யாரிடம் யார் பாடம் கற்றுக்கொள்ளவது?


கடந்த ஆண்டின் உட்சபட்ச நகைச்சுவையாக நான் உணர்ந்தது, ஆண்டின் இறுதியில் காங்கிரஸ் முதற்கொண்டு கம்யூனிஸ்ட்கள் வரை சொன்ன “ஆம் ஆத்மியைப் பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

இத்தனை ஆண்டுகாலப் பாரம்பரியமும், அனுபவமும் கொண்ட இந்தக் கட்சிகள், இப்போது துவங்கி ஆட்சியைப் பிடித்த ஓர் அரசியல் கட்சியிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்வதை அவர்களின் திறந்த மனது, எளிமை என எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை ”ஆத் ஆத்மி தோல்வி கண்டிருந்தால், இதே வாய் “இந்தா பாரு மச்சி நாங்க யாருனு நெனைச்ச எங்ககிட்டியேவா. முதல்ல அரசியல்னா என்னானு எங்ககிட்ட கத்துக்க எனச் சொல்லியிருக்கும் சாத்தியமுமுண்டு.

பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் சொன்னதின் அதிகபட்ச இலக்கு, அதேபோல் தாமும் செயல்பட்டு விட்டதையோ, இதுவரை எட்டாததையோ அடைந்துவிட வேண்டுமே என்பதைத் தவிர வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில், ’ஆம் ஆத்மி மீது மூத்த அரசியல் கட்சியினரும், சமூக தளங்களில் சிலரும் வைக்கும் அவசர விமர்சனங்கள் ஆச்சரியமளிக்கின்றன. இந்திய ’அரசியல் நிறுவனங்களின் இலக்கணங்களை உடைத்ததே முதற்கண் டெல்லி வாக்காளர்களுக்கு ’ஆத் ஆத்மியைப் பிடிக்கக் காரணமாய் இருந்திருக்கலாம். காமராஜார் தன்னைத் தோற்கடித்து முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த திமுக மீது குறைந்தபட்சம் முதல் ஆறு மாதங்களுக்கு விமர்சனம் வைக்கக்கூடாது எனத் தடுத்த அரசியல் நாகரிகம், இங்கு குறைந்த பட்சம் ஆறு வாரங்களுக்காவது தேவைப்படுகிறது.

மேலோட்டமாகப் பார்க்கையில் ’ஆத் ஆத்மி தனக்கான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதோடு, உடனடியாக ஒரு தேர்தலை மக்கள் மீது திணிக்க, தான் காரணமல்ல என்ற நல்ல(!) பெயரையும் எடுத்துக்கொண்டது. காங்கிரஸின் ஒரு காலோடு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர்களின் நிலைத்தன்மை குறித்து விரைவில் காலம் சான்றிதழ் வழங்கும். அதேசமயம் இந்த தேசத்தின் தலைநகரை சமீபத்தில் ஆரம்பித்த ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பதை வாழ்க்கைக்கான ஒட்டுமொத்தப் பாடமாக அனைவருமே எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் விரும்பியது போல், அவர்கள் பாடம் கற்கவேண்டியது ’ஆம் ஆத்மியிடம் அல்ல, அவர்கள் பாடம் கற்க வேண்டியது வாக்காளர்களிடம் மட்டுமே. அவர்களின் விருப்பத்தை சற்றேறக்குறைய நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு கட்சி தோன்றினால், அவர்கள் அதை எவ்வளவு புதிதாய் இருந்தாலும் ஆதரிக்கத் தவறுவதில்லை என்பதே!

2006 தமிழகத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்ததில் தேர்தல் வாக்குறுதிகளும், அதில் அறிவிக்கப்பட்ட இலவசங்களும் பெரும்பங்காற்றின. அதே தமிழகத்தில் 2011ல் நடந்த தேர்தலில் இரண்டு கட்சியினரும் போட்டிபோட்டுக் கொடுத்த வாக்குறுதிகளும் இலவசங்களும் ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளப்பட்டு, புதிதாய் வாக்குரிமை பெற்ற வாக்காளர்களின் விருப்பப் படியும் தேர்தலின் முடிவுகள் அமைந்தன. ஆனாலும் அரசியல் கட்சிகள் இன்னும் தாங்கள் காலம்காலமாய் மேற்கொண்டதையே தொடர்ந்து செய்தால் போதும் என்று நினைப்பிற்கு, அநேகமாக வரக்கூடிய அடுத்த இரண்டு மூன்று தேர்தல்களில் அடி விழக்கூடும்.

எனக்கு இன்றைக்கும் ஆச்சரியமாக இருப்பது, நகர்புறங்களில் இந்த அரசியல் கட்சியினர் போடும் கூட்டங்கள்தான். 23ம் புலிகேசி அமைத்த சாதி சங்க சண்டை மைதானம் போல், எங்கள் பகுதிதான் அரசியல் கூட்டங்களுக்கான இடமாக அமைந்து தொலைத்திருக்கிறது. காலையில் இருந்தே சாலையை மறித்து, பந்தல் போடப்படும். அந்தக் கட்சியினர் தவிர, வாக்காளர்களாக இருக்கும் எவரொருவரும் அதை மிக நிச்சயமாக விரும்புவதில்லை. ஆனாலும் கூட்டத்திற்கு வரும் ’தலை’க்கு ஏற்ப 100 முதல் 300 நாற்காலிகள் போடப்படும்.

திடீரெனப் பெண்கள் கூட்டம் வரிசையாக வந்து நாற்காலிகளை நிரப்பும். 8 மணி கூட்டத்துக்கு 7 மணிக்கெல்லாம் முக்கால்வாசி சேர்கள் நிரப்பிவிடும். அடுத்த வீதியில் எங்கிருந்தோ அழைத்துவந்து அவர்களை இறக்கிவிட்ட டெம்போ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். நாற்காலிகளை நிரப்பும் தலைக்கு 100 அல்லது 150 என அரசல்புரலாய் கேட்கும். காசை விட்டெறிந்தால் கூட்டம் சேர்த்துவிடலாம் என்பது அரசியல்வாதிகளின் கர்வம், சுமார் 2 மணி நேரம் காதை வாடகைக்கு விட்டு காசை ஈட்டுவது கூட்டத்தில் திரளும் தொண்டர்களின்(!) யுக்தி.

இவர்களின் கூட்டம் என்றால் அவர்களையும், அவர்களின் கூட்டம் என்றால் இவர்களையும் பேச்சாளர்கள் மாறிமாறித் திட்டுவதை இந்தக் கூட்டத்திலும், இதற்கு முந்தைய கூட்டத்திலும் நடுநிலையோடு(!) எந்தச் சலனமுமின்றிக் கேட்பவர்களை, அவ்வப்போது முன் வரிசையில் இருப்போர் கை தட்டுவதற்கேற்ப இசைந்து கை தட்டுபவர்களை வைத்துக்கொண்டு பொதுக்கூட்டம் போட்டு பொது மக்களுக்கு என்ன பாடம் கற்பிக்கிறார்கள் அல்லது அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.

ஆனாலும் அவர்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை ஆழ வேரூன்றியிருக்கிறது. அரசியல் என்பது எப்போதும் அரசியல்வாதிகளின் பொதுச்சொத்து, மக்களின் கடமை எப்போதாவது உணர்ச்சி வயப்படுபவதும், வாக்காளர்களின் கடமை என்பது அப்போது வீசும் அலைக்கேற்ப வாக்களிப்பதும் என்பதாகவே.

அரசியல் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பவர்களுக்கான அரசியலை, யாரோ ஒருவன் 'அவர்களுக்கு எதிராகவே' செய்து கொண்டிருக்கிறான் என்ற புரிதல் மட்டுமே நமக்கு அவசரத் தேவையாக இருக்கின்றது.

-

9 comments:

தினேஷ் பழனிசாமி said...

2014 தேர்தல் கூட்டணியைப் பற்றி அப்படியே ஒரு கட்டுரை எழுதுங்கள். :)

Amudha Murugesan said...

Detailed article! Good one!

mohamed salim said...

ஒரு காலத்தில் அரசியல் பொது கூட்டம் என்றால் அவ்வளவு ஆர்வமாக இருக்கும்!! இப்பொழுது சிந்துவரில்லை

பழமைபேசி said...

//அரசியல் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பவர்களுக்கான அரசியலை, யாரோ ஒருவன் 'அவர்களுக்கு எதிராகவே' செய்து கொண்டிருக்கிறான் என்ற புரிதல் மட்டுமே நமக்கு அவசரத் தேவையாக இருக்கின்றது.//

Yes, indeed!! We need a 21st century leadership again from Erode whose name also begins with Erode!! Cheers!!!

Mythily kasthuri rengan said...

இந்த பதிவை படிக்க எனக்கு அவகாசம் தேவை.BUT இந்தவாரம் விகடனில் வந்த உங்கள் கவிதை அருமை சார்.வாழ்த்துக்கள் .

சே. குமார் said...

அரசியல் கட்டுரை...
தாங்கள் நினைப்பது போல் ஒரு கட்சி வந்தால் தயங்காமல் ஆட்சிப் பீடம் கொடுப்போம் என்பதற்கு டில்லி நல்ல சான்று...

Mythily kasthuri rengan said...

கொட்டிகொடுத்து கூட்டம் சேர்க்கும் அரசியல்வாதிகள்
காதை வாடகைக்கு விடும்
பொதுஜனங்கள்
எனக்கு அரசியல் பிடிக்காது என
ஒதுங்கும் மெட்ரோ வாசிகள்
என பதிவு முழுக்க பகடி !!
விவேகானந்தர் வழியில் சொன்னால்
விழித்தெழு ! இந்த பகிர்வு சமுதாயத்திற்கு சரியான நினைவூட்டல் !

Naveankumar said...

// வாக்காளர்களின் கடமை என்பது அப்போது வீசும் அலைக்கேற்ப வாக்களிப்பது//

Crisp !

Arumugam Murugasamy said...

இனி வரும் காலங்களில்லாவது ஓட்டுக்கு பணம் வாங்கும் (பிச்சைகாரர்கள்) கூட்டம் திருந்தவேண்டும்...