புதிர்தை வியாபாரம் நடந்துகொண்டிருந்த சிவப்பு விளக்குப் பகுதியில்தான் என் பால்யம் முழுவதும் இருந்தது. 12 வயதாக இருக்கும்போது என் விலை விசாரிக்கப்பட்டு, அதைப் புரிந்துகொள்ளவும் முடியாமல் அழுதபடியே உறங்கினேன். இதில் கொடுமை என்னவென்றால், என்னை விலைக்குக் கேட்டவன் பளபளக்கும் காரும், எதையும் வாங்கும் வல்லமையும் கொண்ட மேல்தட்டு வர்க்கம். என் அம்மா அருகில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும் நிலையில், அங்கு எங்கள் குடும்பமாய் இருந்த பெண்களே, என்னை அன்புடனும் பிரியத்துடனும் பாதுகாத்தனர். எனினும் என் நிறத்தையொட்டிய தாழ்வு மனப்பான்மையுடனே வளர்ந்தேன். சிவப்பாக இருப்பவர்கள் அழகாக இருப்பதாக ஆராதிக்கப்படுவதும், நான் கறுப்பாக இருப்பதாலேயே அழகற்றவள் என அழைக்கப்படுவதும் எனக்குப் புரியவேயில்லை.

12ம் வகுப்பு முடித்தபோது ஒரு மாற்றத்தை நிகழ்த்த விரும்பினேன். நகராட்சி பள்ளியில் இருந்தவர்களிடம் நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டும், ”நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும், என்னை நானே மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் சொன்னேன். அதனால்கிரந்திஅமைப்பிற்குச் சென்றேன். அடுத்த ஆண்டு பயணத்திலும், பாலியல் கல்வி குறித்த பயிலரங்கு நடத்துவதிலும் செலவிட்டபோது, எல்லோருமே, என் பின்புலத்தை வைத்து என்னைத் தீர்மானிப்பதில்லை என்பது புரிந்தது. என்னைக் குறித்து என்னிடமிருந்த தாழ்வுணர்ச்சியிலிருந்து மீள ஆரம்பித்தேன். நான் எப்போதும்  கனவு காண்பவள், பேச்சுவாக்கில் ஒருமுறை உரத்த குரலில் நான் அமெரிக்க செல்லவேண்டும் எனச்சொன்னேன். அப்போது அமெரிக்க ஒரு கண்டமா?, நகரமா?, அல்லது நாடா என்பது கூடத் தெரியாது.கிரந்தியின் முயற்சியால் பார்ட் கல்லூரியில் லிபரல் ஆர்ட்ஸ் படிக்க முழு உதவித்தொகையும் கிடைத்தது. மேலும் தங்கும் செலவு மற்றும் அன்றாடச் செலவினங்களுக்கு உடனிருந்தவர்கள் உதவினர். வாழ்வில் மாற்றம் வந்தது, ”SEA”ல் வகுப்பு பருவத்தேர்வுகளை சந்தித்தேன். என்னால் ஆங்கிலம் சரளமாகப் பேச முடிந்தது. என் வீட்டிலிருந்து, காமத்திபுரா வரை மாற்றங்களைக் கொண்டுவர என்னிடம் யோசனைகள் இருந்தன.

ஆம், என் வீட்டைக் குறித்த உங்கள் சிந்தனைகளை விசாலமாக்குங்கள். மனிதர்களுக்கு விருப்பங்களும் தெரிவுகளும் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பலர் தெரிந்தே அந்த வாழ்க்கையைத் தெரிவுசெய்தவர்கள், ஏனெனில் அதுதான் அவர்களின் வாழ்க்கைக்கான மூலாதாரம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நாம் மதிப்பீடு செய்பவர்களாய் இருத்தலைக் குறைத்துக்கொண்டு, நம் வசதிக்கு உட்படாத சூழல்களில் நடப்பவற்றை ஏற்றுக்கொள்தல் அவசியம். ஏனெனில் என் பின்புலம் என் பலவீனமன்று. நானென்பது நான்தான். இதுதான் நான் என ஒரு இடமும் வரையறுக்க முடியும்.

இதுமும்பையின் மனிதர்கள் எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருக்கும் ஒரு 20 வயதுப் பெண்ணின் வரிகளும் வாழ்க்கையும்.

*
ட்டக்களப்பு, இலங்கையின் கிழக்கில் கடல் ஓரத்தில் இருக்கும் ஒரு அழகிய நகரம். தமிழர்கள் அதிகமாக வாழும் வடகிழக்குப் பகுதியின் முக்கியமானதொரு பகுதி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக நான் அங்கு சென்றிருந்தபோது, ஒரு அமைப்பின் கீழ் பணியாற்றும் பெண்களிடம் பேச வேண்டும் என அழைக்கப்பட்டிருந்தேன்.

கல்லடி என்ற இடத்தில் ஒரு தொழிற்பேட்டைக்கு அழைத்துச் சென்றார்கள். பேசுவதற்காக மிகச் சிறிய முகப்பு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அமைப்பாளர்களில் ஒருவர் உள்ளே இருந்த தொழிற்கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வரிசையாக இருந்த தையல் இயந்திரங்கள் ஓய்வில் இருந்தன. அது முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இணைந்து பணியாற்றும் தொழிற்கூடம். அங்கிருந்த பெண்களின் வயது சுமார் இருபத்தைந்திலிருந்து நாற்பத்தைந்துக்குள் இருக்கலாம். அவர்கள் அனைவருக்குமான மிக முக்கிய ஒற்றுமை, அனைத்துப் பெண்களுமே கணவனை இழந்தவர்கள் அல்லது கைவிடப்பட்டவர்கள்.

மட்டக்களப்பு கடந்தகாலங்களில் இரண்டு வகைகளில் பாதிக்கப்பட்ட பகுதி. ஒன்று இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக நிகழ்ந்த நீண்டகாலப் போரில், மற்றொன்று சுனாமியின் கோரத்தாண்டவத்தில். சுனாமியில் நமது தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரை தப்பித்ததற்கு இலங்கை சுனாமி அலைகளைத் தடுத்தாட்கொண்டதுதான் மிக முக்கியக் காரணம். அதில் மிக மோசமாகத் தாக்கப்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பும் ஒன்று. அங்கிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் போர் குறித்தும், சுனாமி குறித்தும் ஆயிரமாயிரம் வலி மிகுந்த சொற்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனாலும் வாழ்ந்துதானே ஆகவேண்டும்.

போரில், சுனாமியில் மற்றும் இன்னபிற காரணங்களால் கணவனை இழந்த பெண்களை ஒன்றுதிரட்டி இந்தியாவைச் சார்ந்தசேவா எனும் அமைப்பு, இந்திய அரசின் நிதியுதவியுடன் குஜராத் மாநிலத்திற்கு அழைத்து வந்து தையல் பயிற்சியளித்திருக்கின்றது. அதன்பின் தையல் இயந்திரம் வாங்குவதற்கு நிதியுதவி அளித்து, அவர்களை ஒரு அமைப்பாக ஒன்று திரட்டி தொழிற் நடத்த வழிவகை செய்திருக்கின்றது.இன்று அவர்களாக கொழும்பு சென்று ஒட்டுமொத்தமாகத் துணி வாங்குகிறார்கள், கல்லடிக்கு வந்து தொழிற்பேட்டையில் நைட்டி, சுடிதார் என பெண்களுக்கான விதவிதமான துணி வகைகளைத் தயாரிக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு சந்தையை உருவாக்கி, ஒன்றாக உழைத்து, குடும்பம் பிள்ளைகள் என சொந்தக்காலில் நின்று அவரவர் வாழ்க்கையை நல்லவிதமாக நடத்துகிறார்கள்.  அவர்களில் சிலர் மறுமணம் செய்துகொண்டு புதியதொரு வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்.

இலங்கையில் தெற்கு, வடக்கு, கிழக்கு என நான்கு நாட்கள் மிக நீண்ட பயணம் மற்றும் நிகழ்ச்சிகளென்று என்னால் அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கென நேரமோ உடம்பில் வலுவோ, மனதில் தெம்போ இருந்திருக்கவில்லை. அவர்களின் மத்தியில் அன்று நான் பேசவேண்டியது குறித்து ஒற்றை வார்த்தை கூட தீர்மானித்திருக்கவில்லை. ஆனால் அன்று அவர்கள் குறித்து அறிந்துகொண்ட தகவல்கள் மட்டுமே என்னை பேச வைத்தது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்ன தெம்பாக பேசவைத்தது. இத்தனையாண்டுகளில் நான் பேசியவற்றில் மிக மிக அதிகமான திருப்தியை அடைந்த உரைகளில் அன்றைய உரையும் ஒன்றெனச் சொல்வேன்.

*

வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு. வழங்கப்பட்ட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதன் போக்கில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நாட்களை நகர்த்துதலை ’வாழ்தல்’ என்பதைவிட ’பிழைத்தல்’ என்றே அழைக்கலாம். வாழ்தல் என்பது சிறகு விரித்து வானம் ஏகுதல். சிறகு இல்லாவிடில் எனக்கு சிறகு வேண்டுமென என ஆசை கொள்ளுதல். இல்லாத சிறகுகளை முளைக்கச் செய்தல். சிறகுகளை அசைக்க, இயக்கப் பயிற்சியெடுத்தல். வலிமையைக் கூட்டுதல், வானமேகி எல்லைகளைக் கடந்து பறந்து செல்லுதல். காற்றில் மிதத்தல். தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து ரசித்தல்.

ஆனால் வாழ்க்கையின் ஆகச் சிறந்தவொரு புதிர் ”வாழ்தல்” என்பதுதான். நமக்கென வழங்கப்பட்ட வாழ்க்கையை, நாம் எப்படி கையாள்கிறோம், எப்படி மாற்றுகிறோம் என்பதுதான் வாழ்க்கை எனும் புதிருக்கு மிகப் பொருத்தமான விடையும் கூட.

சிலருக்கு ’ஏன்.. எப்படி.. எதனால்?’ எனத் தெரியாமலும்கூட வாழ்க்கை என்பது கடினமான சவாலாக வாய்த்துவிடுகின்றது. மிக எளிமையான, இனிதாகக் கிடைத்த வாழ்க்கையை சிலர் கொடுமையான ஒன்றாக மாற்றி வீணடிப்பதுவும் உண்டு. பொதுவாகவே ஏதோ ஒரு ஒப்பீட்டினை வைத்துக்கொண்டு மட்டுமே இந்த வாழ்க்கை மிகப் பிடித்தமானது என்றோ, மிகக் கொடியது என்றோ மிக எளிதாகத் தீர்மானித்து விடுகின்றோம்.

எல்லோருக்கும் ஒரே விதமான வாழ்க்கை வழங்கப்படுவதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. கொடுக்கப்பட்ட வாழ்க்கை எதுவெனினும், அதை தாம் விரும்பியவண்ணம் மாற்றிக் கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் அனைவருக்குமே வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த உரிமையும் வாய்ப்பும் பிரதானமாகக் கேட்பது சரியான முடிவு, நேர்மையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை மட்டுமே!

*“நம் தோழி” ஜூன் இதழில் வெளியான கட்டுரை-

4 comments:

gopinath said...

Very wonderful & inspiring article anna..

gopinath said...
This comment has been removed by a blog administrator.
karthik natarajan said...

வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு. வழங்கப்பட்ட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதன் போக்கில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நாட்களை நகர்த்துதலை ’வாழ்தல்’ என்பதைவிட ’பிழைத்தல்’ என்றே அழைக்கலாம். nice....

NAGARJOON said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Luxurious hotel in chennai | Budget Hotels in Chennai | Centrally Located Hotels in Chennai