சிலுசிலுவென காற்று விசிறியடிக்கும், நகரமே களைத்து உறங்க முற்படும், நடுநிசிக்கும் கொஞ்சம் முந்திய நேரம். யாருக்கென்று தெரியாமல் விளக்குகள் வெளிச்சத்தைக் கொட்டி இருளைத் தின்று கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து கவனிக்கும் போதே தெரிந்தது, நடு சாலையில் மூட்டை போல் ஒன்று கிடப்பது. நெருங்க நெருங்க வடிவம் பிடிபட்டது.
பின்னங்கால்களை வயிற்றுக்குள் அடக்கி, முன்னங்கால்களை சற்றே முன் பக்கம் நீட்டி மிக அழகாய் ஒரு சிற்பம் போல் நாய் ஒன்று படுத்திருந்தது. நட்ட நடுச் சாலை, எந்த வித மனிதத் தொந்தரவும் இல்லாமல், தார் சாலை பகல் முழுதும் உள்வாங்கி துகள்துகளாய் கசியவிடும் வெதுவெதுப்பை நெஞ்சு, வயிறு என உள்வாங்கி, காற்று கொண்டு வரும் குளிரை கரைத்துக் கொண்டிருந்தது.
பகலில் பரபரக்கும் சாலை இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது. நாயும் சலனமற்று ஆழ்ந்த அமைதியோடு அந்த நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. வழக்கமாய் மனித நடமாட்டத்தை உணர்ந்து, கொஞ்சம் திரும்பியாவது பார்த்து, குறைந்த பட்சம் “லொல்” என்று ஒரு முறையாவது குரைக்க முயலும் இயல்பு கொண்ட நாய் அமைதியை மட்டுமே கடைப்பிடித்தது.
காலம் காலமாய் நாய்களைக் கடந்து போனவனுக்கு, நடுச் சாலையில் திவ்யமாய் படுத்துக் கிடக்கும் நாயைப் பார்க்க ஆவல் கூடியது. கடக்கும் வேகத்தை முற்றிலும் குறைத்து, பக்க வாட்டில் நின்று கவனிக்க, வயிற்றில் மட்டும் மூச்சை உள்ளிழுத்து விடும் வேகத்திற்கேற்ப மெலிதான அசைவுகள் இருப்பது தெரிந்தது. சாலை மீது பரப்பி வைத்திருந்த மூக்கின் அருகே இருந்த தூசிகள் மட்டும் மெலிதாய் பறந்து பறந்து அடங்குவது வீதி விளக்கின் வெளிச்சத்தில் நிழலாய்த் தெரிந்தது.
விநாடிக்கு விநாடி இதுவா, அதுவா என்று தடதடத்துக் கொண்டிருக்கும், நிலையில்லாத மனது கொண்ட அவனுக்கு அந்த நாயின் அமைதி கனமான ஆச்சரியமாக இருந்தது. ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த வாழ்க்கைப் பெண்டுலம், ஒரு கணம் “ம்ம்ம்… இந்த நாயாப் பொறந்திருக்கலாமோ!!?” என்று மின்னலாய் நினைக்க வைத்தது.
நாயின் அமைதியை உற்றுக் கவனிக்க முற்படும் போது ஏதோ ஒரு அவசரம் அழுத்திக் கொண்டேயிருந்தது. அழுத்தத்தோடு இம்சையாய் உள்ளுக்குள் எதோ சுழன்று கொண்டிருந்தது. நாயின் மேல் கொண்ட ஆச்சரியம், ஆற்றாமையாய் உருவெடுத்தது. ஆச்சரியம் ஆற்றாமையாய் உருவெடுத்ததை அறிந்திருக்க வாய்ப்பில்லாத நாய் தன்னுடைய உறக்கத்தை சற்றும் தொலைக்கத் தயாரில்லை.
உள்ளுக்குள் உருண்டு கொண்டிருந்த ஆற்றாமை, சட்டென பொறாமையாய் வெடித்தது.
”அடிங்.. என்னா தூக்கம் வேண்டிக்கிடக்கு” அருகில் கிடந்த கல்லையெடுத்து ஓங்கி அடித்தான்.
”க்க்கைக்கை” எனக் கத்திக்கொண்டே விலுக்கென எழுந்த நாய் சிதறியோடி, திரும்பிப் பார்த்தது.
தலையை உதறிக்கொண்டது. திரும்பிப் பார்க்கும் நாயைப் பார்த்து தொலைவிலிருந்தே மீண்டும் கையை ஓங்கினான்.
வாலை கால்களுக்குள் உள்ளடக்கிக்கொண்டு, மீண்டும் ஓட எத்தனித்த போது, நாய் நினைத்தது “ம்ம்ம் மனுசனாப் பொறந்திருக்கலாமோ!!??”
_________________________
23 comments:
அட....
இப்படியும் கூட ஆற்றாமையை எழுத முடியுமா??
அருமை அண்ணா... :-)
வல்லான் வகுத்ததே வாய்க்கா,. எல்லாரும் வல்லான் ஆகத்தானே ஆசைப்படறோம்
ஹா!ரெண்டு முன்னங்கால தலையணையாக்கி, சொகுசா தலைய வெச்சி உறங்கி, கடந்து போற ஆள ஒத்தைக்கண்ண கால் வாசி தொறந்து, அட தூ நீதானான்னு திரும்ப மூடி தலைய அறக்கி வெச்சி ஒரு சுகமாத்தூங்கும் பாருங்க. மனுசப்பய அப்புடி தூங்கியிருக்கமாட்டான். நடு வயத்துல பைக்கவுட்டு ஏத்திட்டு போனாலும் பின்னம் வலக்கால நொண்டிக்கிட்டு ஓடுற சைக்காலஜி மாத்திரம் புரியவேயில்லை. பறந்து வர காஸ்ட்வீல் பைக்குக்குள்ள சரியாப் பாஞ்சு ஃபோர்க்ல மாட்டி ஆள ஆறுமாசம் குத்துயுரும் கொலயுயிருமா கெடத்துற டெக்கினிக்கு எங்க படிச்சிதோ. நெசம்மா நாயா பொறந்திருக்கலாமோ?
ச்ச்ச்ச்ச... இந்த நேரத்துல எத படிச்சாலும் புனைவாவே தெரியுது... கண்ணு கெட்டுப்போச்சுன்னு நினைக்கிறேன்...
பட்... எக்ஸ்லன்ட்...டச்...
கற்பனைக்கும் புனைவுக்கும் உள்ள வேறுபாடு என்னங்க மாப்பு??
mm... epdi than ippdi yosikareengaloo...
நடுநிசிக்கும் கொஞ்சம் முந்திய நேரம்.//
neenga eppovum pei kutty suthara time la than veetku poveeengala?
பழமைபேசி said...
//கற்பனைக்கும் புனைவுக்கும் உள்ள வேறுபாடு என்னங்க மாப்பு??//
நெனப்புக்கும் பொழப்புக்கும் உள்ளதேதான்:))
// தார் சாலை பகல் முழுதும் உள்வாங்கி துகள்துகளாய் கசியவிடும் வெதுவெதுப்பை நெஞ்சு, வயிறு என உள்வாங்கி,
இது வர்ணனை. அந்த இளஞ்சூட்டை உணரவைத்தீர்கள்.
//ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த வாழ்க்கைப் பெண்டுலம், ஒரு கணம் “ம்ம்ம்… இந்த நாயாப் பொறந்திருக்கலாமோ!!?” என்று மின்னலாய் நினைக்க வைத்தது.
மீண்டும் ஓட எத்தனித்த போது, நாய் நினைத்தது “ம்ம்ம் மனுசனாப் பொறந்திருக்கலாமோ!!?//
அருமையான வெளிப்பாடு.
ம்ம்.. எவ்வளவோ சொல்ல நினைக்கறேன் முதலாளி... ஆனா.. முடியலியே..
//வானம்பாடிகள் said...
பழமைபேசி said...
//கற்பனைக்கும் புனைவுக்கும் உள்ள வேறுபாடு என்னங்க மாப்பு??//
நெனப்புக்கும் பொழப்புக்கும் உள்ளதேதான்:))
//
இல்லாததை நினைச்சுப் பார்த்துக் கற்பிதம் செய்வது கற்பனை... விண்ணில் பறக்கும் குதிரையில் வந்தார் வானம்பாடிகள்...
இப்படித்தான் வரணும்னு நினைச்சு செய்யுறது புனைவு....
ஆண் பாம்பும் பெண் பாம்பும் பிணைந்து பிரிவது புனையல்....
இப்ப சொல்லுங்க, இந்த இடுகை புனையலா, கற்பிதமா??
// க.பாலாசி said....
பட்... எக்ஸ்லன்ட்...டச்...
//
இதா பாருங்கய்யா... நம்ம பாலாசியோட ஆட்டத்தை....
ஆமா, பாலாசி... எங்க தாராவரத்து அண்ணனை நெம்ப நாளாக் காணோமே??
அதானே, நாய் சொல்றதை நினைப்பதா, மனுசன் நினைப்பதை சொல்லுவதா ...
இக்கரைக்கு எல்லாமே அக்கரைதான் கதிர்.என்றாலும் சிந்திக்க வைக்கிற விஷயம்தான்.
அந்தப் படத்தில் இருப்பவர் கண்களைப் பாருங்கள். என்னவொரு அறிவு:) 'நம்மை வைச்சுப் பதிவு எழுதறாம்ப்பா'என்று நினைத்திருக்குமோ என்னவோ....
நாயாகப் பிறக்கவே கூடாது. அதுவும் தெருநாயாக. குப்பையைக் கிளறும் அதன் பசித்த கண்கள் மறக்கமுடியாதவை.
தத்துவம்ஸ்....
நல்ல link!
அன்பின் கதிர்
அருமை அருமை - தேர்ந்தெடுத்த சொற்களால் அழகான வரிகள் .
யாருக்கென்றே தெரியாமல் - இருளைத் தின்னும் விளக்கு வெளிச்சம்.
நாய் தூங்குவதை இவ்வாறும் இரசிக்க இயலுமா ?
தார்சாலை பகலில் உள்வாங்கியதை இரவில் துகள் துகளாய் கசிய விடுகிறது.
நாயோ அவ் வெதுவெதுப்பினால் காற்று தரும் குளிரை அடக்க முயல்கிறது.
வயிற்றில் மெலிதான அசைவுகளையும் - மூக்கின் அருகே பறக்கும் தூசிகளையும் கவனிப்பது மனித இயல்பு. ஏன் ? மனிதன் உறங்கும் போது கூட நாம் கவனிக்கிறோமே - ஏன் ?
அவசரம் - ஆச்சரியம் - ஆற்றாமை - பொறாமை - கல்லடி - மனிதம் மனிதனென்பதை நிரூபிக்கிறான்.
நாய் படும் பாட்டினால் நினைக்கிறது - மனுசனாய்ப் பிறந்திருக்கலாமா
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
இக்கரைக்கு அக்கரை என்றால் கடைசில இங்க அக்கரை இக்கரைக்கு ஆசைப்படுதறதுதான் ரொம்பப் பாவமா இருக்கு:)!
ரொம்ப நல்லா இருக்குங்க
நாய் புத்தி இருக்கிற மனுஷனை விட
நாய் புத்தி இருக்கிற நாய் மேலுங்க
நன்று.
பலநேரங்களில் மனிதன் மனிதனாகவே நடப்பதில்லை...தன் உருவம் ஒன்றே மனிதனாய் இருப்பதற்க்கான ஒரே தகுதி என்று நினைத்துவிட்டான்...ம்ம்ம்ம் என்ன செய்வது...
Post a Comment