகிறார். சுழன்று சுழன்று ஆடி, கதவை நோக்கிச் செல்கிறவர், அந்த ஒரு நிமிடப் பொழுதில், தான் விரும்பிய வண்ணம் வாழ்ந்துவிட்ட திருப்தியோடு மனம் நிறைந்து சிரித்தபடியே வெளியேறியிருப்பார்.

காவல்துறையின் சிஸ்டத்திற்குள் மூன்று நட்சத்திரங்கள் தரித்த ஒருவர் சாமானியர்கள் முன்னிலையில் தன்னை மறந்து நடனம் நிகழ்த்துவதென்பது ஆச்சரியம்தான். இது காவல்துறையின் சிஸ்டம் குறித்தோ, படிநிலைகள் குறித்தோ பேசுவதற்காக அல்ல! ஒவ்வொரு உடுப்புக்குள்ளும், முகமூடிக்குள்ளும் இருக்கும் மனிதனின் சுயவிருப்பக் கொண்டாட்டம் குறித்துதான்.

அறையவிட்டு வெளியேறிய நொடியிலிருந்து அவரைச் சந்திக்கும் வெளி உலகம், அவரை வேறு மாதிரி வரவேற்கும் சாத்தியங்களுண்டு. விறைப்பாக நிற்பதும், அதட்டலாகப் பேசுவதும், அதிகாரத்தைச் செலுத்துவதுமென அவர் வேறொரு முகமூடி அணியலாம். அப்படி அணியும் தருணமேதும் வருகையில், உள்ளுக்குள் இந்த ஆட்டம் உச்ச ஸ்தாதியில் நிகழும் முரணும் கூட ஏற்படலாம்.

*
நகரத்திலிருந்து கிராமத்திற்குள் பாயும் சாலையில், ஒரு விளைநிலத்தை மேடாக்கி புதிதாக திருமண மண்டபம் எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு எவருடைய வாயிலும் நுழையாத பெயர் ஒன்று வைத்திருக்கிறார்கள். அழைப்பிதழ் வந்தபோதும், திருமண நிகழ்விற்கும் சென்றபோதும் அந்தப் பெயர் மனதிற்குள் நுழையாத ஒரு பெயராகவே இருந்தது. காலை 9 மணி அளவில் முன்பக்கமிருந்த ஒரு கூடத்தின் நிழலில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறேன்.

தலைக்கு மேலே இருந்த சுவற்றில் அந்த மண்டபத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. பெயரை மனப்பாடம் செய்யும் நோக்கத்துடனோ என்னவோ அடிக்கடி தலை உயர்த்தி பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வையைத் தாழ்த்தி சுழல விடுகிறேன் மண்டபம் கலைந்து கிடந்தது. நாற்காலிகள் திசைக்கொன்றாய், தேநீர் பருகிய காகிதக் கோப்பைகள் அந்தப் பகுதியெங்கும் என கசங்கிக் கிடந்தது. சுமாராக பதினைந்து மணி நேரங்களுக்கு முன், இந்த நிகழ்வு துவங்கும் முன் இந்த மண்டபம் எப்படி புத்துணர்வோடு, போலிவோடு இருந்திருக்கும் என்ற சிந்தனை ஓடியது. புத்துணர்வு, பொலிவு என்பதைக் கடந்து முந்தைய மாலை அந்த மண்டபம் தாங்கியிருந்த கம்பீரம் இப்போது கலைந்திருக்கும் நிதர்சனம் எத்தனை அழகிய பாடம்.

இடது பக்கம் இருந்த உணவு அரங்கத்தின் முகப்பில் இருக்கும் வெற்றிட நிழலில் ஒருவர் படுத்திருப்பதைக் காண்கிறேன். அருகில் மேளம், நாதஸ்வரம் உறைகளிலிடப்பட்டு ஓய்வாக வைக்கப்பட்டிருக்கின்றன. அவரின் வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம். அடர் கருப்பாய் இருக்கும் கேசத்தின் வேர்களில் மொத்தமாய் வெண்மை. கருஞ்சிவப்பு கரையில் தங்கநிறப் பூ போட்ட வேட்டியும், கிளிப்பச்சைக் கரை போட்ட துண்டும் அணிந்திருக்கிறார். மேளம் அடிப்பவர்கள் எப்போதும் இப்படியான கரை போட்ட வேட்டி துண்டுகளையே அணிகின்றனர். தங்கள் பணியெல்லாம் நிறைவடைந்து, உணவு உண்டு வீட்டுக்குப் புறப்படும் நேரத்தில் எதற்காகவேணும் காத்திருக்கும் நேரத்தை படுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறார் என நான் யூகித்துக்கொண்டேன்.

திருமண அரங்குகளில் ”மனிதர்கள்” மட்டுமே புழங்கிய, முன்னிறுத்தப்பட்ட ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரி மேளதாளங்களின் இசை அவசியப்பட்டிருக்கலாம் அல்லது ரசிக்கப்பட்டிருக்கலாம். இன்றைக்கு திருமணக் கூடங்கள் எதன் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றே தெரியாத மாயைக்குள் உழன்று கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் பகட்டு, சம்பிரதாயம் என்ற அளவில் மட்டும் அது வடிவமைக்கப்படுகிறதே தவிர உண்மையில் அங்கு நிகழ்த்தப்படும் நிகழ்வுகளில் ஒன்ற முடிகிறதா என்றே தெரியவில்லை. மணமக்களைச் சந்திக்க மேடைக்குச் செல்வது அவர்களை வாழ்த்துவதற்காக என்பதைவிட அருகில் நின்று நிழற்படம் எடுத்து ”அட்டனென்ஸ்” போடுவதற்காகத்தான் என்பதாகி விடுகின்றது. தாலி கட்டும் நேரத்தில் அங்கே இருக்கும் போட்டோ, வீடியோ எடுப்பவர்களைத் தவிர்த்து அரங்கிலிருக்கும் எவரும் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியை நாமே கொண்டு வந்துவிட்டோம்.

இந்தச் சூழலில் ஏதோ ஒரு சம்பிரதாயத்தின் அடிப்படையில் அழைக்கப்படும் மேள தாளக்காரர்கள், மண்டபத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் யாருக்கு இசைக்கிறோம் என்றே தெரியாமல் இசைத்தபடி இருக்கிறார்கள். அந்த இசை யாராலும் ஆழ்ந்து கேட்கப்படாததாலோ என்னவோ, அங்கே சலசலத்துப் பேசும் மக்களுக்கும், கை பேசி அழைப்புகளை எடுப்பவர்களுக்கும் ஒவ்வாத ஒரு ஓசையாக மாறிப்போய்விடுகிறது. “இவங்க வேற எப்பப்பாத்தாலும் டொம்மு டொம்முனு அடிச்சிக்கிட்டே” என அலுத்துக் கொள்ளும் குரல்கள் மேள இசையைவிட வலுவாய் ஒலிக்கின்றது.

சிவப்பு கிரானைட் தரையில் கால் மேல் மடித்துப் போட்டிருந்த மற்றொரு காலை ஆட்டியவாறு அருகிலிருக்கும் தம் தோழரிடமிருந்து கணேஷ் பீடிக்கட்டை வாங்கி ஒரு பீடியை உருவி நெருப்பு மூட்டி படுத்தவாறே புகையை மேல் நோக்கி ஊத ஆரம்பித்தார்.

முந்திய நாள் மாலை அவர் மண்டபத்திற்குள் நுழையும்போது சாத்தியமோ இல்லையோ தனக்கென்று ஒரு கம்பீர முகமூடியை அணிந்திருந்திருப்பார். அரங்குக்குள் நுழைந்து வாடிக்கையாய் தாம் அமரும் இடத்தில் இரு சதுரப்பகுதியை எடுத்துக்கொண்ட பிறகு மத்தளமோ, நாதஸ்வரமோ மெல்ல மெல்ல சுதி கூட்டி இசைக்கத் துவங்கி, அடுத்தடுத்து என நகரும் போதெல்லாம், அந்த சளசளக்கும் கூட்டத்தின் புறக்கணிப்பை புறந்தள்ளி விரல் வழியோ, மூச்சு வழியோ தான் வழியவிடும் இசையின் சக்கரவர்த்தியாக தன்னை நினைத்திருந்திருப்பார். காலம் காலமாய் பழகிய இசைதான் என்றாலும், அவர் வாசிக்கும் இசையின் ஏதோ ஒரு சொட்டு அவரையே சிலிர்ப்பூட்டியிருக்கும் சாத்தியம் இல்லாமல் போயிருக்காது.

இதோ எல்லாம் நிறைவடைந்துவிட்டது. ஓய்வாய் தரையில் படுத்து பீடி புகைக்கும் அவரிடம் நேற்றிருந்த கம்பீரமும், சக்ரவர்த்தியாய் நினைத்து இசைத்த கணமும்’ மறந்து போய், இதுவும் நான்தான் என தன்னைத் தளர்த்திக்கொள்ளும், ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் கணம்தான் எத்தனை நிஜமானதும் இயல்பானதும்.



நான் இப்படித்தான் என்ற முறுக்குகளே பல நேரங்களில் நம்மை இறுக்கத்தின் பிடிக்குள் சிக்கவைத்து இறுக்கும் கயிற்றை ஈரமாக்கிக்கொண்டே இருக்கின்றது. இப்படியான தளர்வுகள் எத்தனை பெரிய விடுதலை. விழுந்து புரண்டு சிரிக்கவேண்டிய சம்பவங்களுக்கு, நகைச்சுவைகளுக்குக்கூட வீம்பாய் இறுக்கம் பாவிக்கும் மனிதர்களும் இதே உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தான் கடைப்பிடிக்கும் இறுக்கம் தன் அடையாளம் மற்றும் தனக்கான அந்தஸ்து என்கிறார்கள்.

வழங்கப்படும் வாழ்க்கை இத்தனை இறுக்கம், இறுமாப்பு சுமப்பதற்கா என்ற சுய ஆய்வு அவ்வப்போது நமக்குத் தேவை. தான் பெற்ற பிள்ளைகளிடம் கூட தான் ஒரு அப்பா அல்லது அம்மா என்ற இறுக்கத்தினைக் காட்டும் பெற்றோர்களைப் பார்க்கும்போது பெரும் அயர்ச்சி வந்து சூழ்கிறது.

தன்னை நேசிக்கின்றவர்கள் எப்போதும் தன்னை குதூகலமாக வைத்துக்கொள்ளும் வாய்ப்புகளைத் தவறவிடுவதில்லை. அருகில் ஒலிக்கும் இசை எவரையும் தாளமிட வைக்கும். தாளத்தின் உச்சத்தை உணர்பவர்களை தன்னையறியாமல் ஆடத் தூண்டும். சூழல் மறந்து அந்த இசைக்குச் செலுத்தும் மரியாதை, தானே தன்னை நேசிப்பதற்கு சாட்சியமாக மாறுகின்றவர்கள் இசைக்கேற்ப தெறித்து ஆடத் துவங்கிவிடுகின்றனர்.

துள்ளியடங்கும் ஆட்டம் மனதிற்குள் மிகப்பெரிய ஆசுவாசம் தரும், சூழல் மறந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளல் மனதிற்குள் மிகப்பெரிய துள்ளலைத் தரும்! இந்த வாழ்க்கை சர்வ நிச்சயமாய் கொண்டாட்டத்துக்கு உரியதுதான்.

கடைசியாக சூழல் மறந்து எப்போது உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டீர்கள் அல்லது மெல்ல ஆட முயற்சித்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்!? மனதிற்குள் சாளரம் திறக்கும்… ஒளி பாயும்… காற்றின் சுகந்தமும் கூட!

-

நம் தோழி மார்ச் இதழில் வெளியான கட்டுரை

*

1 comment:

sivakumarcoimbatore said...

Yes sir...arumaiyana pathivu...துள்ளியடங்கும் ஆட்டம் மனதிற்குள் மிகப்பெரிய ஆசுவாசம் தரும், சூழல் மறந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளல் மனதிற்குள் மிகப்பெரிய துள்ளலைத் தரும்!