”மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு - சிவகாசி


ணையத்தில் எழுதத் துவங்கியதின் ஒரு பயனாக சிவகாசி பாரதி இலக்கியச்சங்கமும், ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியும் இணைந்து நடத்திய மூன்றாம் மரபு இலக்கிய மாநாட்டில் பங்கேற்பும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.கடந்த நவம்பரில் ஒருநாள் கவிஞர் திலகபாமா அவர்கள் அழைத்து, இலக்கிய மாநாட்டில் பங்கேற்று ஊடகத் தடங்கள் வகையில் இணைய வலைப்பக்களைப் பயன்படுத்துவது குறித்து உரையாற்ற அழைத்தார். முதலில் நான் அசந்த விசயம் 2013 பிப்ரவரி மாநாட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தேதிகேட்டது. வெறும் 25 நிமிடத்தில் எப்படியாவது வந்து உரையாற்றுங்கள் எனும் நிலையைக் கூட சந்தித்துவிட்டேன். ஆனால் முதன் முதலாக 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு தேதி குறித்த இவர்களின் நீண்ட திட்டமிடலைப் பாராட்டியே தீரவேண்டும்.அதிகாலையில் சிவகாசியை அடைந்து உறங்கிக் கொண்டிருந்த என்னை அழைப்பு மணி மூலம் முதலில் எழுப்பியது கல்கி உதவியாசிரியர் அமிர்தம் சூர்யா. அரைத்தூக்கத்தில் இருந்த என்னை அந்தக் கோலத்தில் எதிர்பாரா சூர்யா முதலில் தடுமாறிவிட்டு “ஒ… நண்பா நீங்களா!?” என மகிழ்ந்து “ஒரு நிமிடம்” என ஓடிச் சென்று இந்த வார கல்கியில் வந்திருக்கும் கவிதைப் பக்கத்தை மடக்கி கல்கி இதழை என்னிடம் அளித்துச் சென்றார்.
சிறப்பாகத் துவங்கிய காலையில் அங்கேயே உணவுண்டு, ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். விழா அரங்கிற்குச் செல்லும்போதுதான் தென்னக மாநிலங்களிலிருந்தும் படைப்பாளிகள் வந்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து வியந்தேன்.


*

முதன்மை விருந்தினர்கள் திரு.மாலன், திரு.பொன்னீலன், திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீ காளீஸ்வரி தாளாளர் அ.பா.செல்வராஜன், கல்லூரி முதல்வர் முனைவர். ச.கண்மணி ஆகியோர் மேடையில் அமர “மூன்றாம் மரபு” இலக்கிய மாநாடு துவங்கியது. தமிழ்தாய் வாழ்த்திற்குப் பிறகு ரவி சுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாரதி பாடல் இனிமையாய் அமைந்தது.

கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் திலகபாமா அவர்கள், இரண்டு நாட்களும் ”படைப்புவெளி,, ஊடகத்தடங்கள், விவாதக்களம், கவிதைச் சிந்தனைகள்” என நான்கு பிரிவுகளில் பங்கெடுக்க வந்திருந்த படைப்பாளிகளான பொன்னீலன், ஓவியர் சந்ரு, காவ்யா சண்முகசுந்தரம், மாலன், தமிழச்சி தங்கபாண்டியன், அமிதர்ம் சூர்யா, சோ.தர்மன், முருகபூபதி, பெருகு ராமகிருஷ்ணா(ஆந்திரா), அன்வர் அலி(கேரளா), வே.எழிலரசு, ரவிசுப்பிரமணியம், முருகபூபதி, டோரதி, இராஜேஸ்வரி, ஆர்த்தி(கர்நாடகா), கிருஷ்ணப்ப்ரியா, வைகைச்செல்வி, மதுமிதா, பத்மஜா, தமிழரசி, உமாராவ் ஆகியோர் படைப்பாளிகள் படம் மற்றும் விபரங்களோடு அரங்கிற்கு அறிமுகப்படுத்தி கௌரவிக்கப்பட்டனர். (இவை என் நினைவில் உள்ள பட்டியல்)


அமிர்தம் சூர்யா அவர்களின் ”வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்” கவிதைத்தொகுப்பை ரவி சுப்ரமணியம் அவர்கள் வெளியிட தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார். வைக செல்வி அவர்களின் Echo of Nature புத்தகத்தை ”காவ்யா” சண்முகசுந்தரம் வெளியிட பெருகு ராமகிருஷ்ணா பெற்றுக்கொண்டார்.கல்லூரி தாளாளர் வாழ்த்துரை வழங்குகையில் தமிழகத்தில் தமிழைப் பயன்படுத்தக்கூட தயங்குகிறோம் எனும் கருத்தை முன்வைத்தார்.அடுத்து வாழ்த்துரை வழங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் உலகத்தில் ஒரு உயர்ந்த மொழியாக தமிழ் பாவிக்கப்பட்டிருந்ததை கோடிட்டுக் காட்டினார். குறுகிய நேரத்தில் மிக நேர்த்தியானதொரு உரையை தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கினார்.மிக யதார்த்தாமான உரையை வழங்கிய பொன்னீலன், எல்லா மொழியும் உயர்ந்ததுதான், தமிழைத் தமிழாகப் பேசுங்கள், ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசுங்கள், ஒன்றை இன்னொன்றோடு கலந்து கொச்சைப்படுத்த வேண்டாம் எனும் கருத்தை அற்புதமாக வழங்கினார்.துவக்கவிழாப் பேருரையாற்ற வந்த மாலன் அவர்கள் மாணவர்களுக்கு குறிப்பெடுக்க ஏதுவாக, உரைக் குறிப்புகளை LCD திரையிலும் அளிக்கும் வகையில் தயாரித்து அளித்தார். மூன்றாம் மரபு பெயர் உருவானதிலிருந்து, மூன்றாம் மரபு குறித்து ஆழமானதொரு உரையை அளித்தவிதம் மிகச் சிறப்புடையதாக இருந்தது.அதைத் தொடர்ந்து ஜெர்மனியிலிருக்கும் சுசீந்திரன் அவர்களோடு SKYPE வழியே கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஈழம் குறித்து போருக்கு பிந்தைய படைப்புகளின் நம்பகத்தன்மை குறித்தும் பலவிதங்களில் கேள்வி விவாதம் என நகர்ந்தது.

அதையடுத்து மதியம் நான்கு அரங்குகளில் பலதரப்பட்ட படைப்புகள் குறித்த விவாதங்கள், கருத்துரையாடகள் நடைபெற்றன.நான் தமிழ் இளங்கலை, முதுகலை மாணவர்களிடம், தங்கள் படைப்புத் திறன்களை உலகம் முழுமைக்கு எளிதில் எடுத்துச் செல்லும் ஊடகமாக வலைப்பக்கம் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது குறித்து உரையாற்றினேன்.நிகழ்ச்சி 05.02.2013 செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. என்னால் ஒரு நாள் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. மாநாட்டின் ஒவ்வொரு நிகழ்வு குறித்த படங்களும், விபரங்களும் மாநாட்டு அமைப்பாளர்கள் மூலம் அறியவரும் என நம்புகிறேன்*ந்த இலக்கிய மாநாட்டின் வெற்றி என்பது ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி நிர்வாகத்தையும் பாரதி இலக்கியச் சங்கத்தைச் சார்ந்த கவிஞர். திலகபாமா அவர்களையுமே சாரும்! குறிப்பாக திலகபாமா அவர்களின் உழைப்பும், அர்பணிப்புத் தன்மையும் கண்டு மனமகிழ்ந்து போனேன். நான்கு மாநிலங்களிலிருந்து இத்தனை பேரை அழைத்து, அனைவரையும் சிறப்புறக் கவனித்து அனுப்ப திறமை வேண்டும் என்பதையும்விட மிக உன்னதமான மனது அவரிடமிருக்கின்றது.மூத்த மற்றும் பலதரப்பட்ட படைப்பாளிகளைச் சந்திக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த நிகழ்வு எனக்கு அமைந்தது.

முதல் நாள் நிகழ்ச்சியின் முடிவில், கழுகுமலைக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் சென்றுவரலாம் என அழைத்துச் சென்றனர். குறைந்த நேரமே இருந்தால் எங்களால் கழுகுமலையில் அதிக நேரம் செலவிடமுடியவில்லை என்றாலும் அங்கு கண்ட வெட்டுவான் குகைக் கோவிலும், அங்கிருக்கும் சமணர் படுகையும் காணத்தகுந்த ஒரு அதிசயம். தொல்லியல் துறையில் பணியாற்றும் ஓவியர் திரு.சந்ரு அவர்களின் நண்பரை அலைபேசி வாயிலாக அழைத்து, வெட்டுவான்கோவில், சமணர் படுகை குறித்து மிக நீண்ட, தெளிவானதொரு விளக்கத்தைக் கேட்டறிந்தோம்.அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கான பயணம், வாகனத்தில் இருந்த ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இருந்த குழந்தைத் தனத்தை வெளிக்கொணர்ந்த தருணம் என்றே சொல்லலாம். குறிப்பாக தாரா முரளி என்ற நாட்டுப்புறக் கலைஞனின் பாட்டும் இசையும், அவரோடு மற்றவர்களும் என வாகனம் முழுக்க குதூகலம் நிரம்பித்தளும்பியது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில், அங்கு அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ரத்தினவேல் நடராஜன் அவர்களோடு சில நிமிடச் சந்திப்புகள் என சிவகாசி திரும்பினோம்.
குறிப்பாக, ஓவியர் சந்ரு அவர்களோடு அதிக நேரம் செலவழித்தாலும், அப்போது அவரை அதிகம் அறிந்திருக்கவில்லை. ஊர் திரும்பி இணையத்தில் அவரின் பேட்டி மற்றும் கட்டுரைகளைப் படித்தபோது இப்படி ஒரு மா கலைஞனுடன் என் நிமிடங்கள் கழிந்ததையறிந்து மனம் பூரித்தது. 

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு இந்த மாநாடும், அதையொட்டி விளைந்த நட்புகளும், புதிய அறிமுகங்களும் என்னை இன்னும் செம்மைப்படுத்திக்கொள்ள முன்னெடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மீண்டும் ஒருமுறை நன்றிகள் திலகபாமா!-


10 comments:

Amudha Murugesan said...

வாழ்த்துக்கள்!

ஓலை said...

Congratulation.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - மூன்றாம் மரபு - இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதற்குப் பாராட்டுகள் - நிகழ்வுகளை அழகாகத் தொகுத்துப் பதிவாக்கியமை நன்று - படங்கள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

kirthi said...

வாழ்த்துக்கள்.

kirthi said...

வாழ்த்துக்கள்.

manjoorraja said...

நான்கு வருடங்களுக்கு முன் இதே போன்று நடத்தப் பட்ட இலக்கிய மாநாட்டில் திலகபாமாவின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டுள்ளேன். இனிமையான அனுபவம்.

தொடர்ந்த அவரது சேவையை பாராட்டியே ஆகவேண்டும்.

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி. அருமையான பதிவு.
இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது நீங்கள் சொல்லித்தான் தெரியும். சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தெரியாது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கதிர் சார்.

Achilles/அக்கிலீஸ் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

Thilagabama Mahendrasekar said...

ஓமஞ்சூர், நினைவை பகிர்ந்தமைக்கு கதிருக்கும் உங்களுக்கும் நன்றிகள்

LIC Kalyan murugan said...

SIVAKASIKKU IPPADI ORU VARA PRASADHAMA, THILAGA BAMA AVARKALAI EVVALAVU PAARATTINALUM THAKUM. TAMILAI MENMELUM VAZHARKKA ENATHU PAARATHUTHALGAL.