இனியொரு விதி செய்ய ஆணையிடும் பிள்ளைகள்



சில மாதங்களுக்கு முன்பு கிராமப்புற பள்ளியொன்றில் படித்த பதின் வயது மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டிருந்தாள். காரணம் என்னவென்றே தெரியாத மரணம் என்பது மரணத்தைவிட கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. தந்தையின் மீது அதீத பாசம் கொண்டிருந்த அவள், தனது தந்தை குடிப்பழக்கத்தால் அழிந்துபோவதும், அசிங்கப்படுவதும் கண்டு மனம் வெறுத்துப்போய், தனது மரணமேனும் அந்த அப்பாவை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்குமா என்ற எண்ணத்தில் தன்னையே மாய்த்துக்கொண்டதாக செய்திகள் கசிய ஆரம்பித்தபோது அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

சென்னையில் கணவனின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட சண்டையின் முடிவாய், தம் பிள்ளைகள் இருவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதில் அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ தாய் மட்டும் உயிர்பிழைத்த செய்தி உறையச் செய்தது. உயிர் பிழைத்த அவர் பிள்ளைகளை கொலை செய்த வழக்கை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சிறை சென்றிருக்கிறார். சட்டம் அளிக்கும் கருணையோ, தண்டனையோ ஒரு பக்கம் இருக்கட்டும்… தான் பெற்றெடுத்த பிள்ளைகளை, தனது தற்கொலையை முன்னிட்டு அன்பின் காரணமாகவோ, பாதுகாப்பின் காரணமாகவோ, சுயநலத்தின் காரணமாகவோ  கொலை செய்த கொடூரத்திலிருந்து மனதளவில் அவர் எவ்விதம் தன்னைத் தண்டிக்கப்போகிறார் அல்லது சமாதானப்படுத்திக் கொள்ளப்போகிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது.

தனக்கு பாடம் சொல்லித் தரும் பள்ளி ஆசிரியரின் பாலியல் வன்கொடுமையால் சிதைக்கப்பட்ட ஒரு கிராமப்புற எழை மாணவி, தான் பாதிக்கப்பட்டதைச் சொன்னால் நம்பமாட்டார்கள் எனும் அவநம்பிக்கை கொள்கிறாள். ஒருவகையில் அதுதான் உண்மையும் கூட. ஆசிரியரின் பாலியல் வக்கிரத்திற்கு எதிராக, ஒரு கட்டத்தில் மரண சாசனம் எழுதி வைத்துவிட்டு, ”இந்த மரணத்தின் காரணமாய் நீங்கள் நடந்த கொடூரத்தை நம்பித்தான் ஆகவேண்டும்” என்று கூறி மரித்துப் போயிருக்கிறாள்.



ந்தப் பிள்ளைகளின் மரணங்கள் செய்திகளாக வாசிக்கும்போதும், காணும்போதும் ஏற்படும் அதிர்ச்சிகளை கால வெள்ளம் சலவை செய்துவிடுவதுதான் நம் பலவீனம். பெரிதாக வெளிச்சத்துக்கு வராமல், தற்காலிகமாக மட்டுமே அதிர்ச்சி தந்து, படிப்பினைகள் தராமல் போகும் குழந்தைகளின் மரணம் கொடும் சாபமன்றி வேறென்ன?
மரணம்தான் வாழ்வின் முடிவுப்புள்ளியென தத்துவார்த்தமாகச் சிந்தித்தாலும், வலிந்து திணிக்கப்படும், ஏற்படுத்திக்கொள்ளப்படும் மரணங்கள் எவ்வகையில் ஏற்புடையதன்று என்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருக்க முடியாது.

பல மாதங்களுக்கு முன்பு கண்ட காட்சியொன்று அப்படியே ஆழ மனதில் நிலைத்து விட்டிருக்கின்றது. அதன்பின் எத்தனையோ காட்சிகளைக் கண்டு நினைவடுக்கில் சேமித்திருந்தாலும் அந்தக் காட்சி மட்டும் நினைவை விட்டு அகலவேயில்லை.

நாகூர் தர்க்காவின் தெற்குப்புற வீதி அது. இரண்டு சக்கர வாகனம் ஒன்று அதன் நெற்றிப்பொட்டில் ஈழப்போரில் கொல்லப்பட்ட பாலகன் பாலச்சந்திரனின் வட்ட வடிவப் படத்தை தாங்கி நிற்கிறது. எழுபது வயதினை அண்மித்திருக்கும் பெரியவர் ஒருவர் வீதியில் வந்து கொண்டிருக்கிறார். இரு சக்கர வாகனத்தின் நெற்றிப்பொட்டில் இருக்கும் பாலசந்திரனனின் படத்தைப் பார்த்தவர் நெருங்கி வருகிறார். வாகன ஓட்டி வண்டியில் அமர்ந்து நிமிர்ந்தபடி, வண்டியை உயிர்ப்பித்து நகர முற்படுகிறார்.

வாகனத்தை மிகச்சரியாக மறித்தவாறு நிற்கும் பெரியவர் வண்டியின் முகப்பை பிடித்தவாறு பாலச்சந்திரனின் படத்தை உற்றுப் பார்க்கிறார். ஏதோ முணுமுணுத்தபடி விரல்களால் படத்தை வருடிப் பார்க்கிறார். ’இந்தப் பெரியவர் குறுக்கே வந்து வழி மறிக்கிறார்’ என்பது போல் சற்று கோபமாகப் பார்த்த அந்த வாகன ஓட்டி இளைஞர், பெரியவரின் கைகள் பாலச்சந்திரன் படத்தை வருடுவதைப் பார்த்ததும் தடுமாறுகிறார். அக்கம் பக்கம் பார்க்கிறார். அந்த சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்னையும் பார்க்கிறார். சட்டென வண்டியிலிருந்து இறங்குகிறார்.

பெரியவர் நிதானித்து நகர்கிறார். அவர் வாய் முணுமுணுப்பது உடைந்து கேட்கிறது. ”இந்தப் பச்சப்புள்ளய அநியாயமா கொன்னுட்டாங்களே” என்பதையே திரும்பத் திரும்ப உச்சரித்தவாறு வீதியின் மையத்தில் நிற்கிறார். வேகமாய் வந்த வண்டியோட்டி ஒருவர் நடுவீதியில் நிற்கும் அவரைக் கண்டு ஒலிப்பான் அதிர விட, அந்த ஓசையில் கலங்கித் தடுமாறுகிறார் பெரியவர். பாலச்சந்திரன் படம் தாங்கிய வண்டிக்கு சொந்தக்காரரான இளைஞர், வண்டியை அணைத்துவிட்டு, வண்டியில் ஏறாமல் நடந்தபடியே தள்ளிக்கொண்டு நகர்கிறார்.

அந்தப் பெரியவரின் கலக்கமும், தவிப்பும், தடுமாற்றமும் அந்தக் கணப்பொழுதில் அடங்கிவிடப் போவதில்லை. என்னைவிட்டு நடந்து தூரத்தை - இடைவெளியை அதிகரித்துக் கொண்டிருக்கும் அவரையே பார்க்கிறேன். நடையில் கூடுதல் தளர்ச்சி. முதுகு கூடுதலாய் வளைவது போல் ஒரு தோற்றம். அவரின் அதிர்ச்சியும் வருத்தமும் உண்மையில் பாலச்சந்திரன் எனும் பாலகனின் நீதியற்ற கொடுமரணத்தைக் குறித்த செய்திகள் பார்த்ததும், கேட்டதுமான செயல்களின் விளைவாக இருக்கலாம்; அல்லது அவனுக்கு நிகரான ஒரு பேரப்பிள்ளையோ உறவுப் பிள்ளையோ அவரின் குடும்பத்தில் இருக்கலாம்; அல்லது இல்லாது போயிருத்தல் என்பதின் நீட்சியாகவும் இருக்கலாம்.

உலகத்தை உலுக்கிய பாலகன் பாலசந்திரன் மரணம் போன்றேதான் ஒவ்வொரு பிஞ்சுகளின் உதிர்வும் அந்தக் குடும்பத்திலும், அவை சார்ந்த உறவுகளின் மத்தியிலும் இடைவிடாத அதிர்வுகளை காலம் முழுமைக்கும் நீட்டிக்கச் செய்கின்றன.

நாம் ஏங்கித் தவித்துத் தேடியும், நேரில் கண்டுணராத கடவுளின் வடிவங்களாய் காட்சித் தருபவர்கள் குழந்தைகள். அவர்களின் எதிர்பாராத செய்கைகள், உலகை அவர்கள் அணுகும் முயல்வுகள், ஒன்றை அவர்கள் நோக்கும் பார்வைகள் எல்லம் நமக்குத் தரும் ஆச்சரியங்கள் சொற்களில் அடங்காதவை. நம் பால்யத்தில் நாம் அவர்கள்போல் இருந்ததில்லை, ஏன் இப்போதும்கூட அவர்கள் போல் இருக்க முடியவில்லை என்பதை அடிப்படையாக வைத்தும்கூட அந்த ஆச்சரியங்கள் உருவாகலாம்.

குழந்தைகளின் மரணங்கள் என்பது கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும், விபத்தாக இருந்தாலும் அது குழந்தைகளின் பிழையன்று. அப்பாவிற்காக உயிர் ஈந்தவள் குடிகார அப்பாக்களுக்காகவும், தாயின் கைகளில் நெரிபட்டு மாய்ந்த பிள்ளைகள் தாய்களின் கணவன்களுக்காகவும், மரண சாசனம் எழுதிய மாணவி கொடூர மனம் படைத்த ஆசிரியர்களுக்காகவும் தங்களை பலிகொடுத்திருக்கிறார்கள். அந்த மரணங்கள் முழுக்க முழுக்க இந்த சமூகத்தின் பிழை… அழுத்தமாகச் சொன்னால் அவை சமூகம் புரிந்த கொடுங்குற்றம். இந்த பிழை அல்லது குற்றத்திற்கான தண்டனை, பிராயச்சித்தம் என்பது வெறும் செய்திகளில் ஏற்படும் பரபரப்பு அதையொட்டிய அதிர்ச்சி என்பதோடு முடிந்து விடப்போகிறதா!?

எல்லாவிதத்திலும் வளர்ந்தாக தன்னைக் காட்டிக்கொள்ளும் சமூகம் இதுவரையிலும் குழந்தைகளாக இந்த உலகத்தில் பிறந்ததைத் தவிர ஏதும் குற்றம் செய்யாப் பிள்ளைகள் தமது பால்யத்தைத் துறக்குமுன்பே மரணத்தை தண்டனையா ஏற்க வேண்டியிருப்பது குறித்தும் சற்று மெத்தனம் காட்டுகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

எதனைக் கொண்டும் எவராலும் குழந்தைகளுக்கு ஈடான ஒன்றை, ஒருபோதும் நிரப்பிக் கொள்ள முடிவதில்லை. ஒரு குழந்தையின் வார்ப்பு என்பது அந்தக் குழந்தைக்காக மட்டுமே செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. இன்னொரு உயிர் என்பது இன்னொன்றுதான். முந்தையது கிடையாது. அப்படியான குழந்தைகளின் மரணங்கள், தாம் வாழ்ந்த சமூகத்திற்கான பாடமானதும், எச்சரிக்கையானதும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


-

“நம் தோழி” டிசம்பர் இதழில் வெளியான கட்டுரை

-

5 comments:

Geetha said...

உண்மைதான்..இது குழந்தைகட்கான சமூகமல்ல....சொல்லமுடியாது அவர்கள் தவிக்கும் நிலை தான் அதிகம்..

Unknown said...

I feel deeply sorrowful and helpless. A very sincere post.

NDM Gopal Krishnan said...

அம்மா மறக்கலே
அப்பா நினைக்கலே
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க
எங்களுக்கும் வயசில்லை
உங்களுக்கும் மனசில்லை.....
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாதக் காட்டிலே

thiyaa said...

நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜமான வரிகள், இன்றைய நவ நாகரிக உலகில் பெற்றோரின் அரவணைப்புக்காக நாளும் ஏங்கும் குழந்தைகளின் தொகை அதிகரிப்பே இதனைக் காட்டுகிறது. இங்கு வெளிநாடுகளில் கூட இதே சிக்கல் தான். நான் சில குழந்தைகளைக் காண்கிறேன், அவர்களின் பெற்றவர்கள் பிரிந்துவிட்ட பிறகு ஆளுக்கொரு திருமணம் செய்து கொண்டபின் பிள்ளைகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. தாயுடன்-தந்தையுடன் என அவர்களின் காலம் நகர்வதைக்க காண்கிறேன். இங்கு பல சிக்கல்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோரின் இரண்டாம், மற்றும் மூன்றாம் துணைகளால் நடாத்தப் படுகின்றன.

'பரிவை' சே.குமார் said...

நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் நிஜம் அண்ணா...
இது போன்ற மரணங்கள் மனதை உலுக்குகின்றன.