![]() |
படம் : இணையத்திலிருந்து |
சாமிகிட்ட போன அப்பா குறித்து
பூக்குட்டியிடம்
அவர்களும் சொல்லவில்லை
அவளும் கேட்கவில்லை
அழுது புரண்டு
பேசியோய்ந்த உறவுகள்
அவரவர் கூடு நோக்கி
பறந்தாகிவிட்டது
க்ளாஸ் டீச்சரும்
மேத்ஸ் டீச்சரும்
அவ்வப்போது
பூக்குட்டியின்
தலை வருடிப்போகிறார்கள்
பகற்பொழுதுகளில்
காய்ந்த தடங்களை
கன்னங்களில் சுமக்கும் அம்மா
இரவுகளில் இடைவிடாது
நீர் வார்க்கிறாள்
போர்த்திவிடும் அப்பாவின்
விரல்களில் வழிந்த
பிரியத்தின் சாயம்
நிறமிழந்து கொண்டிருக்கிறது
அப்பா வாங்கிவரும்
அதே பெரிய சாக்லெட் மட்டும்
பூக்குட்டியின்
ஹோம்வொர்க் மேசை மேல்
தவறாமல் காத்திருக்கின்றது
புறங்கையில் ஓவியமொன்றைத்
தீட்டியபடி வழிந்தோடும்
சாக்லெட் வழிசலை
இதழ்கள் பதித்து உறிஞ்சுகையில்
துளிர்க்கும் கண்ணீரை
யாருமறியாமல்
அப்பா துடைத்துவிடுவதை
ரகசியமாகவே
வைத்திருக்கிறாள் பூக்குட்டி!
-
-
9 comments:
Hmm...Painful!
மனம் இளகி .ப்ச். .என்ன ஒரு feel...
கனக்கிறது கதிர்....
அழகிய கவிதை...
கடைசி வரி மனதை வலிக்கச் செய்தது அண்ணா...
........
ம்ம்ம்...
அப்பாவை இழந்தவர்கள் கண்களில் நிச்சயம் நீர்கோர்க்கும்..எல்லா அப்பா மகள்களுக்கும் நடுவில் இப்படி ரகசியம் இருக்கவே செய்யும்..
அப்பாவின் எல்லா தவறுகளையும் நிபந்தனை இல்லாமல் மன்னிக்க மகளால் மட்டுமே முடியும்...வார்த்தைக்குள் அடங்கா அழகிய உறவிது ...
அப்பாவின் நினைவுதினத்தில் இக்கவிதை வாசிக்க இன்னும் அழுத்தம் மனதில்...
சுமையின்றிக் கனக்கிறது..
Intha varikalai padikkumpodhu ennavo seithu manasu. Azhuthitten sathtampottu.
அப்பாவை இழந்த குழந்தைகளின் மனநிலை மிக துயரமானது. கவிதை வரிகள் அதை உணர வைத்தது ...
Post a Comment