கீச்சுகள் தொகுப்பு 61



நாளை குறித்து நம்பிக்கை மிகும் நேரங்களில், நளினமாக நடனமாடுகிறது மனது.

-

நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை விட, உலகம் ஒன்றும் பெரிதாக நம்மை ஏமாற்றிவிடவில்லை!

-

மலரினும் மெல்லியது முத்தம் :)

-


விபரீதமான கற்பனைகளில் இருக்கும் மிக முக்கியமான பயம் அதிலிருக்கும் துல்லியம் தான்! 





புத்திசாலிகளுடனும் நட்பு அவசியப்படுகிறது. முட்டாள்களுடனும் நட்பு அவசியப்படுகிறது. இருவருமே வாழ்க்கை எதுவென உணர்த்துகிறார்கள்.

-

மடிமேல் கிடத்திய பூனைக்குட்டியை வருடிக்கொண்டு வீட்டில் இடைவிடாது திட்டிக்கொண்டிருக்கும் ஒருவரைக் கண்டேன். ஞானம் குறைப் பிரசவமாகிறது!

-

பாதங்களில் சிறு உருளைகளைக் கட்டிக்கொண்டு விரைந்திடவோ, கைகளில் இறக்கைகளைப் பொருத்திக்கொண்டு பறந்திடவோ துடிக்குது மனசு!

-

வெள்ளத்தின்போது விலை உயர்ந்த கார்களுக்கு அங்கு வேலையில்லை. அழுக்கடைந்த படகுகள்தான் அசைந்தபடி வந்திருந்தன அனைவரையும் மீட்க.

-

ஏதோ உணர்வுக்குள் ஆட்பட்டு, அதன் போக்கில் மனநிலையை அமைத்துக்கொண்டு மூழ்கிப்போதல்தான் பெரும் பிணியாய்க் கவ்வுகிறது. தான் இருக்கும் நிலை உணரும் ஒரு சொடுக்குக் கவனமும், ஆட்படுத்தும் உணர்வின் எதிர்நிலை என்னவாக இருக்குமெனத் தேடுவதுமே மருந்தாக அமைகின்றது.

-

பிடித்தவர்களைப் புரிந்துகொள்ள அறிவைப் பயன்படுத்துவதில்லை!

-

வன அழிப்பு குறித்து வெயிற்காலங்களிலும், நீர் நிலைகளை அழித்தது குறித்து மழைக்காலங்களிலும் அதிதீவிரமாய் விவாதிக்கப் பழகியிருக்கின்றோம்!

-

நேசிக்கவும், நேசிக்கப்படவும் தனக்கு மட்டும் யாருமே இல்லை என நினைப்பவர்களும் அனாதைகள் தான்

-

வாழவே முடியாதெனும் சவால்களை கொண்டுள்ள ஒருவன், ’தான் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பதாய்இந்த நாளின் பரிசாய் உணர்த்திவிட்டு போயிருக்கிறான்!

-

துயரங்கள் எப்போதும் நம்ப முடியாததாகவே இருக்கின்றன. ஆனால் அவை உண்மையாக இருந்து விடுவதுதான் துயரமே!

-

அவசரம் - நிதானம், திட்டமிடல் - திட்டமிடாமை ஆகியவை இடையே பெரிய இடைவெளிகள் இல்லை. ஆனால் விளைவுகளில் மிகப்பெரிய இடைவெளிகள் இருக்கின்றன.

-



நகரம் பிடித்திருக்கிறதா என்கிறார்கள். பிடித்து வைத்திருக்கிறது என்கிறேன்!

-

ஏதோ ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காகப் பிடிக்காமல் போய்விடுபவர்களின் குறைகளுக்கு வர்ணம் பூசும் நோய்மைக்கு நிகரேதுமில்லை!

-

அமெரிக்கா முதல் அண்டார்டிகா வரை இருக்கும் நம்மூர் ஆட்களை கடுப்பேத்தும் ஆயுதம் எங்கூட்ல இன்னிக்கு அரிசியும்பருப்பு சோறு

-

அன்பை நிரூபிக்க முயல்வதை அபத்தமென்றும் சொல்லலாம்!

-

நீங்கள் என்னவோ பெயர் வைத்துக்கொள்ளுங்கள் நான் அதை பிரியமென்று நினைத்துக்கொள்கிறேன்

-

அன்புள்ள எவரும் எவரையும் ஆசிர்வதிக்கலாம்!

-

உயிர் வாழ சுவாசிக்கும் கையளவு காற்றைக்கூட, இது என் காற்று, எனக்கானது எனப் பிடித்து வைத்துக்கொள்ள முடியாதவர்கள் நாம்!

-

மழையின் பேரழகே அதன் இறுமாப்புதான்!

-

உண்மை செய்திகள் பகிரப்படுவதைவிட, புரளிகள், கட்டுக்கதைகள், மிகைப்படுத்தல்களை பரவவிடும் தளமாகவே வாட்சப் குழுமங்கள் மாறிப்போனது சாபக்கேடு

-

திசை பழையது பாதை பழையது ஆனால்... நடை புதிது...!

-

No comments: