அதற்காக மன்னியுங்கள்!

என் மின்னஞ்சல் பெட்டியும் கை பேசியின் குறுந்தகவல் பெட்டியும் பொங்கல் வாழ்த்துகளால் நிறையத் துவங்கிவிட்டன. ஏனோ என்னால் எல்லா ஆண்டுகள் போலவும் வாழ்த்துகளைப் பரிமாற முடியவில்லை.

வீட்டிலிருந்து வரும் வழியெங்கும் பெருமாடி வீடுகளின் முன்வாசல் சரிவு சுண்ணாம்பால் கரை கட்டி, சாண நிறத்தில் மெழுகப்பட்டுக் கொண்டிருந்தது. பலவீடுகளில் நான் கடந்த மதியப் பொழுதில் பாட்டிகள் அந்த வேலையை செய்து கொண்டிருந்தனர். அந்தப் பாட்டிகளைப் பார்க்கும் பொழுதே அவர்களுக்கும் அந்த வீடுகளுக்கும் தொடர்பிருக்காத அந்நியம் தெரிந்தது. இந்த வீட்டு மகராசிகளோ, மகராசன்களோ எப்போது கடைசியாக சாணத்தைத் தொட்டிருப்பார்கள் என்றும் தோன்றியது. முதலில் அவர்கள் வீட்டு வாசலில் மொழுகுவது சாணம்தானா அல்லது மஞ்சகோபியா என்றும் சந்தேகம் வந்தது. நகர்புறத்தில் மருத்துவக் குணம் நிறைந்த சாணத்தின் மகிமை தெரியாத போதும், ஏதோ கடனேயென சாண நிறத்தில் இப்படி பூசிமொழுவது ஒரு சடங்காக இருக்கின்றது.

அலுவலகத்தின் அருகிலிருக்கும் சந்திப்பில், கிராமத்து மனிதர்கள் ஆவாரம் கொத்தும், பூளைப்பூடும் குவித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். காப்புக் கட்டு என்பதும் ஒரு கொண்டாட்டத்திற்குரிய நாள் தான். சிறுவயதில் இருக்கும்போது, அன்று காலையிலேயே யார் யார் எங்கே காப்புக் கட்டுவது என இடம் பிரித்தாகிவிடும் வீடு, கிணறு, மோட்டார் ரூம், கட்டை வண்டி, கட்டுத்தரைப் பந்தல், கலப்பை, வயலின் நான் பக்கம், எதாச்சும் ஒரு தென்னை மரத்துக்கு,  தோட்டத்தின் பக்கத்தில் இருக்கும் மானுவு பூமி கருப்புச்சாமி, மாரியம்மன் கோவில், விநாயகன் கோவில், பொட்டுச்சாமி என பனி படரும் பின்மாலை நேரத்தில் ஓடியோடி கையில் இருக்கும் ஆவாரம் பூ, பூளைப்பூ கட்டினை வைத்துவிட்டு சாமியும் கும்பிட்டு விட்டு ஓடிவரவேண்டும்.

அடுத்த நாள் பொங்கல். பொங்கல் நாளில் எப்போதாவது சூரியனுக்குப் பொங்கல் வைத்ததாய் நியாபகம், மற்றபடி கூடுதுறைக்கோ, குலதெய்வம் கோயிலுக்கோ, கொடுமுடிக்கோ சூழலைப் பொறுத்துச் சென்றுவருவதில் பொங்கல் நாள் கழிந்துவிடும்

ஆஹா… அடுத்த நாள்….. மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கலை நினைக்க போனவருடம் ”ஹேப்பி கவ் பொங்கல் சார்”னு ஒரு வெண்ணை ரொம்ப சீரியசாக வாழ்த்தியதுதான் நினைவுக்கு வருகின்றது. அவன் ஆங்கில மோகத்தில் தீயை வைக்க!

ரொம்ப நாட்கள் எங்கள் வீட்டில் இரண்டு எருதுகள் இருந்தன. கூடவே ஐந்தாறு உருப்படிகள் எருமை கன்று என. மாட்டுப் பொங்கல் அன்று எருது வைத்திருக்கும் கட்டுத்தரைகளில் அவைகளுக்குத்தான் கூடுதல் மரியாதை. வாய்க்காலில் தேய்த்துத் தேய்த்து குளிக்கவைத்து  எருதுகளுக்கு பெயிண்ட்டும், எருமைகளுக்கு காவிக்கல்லும் பூசி, பொங்கல் வைத்து பூசை செய்து கொண்டாடிய காலம் நினைவில் படிந்து கிடக்கிறது.

அடுத்த நாள் கறிநாள்…. பெரும்பாலும் அன்றைக்கென்று பார்த்து ஏதாவது உறவில் கெடாவிருந்து வந்துவிடும்.

இப்படிக் கழிந்த பொங்கல் பொழுதுகள், சமீப ஆண்டுகளில் சாயம் நீர்த்துப்போய் மிக மிக அவசரமான ஒரு விடுமுறை நாட்களாக நகர்ந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொஞ்சம் பரவாயில்லை. திருமணமான காலம் தொட்டு எல்லா விசேசங்களுக்கும் முதலில் மாமியார் வீட்டுக்கு செல்லத் தொடங்கியதால் தீபாவளி, பொங்கல் என பொழுதுகள் அங்கேதான் விடியத் துவங்குகின்றன. அது கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதால் குழந்தைகளும் நிரம்பியிருப்பதால் சில வருடங்களாக நாங்கள் அனைவரும் சேர்ந்து பொங்கலன்று வெண்கலப் பானையில் பொங்கல் வைத்து குதூகலமாய்க் கொண்டாடிவிட்டு மாட்டுப் பொங்களுக்கு எங்கள் தோட்டத்திற்கு ஓடிவிடுவதுண்டு.

மாட்டுப்பொங்கல் மாடுகள் அல்லாத பொங்கலாகவே மாறிப்போய்விட்டன. உழவுக்கு மாடுகள் இல்லாததால் எல்லாம் எருமைப் பொங்கல் என்றே மாறிவிட்டன.

*இதோ இன்று மாலை முதற்கொண்டே எப்போது ஊருக்குக் கிளம்பலாம் என மனைவியும் மகளும் பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். வாரத்தின் முதல் பாதியை பண்டிகை ஆளுமை செய்ய முயல்வதால் முடிக்க வேண்டிய வேலைகள் அழுத்துவதையும் விட, அங்கு போய் என்ன செய்யப்போகிறோம் என்ற சுமையே என்னை இன்னும் கிளம்பவிடாமல் செய்கின்றது.

எங்கள் பகுதி காவியிரின் நேரடிக் கால்தடம் பதியும் பகுதி. காய்ந்து கிடக்கின்றோம். மனிதன் இயற்கைக்கு இழைத்த அநீதிக்காக சிறுதண்டனையாக தன் மடியை இறுக்கிக் கொண்டது மேகம். ஏற்கனவே அவள் தந்தததை, அரசியல் விளையாட்டிலும் அடிபட்டு அடிமையாய்க் கிடக்கிறாள் காவிரி கர்நாடகத்தில். மேட்டூரும், பவானி சாகரும் தாங்களே தாகத்தில் இருக்க, எங்களுக்கு எப்படி தாகம் தீர்க்க நினைப்பார்கள்.

காவிரியில் நீர் வராத வருடங்களை எப்பொதோ சந்தித்ததுண்டு. சமீப ஆண்டுகளில் கண்ணுக்கு எட்டியவரை பசுமை நீண்டு கிடந்த என் ஊரும் தடமும் வறண்டு கிடக்கின்றன. பொங்கல் எனும் வார்த்தையை நினைக்ககூட சங்கடமாகவே இருக்கின்றது. இந்த ஆண்டு வராமலே போயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

எப்போது கிராமத்தில் நுழைந்தாலும் மலர்ந்த முகத்தோடு எதிர்ப்படும் மனிதர்களும், வறண்டு கிடக்கும் முக்கால் வாசி நிலங்களின் வெறுமையும் எதோ ஒரு சோகத்தை மனசு முழுக்க பூசுவதை எப்படித் தவிர்க்கப் போகிறேன்.

பத்து பதினைந்து வருடங்களாக குடும்ப அட்டைக்கு இலவச சேலைகள் கொடுத்து வந்த அரசு இந்த வருடம் அரிசி வெல்லம் கூட 100 ரூபாயும் நொட்டுகிறது.

இலவசமாக கிடைப்பதை ஏன் விடவேண்டும் என்றுதான் இதுகாறும் வாங்கினார்களே தவிர, எவர் ஒருவரும் விரும்பிச் சென்று வாங்கியதாக அறியவில்லை. எங்கள் பகுதிகளில் டோர் சீலை (ஸ்டோர்-ரேசன் கடை) என்றே அதைக் குறிப்பிடுவதுண்டு. எப்போதாவது காட்டு வேலைக்குப் போகும் போதும், மாற்றுச் சீலையாகவும், பந்திவிரிக்கவும், அரிதாக தொட்டில்கட்டவும் அதை ஒரு பண்டாமாகப் பயன்படுத்தினார்களே ஒழிய ஒருபோதும் அதை கலைஞர் சீலை, ஜெயலலிதா சீலை என்று பெருமையாக ஒரு நல்ல இடத்திற்கு உடுத்திக் கொண்டு போனதாக நான் அறிந்ததில்லை.
இதோ இந்த ஆண்டு அதே டோரில் அரிசி வெல்லம் கூட கார்டுக்கு 100 ரூபாய் என மகத்தான புதுமையைப் புகுத்தியுள்ளது அரசாங்கம். கொடுப்பதை ஏன் விடவேண்டுமென எல்லோரும் பெற்று வந்திருப்பார்கள். சில வீடுகளில் அது அன்று மாலையே டாஸ்மாக் மூலம் அரசாங்கத்திற்கே வள்ளல் தன்மையோடு வழங்கப்பட்டிருக்கும். எங்கள் சனத்தில் எத்தனை பேர் அதில் பொங்கல் பொங்கித் தின்று செரிக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

இந்த வருடம் காப்புக்கட்டு மந்தமாகவே நடைபெறும். பொங்கலன்று எங்காச்சும் கோவிலுக்கு போனாலும் போவார்கள் அல்லது இருக்கும் நிலத்தில் கொஞ்சம் மட்டும் கடலையோ, சோளமோ போட்டுவிட்டு இரவு பகலாக கரண்டுக்கு காத்திருந்து காத்திருந்து மோட்டார் போடும் விவசாயிகள் பொங்கலன்று கிடைக்கும் தடையற்ற மின்சாரத்திற்கு கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்.

மாட்டுப் பொங்கலன்று இருக்கும் எருமை மாட்டுக்கு ஏனோதானோவெனப் பூஜை போடும்போதே கரைந்துபோய் கொஞ்சமாய் இருக்கும் வைக்கோல் போர் வயிற்றில் புளியைக் கரைக்கும். சுத்துப்பட்டு எந்தப் பகுதியிலும் நெல் விளைச்சல் இல்லை, தீவனம் காசு கொடுத்துக்கூட வாங்க வழியில்லை எனும் உண்மை மனசுக்குள் உதைக்க அடுத்த வருட பொங்கல் வரைக்கும் இருக்கும் மாடுகன்றுகளை எப்படித் தாட்டுவது எனும் உளப்போராட்டம் இந்த 160 ரூபா பஞ்சப்படியில் தீர்ந்துவிடாது.

காய்ந்த நிலங்களையும், குடிதண்ணீருக்கு மட்டும் மிஞ்சியிருக்கும் கிணற்று நீரையும், தீவனத்திற்கு விடைதெரியாமல் அடுத்த வருடம் கட்டுத்தரைகளில் இதே உருப்படிகள் இருக்குமா என்ற சந்தேகத்தை மடியில் சுமக்கும் எருமை மாடுகளையும் கொண்ட என் கிராம்த்து உறவுகளின்

”என்ன பண்றது, மழையும் இல்ல, வாய்க்காத் தண்ணியும் வரல, இருக்கிற தண்ணிய கட்றதுக்கு கரண்டும் வர்றதில்ல” என ஒலிக்கவிருக்கும் ஜீவனற்ற குரல்களின் மத்தியில் என்னால் நீங்கள் ”ஹேப்பி பொங்கல்” என வண்ணமயமாக விடுக்கும், மின்மடல் குறுந்தகவல்களுக்கு திரும்ப மனதார நன்றி கூறி வாழ்த்துச் சொல்லமுடியவில்லை மனிதர்களே.

அதற்காக மன்னியுங்கள்…


மற்றபடி உங்கள் அனைவருக்கும் உதட்டளவில் ”ஹேப்பி பொங்கல்”


மரபுகளையும் உண்மையான மகிழ்ச்சியையும் வெகுவேகமாகத் தொலைத்த நாம், அவசர அவசரமாய் மாற்றும் தொலைகாட்சிச் சானல்களில் கிடைக்கின்றதான் ஏதாவது சினிமா நட்சத்திரன் மாயாஜாலத்தில் கிடைக்கிறதா எனத் தேடுவதையும் நிறுத்திவிடவேண்டாம்.

----

13 comments:

வானம்பாடிகள் said...

உதட்டளவு வாழ்த்து சொல்லிக்கோங்க. வயித்தளவு பொங்கல் குடுபீங்கல்ல:))

selvishankar said...

//”என்ன பண்றது, மழையும் இல்ல, வாய்க்காத் தண்ணியும் வரல, இருக்கிற தண்ணிய கட்றதுக்கு கரண்டும் வர்றதில்ல” என ஒலிக்கவிருக்கும் ஜீவனற்ற குரல்களின் மத்தியில் என்னால் நீங்கள் ”ஹேப்பி பொங்கல்” என வண்ணமயமாக விடுக்கும், மின்மடல் குறுந்தகவல்களுக்கு திரும்ப மனதார நன்றி கூறி வாழ்த்துச் சொல்லமுடியவில்லை மனிதர்களே.//

அடுத்த ஆண்டு..மனதார பொங்கல் வாழ்த்துச் சொல்லும் சூழல் வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

மனசு கனத்துத்தான் போகுது.

கடவுள் கண்ணைத் திறக்க மாட்டாரான்னுதான் சனம் காத்துருக்கு.

சாமி மழையைக்கொடுத்தாக்கூட கிடைக்கிற தண்ணியை ஆசாமி இல்லெ பங்கு வைக்கமாட்டேன்னு சொல்றான்:(

வெல்லம் அரிசி எல்லாம் சில வருசங்களுக்கு முன்பே கொடுக்க ஆரம்பிச்சதுதானே?இந்த 100 ரூபாதான் புதுசு.

நண்பர் வீட்டில் டோர் சீலையை வாங்கி வீட்டு சன்னல்களுக்கு திரைகளாப் போட்டுருக்காங்க.

shanmugam said...
This comment has been removed by the author.
shanmugam said...

மனதைப் பிசையும் பதிவு. விவசாயத்தை விட எந்த தொழிலும் மேல் என்று கடந்த 50 ஆண்டுகளாக நல்ல மூளைகளையும் இளைஞர்களையும் வெளிநாட்டுக்கும் நகரங்களுக்கும் தாரை வார்த்து விட்டோம். அந்நிய முதலீட்டை ஈர்க்கும் அரசாங்கங்கள் தேர்ந்தெடுத்தோம். அதன் விளைவுகளை இன்று மட்டும் அல்ல வரும் ஆண்டுகளிலும் அனுபவிப்போம்.

sathiyananthan subramaniyan said...

அண்ணா ,
என்னையும் அதற்காக மன்னியுங்கள்!
பதிவை படிக்கும்போது என் கண்ணீர்த்துளிகளை ,
ததுப்பி ததுப்பி உள் இழுத்துக்கொண்டேன் ,
காரணம் இந்த தண்ணீரும் இல்லையென்றால் ,
வருத்தம்கூட வராமல்போய்விடுமோ என்ற பயத்தில் ,
பழகி பழகி பாலாய்போன ஜென்மமாய் நானுமா ?

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி சார்.

Anonymous said...

:(

ஹேமா said...

நினைக்கும் நாட்களாகிறது நம் தினங்கள் எல்லாமே !

krish said...

மிகவும் யதார்த்தமான பதிவு,கிராமங்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

சே. குமார் said...

அருமையான பகிர்வு....
மனசு கனக்கிறது படிக்கும் போது... இருந்தும் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

vmanish Kumar said...

pallasu ellam ninuikuvaruthu