பகிர்தல் (25.04.2012)


 வாசிப்பற்ற வீண் பொழுதுகள் 
 
‘சமீப காலமாய் இணையப் பேய் என்னை ரொம்பவும் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதால், வாங்கி அலமாரியில் அடுக்கிய புத்தகங்களில் சிலந்தி கூடுகட்டத் தொடங்கிவிட்டது. சிலந்தி இழை கண்ணில் மின்னும்போது, நாசூக்காய் விரல்களால் துடைத்தழிப்பது அவ்வப்போது அரங்கேறுவதுண்டு. அலமாரி தட்டுகளில் அடுக்கப்பட்டுக் கிடக்கும் புத்தகங்களின் பாரம் மெல்ல மெல்ல மனதிற்குள்ளும் சேர ஆரம்பித்துவிட்டது. வாசிக்காமல் வடிவாய் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களைக் காணும்போது மெலிதான குற்ற உணர்வு படியத் தொடங்கிவிட்டது. முதலில் மெலிதாய் படர்ந்த குற்ற உணர்வு, மெல்ல மெல்ல அடர்த்தியாகி வருவதைப் பார்த்தால், அது புத்தகங்கள் மீதான ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தி வெறுப்பினைத் திணித்துவிடுமோ என்றும் பயமாக உள்ளது. வாசிப்பைத் தவிர வேறெதிலும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாகவே அறிந்திருந்தாலும், ஏதோ ஒன்று அதை தடுத்தாட் கொள்கிறது. ஆனாலும் அதை உடைத்துத் தகர்த்து, மீண்டும் புத்தகங்களை விரல்களுக்கிடையே திணித்து, பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்திருக்கின்றேன்.

”எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்” எத்தனை முறை உணர்ந்தாலும், உரைப்பதில்லை.

   
 சாதிகள் உள்ளதடி பாப்பா 

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியதில் அதிகப் பயனடைவோர் செய்தித்தாள்கள் என்றே தோன்றுகிறது. தினந்தோறும் குறைந்த பட்சம் அரைப்பக்க அளவிற்காவது, பல உட்பிரிவுகளைக் குறிப்பிட்டு, இவைகளைச் சார்ந்த நீங்கள், உங்கள் சாதியென ‘இதை’ மட்டும் சொல்லுங்கள் எனத் தொடர்ந்து விளம்பரம் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.


சமீபத்தில் செய்தித்தாளில் வந்த ஒரு படத்தைப் பார்த்ததைப் பார்த்து நொந்துபோய் சிரித்தேன். ஒரு சாதி அமைப்பின் விழா. அரங்கில் அந்தச் சாதி சார்ந்த தலைவர்களின் படம் வரிசையாக இருந்தது. அதில் கடைசியாக வைக்கப்பட்டிருந்த படம், ஈழத்தில் போர் நிறுத்தம்கோரி தன்னை மாய்த்துக்கொண்ட “முத்துக்குமார்” படம். உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமாரை தங்கள் சாதி என அடையாளப்படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தை என்ன சொல்ல!?.

 சட்டம் ஒரு இருட்டறை 
சமீபத்தில் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு வந்திருந்த நண்பர், தலைக்கவசத்தோடு வந்திருந்தார். விசாரித்தபோதுதான் தெரிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாம். ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியவேண்டிய அவசியமில்லை. ஈரோடு – பள்ளிபாளையம், பவானி – கொமாரபாளையம் ஆகிய ஊர்களைப் பிரிப்பதே காவிரிதான். ஈரோட்டிலிருப்பவர் எதேச்சையாக பள்ளிபாளையம் சென்றாலோ, பவானியில் இருப்பவர் கொமாரபாளையம் சென்றாலோ தலைக்கவசம் இல்லாது போனால், குற்றமாகக் கருதப்பட்டு, அபராதம் செலுத்த வேண்டும்.அதுவும் பவானிக்கும் கொமாராபாளையத்திற்கும் இடையே வெறும் பாலம் மட்டும்தான் குறுக்கே அமைந்துள்ளது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் சர்வசாதரணமாக வந்துபோவது வாடிக்கை. சில நூறு அடிகள் இந்தப் பக்கம் இருக்கும் பவானியில் குற்றமாக இல்லாத செயல, சில நூறு அடிகளில் இருக்கும் கொமாரபாளையத்தில் குற்றமாக பாவிக்கப்படுகின்றது

ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே சட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்த இயலாத அரசின் கீழ் இருக்கும் மக்கள் பைத்தியம் பிடித்துத்தான் திரியவேண்டும் போல் இருக்கின்றது.

 ரயில் பயணங்களில்  
சென்னையிலிருந்து ஈரோடு வரும் ஏற்காடு விரைவு வண்டியில் இரவு பயணம். என்னுடையது 17ம் எண் கீழ்பக்க படுக்கை இருக்கை. வாட்டும் வெப்ப புழுக்கத்தில் புறப்பட்டத்தில் இருந்து உறக்கமே வரவில்லை. ஒருவழியாக உறங்கலாம் என நினைத்த நேரத்தில், திருவள்ளூரில் வண்டி நிற்க 20ம் எண் படுக்கைக்கு ஒரு புண்ணியவான் வந்து சேர்ந்தார். அரைக்கால் சட்டையும், அலைபேசியுமாக ஏறியவர், தமிழை கடித்துகடித்துத் துப்பியவாறு, யாரிடமோ குடும்பப் பஞ்சாயத்து குறித்து அலைபேசியில் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்தார் என்பதைவிட ஜோலார்பேட்டை வரை முழங்கிக் கொண்டேயிருந்தார்.

”மாப்ள நம்ம சொந்தத்திலேயே சரசு அக்காவுக்குத்தாண்டா வசதியேயில்ல.ஆனாடா, மாப்ள சரசு அக்கா மாதிரி நல்லவங்க யாருமேயில்லடா” யாரோ ஒரு சரசு அக்கா குறித்த வடிவத்தை நான் கேட்காமலேயே என்னுள் திணித்துக்கொண்டிருந்தார்.


ஜோலார்பேட்டை தாண்டியும் முழங்கினாரா எனத் தெரியவில்லை. நான் உறங்கிவிட்டிருந்தேன். திடீரென யாரை காலைச் சுரண்டுவதாய் உணர்ந்து விழித்தபோது, 

“சார் சேலம், நீங்க எறங்கனுமா” என்றார் ஒருவர். திடுக்கிடலிலும் வந்த கோபத்தை அப்படியே மென்றுகொண்டு, இடவலமாய் தலையாட்டி விட்டு படுத்தேன். சரி எதோ ஆர்வத்தில் எழுப்பினாலும் நல்லது செய்யவே நினைத்திருக்கிறார் என்ற சமாதானத்தோடு உறக்கத்தை தொடரும் முன் 20ம் எண் படுக்கையைப் பார்த்தேன். அந்த அரைக்கால் சட்டை ஆள் ஆழ்துயிலில் இருந்தார். பொறாமையாய் கண்ணை மூடினேன்.

மீண்டும் விழித்தபோது ஈரோட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தது. நான் எழுந்து புறப்படும்போது, ஒரு முறை 20ம் எண் படுக்கையைப் பார்த்தேன், ஜோலார்பேட்டை வரை கொலையாய்க் கொன்ன அந்தப் புண்ணியவான் கவிழ்ந்து படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.

“ங்கொக்காமவனே, அப்படியே தூங்கு, வண்டிய ஒதுக்குப்புறமா போடுவாங்க, ராத்திரி யாராச்சும் வந்து எழுப்பட்டும்” என கவுண்டமணி பாணியில் நினைத்துக்கொண்டே நகர்ந்தேன்.

”நல்ல தூக்கத்துல இருக்கும்போது, ஒருத்தர எழுப்புறது பாவமாமே சார்… நிஜமாவா!?”

-0-


8 comments:

வானம்பாடிகள் said...

ஏங்க ஈரோடு வந்துருச்சான்னு ஒவ்வொரு ஸ்டேஷனா எழுப்பி கேட்டிருக்கணும் அந்த பக்கிய:))

ஹரிஹரன் said...

இன்றைக்கு பேஸ்புக்கில் ஒரு சுவரோட்டி வந்தது,அதில் தந்தை பெரியாரை தங்களுடைய சாதித்தலைவர்களில் ஒருவராகப் போட்டிருக்கிறார்கள்! என்ன கொடுமை!

ஸ்ரீராம். said...

நாகரீகம் அறியாத் தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பியும் பயனில்லைதான்! சமீபத்தில் கல்கியில் உங்கள் மாவட்டச் சிறப்பிதழ் வந்த போது உங்கள் பெயர் எங்காவது வருகிறதா என்று தேடினேன்.

ஓலை said...

Thookaththilum athu Erode illainnu nalla suthaarippoda irukkeega. Mmm!

புலவர் சா இராமாநுசம் said...

நீங்கள் செய்தது பாவமல்ல! கோடி
புண்ணியம்!
சொல்லியுள்ள செய்திகள் அனைத்தும் அருமை!

புலவர் சா இராமாநுசம்

arul said...

information about wearing helmet in namakkal district is new

thanks for sharing

வீரத்தமிழ்மகன் said...

interesting to read, but the writer could have avoided the words: 'ngkokka makka...". language is very clear and free flowing. congrats to the author. Usual experience of every one, made into interesting reading...

dhakshana radha said...

அருமையான வார்த்தை