ரகசியக் கதவின் திறவுகோல்


வாழ்க்கைப் பயணம் எத்தனை பிரியமானதாய், ஆரவாரமானதாய், அழகானதாய் நாம் நினைத்தாலும் கொண்டாடினாலும் அதிலிருக்கும் வலிமையான ரகசியம் அது நோக்கியிருக்கும் புள்ளி மரணம் என்பதுதானே. ஒருவருக்கு மரணம் தவிர்க்க முடியாததும், அறவே பிடிக்காததுமாய் இருப்பதென்பது எத்தனை கடுமையான முரண்.

வாழ்ந்து முடித்து முதிர்ந்து ஒரு பழுத்த இலைபோல் உதிர்வதற்கும். கனியாய் கனிந்து சுவை தருமெனக் காத்திருக்கையில் ஒரு பிஞ்சு சுற்றுப்புறம் கண்டு மிரண்டு தன்னையே உதிர்த்துக் கொல்லும் தற்கொலை எனப்படும் சுயகொலைக்கும் வலி மிகுந்த வித்தியாசமுண்டு.

நான்கைந்து தின இடைவெளிக்குள் தொடர்பற்ற இரண்டு குடும்பங்களில் இரண்டு தற்கொலைகள். மிகமிகக் கொடுமையான விசயம் இறந்தவர்களின் வயது. ஒன்று கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது பெண், மற்றொன்று பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவன்.

இரண்டு மரணங்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஒற்றுமை, இரு குடும்பத்தினராலும் அந்த மரணங்களுக்கு என்னதான் காரணமெனக் கண்டுபிடிக்க இயலவில்லை. துக்கம் விசாரிக்க வந்தவர்களில் 99% பேர் அந்தக் குடும்பத்தினர் தாங்கமுடியாமல் தாங்கும் துக்கத்தைப் பகிர்ந்துகொள்வதைவிட, அந்த மரணங்களுக்கு என்ன காரணம் என்பதை அறிவதிலேயே முனைப்பாய் இருந்தனர். குடும்பத்தினர் துக்கம், வலியுடன் சேர்ந்து மரணங்களின் காரணம் அறியாத பாரத்தையும் சுமந்தனர். காரணங்கள் இல்லாமல் ஏதும் காரியம் நடக்குமா?

நிச்சயமாக அந்தக் குழந்தைகளிடம் தம் மரணங்களுக்கானகாரணம்இருந்திருக்கலாம். அதே சமயம் அந்தக்காரணம்வாழ்வை முடித்துக் கொள்ளக்கூடிய அளவிலான காரணம்தானா என்பதைக்கூட இப்போதை சமூகச் சூழலில் அவர்களால் தீர்மானிக்க முடியுமா எனப் புரியவில்லை. சமூகச் சூழல் எனப் பொதுப்படுத்தபடும் சொல்லின் அர்த்தம் பழியைத் தூக்கி எதன்மேலோ போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்வதில்லை. அந்தத் தளிர்களுக்கு சமூகச் சூழல் என்பது என்னவாக இருந்துவிடப்போகிறது. அவர்களின் உலகம் சிறியதுதானே. இனிதானே பரந்துவிரிய வேண்டும். அப்பா அம்மா, சகோதர உறவுகள், சுற்றம், ஆசிரியர்கள், நட்புகள், காதல், பிடித்தவை பிடிக்காதவை என மிகச் சிறியதுதானே.

எந்த ஒரு குழந்தையும் இவர்களுக்கே பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்றோ, என்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குங்கள் என்றோ பிறப்பதில்லை. பெற்றோர்களாகிய நம் காதலின் பிரியத்திற்கு, காம வேட்கைக்கு, உடல் தினவிற்கு, பாதுகாப்புத் தேவைக்கு, அங்கம்பக்கத்து அங்கீகாரத்திற்கு, சொத்து வாரிசுக்கு எனப்படும் பற்பல காரணங்களாலேயே பிறந்திருக்கலாம். அப்படிப் பிறந்த குழந்தைகளைத்தான், நம் பெருமை மற்றும் ஆசைக்குவளர்க்கிறோம் என்ற பெயரில் வளைக்கிறோம்”. நாம் வளர்க்கும் குழந்தைகளோடு அந்தக் குழந்தைகளின் உலகில் நம்மால் வாழமுடிகிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

நாம் குழந்தைகளாக இருந்த காலம் வேறு, இந்தக் காலம் வேறு. அடிப்படை வேறுபாடு, நாம் குழந்தைகளாக இருந்த காலத்தில் நம் அன்றாட வாழ்க்கையை நாம் வாழ்ந்தோம். நல்லது கெட்டதுகளில் நமக்கும் பங்கிருந்தது. அப்பா அம்மா தாம் வாழும் வாழ்க்கையை மட்டுமே நமக்கும் வாழப் பணித்தார்கள். அவர்களின் சுகதுக்கங்கள் நமக்கும் புரிந்திருந்தன அல்லது புரிய வைக்கப்பட்டிருந்தன. ஆரம்பம் முதலே முறையான வாய்ப்புகளும், கண்டிப்பும் நம்மை வழி நடத்தின
இன்றைக்கு நாம் வாழ்ந்த, வாழும் வாழ்க்கையைக் குழந்தைகளுக்கு வாழக் கொடுக்கக் கூடாது என்பதுதான் முதல் வெற்றியாகப் பாவிக்கப்படுகிறது. இதுவரை நாம் வாழ்ந்திராத வாழ்க்கையைப் பிள்ளைகளுக்கு வாழக் கொடுப்பதுதான் அன்பு என நினைக்கின்றோம். தாம் விரும்பியது, கேட்டது எல்லாம் மிக எளிதாகக் கிடைத்துவிடுமென அவர்களுக்கு நாம் உணர்த்துவதுதான் அவர்கள் மேல் நாம் ஏவிவிடும் முதல் வன்முறை.

அவசரம் எனும் அடுப்புக்குள் நம்மைப் புகுத்திக்கொண்டு எப்போதும் அதன் சூட்டோடு இருக்கப் பழகிக்கொண்டோம். அந்தச் சூடு பொறுக்காமல் உள்ளுக்குள்ளேயே ஓடோடிக் கொண்டும் இருக்கின்றோம். நம்முடைய இன்மையைக் காசு சரிசெய்து நிரப்பிவிடுமெனச் சந்தேகமும் தீர்க்கமும் கலந்து நம்புகிறோம் .

எல்லாமும் கிடைக்க, காசு மட்டுமே போதும், எனவே காசு சம்பாதிக்க ஓடு என்ற பொது மனநிலைக்குப் பிள்ளைகளை வெகு வேகமாக ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் தட்டில் விழுந்து பசியாற்றும் சோற்றில் இருக்கும் சோற்றுப் பருக்கையின் வளர்ப்பையும், வரலாற்றையும் பிள்ளைகளுக்குப் படிப்பிக்காமல் வேறு என்னத்தை வாழ்க்கையில் கற்றுக் கொடுத்து விடப்போகிறோம். ஒரு சோற்றுப்பருக்கை எப்படி வருமெனக் கேட்டால் குக்கரிலிருந்து வருமென்பதே அவர்களின் அறிதலாயிருப்பது போதுமானதாயிருக்கின்றது. இங்கு சோற்றுப்பருக்கை என்பது ஒரு உதாரணம் மட்டுமே.


காசு கொடுத்தால் எதையும் வாங்கமுடியும் என்பது மட்டும் புரிந்துவிட்டால் எதையும் எப்படியும் பயன்படுத்தலாம் என்ற மனநிலைக்கு எவரும் வந்துவிடலாம். எதையும் எப்படியும் வீணடிக்கலாம் என்ற தன்மையும் எளிதில் வந்துவிடும். வீணடிப்பது அந்தப் பொருள் மட்டுமல்ல கிடைத்தற்கரிய வளமும் என்பது எத்தனை பேருக்கு புரியச் சாத்தியமுண்டு. காசு இருந்தால் மீண்டும் வாங்கிவிடமுடியும் என்ற மனநிலை வந்துவிட்டால் எதன் மேலும் பற்றற்றுப் போகும் நிலை வந்துவிடும்.


நமக்குக் கிடைக்காத எல்லா நல்லது, கெட்டதுகளுக்கும் கதவு திறந்து வைத்துவிட்டோம். நாம் வாழாத வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து பார்த்துவிட வேண்டுமென்று வாய்ப்பளித்துவிட்டு, ஏதோ ஒரு முடிச்சில் விழித்துக்கொண்டு, அவர்கள் நம்மைப்போல் இல்லையே எனப் பதறுவதும்கூட ஒரு வித வியாதியே. எந்நேரம் பார்த்தாலும் டிவி, வீடியோ கேம்ஸ் என வருத்தப்படும் பெற்றோர்களுக்கு, அந்த டிவி, வீடியோ கேம்ஸை கொடுத்ததே தாங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்வதில் என்னவோ உளச்சிக்கல் இருக்கின்றதென நினைக்கின்றேன்.

எல்லாமும் மடியில் வந்துவிழுந்துவிடும் என்ற வாழ்க்கையைப் பிள்ளைகளுக்குத் தந்துவிட்டு, ஒரு கட்டத்தில் அவர்கள் தேடிச்சென்று எடுக்க வேண்டிய நிலைவரும்போது அதைத் தேடி எடுக்கும் திறனைக் கொடுத்திருக்கிறோமா எனத் தெரியவேண்டும்.

இப்படி நுணுக்கமாய்க் கவனித்துப் பட்டியலிட ஆரம்பித்தால் அது ஒரு முடிவில்லாத் தொடராக மாறிவிடவும் சாத்தியமுண்டு. மிக அவசரமான கேள்வி குழந்தைகளோடு அவர்கள் உலகத்தில் நம்மால் வாழமுடிகிறதா? அவர்கள் உலகத்திற்குள் நுழைவதற்கான திறவுகோலை எங்கேயோ வைத்துவிட்டோம் என்பதைப் புரிந்துகொண்டால்தான் அதைத் தேடியெடுக்க வேண்டும் என்பதை உணரமுடியும்.

நமக்கும் பிள்ளைகளுக்குமிடையே விழுந்து கிடக்கும் ரகசியக்கதவினைத் திறக்க முடியவில்லை என்பதை எப்படிச் சொல்வதென அவர்களுக்குத் தெரியவில்லை. எப்படிச் சொல்லலாம் என்பதை நாம் எப்போதேனும் கற்றுக்கொடுத்திருக்கிறோமா!? அப்படி எதும் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லையே என்பதற்கான தண்டனையாகத்தான் தங்கள் மரணங்களை நம் மடிமீது கிடத்திவிட்டுப் போகிறார்கள். காலப்போக்கில் துடைத்துவிட்டு நடைபோடுவதான நினைக்கலாம், ஆனால் அது அடிவயிற்றியில் கடும் சூடாய் தகித்துக் கொண்டிருக்கிறதென்பதை புரிந்துகொள்ளச் சற்றே அவகாசம் எடுத்துக்கொள்வோம்.

6 comments:

Rathnavel Natarajan said...

எல்லாமும் கிடைக்க, காசு மட்டுமே போதும், எனவே காசு சம்பாதிக்க ஓடு என்ற பொது மனநிலைக்குப் பிள்ளைகளை வெகு வேகமாக ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் தட்டில் விழுந்து பசியாற்றும் சோற்றில் இருக்கும் சோற்றுப் பருக்கையின் வளர்ப்பையும், வரலாற்றையும் பிள்ளைகளுக்குப் படிப்பிக்காமல் வேறு என்னத்தை வாழ்க்கையில் கற்றுக் கொடுத்து விடப்போகிறோம்.= மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் = நன்றி சார் திரு Erode Kathir.

P Raguraman said...

I fully agree with the points mentioned in theis article. very good article

lakshmi prabha said...

Kathir ..great :)

Suresh Kumar said...

தங்கள் பிள்ளைகள் செய்யும் சிறு தவறுகளையும் கண்டிப்புடன் அதட்டாமல் “டேய் உன்னைக்கொல்லபோறேன்பாரு.. இப்ப அடி வாங்கப்போற” என்ற செல்லமான மனதிற்குள்”பார்த்தியா என் பிள்ளை” எனும் பெருமிதம் வழிய போலியாய் திட்டுவது. சக ஊழியர்களிடம் அவன் ஒரு ”வேலையும் செய்யறதில்லீங்க, எல்லாம் நாந்தான் செஞ்சுகொடுக்கனும்” எனறு பீற்றிக்கொள்வது, ஒரு கட்டத்தில் அவள/னது அசட்டைகள் பூதாகரமாக வளர்ந்து நிற்கும் போது சமூகத்தார்களிடம் கூட இல்லை பெற்றொர்களால் கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை! ஒன்று,பாசத்தை தர மறுப்பது அல்லது மொத்தமாக திரட்டிப்பொழிவது இதுதான் நமது தவறு.எந்த இடத்தில் கண்டிப்பு எந்த இடத்தில் அரவணைப்பு இதை எப்போதும் உணர்வதே இல்லை!

Raghavan Kalyanaraman said...

சிந்திக்க வைத்த பதிவு. ஊடகங்களில் தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொண்டு இது போன்ற பயனுள்ள கருத்துக்களை முன்வைக்க எப்போது ஆரம்பிக்கப் போகிறோம்?

lakshmi indiran said...

இங்கு குழந்தைகள் பற்றி பேசுபவர்கள் அதிகம்,ஆனால் குழந்தையோடு குழந்தையாய்{குறைந்தபட்சம் பெற்றோராய்}பேசுவது கூட ரொம்ப குறைவு..அப்புறம் அவர்களை எப்படி புரிந்துகொள்வது? பள்ளி,கல்லூரி,வெளி இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகளை பேசும் இடமாக வீடு கட்டாயம் இருக்கவேண்டும்.அவர்கள் நம்மிடம் மனம் விட்டு பேசும் சூழலை வீட்டில் ஏற்ப்படுத்தாதவரை இந்த பிரச்சனைக்கு முடிவு ஏது?
மனதை கலங்கவைத்த ஒரு எச்சரிக்கைப்பதிவு...