பெயர் சூடிடா மழையொன்று வந்திருக்கிறது

மழை வரும்போல்
இருக்கின்றது
இது எந்த மழையாக
இருக்கும்

முதற்சந்திப்பில்
மாடிப்படியொன்றில்
ரோஸ் நிற சுடியில்
ஆறேழு மழைத்துளிகளின்
தழும்பு சுமந்தபடி
இறங்கிய போது
வந்திருந்த மழையா!

சாக்லெட் இணைத்த
வாழ்த்து அட்டை தந்து
கரைத்துவிடுவதுபோல்
கண்களையே
பார்த்திருந்த பொழுது
திறந்த வாழ்த்து அட்டையிலிருந்த
பெயர் மேல் சொட்டியதே
அந்த மழையா!

தீபாவளி வாரமொன்றில்
பாட்டியின் நினைவில் நனைந்து
காய்ன் போனொன்றிலிருந்து
தேம்பிய பொழுது
சாரலாய் நனைத்ததே
அந்த மழையா!

அமாவாசை இரவொன்றில்
ரயில் நிலைய வழியனுப்பில்
உருட்டி மிரட்டிவிட்டு
ஏமாற்றிப்போனதே
அந்த மழையா!

ஆறு மணிக்குள் விண்ணப்பம்
அளிக்கவேண்டுமென
அவசரமாய் விரைந்த மாலையில்
ஆலமரத்தடியில் ஒதுங்கவைத்து
அடித்து மிரட்டி நனைத்து
அலைக்கழித்ததே
அந்த மழையா!

கடைசிச் சந்திப்பென்றானபின்
கொஞ்சம் மல்லிகை மட்டும்
வாங்கித்தாவெனச்சொல்லி
தலையில் சூடியபடி
வெளுத்த வானத்தைப் பார்த்து
இன்னிக்கு
மழை வந்திருக்கலாமென்றபோது
வராது போன அந்த மழையா!

இதிலெந்த மழையாகவும்
இல்லாமல் போனாலுமென்ன
கவிதையெழுதிய
இந்த தினத்தின்
மழையென்று
இருந்துவிட்டுப் போகட்டுமே!

-

10 comments:

Muthusamy Venkatachalam said...

அடித்து மிரட்டி நனைத்து
அலைக்கழித்ததே
அந்த மழையா///////அருமையான சொற்கள்......மழை வேண்டும் உங்களை கவிதை எழுத தூண்டவாவது வேண்டும்.அருமை.

-'பரிவை' சே.குமார் said...

மழை...
அடித்துப் பெய்கிறது
உங்கள் கவிதையில்...
அருமை அண்ணா.

சத்ரியன் said...

வராது போன அந்திமழை.

KANNAA NALAMAA said...

இதிலெந்த மழையாகவும்
இல்லாமல் போனாலுமென்ன
கவிதையெழுதிய
இந்த தினத்தின்
மழையென்று
இருந்துவிட்டுப் போகட்டுமே!".
ஒரு கவிதையும்,
தங்கள் கவிதையால்
ஒரு மழை இவ்வுலகிற்கும்
கிடைத்தது என
இருந்துவிட்டுப் போகட்டுமே!

KANNAA NALAMAA said...

இதிலெந்த மழையாகவும்
இல்லாமல் போனாலுமென்ன
கவிதையெழுதிய
இந்த தினத்தின்
மழையென்று
இருந்துவிட்டுப் போகட்டுமே!".
ஒரு கவிதையும்,
தங்கள் கவிதையால்
ஒரு மழை இவ்வுலகிற்கும்
கிடைத்தது என
இருந்துவிட்டுப் போகட்டுமே!

KANNAA NALAMAA said...

இதிலெந்த மழையாகவும்
இல்லாமல் போனாலுமென்ன
கவிதையெழுதிய
இந்த தினத்தின்
மழையென்று
இருந்துவிட்டுப் போகட்டுமே!".
ஒரு கவிதையும்,
தங்கள் கவிதையால்
ஒரு மழை இவ்வுலகிற்கும்
கிடைத்தது என
இருந்துவிட்டுப் போகட்டுமே!

ராமலக்ஷ்மி said...

அருமை.

karthik karthik said...

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

Sakthivel Ramasamy said...

அருமை.

lakshmi indiran said...

"எந்தமழையாக"......
இந்த ஒற்றைஎழுத்தே கவிதை போல் தான் இருக்கிறது...மழைகாதல்- இதம்...