எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

முதன் முதலில் நியூஸ்-7 நிகழ்ச்சி ஒளிப்பதிவிற்காக நண்பர் கோபால கிருஷ்ணன் அழைத்த தினத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை

அடுத்து சென்னை சென்றிருந்த ஒரு தினத்தில் வழக்கம்போல் கூடுதல் பணிகளை வைத்துக்கொண்ட நிலையிலும், வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். ஒப்புக்கொண்ட நேரத்திற்கு செல்லமுடியுமா என்ற சந்தேகத்தோடு ஒருவித போராட்ட மனநிலையில், சென்னையைச் சுற்றி அலைந்துவிட்டு தொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்றேன்.

என்னவிதமான கேள்விகள் கேட்பீர்கள் என்று நான் கேட்டு என்னைத் தயார் படுத்திக்கொள்ள முனைந்த போதெல்லாம் மிக எளிதாக என்னைக் கையாண்டு களத்திற்கு நேரடியாக அழைத்துச் சென்றுவிட்டார் கோபாலகிருஷ்ணன்.

இலக்கியம், படைப்பு, எழுத்து என்று அவர் துவங்கியதுமே மனதிற்குள் ”அய்யய்யோ” என்று அலறியபடியே சரி எப்படியாச்சும் சமாளிப்போம் என்றுதான் பதிலளிக்கத் துவங்கினேன். உண்மையில் நிகழ்ச்சி முழுக்கவே பில்டிங் Vs பேஸ்மெண்ட் வடிவேலு நிலமைதான். ஒரு கேள்வியேனும் என் அளவிற்கு இறங்கி வந்து கேட்கமாட்டாரா என்று நானும், ஒரு கேள்விக்கேனும் கேள்வியின் தன்மைக்கு ஏற்ப நான் வந்து பதில் தந்துவிடமாட்டேனா என அவரும் எதிர்பார்த்ததுதான் அதில் சிறப்பே… ஒருவழியாக ’தம்’ கட்டி உரையாடலை முடித்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த அளவிற்கு பொருத்தமாகவும் தெளிவாகவும் பதிலளித்தேன் என்ற சந்தேகம் இருந்தாலும். கேள்வி கேட்ட விதமும், நிகழ்ச்சி பதிவு செய்த விதமும் எனக்கொரு அற்புதமான அனுபவம். அந்த வகையில் என்னோடு உரையாடிய நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இந்து அவர்களுக்கும் அன்பும் நன்றிகளும்.

சில நாட்கள் கழித்து மார்ச் 13தேதி ஞாயிறு காலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தகவல் தந்தார். நானும் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பார்க்கும் அளவிற்கு மனநிலையை தயார் படுத்திக்கொண்டு ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ என்று மட்டும் இல்லாமல் வாட்ஸப்பில் இருந்த 750 பேருக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து அறிவித்துவிட்டேன். அந்த ஞாயிறும் வந்தது… வழக்கமாக ஞாயிறுகளில் 10 மணிக்கு எழும் மகளை முன்னமே எழுப்பி கூட்டாக உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தால் 8.30 மணிக்கு மேல் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் குறித்த விளம்பரங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் வர ஆரம்பித்தன. கிட்டத்தட்ட ஆறேழு நிமிடங்கள் கடந்த நிலையில் செய்தியின் புதிய தொகுப்பு வர மகளும், மனைவியும் என்னைப் பார்க்க… நான் “ங்ங்ஙே” மோடிற்குச் சென்று கொண்டிருந்தபோது அழைத்த கோபாலகிருஷ்ணன் தொழில்நுட்பக் காரணங்களால் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யமுடியவில்லை எனும் தகவலைச் சொன்னார். நான் ”ங்ங்ஙே” மோடில் இருந்து அப்படியே ஆஃப்லைன் மோடிற்கு எஸ்கேப் ஆனேன்.

நேற்று (25.03.2016) அழைத்த கோபாலகிருஷ்ணன் இன்று காலை 8.30க்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்றார். மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக விதி வலியது என்று நானே சிரித்துக் கொண்டேன். காரணம் இன்று காலை 10 மணிக்கு நான் பாப்பிரெட்டிபட்டியில் இருக்க வேண்டும். காலை 7.45க்கு இன்டர்சிட்டி ரயில். என்னை நானே பார்ப்பதிலிருந்து தப்பித்தலும் கூட நல்லதுக்குத்தான் என்ற நினைப்போடு, வழக்கம்போல் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+, வாட்ஸப்பில் (இந்த முறை 300 பேருக்குத்தான்) தகவல்களைப் பகிர்ந்துவிட்டு ’ங்ங்ஙே-ஜென்’ மனநிலையோடு காலை ரயிலில் கிளம்பி விட்டேன்.

8.30லிருந்து வாட்ஸப், ஃபேஸ்புக் என நட்புகள் அடுத்தடுத்து தொலைக்காட்சியில் ஓடும் நிகழ்ச்சியை படமாக அனுப்பிக் கொண்டேயிருக்க, நான் டபுள் ஸ்ட்ராங் ”ங்ங்ஙே-ஜென்” மனநிலைக்குப் போய், அங்கிருந்து ஆசை துறந்த புத்தன் அளவிற்கு மாறிப்போயிருந்தேன். அதன்பின் பாப்பிரெட்டிபட்டி பள்ளி நிகழ்வில் மூழ்கி, மகிழ்ந்திருந்து ஒருவழியாக மாலை ஊர் திரும்ப மின்னஞ்சலில் YouTube சுட்டி அனுப்பியிருந்தார்கள்.

”ஆஹா… இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கதிரா!?” என நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு முன்பே பார்த்தவர்களுக்கு அன்பும் நன்றிகளும். இனி பார்க்க விரும்புபவர்களுக்காக முன்கூட்டிய நன்றிகளும் சுட்டிகளும்…

”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!” இந்த வரி ரொம்ப நல்லாருக்குல்ல!

வித்தியாசமான, சவாலான, சாகசமான அனுபவங்களைக் கொடுத்ததற்கு பிரியம் நிறைந்த அன்பும் நன்றிகளும் கோபாலகிருஷ்ணன்.

-

No comments: