தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு...

__________________________________________________________ __________________________________________________________


விடியற்காலை நேரம், எங்கள் தோட்டத்திற்கு அருகில் செல்லும் அந்த சாலையில், நின்று கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட இடைவெளியில் மட்டும் பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் சிறிதும் இல்லாத சாலை அது. நீண்ட நாட்களுக்குப் பின் அந்தச் சாலையில், அந்த அதிகாலை நேரத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

பெயர் இல்லாத, வெளிர் மஞ்சள், வெளிர் நீலம் வரி வரியாக பூசப்பட்ட பேருந்துகள், நான் நின்று கொண்டிருந்த குறுகிய நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் கடந்து கொண்டிருக்கிறது. முன் பக்க கண்ணாடியில் ஒரு எண் மட்டும் பெரிதாக எழுதப்பட்டிருக்கிறது.

அந்த காலை நேரத்திலும் பேருந்துகள் நிரம்பி சென்று கொண்டிருந்தது. அருகில் இருந்த உறவினரிடம் கேட்டேன்


“என்னங்க இது, பேர் போடாம நிறைய பஸ் போகுது”


“எல்லாம் சிப்காட்கு ஆள் கூட்டிட்டுப் போறங்க” என்றார்.

புதிதாக உருவாகும் பின்னலாடை நிறுவனங்களில், ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க, நிறுவனம் சார்பில் பழைய பேருந்துகளை வாங்கி, 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அனுப்பி, கிராமப் பகுதியில் இருக்கும் ஆட்களை வேலை செய்ய வலை விரித்து, பிடித்துக் கொண்டு வருவது.

காலை 6 மணிக்கு, பேருந்து நிறுவனத்திலிருந்து 60-70 கி.மீ தள்ளி இருக்கும் ஊர்களிலிருந்து புறப்பட்டு, பெரும்பாலும் கிராமங்கள் வழியாக சுற்றிச்சுற்றி பின்னலாடை நிறுவனத்தை நோக்கி வருகிறது. “தொழில் தெரியுமா நல்லது, தெரியாத அது அதை விட நல்லது, எளிதில் கற்றுக்கொள்ளலாம்.” ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் 130-150 ரூபாய் சம்பளம், வீட்டிற்கு அருகிலே வந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவர். (12 மணி நேரம் ஷிப்ட் (காலை 8 முதல் இரவு 8), கிட்டத்தட்ட நின்று கொண்டேயிருக்க வேண்டும், காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்குத் தான் வீடு வந்து சேர முடிகிறது எனவும் ஒரு சிலர் வருத்தப் படுவதுண்டு)

காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிகளாக இருந்தவர்கள், மிகக் குறைந்த அளவிலான நிலம், வைத்திருந்தவர்கள், கால்நடைகளை வைத்து பால் கறந்து ஊற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் என பல தரப்பட்ட கிராம மக்கள் திடீரென காலை நேரங்களில் கிராமத்தின் மையச் சாலையில் ஹாரன் அடித்து அழைக்கும் பேருந்துகளுக்கு மகுடி இசைக்கு பணியும் பாம்பு போல் மயங்கி சாரை சாரையாய் போவதை உணர முடிகிறது. வெயிலில் வேலை செய்ய வேண்டியதில்லை, கோவணம் கட்டிக் கொண்டோ, சேலையை எடுத்துச் சொருகிக் கொண்டோ சேற்றில், மண்ணில் வேலை செய்ய வேண்டியதில்லை.

விளைவு விவசாய விளை நிலங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை.


ஒவ்வொரு முறை விதைக்கும் போதும், இந்த போகத்திற்கு விதைக்க, மூன்று, நான்கு முறை களையெடுக்க, அறுவடை செய்ய ஆள் கிடைக்குமா என்ற அவ நம்பிக்கையுடனே ஆரம்பிக்கின்றனர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.

சாலை ஓர விளை நிலங்கள் மிக எளிதில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வாங்கப் பட்ட நிலம் உடனே, சமன்படுத்தப் பட்டு, வேலி போடப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு, சாக்கடைகள் கட்டப்பட்டு, பூங்காக்களுக்கென நிலம் (கொடுமை விளைந்து கொண்டிருந்த நிலத்தை கற்பழித்து விளையாட பூங்கா அமைப்பது) ஒதுக்கப்பட்டு குடும்பப் பெண்ணாய் இருந்த நிலம் சீவி சிங்காரிக்கப்பட்டு கடை பரப்பப்பட்டது. சில வாரங்களில் போட்ட முதலீட்டில், எண்ணிப்பார்க்க முடியாத அளவு லாபத்துடன் வீட்டு மனைகளாக விற்கப்படுகிறது.

அடுத்தடுத்த பேருந்துகள் ஆட்களோடு பறந்து கொண்டிருந்தது.

“என்னங்க இத்தன பஸ் போகுது” என்றேன்

இனிமே இங்க யாரும் விவசாயம் பண்ண முடியாது, காட்ல கூலிக்கு ஆளு அம்பே கெடைக்கிறதில்ல, இருக்கற தண்ணிக்கு ஏதாவது மரத்த வெக்கோனும், இல்லைனா நல்ல விலைக்குப் போனா வித்துப்போட்டு, பணத்தை வச்சி பொழச்சிகோனும், இனுமே விவசாயங்கறது நாய் படற பாடு ஆயிப்போச்சு” என்றார்.

இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” அவர் மனைவி.

“ப்ச்...” என்று உதடு பிளுக்கினார்.


“தண்ணீரும், சோறும் தந்த மண்ண விட்டு...” முதல் நாள் ஒரு தொலைக்காட்சியில் கேட்ட கருத்தம்மா படப் பாடல் வரி நினைவுக்கு வந்து, மனதைப் பிசைந்தது.






-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

50 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

பெருந்துறையில் வேலை பார்க்கும் நாட்களில் இந்த நிகழ்வை நேரடியாக பார்த்து இருக்கிறேன் நண்பா.. வயிதெரிச்ச்சல்..இனிமேல் உழவு என்றொரு தொழில் இருக்குமா என்பதே கேள்விதான்..

சந்தனமுல்லை said...

/
“தண்ணீரும், சோறும் தந்த மண்ண விட்டு...” முதல் நாள் ஒரு தொலைக்காட்சியில் கேட்ட கருத்தம்மா படப் பாடல் வரி நினைவுக்கு வந்து, மனதைப் பிசைந்தது/

:((

க.பாலாசி said...

//விளைவு விவசாய விளை நிலங்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை.//

உண்மைதான் இந்த ஆள் பற்றாக்குறை எதனால் வந்தது. விவசாயம் இயந்திரமயமானதால்தானே...

விவசாயம் மெசினரி ஒர்க்கா மாறினதாலதானே, அதை நம்பி இருந்த விவசாய கூலிகளுக்கு வேலையில்லாமல் போனது. எத்தனை நாள்தான் கூலிவேலைசெய்யும் விவசாயிகள் அந்த தொழிலையே நம்பி பட்டினி கிடப்பார்கள். அதனாலத்தான் வேற வழி தெரியாம கிடைக்கிற வேலையை பார்த்து வயிற்றைக்கழுவும் நிலைக்கு வந்தார்கள்.

//பல தரப்பட்ட கிராம மக்கள் திடீரென காலை நேரங்களில் கிராமத்தின் மையச் சாலையில் ஹாரன் அடித்து அழைக்கும் பேருந்துகளுக்கு மகுடி இசைக்கு பணியும் பாம்பு போல் மயங்கி சாரை சாரையாய் போவதை உணர முடிகிறது.//

எனது கிராமத்திலும் இதுபோன்றதொரு நிலை இன்றும் உள்ளது...

//கொடுமை விளைந்து கொண்டிருந்த நிலத்தை கற்பழித்து விளையாட பூங்கா அமைப்பது//

இது ‘நச்’...

//ஒவ்வொரு முறை விதைக்கும் போதும், இந்த போகத்திற்கு விதைக்க, மூன்று, நான்கு முறை களையெடுக்க, அறுவடை செய்ய ஆள் கிடைக்குமா என்ற அவ நம்பிக்கையுடனே ஆரம்பிக்கின்றனர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.//

நீங்கள் சொல்லும் இந்த விசயம் ஒரு 10% சரியாக இருக்கலாம். ஏனென்றால்
மிகவும் படிப்பறிவில் பின்தங்கிய கிராமங்களில் கூட எல்லாவற்றிற்கும் இயந்திரங்களை பயன்படுத்தியே முக்கியமான வேலைகளை செய்துவிடுகின்றனர். பிறகு ஏன் ஆட்களைத் தேடப்போகிறார்கள்.

எல்லாவற்றையும் விட விவசாயிகளுக்கு இவ்வளவு செலவு செய்தும் கிடைக்கும் வருமானம் சொற்பமே. அதனாலையே பலர் அதை வெறுத்து வேறு வேலையைத்தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இப்படி பல காரணங்கள்...

ஒரு விஷயம் கவனிச்சிங்களா? விவசாயத்தின் முக்கியத்துவத்தை பேசும் நாம் (என்னையும் சேர்த்து) விவசாயமல்லாத வேலையே (தொழிலையே) செய்கிறோம்.

நல்ல சிந்தனைப் பகிர்வு...அன்பரே...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர். நல்ல பதிவுங்க.

உடுமலைப் பக்கம் கூட இதே நிலை தாங்க. எல்லாம் கம்பெனிக்கு வேலைக்கு போறேன்னு கிளம்பிடறாங்க.

ஆனா, விவசாயத்தை நவீனமயமாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒரு ஆள் 100 ஹெக்டர் நிலத்தைப் பார்ப்பாங்களாம். அந்த நிலை இங்கேயும் வந்துவிடும்.

இல்லீன்னா, பீகார்ப் பசங்கள குறைந்த சம்பளத்துக்கு (நம்மள அமெரிககால அமர்த்தற மாதிரி)விவசாயத்துக்கு அமர்த்த வேண்டியது தான்.

வால்பையன் said...

//காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிகளாக இருந்தவர்கள், //

இதில் பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது!
கூலி குறைவாக இருந்தாலும் வேலை செய்திருப்பார்கள்!

இம்மாதிரியான விவசாய கூலிகள் வருட சம்பளத்துக்கு அடிமை போல் நடத்தப்படுவது பெருங்குற்றம், அதனாலயே பலர் விவசாய வேலைகளுக்கு போவதில்லை!

vasu balaji said...

கர்னாடகாவில் மங்களூர் கெமிகல்ஸ் ஒரு அருமையான திட்டத்தினை செயல் படுத்துவதாக அறிந்தேன். கிராமம் கிராமமாக அவர்களின் ஆலோசனை மையம் அமைத்து, நிலத்தின் தன்மைக் கேற்ப உரம், சாகுபடி செய்ய வேண்டிய பயிர் ஆகியன பரிந்துரைக்கப் படுகிறது. அரசாங்க மானியத்தில் மிகக் குறைந்த விலையில் உரம் அளிப்பதோடு 24 க்ஷ் 7 ஆலோசனையும் தரப்படுகிறது. விளைச்சல் கத்தரிக்காயோ, அரிசியோ இடைத் தரகின்றி சந்தை விலைக்கு அவர்களாலேயே வாங்கப் பட்டு (விருப்பத்தின் பேரில் மட்டும்) அவர்களால் பதப் படுத்தப் பட்டு ரீடெயில் மார்கடிங் செய்பவர்களுக்கு விற்கப் படுகிறது. இடைத் தரகு இல்லாததால் விலையும் குறைவு. விவசாயிக்கும் அதிக வரவு. கூடிய விரைவில் ரீடெயில் மார்கெடிங்கும் அவர்களே எடுத்துக் கொள்ள முன்வரும்போது இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. நாம எல்லாத்தையும் விட்ட பிறகுதான் நாசமா போனது தெரியும்.

நாஞ்சில் நாதம் said...

பெருந்துறை, கவுந்தபாடி, குமாரபளையம், பவானி போன்ற இடங்களில் இதுமாதிரி அதிகம். ஈரோட்டிலிருந்து பெருந்துறை போற வழியெலாம் முன்பு விளை நிலமா இருந்தது இப்போ ப்ச்.

என்னுடைய நண்பர் ஒருவருடைய அப்பா விவசாயத்துக்கு ஆள் கிடைக்காமல் தனது நிலத்தையெல்லாம் வித்துவிட்டு சென்னையில் குடியேறிவிட்டார்

வருத்தமான விஷயம்

குடந்தை அன்புமணி said...

//இல்லீன்னா, பீகார்ப் பசங்கள குறைந்த சம்பளத்துக்கு (நம்மள அமெரிககால அமர்த்தற மாதிரி)விவசாயத்துக்கு அமர்த்த வேண்டியது தான்.//

இதுதான் சாத்தியமாகக்கூடும் என்று நினைக்கிறேன்... இங்கே சென்னையில்கூட கட்டிட வேலைக்கு அவர்கள்தான் வந்து குவிகிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து பார்த்தால் நிலமை புரியும்.

குடந்தை அன்புமணி said...

//விவசாயத்தை நவீனமயமாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஒரு ஆள் 100 ஹெக்டர் நிலத்தைப் பார்ப்பாங்களாம். அந்த நிலை இங்கேயும் வந்துவிடும்//

அதுக்குள்ளே எல்லாம் வீட்டு மனைகளாக ஆகாமல் இருந்தால் சரி...

குடந்தை அன்புமணி said...

மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தினாலும் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்று அண்மையில் நக்கீரனில் கட்டுரை ஒன்று வந்திருந்தது.

பிரபாகர் said...

கதிர்,

நகரம் தேடி செல்லும் கிராமத்தாரின் நிலையை அழகாய் எடுத்து சொல்லியிருகிறீர்கள்.

காரணம் அழிந்து வரும் விவசாயம், பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சி, நாகரிக மோகம், அதிகரிக்கும் தேவைகள்....

நல்ல பதிவு கதிர். கிராமத்திலிருந்து வந்த எனக்கு உண்மை சுடுகிறது.

பிரபாகர்.

குடந்தை அன்புமணி said...

வானம்பாடி அவர்களின் கருத்துக்கள் போலத்தான் முதல்வர் கருணாநிதி அவர்களால் கொண்டு வரப்பட்ட ‘உழவர் சந்தை’ திட்டம். இதிலும் வியாபாரிகள் உட்புகுந்து அபகரித்துக் கொண்டனர் என்பது வரலாறு.

ஈரோடு கதிர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இனிமேல் உழவு என்றொரு தொழில் இருக்குமா என்பதே கேள்விதான்..//

சரிங்க....சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்

நன்றி @@ பாண்டியன்

// பழமைபேசி said...
ப்ச்//

வாங்க மாப்பு

நன்றி @@ சந்தனமுல்லை

ஈரோடு கதிர் said...

//க.பாலாஜி said...

//விவசாயம் மெசினரி ஒர்க்கா மாறினதாலதானே, அதை நம்பி இருந்த விவசாய கூலிகளுக்கு வேலையில்லாமல் போனது.//

எனக்குத் தெரிந்து விவசாயத்தில் ஆள் பற்றாக்குறைதான் இருக்கிறதே தவிர, இயந்திரத்தால் இவர்கள் வேலை பறிபோனதாக இல்லை

//எத்தனை நாள்தான் கூலிவேலைசெய்யும் விவசாயிகள் அந்த தொழிலையே நம்பி பட்டினி கிடப்பார்கள்.//

சரி மில்லுக்கு வேலைக்குப் போய்விட்டால் மட்டும் வயிறு நிரையுமா?

விவசாயம் பொய்த்துப் போய்விட்டாலும் பட்டினிதானே



//எனது கிராமத்திலும் இதுபோன்றதொரு நிலை இன்றும் உள்ளது...//

//இது ‘நச்’...//

//நீங்கள் சொல்லும் இந்த விசயம் ஒரு 10% சரியாக இருக்கலாம்.//

இல்லை பாலாஜி, இந்தப் பகுதியில் பெரும்பாலும் அப்படித்தான். இயந்திரம் விவசாயத்தில் முழுதும் பயன்படுத்த முடியாது.

விதைக்கவும், விளைந்ததை அறுவடை செய்யவும்தான் இயந்திரம் பயன்படுகிறது.

விளையும் வரை களையெடுத்து பராமரிப்பதுதான் மிகப் பெரிய வேலை

//எல்லாவற்றையும் விட விவசாயிகளுக்கு இவ்வளவு செலவு செய்தும் கிடைக்கும் வருமானம் சொற்பமே//

இதுதான் பெரிய வருத்தம்

//ஒரு விஷயம் கவனிச்சிங்களா? விவசாயத்தின் முக்கியத்துவத்தை பேசும் நாம் (என்னையும் சேர்த்து) விவசாயமல்லாத வேலையே (தொழிலையே) செய்கிறோம்.//

கசப்பான உண்மைதான்

//நல்ல சிந்தனைப் பகிர்வு...அன்பரே...//

மிக்க நன்றி பாலாஜி

ஈரோடு கதிர் said...

//ச.செந்தில்வேலன்(
உடுமலைப் பக்கம் கூட இதே நிலை தாங்க. எல்லாம் கம்பெனிக்கு வேலைக்கு போறேன்னு கிளம்பிடறாங்க.//

சரியாகச் சொன்னீர்கள்


//ஆனா, விவசாயத்தை நவீனமயமாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.//

ஒரு தனி விவசாயி இதைச்செய்ய முடியுங்களா செந்தில். அரசாங்கம் தூங்குகிறது


//இல்லீன்னா, பீகார்ப் பசங்கள குறைந்த சம்பளத்துக்கு (நம்மள அமெரிககால அமர்த்தற மாதிரி)விவசாயத்துக்கு அமர்த்த வேண்டியது தான்.//

பாவங்க பீகார் பசங்க

நன்றி @@ செந்தில்

ஆரூரன் விசுவநாதன் said...

விளை நிலங்கள் விலை போன விதத்தை விவரித்தது அருமை.

அன்புடன்
ஆரூரன்

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
//இதில் பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது!//

//இம்மாதிரியான விவசாய கூலிகள் வருட சம்பளத்துக்கு அடிமை போல் நடத்தப்படுவது பெருங்குற்றம், அதனாலயே பலர் விவசாய வேலைகளுக்கு போவதில்லை!//

ம்ம்ம் ஏற்க வேண்டிய கருத்துதான்

நன்றி @@ அருண்

ஈரோடு கதிர் said...

// வானம்பாடிகள் said...
கிராமம் கிராமமாக அவர்களின் ஆலோசனை மையம் அமைத்து, நிலத்தின் தன்மைக் கேற்ப உரம், சாகுபடி செய்ய வேண்டிய பயிர் ஆகியன பரிந்துரைக்கப் படுகிறது. //

அதுபோல இங்கும் கட்டாயம் நடக்க வேண்டும்.

சில சமயங்களில் தக்காளி விற்பனையாகமல் சாலைகளில் கொட்டப்படுவதும், சில மாதங்களில் கிலோ ரூ.50க்கு விற்கப்படும் போது, விவசாயிகளிடம் தக்காளி இருப்பதில்லை

நன்றிங்க @@ பாலாண்ணா

ஈரோடு கதிர் said...

//நாஞ்சில் நாதம் said...
பெருந்துறை, கவுந்தபாடி, குமாரபளையம், பவானி போன்ற இடங்களில் இதுமாதிரி அதிகம். ஈரோட்டிலிருந்து பெருந்துறை போற வழியெலாம் முன்பு விளை நிலமா இருந்தது இப்போ ப்ச். //

நம்ம ஊரு பக்கம் இருந்தீங்க போலயிருக்கே

//என்னுடைய நண்பர் ஒருவருடைய அப்பா விவசாயத்துக்கு ஆள் கிடைக்காமல் தனது நிலத்தையெல்லாம் வித்துவிட்டு சென்னையில் குடியேறிவிட்டார்//

நிறையப்பேர்

நன்றி @@ நாஞ்சில் நாதம்

வருத்தமான விஷயம்

ஈரோடு கதிர் said...

// குடந்தை அன்புமணி said...

//இங்கே சென்னையில்கூட கட்டிட வேலைக்கு அவர்கள்தான் வந்து குவிகிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து பார்த்தால் நிலமை புரியும்.//

அவர்களுக்கான வரலாறு வலி மிகுந்து இருக்கும்

//அதுக்குள்ளே எல்லாம் வீட்டு மனைகளாக ஆகாமல் இருந்தால் சரி...//

இது முக்கியம்

//மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தினாலும் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்று அண்மையில் நக்கீரனில் கட்டுரை ஒன்று வந்திருந்தது.//

அதுவும் உண்மைதான்

//‘உழவர் சந்தை’ திட்டம். இதிலும் வியாபாரிகள் உட்புகுந்து அபகரித்துக் கொண்டனர் என்பது வரலாறு.//

ஆமாம்

ஆனாலும் விவாசயிகளும் கூடுதல் பலன் பெற முடிகிறது

விரிவான, அக்கறையான அலசலுக்கு நன்றிங்க அன்புமணி

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
அழிந்து வரும் விவசாயம், பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சி, நாகரிக மோகம், அதிகரிக்கும் தேவைகள்....

நல்ல பதிவு கதிர். கிராமத்திலிருந்து வந்த எனக்கு உண்மை சுடுகிறது. //

நன்றி @@ பிரபா

புது போட்டோல ரொம்ப அழகா இருப்பீங்க போல இருக்கு

அமர பாரதி said...

கதிர்,

ஆதங்கத்துடன் எழுதப்பட்ட நல்ல கட்டுரை. ஆனால் விவசாயத்துக்கு மட்டுமல்ல, ஹோட்டல் போன்ற தொழில்களுக்கும் இப்போது ஆள் கிடைப்பது சிரமமாகி விட்டது. இதற்கு முக்கிய காரணியாக ஒரு ரூபாய் அரிசி உள்ளது. ஈரோட்டைச் சுற்றி விவசாயக் கூலி ஒரு நாளுக்கு 200 ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. எந்த விவசாயம் செய்தாலும் நஷ்டமே மிஞ்சும். இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு உதவுகிறது. அதுவும் இல்லையென்றால் இன்னும் சிரமம்.

Jerry Eshananda said...

மண் கசிகிறது.

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
விளை நிலங்கள் விலை போன விதத்தை விவரித்தது அருமை.//


நன்றி @@ ஆரூரன்

//அமர பாரதி said...
ஆதங்கத்துடன் எழுதப்பட்ட நல்ல கட்டுரை. ஆனால் விவசாயத்துக்கு மட்டுமல்ல, ஹோட்டல் போன்ற தொழில்களுக்கும் இப்போது ஆள் கிடைப்பது சிரமமாகி விட்டது. இதற்கு முக்கிய காரணியாக ஒரு ரூபாய் அரிசி உள்ளது. ஈரோட்டைச் சுற்றி விவசாயக் கூலி ஒரு நாளுக்கு 200 ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. எந்த விவசாயம் செய்தாலும் நஷ்டமே மிஞ்சும். இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு உதவுகிறது. அதுவும் இல்லையென்றால் இன்னும் சிரமம்.//

ஒரு ரூபாய் அரிசி மக்களி முட்டாளாகவும், ஆள்வோரை புத்திசாலியாகவும் மாற்றியது உண்மைதான்.

நன்றி @@ அமரபாரதி

Anonymous said...

எல்லோரும் கூடி கூடி பேசுகிறோம் வருத்தப்ப்டுகிறோம்,பிறகு போய் அவரவர் வேலையை பார்க்கப்போய்விடுகிறோம்,இதற்கு என்ன தீர்வு என்று விவாதிக்க ஆரம்பிப்போம்.அவரவர் கருத்துக்களை பகிர்வோம்.எது மிக சிறந்ததோ அதை நடை முறை படுத்தலாமே.

1)நம்மில் பலர் குழுவாக இணைந்து நிலங்களை வாங்கி நவீன விவசாயத்தில் ஈடுபடலாம்.
2)இந்த குழுவில் விவசாய நண்பர்களை இணைத்துக்கொண்டால் அவர்கள் அனுபவமும்,உழைப்பும் கிடைக்கும்.
இந்த விவாதத்தை தொடர்ந்து நடத்தி தீர்வை காண முற்சிக்கலாமா?

ஈரோடு கதிர் said...

//சந்திரா said...
அவரவர் கருத்துக்களை பகிர்வோம்.எது மிக சிறந்ததோ அதை நடை முறை படுத்தலாமே.
1)நம்மில் பலர் குழுவாக இணைந்து நிலங்களை வாங்கி நவீன விவசாயத்தில் ஈடுபடலாம்.
2)இந்த குழுவில் விவசாய நண்பர்களை இணைத்துக்கொண்டால் அவர்கள் அனுபவமும்,உழைப்பும் கிடைக்கும்.
இந்த விவாதத்தை தொடர்ந்து நடத்தி தீர்வை காண முற்சிக்கலாமா?//

ம்ம்ம்ம் சரியான யோசனைதான்

எந்த பிரமாண்டமும் ஒரு புள்ளியில் ஒரு இருந்துதான் துவங்கும்..

நம்புவோம், நடத்துவோம்... கொஞ்சம் சிந்தித்து இதற்கான வழிமுறைகளை நம்மில் யாரவது ஒருவர் ஒரு தளத்தில் துவங்குவோம்

நன்றி @@ சந்திரா

கலகலப்ரியா said...

:(

ஷண்முகப்ரியன் said...

லாபம் தராத எந்தத் தொழிலும் நீடிக்காது,கதிர்.தொழிலில் எதுவும் புனிதமில்லை,பணம் கிடைக்காத வரை.

Rekha raghavan said...

மிக நல்ல பதிவு. எதிர்கால சந்ததியினருக்கு சாப்பிட எதாவது கிடைக்குமா என்பதே இப்போதைய கேள்வி. சிந்திப்போம்.

ரேகா ராகவன்.

மாதவராஜ் said...

அவசியமான பதிவு. இதுதான் இன்றைய இந்தியாவின் பிரச்சினையே..! சூதாட்டக்களமான பங்கு மார்க்கெட்டுக்கு அரசு காட்டும் சலுகைகளும் ,மரியாதையும் இந்த மண்ணுக்கு இல்லையே!ன் அப்புறம் யார் இதனை மதிப்பார்கள். கோபம் வராத பொதுஜனம் எதற்கெல்லாமோ கோபப்படுகிறான்.

Unknown said...

வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்..

அப்படியே ஆள் கிடைச்சாலும், பருவத்துல எங்கங்க மழை பெய்யுது..?
எனக்கு தெரிஞ்சு எங்க கிராமத்துல நிறைய பேரு மழை இல்லாத காரணத்தினால மட்டுமே 4, 5 வருசமா காட்ட சும்மா போட்டு வச்சுருக்காங்க..

சிலபேர் கிடைச்சவரைக்கும் லாபம்னு ரியல் எஸ்டேட்க்கு வித்துட்டு, சும்மா உட்காந்துட்டு இருக்காங்க..

எங்க ஊர்ல(ஊர்லனு சொல்லுரதவிட குக்கிராமம்னு சொல்லுறதுதான் சரி..) 35 வயசுக்கும் கீழ இருக்குறவங்க யாருக்கும் சரியா விவசாயம் செய்யத் தெரியாது.. :-(

//.. விவசாய கூலிகள் வருட சம்பளத்துக்கு அடிமை போல் நடத்தப்படுவது பெருங்குற்றம்..//

அது எல்லாம் அந்தக்காலம், இப்போ அதிக கூலி கொடுத்தாலும் விவசாய வேலை செய்ய ஆள் இல்லைங்க..

பித்தனின் வாக்கு said...

ஈரொடு பெருந்துறை சலையில் பஸ்ஸில் செல்லும் போது அந்த வயல்வெளியும் கரும்பு வாசமும் அலாதியாக இருக்கும், அதிலும் கரும்பு பால் காச்சும் வாசம்(வெல்லம்) சுகம் தனிதான், பத்தாண்டுகளுக்கு பின் நான் ஒரு ஆறு மாதத்திக்கு முன் சென்றபோது கட்டிடமும், ஆஸ்பத்திரிகள் தான் அதிகம். இயற்க்கை உழப்பை விட்டு செயற்கையால் கோவை, ஈரொடு பகுதியில் ஆஸ்பத்திரிகள் தான் அதிகம் வந்துருக்கு. விவசாயிகள் பலரும் நிலத்தை விற்று அந்த் பணத்தில் வட்டித்தொழில் (பைனான்ஸ்) செய்கின்றனர்.

ப்ரியமுடன் வசந்த் said...

//உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா//

அதே பாடல்ல ``உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா`` இந்த வரிகளும் வருமே கதிர்

நடக்கும்...

:(

thiyaa said...

//”இனிமே இங்க யாரும் விவசாயம் பண்ண முடியாது, காட்ல கூலிக்கு ஆளு அம்பே கெடைக்கிறதில்ல, இருக்கற தண்ணிக்கு ஏதாவது மரத்த வெக்கோனும், இல்லைனா நல்ல விலைக்குப் போனா வித்துப்போட்டு, பணத்தை வச்சி பொழச்சிகோனும், இனுமே விவசாயங்கறது நாய் படற பாடு ஆயிப்போச்சு” என்றார்.

“இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” அவர் மனைவி.

“ப்ச்...” என்று உதடு பிளுக்கினார்.




“தண்ணீரும், சோறும் தந்த மண்ண விட்டு...” முதல் நாள் ஒரு தொலைக்காட்சியில் கேட்ட கருத்தம்மா படப் பாடல் வரி நினைவுக்கு வந்து, மனதைப் பிசைந்தது.//


விவசாய நிலங்கள் இப்பிடித்தான் போகுது இதைப் பற்றி யாரும் கதைக்க மாட்டினம்
கதை நல்ல நடை

க.பாலாசி said...

இளமை விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...வாழ்த்துக்கள் அன்பரே....

Anonymous said...

பாடல் மட்டுமல்ல பதிவும் மனசை பிசைகிறது...

எங்கே எதை நோக்கி போகிறோம் இந்த கேள்வி தான் எஞ்சுகிறது.....

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
:(//
நன்றி @@ கலகலபிரியா

//ஷண்முகப்ரியன் said...
லாபம் தராத எந்தத் தொழிலும் நீடிக்காது,கதிர்.தொழிலில் எதுவும் புனிதமில்லை,பணம் கிடைக்காத வரை.//

பகிர்வுக்கு நன்றி @@ ஷண்முகப்ரியன்

//REKHA RAGHAVAN said...
எதிர்கால சந்ததியினருக்கு சாப்பிட எதாவது கிடைக்குமா என்பதே இப்போதைய கேள்வி. சிந்திப்போம்.//

நன்றி @@ ராகவன்

//மாதவராஜ் said...
அவசியமான பதிவு. இதுதான் இன்றைய இந்தியாவின் பிரச்சினையே..! சூதாட்டக்களமான பங்கு மார்க்கெட்டுக்கு அரசு காட்டும் சலுகைகளும் ,மரியாதையும் இந்த மண்ணுக்கு இல்லையே!ன் அப்புறம் யார் இதனை மதிப்பார்கள். கோபம் வராத பொதுஜனம் எதற்கெல்லாமோ கோபப்படுகிறான்.//

மிகச் சரியாக சொன்னீர்கள்

நன்றி @@ மாதவராஜ்

ஈரோடு கதிர் said...

//ஜெரி ஈசானந்தா. said...
மண் கசிகிறது.//

நன்றி @@ ஜெரி

//பட்டிக்காட்டான்.. said...
வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்..

சிலபேர் கிடைச்சவரைக்கும் லாபம்னு ரியல் எஸ்டேட்க்கு வித்துட்டு, சும்மா உட்காந்துட்டு இருக்காங்க..

எங்க ஊர்ல 35 வயசுக்கும் கீழ இருக்குறவங்க யாருக்கும் சரியா விவசாயம் செய்யத் தெரியாது.. //

பகிர்தலுக்கு நன்றி @@ பட்டிக்காட்டான்

//இப்போ அதிக கூலி கொடுத்தாலும் விவசாய வேலை செய்ய ஆள் இல்லைங்க..//

இதுவும் எங்கள் பகுதியில் நடக்கும் உண்மை


//PITTHAN said...
//அந்த வயல்வெளியும் கரும்பு வாசமும் அலாதியாக இருக்கும், அதிலும் கரும்பு பால் காச்சும் வாசம்(வெல்லம்) சுகம் தனிதான்//

//இயற்கை உழப்பை விட்டு செயற்கையால் கோவை, ஈரொடு பகுதியில் ஆஸ்பத்திரிகள் தான் அதிகம் வந்துருக்கு. விவசாயிகள் பலரும் நிலத்தை விற்று அந்த் பணத்தில் வட்டித்தொழில் (பைனான்ஸ்) செய்கின்றனர்.//

ஆழமான பகிர்வுக்கு நன்றி @@ PITTHAN

ஈரோடு கதிர் said...

// பிரியமுடன்...வசந்த் said...
அதே பாடல்ல ``உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா`` இந்த வரிகளும் வருமே கதிர்//

அந்த பாடல் முழுவதுமே பொருந்தும் வசந்த்

நன்றி @@ வசந்த்

// தியாவின் பேனா said...

//விவசாய நிலங்கள் இப்பிடித்தான் போகுது இதைப் பற்றி யாரும் கதைக்க மாட்டினம்
கதை நல்ல நடை//

திரும்ப திரும்ப உரக்கப் பேசுவோம்
மாற்றம் ஒரு துளியேனும் வரும்

நன்றி @@ தியா

//க.பாலாஜி said...
இளமை விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...வாழ்த்துக்கள் அன்பரே....//

தகவலுக்கு நன்றி @@ பாலாஜி

//தமிழரசி said...
பாடல் மட்டுமல்ல பதிவும் மனசை பிசைகிறது...
எங்கே எதை நோக்கி போகிறோம் இந்த கேள்வி தான் எஞ்சுகிறது.....//

மனதைப் பிசைய ஆரம்பித்தால் ஒரு தீர்வு தெரிய வரும்

நன்றி @@ தமிழ்

SurveySan said...

சோகம் தான்.

ஆனா, நம்மூரிலும், ட்ராக்டர், மெஷின் வகையராக்களை அதிககமா உபயோகிக்க ஆரம்பிக்கணும்.
தனிப்பட்ட விவசாயியால் பண்ண முடியாமல் இருக்கலாம். கூட்டாக சேர்ந்து செய்யப் பார்க்கணும்.

அமெரிக்காவில், குறைந்தது 50 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய பெரிய வயல் வெளிகள் பாத்திருக்கேன். ஆட்கள் ரொம்ப கம்மியாதான் வேலை செய்யறாங்க. பெரிய பெரிய மெஷின்கள் தான் எல்லா வேலையும் பாக்குது.

ஈரோடு கதிர் said...

//SurveySan said...
சோகம் தான்.

ஆனா, நம்மூரிலும், ட்ராக்டர், மெஷின் வகையராக்களை அதிககமா உபயோகிக்க ஆரம்பிக்கணும்.
தனிப்பட்ட விவசாயியால் பண்ண முடியாமல் இருக்கலாம். கூட்டாக சேர்ந்து செய்யப் பார்க்கணும்.

அமெரிக்காவில், குறைந்தது 50 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய பெரிய வயல் வெளிகள் பாத்திருக்கேன். ஆட்கள் ரொம்ப கம்மியாதான் வேலை செய்யறாங்க. பெரிய பெரிய மெஷின்கள் தான் எல்லா வேலையும் பாக்குது.//

நன்றி @@ SurveySan

காமராஜ் said...

//“தொழில் தெரியுமா நல்லது, தெரியாத அது அதை விட நல்லது, எளிதில் கற்றுக்கொள்ளலாம்.” ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் 130-150 ரூபாய் சம்பளம், வீட்டிற்கு அருகிலே வந்து அழைத்துச் சென்று, மீண்டும் திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவர்//
இதுதான் தொழில் நகரங்கள் எல்லாவற்றுக்குமான நேர்கோட்டு விதி. கிராம இந்தியாவின் தலைவிதி.

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

ஈரோடு கதிர் said...

//காமராஜ் said...
இதுதான் தொழில் நகரங்கள் எல்லாவற்றுக்குமான நேர்கோட்டு விதி. கிராம இந்தியாவின் தலைவிதி.//

இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம் பகிர்வுக்கு நன்றி நண்பரே

விஜய் said...

மிக யதார்த்த பதிவு. மூன்றவது உலக போர் உணவுக்கான போர்தான்.

kindly visit

http://vijaykavithaigal.blogspot.com/

அன்புடன் நான் said...

காலங்காலமாக விவசாய நிலங்களில் கூலிகளாக இருந்தவர்கள், மிகக் குறைந்த அளவிலான நிலம், வைத்திருந்தவர்கள், கால்நடைகளை வைத்து பால் கறந்து ஊற்றி அதன் மூலம் வருமானம் ஈட்டியவர்கள் என பல தரப்பட்ட கிராம மக்கள் திடீரென காலை நேரங்களில் கிராமத்தின் மையச் சாலையில் ஹாரன் அடித்து அழைக்கும் பேருந்துகளுக்கு மகுடி இசைக்கு பணியும் பாம்பு போல் மயங்கி சாரை சாரையாய் போவதை உணர முடிகிறது. வெயிலில் வேலை செய்ய வேண்டியதில்லை, கோவணம் கட்டிக் கொண்டோ, சேலையை எடுத்துச் சொருகிக் கொண்டோ சேற்றில், மண்ணில் வேலை செய்ய வேண்டியதில்லை//

நல்ல பதிவுங்க நண்பரே...

இப்படியே போனால் மனிதை உலோக அலோகத்தைத்தான் மாத்திரை வடிவில் (உணவாக) விழுங்க நேரிடும்.

Pushpan said...

//“இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” //

One rupee rice given by the Govt

ஈரோடு கதிர் said...

// கவிதை(கள்) said...
மிக யதார்த்த பதிவு. மூன்றவது உலக போர் உணவுக்கான போர்தான். //

சரியான கருத்துதான்

நன்றி @@ விஜய்

// சி. கருணாகரசு said...

நல்ல பதிவுங்க நண்பரே...

இப்படியே போனால் மனிதை உலோக அலோகத்தைத்தான் மாத்திரை வடிவில் (உணவாக) விழுங்க நேரிடும்.//

ஆமாங்க

நன்றி @@ கருணா


// Pushpan said...
//“இப்பிடியே போன அப்புறம் சோத்துக்கு எங்க போவங்களோ தெரியல” //

One rupee rice given by the Govt//

அரசு தனியா அரிசி ஏதும் தயாரிக்குதுங்களா

நன்றி @@ புஷ்பன்

Anonymous said...

unmai sudukirathu. arasu eppothu vilikum? poonaiku mani yar kattuvath?

Unknown said...

பொதுவா விவசாயம் பார்த்தவர்கள் வேறு வேலைக்கு விரும்பி செல்வதில்லை.....வயிறு இருக்கிறதே,என்ன செய்வார்கள் பிழைப்புக்கு....இவ்ளோ பேசுகிற நாம் அதற்கு எதுவும் செய்யபோவதும் இல்லை....