நடந்தாய் வாழி காவேரி

டீ கடையில் ஆடி-18க்குள் மேட்டூர் அணை முழுவதும் நிரம்பிவிடும் என ஒருவரும், நிரம்பவே நிரம்பாது என ஒருவருடம் சூடாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  கிட்டத்தட்ட கிரிக்கெட் போட்டிக்கு நிகராக சூதாட்டப் பந்தயம் கூட வைத்து விளையாடுவார்கள் போல் தோன்றியது.

எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணை 15 அடி மட்டத்திற்கு வறட்சியைச் சந்தித்ததும், வெறும் 35 நாட்களில் 90 அடி உயர்ந்து 105 அடி அளவை எட்டியிருப்பதும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. நினைவு தெரிந்த நாட்களிலிருந்து காவிரி நீர் குறித்த உள்ளூர், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பேச்சுக்களையும், பஞ்சாயத்துகளையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போய் விட்டது. இந்தப் பிரச்சனை எப்போது ஐ.நா. சபைக்குப் போகும் அல்லது தமிழகம் அமெரிக்காவின் உதவியைக் கேட்கும் என்பது மட்டுமே கேள்வியாக இருக்கின்றது.

காவிரிப் பிரச்சனை தீரும் வரை தாடி எடுக்க மாட்டேன் என நடிகர் திலகம் சபதமிட்டதும், இன்றைய முதல்வர் திடீர் உண்ணாவிரதம் இருந்ததுவும், வீரப்பன் மிரட்டியதும் என பழையகால நிகழ்வுகள் அரசல் புரசலாக நினைவில் ஓடுகின்றன.

மேட்டூர் அணை நிரம்ப இந்த முறை கபினியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பெரும் உதவியைச் செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தாமதமாக தன் பங்களிப்பை அளித்த கிருஷ்ணராஜசாகர் அணை கபினியின் பங்களிப்போடு சேர்ந்து ஒரு நாள் மட்டும் 1 லட்சம் கன அடிக்கு மேல் நீரை அளித்து மேட்டூர் அணையின் பசியைத் தற்காலிகமாக ஆற்றியுள்ளன.

கடந்த ஆண்டு வானம் ஒட்டுமொத்தமாய்ப் பொய்த்ததில், காவிரி ஆற்றினை நம்பிய, மேட்டூன் அணையில் வலதுகரை இடதுகரை கால்வாய்களை நம்பிய மனிதர்கள் குடி தண்ணீருக்குப் பட்ட துன்பம் வார்த்தைகளில் சொல்லி மாளாது. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அது தங்கள் மேல் ஏவிவிடப்பட்ட எத்தனை தீவிரமான தாக்குதல் என்று.

நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இருக்கும் கிராமத்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக மூன்று பேரின் ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளில் மட்டுமே குடிப்பதற்கு தண்ணீர் கிட்டியது. அதை வைத்தே மொத்த ஊர் மக்களும், அவர்கள்(ளை) வளர்த்த ஆடுமாடுகளும் உயிரைக் கையில் பிடித்து நாட்களை நகர்த்தினார்கள்.

இந்த ஆண்டு கோடையின் வெம்மை முன்கூட்டியே தணிந்தாலும் மழை இன்றி வெறும் கருமேகங்கள் மட்டுமே சூழ்ந்தது பெரிதாக மக்களுக்கு உதவிடவில்லை. ஜூன் மாத இறுதியில் இந்த வறட்சியை எப்படித் தாங்கப்போகிறோம் என தவித்த மக்கள் ஜூலை மாத இறுதியில் அணை நிரம்புமா நிரம்பாதா என பந்தயம் வைக்கும் நிலைக்கு மாறிவிட்டனர். மாற்றம் நிலையானதுதான். ஆனால் இவ்வளவு வேகமான மாற்றத்திற்கு இயற்கையின் கொடையே காரணம்.

நடுவர் மன்றம், நெய்வேலியில் மின்சாரத்தைத் தடுக்கும் போராட்டம், காவிரி ஆணையம், அரசிதழில் வெளியீடு, மைசூர் கலவரம், கொள்ளேகால் கலவரம், தமிழர்கள் வெளியேற்றம், தமிழக வண்டிகள் தாக்குதல், கர்நாடக வண்டிகள் தாக்குதல் என மனிதன் காலம் காலமாக நியாயத்திற்கும், அநியாயத்திற்கும், அரசியலாகவும், சூதுவாதாகவும் செய்த அனைத்தையும் இயற்கையின் ஒரு மனத் திறப்பு புறந்தள்ளிவிடுகிறது. இத்தனை போராட்டங்களும் தீர்த்து வைக்க முடியாத  பிரச்சனைகளை, முடிச்சுகளை இயற்கை போகிற போக்கில் இந்த முறை தன்போக்கில் தற்காலிகமாக தீர்த்துவிட்டுப் போயிருக்கின்றது.

கர்நாடகத்தின் அக்கிரமமான பிடிவாதத்தைக் கண்டு அடிவயிற்றிலிருந்து கோபம் எழுந்தாலும், இந்த முறை அணையை நிரப்பிய சுமார் 90 அடிக்கான நீரை கர்நாடகாவின் பெரும்பான்மையான காடுகளும், கேரளாவின் காடுகளும் மட்டுமே தந்திருக்கின்றன. அவர்களின் காடுகளில் விழுந்து உரண்டு புரண்டு, அவர்களின் அணைகளையெல்லாம் நிரப்பி, அவர்களின் அரசியில் சூதுகளைக் கண்டு எக்காளமாய்ச் சிரித்து, பெரும் காதலோடு தான் காவிரி ஓடிவந்து மேட்டூர் அணையை நிரப்பியிருக்கின்றாள். இயற்கையின் பெருங்கருணைக்கு முன் மனிதன் ஒரு யாசகன் மட்டுமே .

படம் : பானு ரேகா


மேட்டூர் அணை 60 அடியைத் தாண்டும்போதே, உயிர்த் தண்ணீர் என இடது, வலது கரை கால்வாய்களிலும், ஆற்றிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போதே அனைவரிடமும் ’அணை நூறு அடிகளைத் தாண்டிவிட்டால் இந்தத் தண்ணீர் தொடர்ந்து விடப்படும் எனும் பெரு நம்பிக்கை துளிர்த்து.  நம்பிக்கை வீண்போகவில்லை. அடுத்த சில நாட்களில் அணை நூறு அடிகளைத் தாண்டி, ஆறு, கால்வாய் சார்ந்த விவசாயிகளின் உயிரில் பால் வார்த்துள்ளது. ஆகஸ்ட் 12ல் விவசாயத்திற்கு திறக்கப்படும் என்ற அரசின் முடிவை ஒருநாளில் புரண்டு வந்த வெள்ளம் 10 நாட்கள் முன்கூட்டியே அணையைத் திறக்க வைத்துள்ளது.

ஈரோட்டில் இருபது நாட்களுக்கும் மேலாக, மாநகராட்சிக் குழாயில் வரும் தண்ணீர் சேறு கலந்த நிறத்திலேயே வந்து கொண்டிருக்கிறது. அள்ளும் நீரின் இந்தச் சொட்டு எத்தனை மைல் தொலைவில் விழுந்திருந்திருக்கும்? எந்த மரத்தை நனைத்து வழிந்து விழுந்திருந்திருக்கும்? எந்த வனத்தையெல்லாம் கடந்திருக்கும்? எந்தெந்த தடுப்புகளில் சிறைபிடிக்கப்பட்டு மீறி வந்திருக்கும்? என்னையெட்ட எத்தனை கல் தொலை பயணித்திருந்திருக்கும் எனும் பெருவியப்பு மனதைச் சிலிர்க்கச் செய்கிறது.

நான் அதைச் செய்தேன், நான் மன்றத்தை உருவாக்கப் பாடுபட்டேன், நான் இதைச் செய்தேன், நான் வழக்குத் தொடுத்தேன், நான் அணையைத்திறக்க ஆணையிட்டேன் என அரசியல் தலைகள் மாற்றி மாற்றி ’நான் ராகம் பாடினாலும் ஒருவருக்கும் மேகத்துக்கு ஆணையிட அதிகாரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்த நிலையில் கால்வாய்ப் பாசனம் வழக்கம் போல் மக்களுக்கு பலனளிக்கும். மேட்டூரிலிருந்து ஜேடர்பாளையம் வரை ஆற்றில் மணல் இல்லாததால் காவிரித்தாய் பெரிதாக சீரழிக்கப்படவில்லை.  ஜேடர்பாளையம் வரை விவசாயம் பெரிதாக காவிரியை நம்பியும் இல்லை. அதே சமயம் மின்திட்டத்திற்கான தடுப்பணைகளில் தேங்கும் நீர் இந்தப் பகுதி முழுதும் கடந்த சிலபல ஆண்டுகளாக பெரிதும் கை கொடுத்து வருகின்றன.

ஆனால் ஜேடர்பாளையம் தொடங்கி கரூர், திருச்சி என எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் ஆற்று மணலை அரசும், அதிகாரமும் சேர்த்து சுத்தமாக சுரண்டித் தின்று ஏப்பம் விட்டாகிவிட்டது.

கபினி நிரப்பி, கிருஷ்ணராஜசாகர் நிரப்பி கர்நாடகாவின் சூதுவாதுகளைத் தவிடுபொடியாக்கி, உயிர் துடிக்கத்துடிக்க வறண்டு கிடந்த மேட்டூர் அணையையும் பசியாற்றி, முழுதாய் நிரப்பி, காதலோடு கருவறை நிரப்ப ஓடிவரும் காவிரியைத் தாங்கிட தகுதியற்று மலடாய்க் கிடக்கும் நதியின் வறண்ட தழும்புகள் பார்த்து தன் கடினப் பயணத்தை நினைத்து காவிரித் தாய் காறி உமிழ மாட்டாளா?

எங்கெங்கோ மேகமாய்ச் சேர்ந்து, எங்கெங்கோ பெய்து, எல்லாத் தடைகளையும் தாண்டி ஓடிவரும் நீரை இயற்கையாய்ச் சேமிக்க தகுதியற்ற இந்த சமூகத்தை இன்னும் எத்தனை முறைதான் இயற்கையன்னை பாடம் நடத்தி, புத்தி புகுத்தி திருத்த முயல முயற்சிக்க வேண்டும் எனத் தெரியவில்லை.


-

6 comments:

வீரக்குமார் said...

//காதலோடு கருவறை நிரப்ப ஓடிவரும் காவிரியைத் தாங்கிட தகுதியற்று மலடாய்க் கிடக்கும் நதியின் வறண்ட தழும்புகள் பார்த்து தன் கடினப் பயணத்தை ஒப்பிட்டுப் பார்த்து காவிரித் தாய் காறி உமிழமாட்டாலா..?//........அற்புதமான வரிகள்...கட்டுரை அருமை அண்ணா..

-வீரா

வீரக்குமார் said...

//காதலோடு கருவறை நிரப்ப ஓடிவரும் காவிரியைத் தாங்கிட தகுதியற்று மலடாய்க் கிடக்கும் நதியின் வறண்ட தழும்புகள் பார்த்து தன் கடினப் பயணத்தை ஒப்பிட்டுப் பார்த்து காவிரித் தாய் காறி உமிழமாட்டாலா..?//........அற்புதமான வரிகள்...கட்டுரை அருமை அண்ணா..

-வீரா

Amudha Murugesan said...

//அவர்களின் அணைகளையெல்லாம் நிரப்பி, அவர்களின் அரசியில் சூதுகளைக் கண்டு எக்காளமாய்ச் சிரித்து பெரும் காதலோடு தான் காவிரி ஓடிவந்து மேட்டூர் அணையை நிரப்பியிருக்கின்றாள். இயற்கையின் பெருங்கருணைக்கு முன் மனிதன் ஒரு யாசகன் மட்டுமே //

// இந்தச் சொட்டு எத்தனை மைல் தொலைவில் விழுந்திருந்திருக்கும்? எந்த மரத்தை நனைத்து வழிந்து விழுந்திருந்திருக்கும்? என்னையெட்ட எத்தனைதூரம் கடந்து வந்திருக்கும் எனும் பெருவியப்பு மனதைச் சிலிர்க்கச் செய்கிறது.//

// கர்நாடகாவின் சூதுவாதுகளைத் தவிடுபொடியாக்கி, உயிர் துடிக்கத்துடிக்க வறண்டு கிடந்த மேட்டூர் அணையையும் பசியாற்றி, முழுதாய் நிரப்பி, காதலோடு கருவறை நிரப்ப ஓடிவரும் காவிரியைத் தாங்கிட தகுதியற்று மலடாய்க் கிடக்கும் நதியின் வறண்ட தழும்புகள் பார்த்து தன் கடினப் பயணத்தை ஒப்பிட்டுப் பார்த்து காவிரித் தாய் காறி உமிழமாட்டாலா?//
அருமை!

cheena (சீனா) said...அன்பின் கதிர் - உண்மை நிலையினை அழகாக விவரித்த வதம் நன்று - அத்தனையையும் அலசி ஆராய்ந்து பதிவாக்கியமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கவிக்காயத்ரி said...

வணக்கம் தங்களுடைய வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைப்பார்வையிடவும். வாழ்த்துகள்.
http://blogintamil.blogspot.in/2013/08/6.html

சே. குமார் said...

கபினி நிரப்பி, கிருஷ்ணராஜசாகர் நிரப்பி கர்நாடகாவின் சூதுவாதுகளைத் தவிடுபொடியாக்கி, உயிர் துடிக்கத்துடிக்க வறண்டு கிடந்த மேட்டூர் அணையையும் பசியாற்றி, முழுதாய் நிரப்பி, காதலோடு கருவறை நிரப்ப ஓடிவரும் காவிரியைத் தாங்கிட தகுதியற்று மலடாய்க் கிடக்கும் நதியின் வறண்ட தழும்புகள் பார்த்து தன் கடினப் பயணத்தை நினைத்து காவிரித் தாய் காறி உமிழ மாட்டாளா?

---

அண்ணா உண்மை நிலையை விளக்கும் அற்புதமான படைப்பு இது...
அருமை...