மொழியென்பதை...அழையா விருந்தாளியாய்
அப்போதுதான் பெய்தோய்ந்த
ஒரு பெருமழையின்
தூறல் பொழுதில்
வந்து நின்றாய்

மின்னலொன்று மிதந்ததை
என் விழிகளுக்குள்
நீ கண்டிருக்கலாம்

யோசிக்கப் பொறுமையில்லை
உரசியணைக்கத் தோன்றவில்லை
உரையாடச் சொற்களில்லை

விளைந்து கிடந்த
வெறுமையறுக்க
மூண்டது யுத்தமொன்று

ஒரேயொரு முத்தம்
அதனுள் ஓராயிரம்
சிறு முத்தங்கள்

கடந்து போனவர்கள்
காதலென்று
முனகிப்போக

உதிர்ந்த இலையொன்று
பிரிவின் பெருவலியெனக்
நெகிழ்ந்து தவழ

ஒளிந்து கண்டவர்கள்
காமத்தின் பித்தென
பெருமூச்சு விட

யுத்த முரசெனவும்
வெற்றிச் சங்கெனவும்
ஒலித்தபடி முத்தச் சத்தம்

எந்த முத்தத்தில்தான்
இவரறிவார்
முத்தமும் ஒரு மொழியென்பதை!

5 comments:

கிருத்திகாதரன் said...

அருமை ..மொழி அறிந்தவர்கள் மட்டுமே வாசிக்க முடியுமோ..

Mythily kasthuri rengan said...

......................
:)

சே. குமார் said...

அருமை அண்ணா...
முத்தமும் ஒரு மொழி என்பதை அறிந்திருந்தால் இந்த வரிகளின் சுவை அறியலாம்...

பழமைபேசி said...

super good

lakshmi indiran said...

செம...
அதிக ஈர்ப்புசக்தி கொண்ட அன்பின் மொழி அல்லவா முத்தம்....