நிழல் நாடகம் - முன்னுரை



சமீபத்தில் சினிமா குறித்த ஒரு உரையாடலில் நண்பர் ”ரோசப்பூ ரவிக்கைக்காரி” பற்றி தாம் இணையத்தில் வாசித்த ஒரு நீண்ட கட்டுரை குறித்து சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார். கட்டுரையை வாசித்த பிறகுதான், படம் எவ்வளவு நுண்ணிய கூர்மையான விசயங்களை தன்னுள்ளே கொண்டிருந்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். நாயகி அணிந்திருந்த ரவிக்கையின் வடிவமைப்பு, ஒரு பெண் வைத்திருக்கும் கைத்தடியில் இருக்கும் குறியீடுகள் என நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். இடைநிறுத்தி “சரி.. இத்தனை குறியீடுகள் இருப்பது அந்தப் படத்தை இயக்கிய இயக்குனருக்குத் தெரியுமா!?” என்றேன். உரையாடல் அதோடு முற்றுப்பட்டது.

படைப்பில் இருக்கும் சுதந்திரமே படைப்பாளி அதை பொதுவில் வைத்தவுடனே அது பொது சொத்தாகி விடுவதுதான். நல்ல படைப்பும், படைப்பாளியும் தன் படைப்பு குறித்த சகல விமர்சனங்களையும் நேர்மையாக எதிர்கொள்வார்கள். விளக்கம், மறுப்புகளின்றி ஏற்றுக் கொள்ள முனைவார்கள். படைப்பு உருவாகி வெளியாகும் கணத்திலேயே, அது குறித்த விமர்சனங்கள் உருவாகத் துவங்கிவிடுகின்றன. நாட்கள் கரைய அது குறித்து விமர்சனங்களின் எண்ணிக்கையும் தேய்ந்து விடுகின்றன.

காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பு, காலம் கடந்து ஒரு விமர்சத்தினை உருவாக்கும்போது தனக்கு புதிய சிறகுகளைப் பூட்டிக் கொள்கின்றது. ஒரு படைப்பை விமர்சனம் மட்டுமே உயிரோட்டத்தோடு வைத்திருக் கின்றனவா எனும் விமர்சனத்திற்கு ஆட்படுத்தினால், அந்த படைப்பு உயிரோட்டமாக இருக்க விமர்சனம் மட்டுமே அவசியமன்று, அது குறித்த நினைவு மீட்டல்களும், உரையாடல்களும் கூட உயிரோட்டமாக வைத்திருக்க முடியும் என்பதை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் இந்த நிழல் நாடகம் மூலம் நிரூபிக்கிறார்.




தேவதாஸ் தொடங்கி காதல் வரை, தில்லானா மோகனாம்பாள் தொடங்கி அங்காடித் தெரு வரை, பராசக்தி தொடங்கி பாட்ஷா வரை என கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தில் தான் பார்த்த திரைப்படங்கள் குறித்து சித்ராவுக்கே உரிய யதார்த்தமும், நெகிழ்வும், கறாரும் கலந்த நிதானமான, தெளிவான மொழியில் உரையாடுகிறது நிழல் நாடகம்.

பொங்கலின் நினைவுகளில் தொடங்கி சோம நிதியில் நிறைவடையும் மகாநதியும், பெண்ட்தால் வாசனை எப்படியிருக்கும் என நமக்கொரு வாசனையை மூளைக்குள் புகுத்தும் குணாவும் வாசிக்க இனிதான ஒரு அனுபவம்.

பாரதியில் சாயாஜி ஷிண்டே, தேவயானி என பாத்திரங்களின் தெரிவை பாராட்டும் போக்கில், குவளைக் கண்ணனாக வரும் கஜேந்திரனுக்கு வழங்கும் பாவ மன்னிப்புச் சான்றிதழ் நல்லதொரு முடிவுதான். அன்பே சிவம் படத்தில் தன்னை கோரமாக்கிக்கொள்ளும் கமல் சோடாபுட்டிக் கண்ணாடி அணிய மைனஸ் பத்து காண்டாக்ட் லென்ஸ் போட்டு, ப்ளஸ் பத்து கண்ணாடி போடுவது வரையிலான உழைப்பை நியாயமாகக் கொண்டாடுகிறார்.

நடிகர் விஜய்யின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில் அப்பாவுடன் இணைந்து / அப்பாவைப் பிரிந்து என்ற இரு பதங்களில் நியாயமான ஒரு கோடு போட்டுவிடுகிறார். அதுவும் அப்பாவுடன் இணைந்த காலத்தில் விஜய்க்கு வைக்கப்பட்ட கேமரா ஆங்கிள்கள், சங்கவிக்கு வைத்த கேமரா ஆங்கிள்கள் என்பன குறித்தும் பேசுகிறார். காதலுக்கு மரியாதையில் விஜய்க்கு நிகழ்ந்த நல்ல மாற்றம் குறித்து பேசுவதோடு அங்கிருந்து அதன் மூலமான ‘அன்னியத்தி ப்றாவு’க்கு பயணப்பட்டு ஃபாசில் குறித்தும் அவரின் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் வரையும் பேசும் சுதந்திரம் வாசிக்க இதமானது.

ஒரு முன்னால் ரவுடியாய் இருந்த, சிங்கப்பூர் டாக்ஸியின் ஓட்டுனரைப் பேசத் துவங்கி, அதிலிருந்து பாட்ஷாவுக்கு நகரும்பொழுது எழுத்து டாப் கியரில் நகர்கிறது. எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு விடலைத் தனமான ஒரு ரவுடிப் பையன் இருக்கிறான் என்பதை வாசிக்கும்போது புன்முறுவல் வரத்தான் செய்கிறது.

தில்லானா மோகனாம்பாள் மற்றும் இந்தி மொழி கைட் படங்களைப் பேசுவதோடு அதன் மூலமாய் இருந்த நாவல்களைப் பற்றியும் பேசுகிறார். ஆனந்த விகடனில் தொடராய் வந்த தில்லானா மோகனாம்பாள் கதையில் வந்த உருவங்கள் குறித்த வர்ணனையை வாசிக்கையில் பத்மினிக்கும் அந்த ஓவியத்திற்கும் நிரம்ப இடைவெளிகள் இருந்திருக்கும் என்பது புரிகின்றது. ‘கைட்’ படம் குறித்து அதன் மூலக்கதை ஆசிரியர் ஆர்.கே.நாராயணனின் சாட்டையடி வசனம் படிக்க ஆச்சரியமாக இருக்கின்றது.

மணிரத்னம் ‘சாரின்’ மௌனராக நினைவுகளை சப்தமாகவே மீட்டுகிறார். சிங் பாத்திரத்தையும், வீ.கே. ராமாசாமி பாத்திரத்தையும், மருத்துவமனையில் தாலி உயர்த்திப் பிடிக்கும் காட்சியையும் தன் பாணியில் ஒரு பிடி பிடிக்கிறார்.

தேசிய கீதம் பாடுகையில் வேர்க்கடலை சாப்பிட்டால் அடித்துத் துவைக்கும் தேசப்பற்று என்ற விமர்சனமும், மறதி என்பது காலம் கொடுக்கும் தண்டனை அல்லது வெகுமதி என்ற சிந்தனையும் நிறைய சிந்திக்க வைக்கின்றன.

சிலருக்கு சினிமா பொழுது போக்கு, சிலருக்கு அது ஒரு வடிகால், சிலருக்கு அதுவே வாழ்க்கை. என்னதான் சினிமாவை ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்று அறிவார்ந்து சொன்னாலும், தமிழர்களைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் சினிமாவிலிருந்து வந்தவர்களே ஆட்சியதிகாரம் செய்யும் வாய்ப்பை மாறி மாறி பெற்று வருகின்றனர். இன்னும் கூட சினிமா மூலம் தங்களை தகவமைத்துக்கொண்டு பெருங்கனவோடு தயார் நிலையில் இருக்கின்றனர்.

சுமார் இருபது படங்களுக்கு மேலான படங்களைசற்று அலசி, நம் வாழ்வோடு ஒப்பீடு செய்து, அதிலிருந்தவர்கள் குறித்து தன் எண்ண வெளிப்பாட்டினைப் பகிர்ந்து என ஒரு நிறைவான அனுபவத்தை சித்ரா ரமேஷ் நிழல் நாடகத்தின் வாயிலாகத் தந்துள்ளார். கடந்த காலங்களில் நினைவிலிருந்து கரைந்து போயிருக்கும் கதைகளையும், காட்சிகளையும் சுகமாய் வாசிக்கும் ஒரு அழகிய அனுபவம் இது.

இன்னும் அவர் விரல் வழியே எழுதப்பட வேண்டிய படங்களும், அதனையொட்டிய அனுபவங்களும் நிறைய இருக்கின்றன எனும் நினைவூட்டலையே அவருக்கான அன்பு வாழ்த்தாகவும், பிரியமான வேண்டுகோளாவும் இங்கு விடுக்கிறேன்.

-

2 comments:

Umesh Srinivasan said...

உங்கள் விமர்சனம் மூலம் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள். அடுத்த சென்னைப் பயணத்தில் கண்டிப்பாய் வாங்கிப் படிக்கிறேன்.

Gnanasekaran Veeriahraju said...

படிக்க வேண்டும்.