கீச்சுகள் - 37



யோசித்துப் பார்க்கிறேன்அதைச் செய்ததற்கு தீவிரமான, தீர்க்கமான காரணமேதுமில்லை. எதையெனக் கேட்கிறீர்களா? அந்தஅதைபலதிற்கும் பொருந்துமே

*
இன்னிக்கு மழை வருமா வராதா?”னு ரெண்டு பேரு பந்தயம் கட்டிக்கிட்டிருக்காங்க. கிரிக்கெட் மேட்ச் இல்லாட்டி எப்படியெல்லாம் பொழுது போக்குறாங்க!

*



ஒப்பனையில் மினுங்கும் முகங்களைத் தாங்கும் உள்ளங்களுக்குத் தெரியும் உண்மையில் முகம் எப்படியிருந்தது, கலைத்த பின் எப்படியிருக்கும் என்பது!

*

நுனியில் காய்ப்பதை கிளையில், கிளையில் காய்ப்பதை வேரில், வேரில் காய்ப்பதை நுனியில் தேடுகிறவனுக்கு அறிவு மட்டுமல்ல பசியும் குறைவாக இருக்கலாம்

*

விமர்சனம் எழுதனுமேனு பார்க்கவே முடியாத மொக்கைப் படங்களைப் பார்த்து விமர்சனம் எழுதி பலரைக் காப்பாற்றும் தியாகிகள் இருக்கும்வரை உலகம் அழியாது


*

ராத்திரி 12 மணிக்கு ரயில் ஏறி தூங்கப்போற அக்கா எதுக்கு இத்தனை மல்லிகை பூ வெச்சிருக்குனு தெரியல. #ப்ப்ப்ப்ப்பாஆ


*

வாழ்க்கையின் எல்லாப் பிரச்சனைகளையும்(!) தீர்க்கும் ஒரு மூலிகையைத்தான், ஒவ்வொருவரும் ரகசியமாய்த் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


*

பட்டிக்காட்டான் முட்டாய்க்கடைய பார்த்த மாதிரியின் புதுவடிவம்தான், வளைச்சு நெளிச்சு பாதாளச்சாக்கடை தோண்டுற பொக்லைனை வேடிக்கை பார்க்குறது


*

ஸ்ரீகுமரன் தங்கமாளிகை லோக்கல்TV விளம்பரத்தில் காசியில் நின்னு ஒருத்தர்கங்கையைப் போன்று சுத்தமானதுனு சொல்லும்போது சிரிக்காம இருக்கமுடியல


*

மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர்! # மௌனத்தையே ஒட்டுகேட்ட மகா அறிவாளிகள் வாழ்க!


*

புதுசா ஏர்ல பூட்ன மாடு மாதிரி உள்ளே போறதுக்கே IRCTC முரண்டு புடிக்குது, இதுல டிக்கெட் போடுறது, அந்த மாடுகள வெச்சு விவசாயம் பண்ற மாதிரிதான்


*

ஒரு பகலின்மீது தொடுக்கப்படும் வழக்குகள் இரவினால் தீர்க்கப்படுகின்றன அல்லது தள்ளுபடி செய்யப்படுகின்றன!


*

நமக்குப் பிடித்தமாதிரி நடந்துக்கிட்டா நல்லவங்க, பிடிக்காதமாதிரி நடந்துக்கிட்டா கெட்டவங்கஎன்பதுதான் உலகில் அதிகம் வழங்கப்பட்ட தீர்ப்பு


*

காலையில் ரிலீஸாகுற படத்துக்கு அன்னிக்கு மதிய மாலைமலர்லஅரங்கு நிறைந்த காட்சினு விளம்பரம் கொடுக்கிற வித்தைய எங்கதான் கத்துக்கிட்டாங்ளோ!

*

ஒன்றினுள் உழல்தல் பிடித்துப்போன நிலையில், விடுபடுதல் சிரமமாகத்தான் தெரியும்.


*

செல்போன்ல சிக்னல் கிடைக்காதபோது சப்தமாகப் பேசினால், எதிர்முனையில் கேட்கும்ங்கிறதைக் கண்டுபிடிச்சது யாரா இருக்கும்!?


*

அரசு பஸ்களில் ரூ.10க்கு மினரல் வாட்டர்தனியார் பேருந்துகளைவிட அரசுப் பேருந்துகளில் கட்டணம் அதிகம். தனியாரைவிட அரசு தண்ணீர் விலை குறைவு

*

மழை வருவதற்கு சற்று முந்தைய வானம், காதலை உணர்ந்த தருணத்தை நினைவூட்டுகிறது!


*



முகமூடிக்குள்ளும் வியர்வை கூடுதலாய் இருக்கும்

*

பார்வைக்கு அழகாய் இருக்கும் மலர் வாசனையாகவும் இருக்க வேண்டுமென்பதில்லை!


*

விவகாரமான கேள்விகளைத் தயாரிப்பவர்கள் தப்பித்துக்கொள்ள, ”விபரமாக என நினைத்து விவகாரமாக பதில் சொல்வோர்விகாரமாக சிக்கிக் கொள்கின்றனர்.

*

நெடுஞ்சாலை மொள்ளமாறி உணவகங்களில் நிறுத்தி ஓசியில் வயிறுநிரப்ப திராணியற்ற அரசுப்பேருந்து ஓட்டுனர்களுக்கு சொர்க்கத்தில் சிறப்பிடம் உண்டு


*

எதைச் சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல், எதைச் சொன்னாலும் நம்பாததற்கும் ஒரு கூட்டம் இருப்பதுதான் உலகின் விந்தை!


*

எதற்கும் ஒன்றுசேரா இந்தியனை ஒன்றிணைக்கும் முயற்சியே பெட்ரோல் விலை உயர்வு. *உடனே பெட்ரோல் பங்க்ல ஒன்னு கூடீருவாங்க பாருங்க!

*

பரபரப்பாய் ஓடும் மனதிடம்பரபரப்பாய் ஏன் ஓடுகிறாய்என பரபரப்பாய் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

*


சிரிக்கவியலாமல் இறுகியிருக்கும் தருணங்களில் சிரிக்கவைக்கும் வல்லமை கொண்டவனும் தெய்வமே!


*

"மணப்புரம் கோல்டுலோன் இருக்க இனி எதுக்கு டென்சன்" - விக்ரம் # அதை ஏய்யா அத்தனை டென்சனோட சொல்றே. பவுனு விலை எறங்கிடுச்சுனா?


*

சில விசயங்கள் புரிபடாமலே இருப்பதற்கு, அது குறித்தஎதிர்ப்புமனோநிலையும் காரணமாக இருக்கலாம்.


*

24 மணி நேரமும் கரண்ட் இருப்பதை நம்ப முடியாமல், என்னை நானே கிள்ளிப்பார்த்து என் நகமெல்லாம் தேய்ந்துவிட்டது!


*

'போர்' இன்றி அமையாது நீர்! "war/bore"


*

வீட்டைவிட்டு வெளியே சென்றாலும், உள்ளேயே இருந்தாலும் கதவுகளை மூடியே வைத்திருக்கவேண்டும் எனும் பாடத்தைத்தான் நகரம் முதலில் கற்றுத்தருகிறது


*

ஞாயித்துக்கிழம காத்தால அஞ்சே முக்கா மணிக்கு தூக்கம் தெளியற ஃபோபியாக்கு மருந்து கண்டுபுடிச்சேயாவனும்.


*

நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். மூன்று செல்ஃபோன்கள் வைத்திருந்தார். இரண்டு காதுகள்தான் அவரிடமும் இருந்தன.


*

Saving அக்கவுண்ட்ல கட்டின பணம் மாதிரி பொசுக்னு தீர்ந்து போயிடுது ஞாயிற்றுக்கிழமை


*

தலையைவிட வால் தான் அதிகம் ஆடுகிறது!


*

எங்கூர்ல மழைனு யாரும் சொன்னா, அவங்கெல்லாம் அம்மா வயித்தில பிறந்தது போலவும், நம்மை குப்பைத்தொட்டில கண்டெடுத்த மாதிரியும் நினைக்கத் தோணுது


*

கடல் ஓர் உலகம். கடற்கரை ஓர் உலகம். சாலைக்கு அப்பால் இருப்பது ஓர் உலகம். ஒவ்வொரு மனிதனும் ஓர் உலகம். உணர்வதும், நம்புவதும் மட்டும் எளிதல்ல!


*

என்னைச் சுற்றிலும் எவரெவரோ, ஆனால் என்னோடு எவருமில்லை.


*

முதற்கூடல் போலவும், முதிர்ந்த கூடல் போலவும் விதவிதமான அனுபவங்களை கடல் அள்ளித்தருகிறது!


*

யாராக இருந்தாலும், அவர்களிடம் மிச்சமீதியிருக்கும் குழந்தைத் தனத்தை மீட்டுவிடுவதில் கடலலைகளுக்கு சிறப்பான பங்குண்டு

*

கடல் நீரில் கால் நனைக்கும் எல்லோரிடமும் எழும் கத்தல் மகிழ்ச்சியின் குரலா? பயத்தின் மொழியா? அடைந்துகிடக்கும் அழுத்தத்தின் பிரசவமா?


*

குடிப்பதில் தெளிவாக இருப்பதைவிட, குடித்த பாட்டிலை உடைப்பதில் தெளிவாக இருக்கின்றனர் மக்கள்.


*

சில பாடல்கள் மட்டுமல்ல பாடங்களும் நம்மை உலுக்கி விடுகின்றன, ஆட்டுவித்து விடுகின்றன.


*

நனைதலின் வழி மூழ்குவதும் மூழ்குதலின் வழி நனைவதும் வேறுவேறு!


*

மனம்என்றால் எழுத்துத் தன்மையும்மனதுஎன்கையில் சற்றே அந்நியத் தன்மையும்மனசுஎனும்போது நெருங்கின தன்மையும் தோன்றுகிறது.

-

3 comments:

Rathnavel Natarajan said...

அருமை சார்.

Unknown said...

அருமை

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - கீச்சுகள் அனைத்தும் அருமை - மனம் மனது மனசு விளக்கம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா