தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) நடத்தும் கலை இரவுகள் பற்றிக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அதுவும், திருப்பரங்குன்றத்தில் விடிய விடிய நடக்கும் கலை இரவு குறித்து நண்பர்கள் சிலாகித்துப் பேசும் போது, அந் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தீராமல் மனதில் கனமாய் கிடந்து வந்தது.
ஈரோட்டில் தமுஎகச-வின் கலை இரவு குறித்த அறிவிப்பைப் பார்த்தபோது மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. கலைஇரவு நிகழ்ச்சியில் இயக்குனர் சிம்புதேவனுக்கு பாராட்டு விழா, வில்லிசை, உரைவீச்சு, புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சியென பட்டியல் ஈர்ப்பு மிகுந்ததாகவே இருந்தது.
நிகழ்ச்சிக்கு வழக்கம் போல் தாமதமாகவே சென்ற போது சாத்தூர் லட்சுமணப் பெருமாள் அவர்களின் வில்லிசை நிறைவடைந்திருந்தது.
அடுத்ததாக திரு. நந்தலால உரை நிகழ்த்தினார். மிகச் செறிவான உரை. ஒரு சிறு தடுமாற்றம் கூட இல்லாமல், ஒரேயொரு ஆங்கில வார்த்தைகூட கலப்பில்லாமல் மிக நேர்த்தியாக, மிகச் செறிவாக பாரதியின் நினைவு தினத்தையொட்டி பாரதி குறித்த பல தகவல்களோடு அருவி போல் வார்த்தைகள் கொட்டித் தெறித்தது.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிம்புதேவன் குறித்த பாராட்டு உரை சிறிதும் ஆர்பாட்டம் இல்லாமல், அறிவார்ந்த, நிதானமான, தற்காலத் திரையுலகத்தின் போக்கினையொட்டி ஒட்டியதாக இருந்தது. சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சிகளை மிக நேர்த்தியாக பாராட்டினார். சமகாலத்தில் நடக்கும் அவலங்களை நையாண்டியாக சிம்புதேவன் சுட்டிய காட்சிகளை பாராட்டிப் பேசினார்.
பாராட்டிற்கு ஏற்புரை நிகழ்த்திய சிம்புதேவன் குறிப்பாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் எடுக்க தனக்குத் தேவையாக இருந்த காரணங்களில் முக்கியமாக சின்ன வயதில் படித்த காமிக்ஸ் கதைகளும், கௌபாய் படங்கள் தமிழில் அதிகம் வராததுமே என்றார். மிக எளிமையாக சக மனிதனிடம் உரையாடுவது போன்றிருந்தது சிம்புதேவன் அவர்களின் உரை.
தொடர்ந்து இசையும் பாடல்களும் என கருணாநிதி மற்றும் திருவுடையான் ஆகியோர் கூட்டத்தை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருவுடையான் அவர்களின் குரலும் நயமும் இன்னும் காதுகளின் ஓரத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
ஒரு வழியாக புதுகை பூபாளம் குழு பிரகதீஸ்வரனிடம் மேடை ஒப்படைக்கும் போது நேரம் இரவு 11.55 மணி. அதுவரை மேடைக்கு பக்கவாட்டில் ஒரு வீட்டு வாசலின் சுவரோரம் கிடந்த கல்லின் மேல் ”இந்தப் பூனையும் பால் குடிக்குமா” என்பது போல் சாதாரண பார்வையாளன் போல் அமர்ந்திருந்தார்.
மேடை ஏறிய விநாடி தொட்டு களை கட்ட ஆரம்பித்தது நிகழ்ச்சி. இதுவரை பார்த்திராத, கேட்டிராத நையாண்டி வெள்ளமாய் பெருக்கெடுத்தோடியது. இடைவிடாமல் நையாண்டியில் இப்படி அடித்து நகர்த்த முடியுமா என்ற ஆச்சர்யமே மேலோங்கியிருந்தது. உடன் பங்கேற்ற செந்திலும் சளைக்காமல் பங்கெடுத்தார். நிகழ்ச்சி நிறைவடைந்த போது, அதற்குள் நிறைவடைந்துவிட்டதே என்றுதான் தோன்றியது.
கிட்டத்தட்ட நூறு நிமிட நிகழ்ச்சியில் குறைந்தது நான் நூற்றைம்பது முறையாவது சிரித்திருப்பேன் என நினைக்கிறேன். அதே நூறு நிமிடத்தில் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப நினைத்து, முன்னூறு தடவைக்கு மேல் எனக்குப் பின்னால் ஒரு நடுத்தரவயது பெண்மணி இடைவிடாமல் சிரித்துக் கொண்டேயிருந்தார். சிரித்ததோடு மட்டுமல்லாமல் பக்கத்தில் இருந்த கணவரை தொடையில் ஓங்கி அடித்து அடித்து சிரித்தார், அவரும் வலிதாங்காமல் மனைவியை திட்டிக்கொண்டு, கூடவே சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் அதிகபட்சம், அதிக நேரம் சிரிக்க வைத்த பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு நன்றிகளை கட்டாயம் பதிவு செய்யவேண்டும்.
முக்கியமான செய்தி நிகழ்ச்சியின் போது நீண்ட நேரம் பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.
________________________
29 comments:
அன்பின் கதிர்
சிரிச்சு சிரிச்சு பக்கத்துல உள்ளவங்க எல்லாரையும் சிரிக்க வச்சு .......
நல்லாருக்கு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நல்லா சிரிச்சு மகிழ்ந்திருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றி.. காணொலியும் கொடுத்தீருதீங்கன்னா இன்னும நல்லா இருந்திருக்கும் :)
திருப்பரங்குன்றம் கலை இரவுக்கு தனிச்சிறப்புண்டு. கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல மக்கள் கூடுவார்கள்.
அடடா, நேரில் வந்து கலந்து கொண்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள், கதிர். நன்றி, வாழ்த்துக்கள்.
மூச்சுகோட விடாம சைலண்டா போய் சத்தமா சிரிச்சுட்டு வந்து பதிவு போடறீங்களா... ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்..இருக்கட்டும்
எத்தனையோ இரவுகள், இப்படி ரசித்து உள்வாங்கிக் கழித்திருக்கிறேன். நினைவுகளை மீட்டியதற்கு நன்றி கதிர்!
@@ இயற்கை ராஜி
நமது ஈரோடு குழுமத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிட நினைத்தோம், தவிர்க்க இயலாத காரணத்தால் தவறிவிட்டது.
பதிவர்கள் பாலாசி, ஆரூரன் ஆகியோர் வந்திருந்தனர்.
முக்கியமான செய்தி நிகழ்ச்சியின் போது நீண்ட நேரம் பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.
முக்கியமான செய்தி நிகழ்ச்சியின் போது நீண்ட நேரம் பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.
......சிரிப்பு மழையில், எல்லோரும் நனைந்து ஆனந்தித்தது தெரிகிறது...
/பொசுபொசுவென துளிர்த்துக் கொண்டிருந்த மழையை சிரிப்பலையில் யாரும் மதித்ததாகவே தெரியவில்லை./
இது கலப்படமில்லாத அப்பட்டமான பொய். அப்புறம் வந்து ஜுரத்துல படுத்து இன்னைய வரைக்கும் மூக்கால பேசுறது மதிக்காமலா:)). ஹி ஹி. பகிர்வுக்கு நன்றி (டெம்ப்ளேட் அல்ல)
உண்மையில் மறக்கமுடியாத இரவுங்க... ரொம்ப நாளைக்கு அப்பறம் கண்ணுல தண்ணீர் வர வாய்விட்டு சிரிச்சேன்..நான் கூட்டியாந்த நண்பர் கூட சொன்னாரு, ‘நீ கூட்டியாந்ததுலேயே இதுதான்யா நல்ல நிகழ்ச்சி‘ன்னு...
பெய்தது மழையல்ல... நகை‘தேன்’...
//பகிர்வுக்கு நன்றி (டெம்ப்ளேட் அல்ல)//
”டெம்ப்ளேட் அல்ல” எனச் சொல்வதும் டெம்ப்ளேட் ஆகிவருதோ?? இஃகிஃகி!!!
lucky man...
அடடா,ஈரோட்லயே இருந்துக்கிட்டு எனக்கு தெரியாம போச்சே,சோ வாட்?அதான் நீங்க பதிவு சூப்பராபோட்டு கலந்துக்கிட்ட உணர்வை ஏற்படுத்தீட்டீங்களே
வாய்விட்டு சிரித்தல் இனிய மருந்து. பகிர்வுக்கு நன்றி.
அட்டகாசமா நிகழ்வுல கலந்துக்கிட்டு இருக்கீங்க கதிர்.. பகிர்வுக்கு நன்றி..
இப்படியெல்லாம் கேள்விபட்டது கூடஇல்லை. உங்கள் மூலம் நானும் கலை இரவை ரசித்தேன். என்ன , உங்களால் ரசித்து சிரிக்க முடிந்தது. பகிர்வு அருமை.
அருமையாய் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அதிலும் சிரித்து மகிழ்ந்திருந்த தருணத்தை பகிர்ந்த விதம் ரசனை:)!
ஒரு முறை பார்த்து ரசித்திருக்கிறேன்!
இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கலை நிகழ்ச்சி.
சுவையான பதிவு!
படங்கள் கலந்துகொண்ட தோற்றத்தை கொடுக்கின்றன். .. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வுங்க கதிர்...
ம்ம்.. வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கெல்லாம் தான் இந்த கொடுப்பினை இல்லை.
நல்ல பகிர்வு கதிர். நன்றி!
பகிர்வுக்கு நன்றி கதிர்...
கொடுத்து வெச்சவிய்ங்க நேர்ல
அனுபவிச்சீங்க. பதிவு வெச்ச நாங்க படிச்சி அனுபவிச்சிக்கிறோம்.
//புதுகை பூபாளம் குழு பிரகதீஸ்வரன் குழு//
சமீபத்தில் சிங்கப்பூரிலும் வந்து கலக்கினார்கள்.முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம், இரவு 10 மணிக்குமேல் இங்கே (எந்தவொரு மக்கள் அதிகமாக கூடும்) நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை.சட்டம் அப்படி.
தமுஎச'வின் கலை இரவு மிகச் சுவாரசியமான, அழகான ஒன்று. சென்னையில் ஒருமுறை கண்டிருக்கிறேன்.
பகிர்வு சிறப்பு.
இடையில் நிகழ்ச்சியை முடக்க முயற்சித்த காவல்துறை நண்பர்களை ஒரு பிடி பிடித்தாரே பிரகதீஸ்வரன், அதையும் பதிவு செய்திருந்தீர்களென்றால் இப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பெரும்பாலான ... இல்லை... கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலும் நேர்மறை பார்வையுடன் கூடிய சிந்தனையைப் பார்க்கிறேன். தாராளமாக, பாராட்டுகளை அள்ளி வழங்குவதற்கு உரிய நல்ல மனம் இருக்கிறது. கூடுதலாக, அதற்குரிய தகுதியும் கொட்டிக் கிடக்கிறது! வாழ்த்துகள்! ( எங்களுக்கும் நல்ல மனசு இருக்குல :P )
Post a Comment