”சுளீர்னு” முதுகுல வுழுந்தபொறவுதான் விருக்குனு முழிச்சுப் பார்த்தேன். சீலையத் தூக்கிச் செருகிட்டு அம்மா நின்னுக்கிட்டிருந்துச்சு, ”ஏண்டி எழுப்பயெழுப்ப என்றி தூக்கம் இப்புடி, இந்தா குண்டால பாலு ஆற வச்சிருக்கேன். சின்னக்கண்ணு எந்திரிச்சா பாட்டல்ல ஊத்திக்குடு”
தூக்கம் தூக்கமா வந்த கண்ணக் கசக்கிட்டு முழிச்சுப் பார்த்தேன், தூக்கு போசி தூக்கிட்டே அம்மா சொன்னா ”அலேய், பொசுப்பா ஒழுங்கா ஊட்லய இரு, அங்கயுமிங்கயும் அவள இழுத்துக்கிட்டு சுத்தாத. எங்யாவது சுத்துனேனு தெரிஞ்சுது, தோலு உறிஞ்சுபோயிருமாமா” படல சாத்திட்டு அம்மா கெளம்பிக்கிட்டிருந்துச்சு.
படல் சாக்கு ஓட்டையில வர்ற வெளிச்சத்துல சின்னக்கண்ணு, போர்வய சுருட்டிக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு சுருண்டு தூங்கறது தெரிஞ்சுது. ஊளமூக்கிக்கு சளி உதட்டுமேல காஞ்சு போயிருந்துச்சு. புசுபுசுன்னு மெதுவா மூச்சுவுடற சத்தம் கேட்டுச்சு. சின்னக்கண்ணு என்ன மாதிரியேதான் கப்புக் கலரு, கண்ணு மொட்டுமொட்டா அழகா இருக்கும். இப்பத்தான் கொஞ்ச நாளாத்தான் ”க்கா க்கா”னு பேச ஆரம்பிச்சிருக்கா, தத்தக்கா பித்தாக்கனு கூடக்கூட ஓடியாந்திக்கிட்டே இருப்பா. சின்னக்கண்ணு அக்கான்னு கூப்பிடறப்பெல்லாம் எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும்.
சின்னக்கண்ணு வவுத்துல இருக்கும் போதெல்லாம், வெடியறதுக்கு முன்னாலயே எழுப்பியுட்டு, அம்மா தர்ற வெறுங்காப்பியில ரவுண்டு பன்ன தொட்டுத் தின்னு முடிச்சவுடனே, தூக்குப்போசி சோத்தோட என்ன தோள்ல வச்சிக்கிட்டு அப்பன் பெரியவூட்டு பண்ணயத்துக்கு தூக்கிட்டுப் போயி வுட்ருவாறு.
பண்ணையத்து ஆடு மாடுகள மலையடிவாரத்துக்கு நானும் கோணக்காலு மல்லிகாக்காவும்தான் ஓட்டிக்கிட்டுப் போவோம். பண்ணையக்காரவூட்ல எஞ்சோட்டுக்கு இருக்குற தர்ஷினி பள்ளிக்கோடம் போறதுக்கு, நாங்க மாடோட்ற சமயத்துலதான் பள்ளிக்கோட வேனு வரும். வேனு வந்துட்டுப்போறப்போ அடிக்கிற பொக வாசம் எனக்கு ரொம்ப புடிக்கும்.
மல்லிகாக்காவ மல்லீக்கானுதான் நான் கூப்புடுவேன். அக்கா ஒருத்திதான் ”புஷ்பா”ன்னு என்ன கூப்புடும், மத்தவிங்க ”பொசுப்பா, பொசுப்பா”ன்னுதான் கூப்புடுவாங்க. அக்கா விந்திவிந்தி மேச்சக்காட்டோரம் இருக்குற பயிறுபச்சையக் கடிக்கப் போற மாடுகள முடுக்குறதுக்கு ஓடுறத பாக்குறப்போ பாவமா இருக்கும்.
மல்லீக்கா பள்ளிகோடம் போனதேயில்லியாம், என்ன ”நீ பள்ளிக்கோடம் போடி புஷ்பா”ன்னு சொல்லிக்கிட்டேயிருக்கும். மத்யான சோத்துக்குக்கு கட்டுத்தரைக்கு ஓட்டியாந்துருவோம், சோறு தின்னுட்டு, அஞ்சாங்கல்லு ஆடுவோம், புளியங்கொட்ட இருந்தா, ஒரு பக்கம் ஒரசி வெள்ளையாக்கி, தாயக்கரம் ஆடுவோம்.
திடீர்னு ஒரு நாள் அம்மாக்கு வலி வந்து ஆஸ்பத்திரிக்கு போயிட்டாங்கன்னு பக்கத்தூட்டு ஆயா சொல்லி, அவுங்கூட்லியே படுக்க வச்சுக்கிச்சு. ரெண்டு நாள் ஆயாவூட்லதான் இருந்துட்டு பண்ணயத்துக்குப் போனேன். மூனாம் நாள் மத்தியானப் பஸ்சுக்கு அம்மாலும் அப்பனும் வந்துருவாங்கன்னு ஆயா சொல்லுச்சு. மாடு மேச்சுட்டு மத்தியானச் சோத்துக்கு வரும்போது அப்பன் வர்றது தெரிஞ்சுது. மூனு நாளா பாக்காத அப்பன பாத்தவுடனே அழுகாச்சி வந்துருச்சு. ஓடிப்போயி கட்டிப்புடிச்சுக்ட்டு அழுததுல தங்கச்சியா, தம்பியான்னு கேக்க மறந்து போயிட்டேன்.
வூட்டுக்குள்ளே நொழையும் போதே அம்மா “அலேய்.. பொஸ்சுப்ப்ப்பான்னு” ஓடியாந்து தூக்கிக்கிச்சு. அம்மா தூக்கவும் எனக்கு திரும்பியும் அழுவாச்சி வந்துருச்சு. அப்பவும் கேக்கல தங்கச்சியா, தம்பிப் பாப்பாவானு. பாப்பாவ பாருன்னு பக்கத்துல கூட்டிக்கிட்டுப் போனப்போத்தான் துணியத்தான் இழுத்துப் பார்த்தேன். அப்போத்தான் தெரிஞ்சுது தங்கச்சின்னு. என்னமோ தெரியல அப்போயிருந்தும் அவ மேல பாசம்னா பாசம்.
அடுத்த நா காத்தால பண்ணையத்துக்கு எழுப்புனப்போ அழுவாச்சி வந்துருச்சு. பாப்பாவ வுட்டுட்டு போக மாட்டேன்னு அழுதேன், செரின்னு அப்பன் வுட்ருச்சு. அப்படியும் ரெண்டு நாள் கழிச்சு அழுவுறப்பயே தூக்கிட்டுப்போயி வுட்டுருச்சு அப்பன். மேச்சக்காடு முழுசும் அழுதுக்கிட்டேயிருந்தேன். மல்லீக்காதான் கண்ணத் தொடச்சு மடிமேல உட்கார வச்சுக்குச்சு. அடுத்த நாளும் அழுதேன், அம்மாதான் ”பாவம் பொசுப்பா, வூட்டலதான் இருக்குட்டுமேனு” சொல்லுச்சு.
எந்நேரமும் சின்னக்கண்ணுகூடவே இருப்பேன். சின்னக்கண்ணு சீக்கிரமே பால்குடிய வுட்டுட்டா, பால்குடிய வுட்ட பொறவு அம்மாளும் பண்ணையத்துக்கு வேலைக்கு போவ ஆரம்பிச்சிருச்சு, பெறகு நான் தான் சின்னக்கண்ணுக்கு காவல்.
ராசகுமாரி மண்ணுல கால் வெக்கிறதுன்னாவே கத்துவா, எங்க போனாலும் ”பொஸ்க்காக்கா… தூத்க்கோ”னு துணியப்புடிச்சு புடிச்சு இழுக்குறா. சின்னக்கண்ணு ”க்கா”ன்னு கூப்பிடறப்பல்லாம், எனக்கு மல்லீக்கா நெனப்பு வந்துரும். தர்ஷினிய பார்த்து ரொம்ப நாளாச்சு. வேனு வந்துட்டுப்போற வாசம் மட்டும் மனசுக்குள்ளே அப்டியே இருக்குது.
தர்ஷினி மாதிரியே சின்னக்கண்ணுக்கு துணி போட்டுப் பாக்கனும். என்னய எப்போ பள்ளிகோடத்துக்கு வுடுவாங்கன்னு தெரியல, கரட்டுப் பக்கம் கல்லொடைக்கப் போற அப்பன் வாங்குற காசு, சந்தச் செலவுக்குத்தான் செரியா இருக்குதாம். அதுனால தர்ஷினி போற பள்ளிக் கோடத்துக்கெல்லாம் போவ முடியாதாம்.
சாவடிப் பள்ளிக்கோடத்துக்குத்தான் போவனுமாம், அடுத்த வையாசி மாசத்துல கொண்டுபோய் வுட்ரலாம்னு அப்பன் சொல்லுச்சு. அம்மாதான் இப்பவே ஒரு வருசம் கூடிப்போச்சு வர்ற வைகாசிலீயே வுட்றலாம்னு சொல்லுச்சு. எனக்கும் எப்படா வையாசி மாசம் வரும்னு ஆசையா இருந்துச்சு. பக்கத்தூட்டு ஆயாகிட்ட கேட்டப்போ, நாலு மாசம் இருக்குதுனு சொல்லுச்சு. ”சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரனும்"னு சாமி கும்பிட்டேன்.
அன்னிக்கொரு நாள், நான் பள்ளிக்கோடம் போயிட்டா, சின்னக்கண்ணுவ அம்மாயி வூட்ல வுடனும்னு அம்மா சொன்னப்போ அழுவாச்சு வந்துருச்சு. பள்ளிக்கோடத்துக்கு சின்னக்கண்ணுவ தூக்கிட்டு போய்க்றேனதுக்கு, அம்மா பள்ளிக்கோடத்துல வுடமாட்டாங்கன்னு திட்டுச்சு.
சின்னக்கண்ணு சிணுங்க ஆரம்பிச்ச சத்தம் கேட்டுச்சு.. ஓடிப்போய் பாட்டல்ல பால ஊத்திக்கொடுத்தேன். ”மொச்சுக்.. மொச்சுக்”னு குடிக்கிற சத்தம் கேட்டுச்சு. மூடுன கண்ணுக்குள்ளே கண்ணுமுழி அசையறது தெரிஞ்சுது. குடிச்சுப்போட்டு பாட்ல பக்கத்துல போட்டப்போ, வவுறு குண்டாத் தெரிஞ்சுது. தூரத்துல எங்கியோ வேனு ஆரன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு, சின்னக் கண்ணு தூக்கத்துல சிரிக்கிற மாதிரி ஒதட்ட சுழிச்சா. தூக்கத்லயும் ஊளமூக்கி அழகாத்தான் இருக்குறா.
மனசுக்குள் சாமி நெனப்பு வந்துச்சு
”சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரக்கூடாது சாமி”
”சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரக்கூடாது சாமி”
____________________
தாமதமான பொறுப்பி: கதையின் இடையே உள்ள குழந்தைகளின் படம் சமீபத்தில் நான் எடுத்தது. அந்தப் படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் கவிதையொன்று மனதுக்குள் துளிர்த்துக் கொண்டேயிருந்தது. கவிதை முழுதாய் வடிவம் பெறாததால் கதையாக முயற்சி செய்தேன். கதைக்கு கிடைக்கும் பாராட்டுகள், ஆர்வமாய் கேமராவை உற்றுப் பார்க்கும் அந்த நான்கு விழிகளுக்கே வாழ்த்துகளாகச் சேர வேண்டும்.
___________
தாமதமான பொறுப்பி: கதையின் இடையே உள்ள குழந்தைகளின் படம் சமீபத்தில் நான் எடுத்தது. அந்தப் படத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் கவிதையொன்று மனதுக்குள் துளிர்த்துக் கொண்டேயிருந்தது. கவிதை முழுதாய் வடிவம் பெறாததால் கதையாக முயற்சி செய்தேன். கதைக்கு கிடைக்கும் பாராட்டுகள், ஆர்வமாய் கேமராவை உற்றுப் பார்க்கும் அந்த நான்கு விழிகளுக்கே வாழ்த்துகளாகச் சேர வேண்டும்.
___________
37 comments:
ஒரு சின்னப் பெண்ணின் ஆசையும், குழப்பமும் அவளின் பார்வையில் அழகாய் வந்திருக்கிறது கதிர். :) படம் மொத்தக் கதைக்கும் வலு சேர்க்கிறது.
hmmm.. arumai
பிரமாதங்க.
ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்த்திருக்கிற விதம் அருமை.
மிக மிக ரசித்தேன்.
Nice
குழந்தை தனக்கேற்றார்போல மாறி மாறிக் கேட்டுக்கொள்ளும் ஆசையை அழகாய் படம்பிடித்திருக்கிறது கதை.
மாப்பு, அந்த படம்?? எழுத்துக்காக படமா? படத்துக்காக எழுத்தா?? பொருந்தி வந்திருக்கு.... படம் ஏதுங்க??
simply amazing Anna...
ரொம்ப தெளிவா அழகா வந்துருக்கு.
ரொம்ப எளிமையா வந்திருக்கு... எழுத்தின் நடை மற்றும் அதன் உயிர்ப்பு கண்ணுக்குள் உயிராய் இறங்கி நெஞ்சத்தில் விம்முகிறது ...
மண் வாசமும் வீசும் அழகான கதை...
வாழ்க்கையோட மகத்துவம் அந்த உறவுலதாங்க இருக்கூ... கள்ளங்கபடமில்லா மனசு...மனசு...
மேடு ஏறவும் முடியாம? கீழ எறங்கவும் முடியாம.... ஒக்காந்து இடுகைகளாப் போடுற பொழப்பு...நம்முளுக்கு??
மனதைத் தொடும் அழகிய சிறுகதை.
சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரக்கூடாது சாமி”//
உண்மை.. வரக் கூடாது..
அருமைங்க. வாழ்வின் நிஜத்தில் நாம் காணத் தவறுவது. வசதியுள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வரப் பிரசாதம் பள்ளிக்கூடம். படிச்சு மேன்மையான வாழ்கையை அடைந்த பிறகு, இன்னும் பலர் இருப்பதை காணாமல் போல் செல்வது. நீங்க நல்லா கண்டுபிடிச்சு எழுதியிருக்கீங்க. உங்கள் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு நல்ல வித்தியாசம் பாக்க முடியுது.
ரொம்ப நல்லா, முடிஞ்சவரை கச்சிதமா பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துகள்.
கதை அருமை கதிர்.
ரேகா ராகவன்.
அருமை கதிரண்ணே.,
ஒரு ரெண்டு மூனு பாரா பின்னூட்டம் அடிக்கலாம்தான்...
இருந்தாலுமே கதய படிச்ச அதே மனநில நல்லாருக்காங்காட்டியும்,
உத்தரவு வாங்கிக்கறேன்.
கதையும் அந்த படமும் அருமையோ அருமை
//ஒரு சின்னப் பெண்ணின் ஆசையும், குழப்பமும் அவளின் பார்வையில் அழகாய் வந்திருக்கிறது கதிர். :) படம் மொத்தக் கதைக்கும் வலு சேர்க்கிறது.//
Repeat Ayya...
தலைப்புக்கு என்ன அர்த்தம்? :)
படம் ரொம்ப பொருத்தமா இருக்கு.. child labour :((
நன்றி @@ வானம்பாடிகள்
நன்றி @@ இயற்கை ராஜி
நன்றி @@ அன்பரசன்
நன்றி @@ T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி @@ ஹேமா
நன்றி @@ பழமைபேசி
மாப்பு படம் நான் எடுத்தது. படத்துக்கான கதையே
நன்றி @@ அகல்விளக்கு
நன்றி @@ ஜோதிஜி
நன்றி @@ கே.ஆர்.பி.செந்தில்
நன்றி @@ இரா. செல்வராசு
நன்றி @@ ராமலக்ஷ்மி
நன்றி @@ தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி @@ Sethu
நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி @@ KALYANARAMAN RAGHAVAN
நன்றி @@ கும்க்கி
நன்றி @@ Mahi_Granny
நன்றி @@ சே.குமார்
நன்றி @@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
சந்தனா,
சளிவடியும் மூக்கை ஊளமூக்கு என்றழைப்பது வழக்கம், ஊளை என்றால் கெட்டுப்போன என்று அர்த்தம். கெட்டுப்போன முட்டையை ஊளமொட்டு என்பது வட்டாரவழக்கு.
பெண் என்பதால் ஊளமூக்கி, ஆண் என்றால் ஊளமூக்கன்
கிராமத்து மண்ணின் மணம் உங்கள் எழுத்துக்களில் சுகந்தமாய் வீசுகிறதுங்க......அருமையான கதைங்க......வாழ்த்துக்கள்.
எதார்த்தமாக இருக்கிறது கதிர். நன்று
அருமையா இருக்குண்ணே எழுத்து நடை
ரொம்ப நல்ல வடிவமுங்க இந்த கதைக்கு... அதுவும் கதைச்சொல்லியா அந்த சிறுமியையே வச்சது சிறப்பு. முடிவு இன்னும் என்னன்னமோ செய்கிறது... படமும் ரொம்ப பொருத்தம்..
படமும் கதையும் அழகு....
ரொம்ப நல்லாயிருக்குங்க கதிர்.
கலக்கீட்டீங்க கதிர்.
பொசுப்பா.. கண்ணுக்குள்ளே..
kathir anna,
eppdi na indha madhiri superah eludhareenga....
nalla irukundunga anna.
//மனசுக்குள் சாமி நெனப்பு வந்துச்சு
”சாமி நாலு மாசம் சீக்கிரம் வந்தரக்கூடாது சாமி”//
நெஞ்சை பிடிச்சி அழுத்துது சாமீ..................
வாவ். வாட் எ ஸ்டோரி....
நல்ல கதை. அருமையான படத்தோட விளக்கி எழுதிட்டிங்க.
ஈரோடில் எங்கு இருக்கிங்க. ஈஸ்வரன் கோவில் பக்கமுங்களா, நானும் அங்கிட்டு இருந்தேனுங்க.எனக்கு ரொம்ப பிடித்த ஊருங்க.
http://vijisvegkitchen.blogspot.com/
அருமையான கதை, வட்டார வழக்கில் அருமை. பாதி கதை படிக்கையிலே வீட்டுக்கு போலாம்னு கூட வேலைசெயயறவன் கூபிட்டான், இல்ல நி போ என்னக்கு வேலை இருக்குன்னு சொல்லீட்டு, கதையை படிச்சு இந்த பின்னூட்டம் ...
அருமை கதிர் நாளை வந்து மற்ற பதிவுகளை படிக்கிறேன்.
ஊரின் வழக்கு நான் சுற்றிய சிறு வயதின் வயல்களையும் வாய்க்காலையும் கண்முன் நிறுத்தியது... அருமை போங்க . (எம்பேரே ஊளமூக்கி தான் சின்ன வயசுல..ஹி ஹி )
நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான கதை.
நன்றி ஐயா.
நல்ல முயற்சி!!!வாழ்த்துகள்
ஆனால் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்துதான் படிக்க ஆரம்பித்தேன்
அதை முழுமையாக நிறைவேற்றியதாக எண்ணவில்லை
இந்த கதையில் சற்றுயிறங்கினால் தமிழ்நாட்டில் நிகழும் கொத்தடிமைதனத்தையும்
அம்மக்களின் வறுமையும் காணலாம். பதிவுக்கு நன்றி..........
அன்பின் கதிர் - அந்த நான்கு விழிகள் - படம் தான் கதையின் கருவினை உருவாக்கி இருக்கும். வட்டார வழக்கு - மழலைச் சொல் - பொசுப்பா - கதை சொல்லும் விதம் நன்று. நான்குமாதம் சீக்கிரம் வர வேண்டும என்ற எண்ணம் சடாரெனு வந்து விடக் கூடாதே என்று மாறுகிறது. பள்ளி வேனின் ஹாரன் சத்தம் கேட்டு தூக்கத்திலும் ஊளமூக்கி உதட்டினைச் சுழித்து சிரிக்கும் சிரிப்பு எண்னத்தினை மாற்றியது. மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment