குழந்தையின் கையில் கிடைத்த கூர்வாள்


ஏழு வருடங்களுக்கு முன்பு இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது உங்களுக்கு மனதின் ஓரத்தில் நினைவில் இருக்கலாம். தாக்குதல் நடந்த நேரம், கார்கில் போரில் உயிர் ஈந்த வீரர்களுக்கான சவப்பெட்டிகள் செய்ததில் ஊழல் நடந்ததாக கூறி ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரம்.

தொலைக்காட்சியில் பார்த்த சில காட்சிகளில் இரண்டு காட்சிகள் இன்னும் என் மனதில் நினைவிலிருக்கிறது.

தாக்குதல் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின், அதிரடிப்படை வீரர்கள் ஒன்றாய் கூடும்போது, ஒரு வீரர் கொஞ்சம் அவஸ்தையோடு மடங்கி உட்காருவார், ஒரு கேமரா அந்த வீரரின் முதுகைக் காட்டும், அந்த முதுகில் ஒரு ஓட்டை தெரியும், ஓட்டையிலிருந்து உதிரம் கொட்டும்...

தமிழகத்தைச் சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் தமிழக தொலைக் காட்சியொன்று தாக்குதல் குறித்து பேட்டியெடுக்கும், சிரித்துக் கொண்டே பேட்டி கொடுப்பார் “நாங்கள் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம், வெளியில் ஏதோ பட்டாசு வெடித்தது போன்று சத்தம் கேட்டது, அப்புறமாகத்தான் தெரிந்தது அது பயங்கரவாதிகள் தாக்குதல் என்று”

அந்த அரசியல்வாதி இன்னும் நலமாக இருக்கிறார், அந்த வீரர் பற்றி எதுவும் வரலாறு இருப்பதாக தெரியவில்லை.

தேச நலன் குறித்து உணர்வு பூர்வமாகவோ, கிண்டலாகவோ ஒரு வியாபாரியின் மனநிலையோடு ஒரு கட்டுரையோ, கவிதையோ எழுதிடுவது எழுத்து வன்மை படைத்த பலருக்கு இயல்பான ஒன்றுதான். ஆனால் மிகத்தேவை அதனையொட்டி ஒரு மாற்றம். மாற்றத்திற்கான விதை.

கால நீரோட்டத்தின் வேகத்தில், ஒரு தலைமுறை முந்தைய தலைமுறையின் தியாகங்களை மறந்து போவது மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஒரு தலைமுறை அடிமையாக தோற்று விட்ட தேசத்தை, பல தலைமுறைகளுக்குப் பின் கடுமையான, மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பின் மீட்டெடுத்திருக்கிறோம். அந்த மீட்டெடுத்தல் மிகுந்த வலியோடு, வலிமையோடு நடந்தேறியிருக்கிறது. மீட்டெடுத்ததின் பலன்களை பலவாறு அனுபவித்திருக்கிறோம். அதேசமயம் பல நேரங்களில் அந்த விடுதலை உணர்வை பலவாறு தவறுதலாக மாற்றியிருக்கிறோம். அதற்கான தியாகங்கள் புரிந்தவர்கள், கால ஓட்டத்தில் மிக இயல்பாக மறக்கப்படுகிறார்கள் அல்லது மறக்கடிக்கப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மறக்கடித்தலைச் செய்ததில் திரைப்படங்களை ஒட்டிய விடயங்களே பொழுதுபோக்கு என நஞ்சு புகட்டிய தொலைக்காட்சிகளுக்கும், விம்மிய மார்புகளை பிரதானமாய் அட்டைப் படத்தில் போட்டு விற்கும் பத்திரிக்கைகளுக்கும், போலியாய் ஒன்றைக் காட்டும் நடிகர், நடிகைகளுக்கும். மிகப்பெரும் நாயகர்களாய், நம் கனவுகளை திருடும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பங்கு உண்டு.

இரவில் வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை என கவிதை படித்த கவிஞன் மேல் எப்போதும் கோபம் உண்டு எனக்கு. விடிவதற்காக அந்த கவிஞன் செய்து கிழித்ததை நிரூபித்துவிட்டு, பின்னர் கவிதை படித்து கை தட்டல் வாங்கட்டும்.

இந்த தேசம் பற்றி அலுப்பு மனநிலையும், சலிப்பு குணமும் கொள்ள யாருக்கும் தகுதியில்லை. ஏனென்றால் நம் தேசத்தை தவறுதலாக மாற்றியதில் ஒவ்வொருவரின் தாத்தா, பாட்டியிலிருந்து அவரவர் பரம்பரைக்கு ஏதோ ஒரு பங்கு இருக்கிறது, கூடுதல் பங்கு அவசரகதியில் இயங்கும் இந்த தலைமுறைக்கு, குறிப்பாக எனக்கும், உங்களுக்கும்...

ஒரு நடிக, நடிகையின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு அரசியல்வாதியின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு கிரிக்கெட் வீரனின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு வியாபாரியின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில் நமக்கு இருக்கும் ஆர்வமும், சிலாகித்து பேசும் தன்மையும், அலசி ஆராயும் ஆராய்ச்சி மனப்பாங்கும்... இந்த தேசம் காக்க தொடர்ந்து உயிர் துறந்து கொண்டிருக்கும் உண்மையான வீரர்களை, தியாகிகளை அடையாளப் படுத்துவதில் ஏன் இல்லாமல் போய்விட்டது.

அரசாங்க அதிகாரியென்றாலே ஊழல் என நம் மனதிற்குள் சித்தரிக்கப்பட்ட காலத்தில் பொழைக்கத் தெரியாத ஆள் என்று சொல்லப்படும் நேர்மையான அதிகாரிகள் எண்ணற்றோர் இருக்கத்தானே செய்கிறார்கள் ஏன் அவர்களை யாரும் பெரிதாக அடையாளப் படுத்த மறந்து போகிறோம், அல்லது மறுத்து வருகிறோம்.

பொழுதுபோக்கு மற்றும் பொருளீட்டுவதை மட்டுமே மையப்படுத்தும் சிந்தனையை சற்றே மாற்றினால் மட்டுமே வரும் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் தியாகம் சென்றடையும். தியாகம் புரியாமல் கிடைக்கும் வசதியான வாழ்க்கை சினம் கொண்ட குழந்தையின் கையில் கிடைத்த கூர்வாள் போன்றது.





முழுவதும் படித்தீர்களா? பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

59 comments:

Jerry Eshananda said...

நல்ல பதிவு நண்பரே, தங்களின் சிந்தையை பாராட்டுகிறேன்,நீர் உயர ..நெல்லு உயரும் போல, சமூக மாற்றம்,தனி மனித மாற்றத்தில் இருந்து தொடங்குகிறது

Maximum India said...

உரத்த சிந்தனை!

இந்த எண்ணம் இன்றைய ஊடகங்கள் பலவற்றுக்கும் வருமேயானால் இந்தியாவிற்காக ரத்தம் சிந்தியவர்களின் தியாகத்திற்கு பொருள் கிடைக்கும்!

நன்றி.

vasu balaji said...

/அரசாங்க அதிகாரியென்றாலே ஊழல் என நம் மனதிற்குள் சித்தரிக்கப்பட்ட காலத்தில் பொழைக்கத் தெரியாத ஆள் என்று சொல்லப்படும் நேர்மையான அதிகாரிகள் எண்ணற்றோர் இருக்கத்தானே செய்கிறார்கள் ஏன் அவர்களை யாரும் பெரிதாக அடையாளப் படுத்த மறந்து போகிறோம், அல்லது மறுத்து வருகிறோம்./

சத்தியம் ஐயா. மிக மிக நேர்த்தியான கருத்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

நண்பா எல்லாமே சரிதான் சரியா நடந்துக்கிற சிலரும் தவறுகள் சுட்டிக்காட்டுவது தவறா?

அதுவும் தாய் நாட்டை யாரும் குறை பேசவில்லையே நாட்டில இருக்குற சில மனித மிருகங்களைத்தானே குறை சொல்றோம்....

என்ன நான் சொல்றது?

ப்ரியமுடன் வசந்த் said...

// நேர்மையான அதிகாரிகள் எண்ணற்றோர் இருக்கத்தானே செய்கிறார்கள் ஏன் அவர்களை யாரும் பெரிதாக அடையாளப் படுத்த மறந்து போகிறோம்,//

அன்றையிலிருந்து இன்று வரை காமராஜரை உயர்த்திதானே பேசுறோம்

அப்துல்கலாம் ஐயாவோட நேர்மைக்கு இன்றைக்கு அவர் எங்கு சென்றாலும் இருக்கும் மரியாதை தனி....

என்ன நான் சொல்றது?

ப்ரியமுடன் வசந்த் said...

//
பொழுதுபோக்கு மற்றும் பொருளீட்டுவதை மட்டுமே மையப்படுத்தும் சிந்தனையை சற்றே மாற்றினால் மட்டுமே வரும் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் தியாகம் சென்றடையும். தியாகம் புரியாமல் கிடைக்கும் வசதியான வாழ்க்கை சினம் கொண்ட குழந்தையின் கையில் கிடைத்த கூர்வாள் போன்றது.//

இது கரெக்ட்டு......

ப்ரியமுடன் வசந்த் said...

//
இந்த தேசம் பற்றி அலுப்பு மனநிலையும், சலிப்பு குணமும் கொள்ள யாருக்கும் தகுதியில்லை. //

இன்றைக்கும் வெள்ளையருடன் சேர்ந்து என்னோட பாட்டையா வைகை அணையின் மதகுகள் அமைத்தது பற்றி பெருமைதான் பேசுகிறோம்

அவர்கள் விட்டுச்சென்ற நம் தாய் நாட்டில் நம்மலால் எதுனாலும் செய்யமுடியும்ன்னு தான் எங்க ஊர்ல நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் இளைஞர் சுய உதவிக்குழு அமைத்து எளியவர்களுக்கு உதவி வருகிறோம்...

என்ன நான் சொல்றது......

ப்ரியமுடன் வசந்த் said...

//மிகப்பெரும் நாயகர்களாய், நம் கனவுகளை திருடும் கிரிக்கெட் வீரர்களுக்கும் உண்டு.//

ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க கதிர் அவங்களும் தாய் நாட்டிற்க்காக தான் விளையாடுகிறார்கள் அயல் நாட்டிற்க்கு அல்ல......

ப்ரியமுடன் வசந்த் said...

//இரவில் வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை//

அவர் கூறியது தாய் நாட்டின் கைகள் இன்னும் கட்டப்பட்டே உள்ளன சில மடச்சாம்பிராணிகளால் என்ற தோணியில் இருக்கலாம்...

அதுக்குப்போய் அவர கோவப்பட்டுட்டு...

ப்ரியமுடன் வசந்த் said...

//கடந்த 10 ஆண்டுகளில் மறக்கடித்தலைச் செய்ததில் திரைப்படங்களை //

கடந்த பத்து ஆண்டுகளில் தான் இந்தியன்,அந்நியன் போன்ற திரைப்படங்களும் வந்தன.....

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

ஆ.ஞானசேகரன் said...

//பொழுதுபோக்கு மற்றும் பொருளீட்டுவதை மட்டுமே மையப்படுத்தும் சிந்தனையை சற்றே மாற்றினால் மட்டுமே வரும் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் தியாகம் சென்றடையும். தியாகம் புரியாமல் கிடைக்கும் வசதியான வாழ்க்கை சினம் கொண்ட குழந்தையின் கையில் கிடைத்த கூர்வாள் போன்றது.//

உண்மைதான் நண்பாரே,... நல்ல இருகை பாராட்டுகள்

sakthi said...

அந்த அரசியல்வாதி இன்னும் நலமாக இருக்கிறார், அந்த வீரர் பற்றி எதுவும் வரலாறு இருப்பதாக தெரியவில்லை.

வருத்தமான விஷயம் தான்

அருமையான பதிவு

கிறுக்கல்கள்/Scribbles said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. பதிவை படித்து பலர் மாறலாம். மாறுதல் வரும் கதிர். வாழ்க!

ஈரோடு கதிர் said...

இடுகையைப் படித்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட இனிய இதயங்கள்

@@ jerry eshananda

@@ Maximum India said...

@@ வானம்பாடிகள் said...

@@ ஆ.ஞானசேகரன் said...

@@ sakthi said...

@@ Sampathkumar said...

ஆகியோருக்கு நன்றிகள் பல

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
வாழ்த்துகள்!//

நன்றி மாப்பு இது என் 50வது இடுகை

Venkatesan said...

இரவில் வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை என கவிதை படித்த கவிஞன் மேல் எப்போதும் கோபம் உண்டு எனக்கு. விடிவதற்காக அந்த கவிஞன் செய்து கிழித்ததை நிரூபித்துவிட்டு, பின்னர் கவிதை படித்து கை தட்டல் வாங்கட்டும்.

The topic is really excellent. this is urgent need to all.But


I'm not agree with this sir.

ஈரோடு கதிர் said...

இனிய வசந்த்

என்னுடைய இடுகையின் சில கருத்துக்களை உங்களிடம் விளக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

தினம் தினம் நம் தேசம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் தங்கள் வாழ்வை தியாகம் செய்த நபர்களை நம் தலைமுறையே கூட கிட்டத்தட்ட மறந்து விட்டது.

மராட்டிய இனவெறியைத் தூண்டிய ராஜ்தாக்கரேவை நமக்கு தெரிந்த அளவிற்கு, நவம்பர் 26ம் தேதி தாக்குதலில் உயிர் இழந்த காவல் உதவி ஆப்வாளர் துக்காராம் அவர்களை எத்தனை பேருக்கு தெரியும். உயிரோடு பிடிபட்ட தீவிரவாதி அன்று நடந்த போலீஸ் தாக்குதலில் ஒரு கட்டத்தில் காரில்
இருந்து கீழே விழுகிறான். அருகில் நின்ற ஓய்வுபெறும் வயதில் இருந்த உதவி ஆய்வாளர் துக்காராம் காசாபின் துப்பாக்கியை இறுக பிடித்துக் கொள்கிறார். கசாப் தப்பிக்க முயல்கிறான் இவர் விடவேயில்லை, அவன் துப்பாக்கிவிசை அழுத்த இவர் உடல் சல்லடையாக துளைக்கப் படுகிறது. துப்பாக்கியை விடாமலேயே சரிந்து விழுகிறார். இதெல்லாம் சில விநாடிகளில் நடைபெறுகிறது. அவனும் பிடிபடுகிறான்....

சொல்லுங்கள்...

//கடந்த 10 ஆண்டுகளில் மறக்கடித்தலைச் செய்ததில் திரைப்படங்களை ஒட்டிய விடயங்களே பொழுதுபோக்கு என நஞ்சு புகட்டிய தொலைக்காட்சிகளுக்கும்//


ஒரு நடிகனை அல்லது ஒரு சினிமாவை / ஒரு பந்தை கட்டையால் தட்டிவிட்டு ஓடுபவனை திரும்ப திரும்ப காட்டி நம் மேல் திணிக்கும்
ஊடகங்கள், ஏன் இவர்களின் தியாகங்களை நமக்கு அடையாளம் காட்ட மறுக்கின்றன.

//அன்றையிலிருந்து இன்று வரை காமராஜரை உயர்த்திதானே பேசுறோம்

அப்துல்கலாம் ஐயாவோட நேர்மைக்கு இன்றைக்கு அவர் எங்கு சென்றாலும் இருக்கும் மரியாதை தனி....//

எங்கள் பக்கத்து மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஆட்சியர் தினம் ஒரு கிராமத்திற்கு சென்று அன்று இரவு அந்த கிராமத்து மக்களோடு உணவு உண்டு, அவர்களுடனேயே தங்கி குறைகளைக் கேட்டு களைய முற்படுகிறார். ஒரு கோடி மரக் கன்றுகள் அந்த மாவட்டத்தில் நடத் திட்டமிட்டு இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது...

இவரை எத்தனை பேருக்குத் தெரியும்

//நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் இளைஞர் சுய உதவிக்குழு அமைத்து எளியவர்களுக்கு உதவி வருகிறோம்... //

நல்லது

//தாய் நாட்டிற்காக தான் விளையாடுகிறார்கள் அயல் நாட்டிற்க்கு அல்ல......//

வெறும் விளையாட்டுதானே நண்பா...

இந்திய தேசத்தின் பொதுத்தேர்தல் நடந்த நேரத்தில் இந்த பொறுக்கிகள் வெளிநாட்டில் போய் விளையாட வேண்டிய அவசியம் என்ன தோழா. எல்லாம் காசுதானே...

அந்த கருமம் பிடிச்ச விளையாட்ட தேர்தலுக்கு முன் / பின் இங்கேயே விளையாடித் தொலைத்திருந்தால் நம் நாட்டிற்குள்ளேயே எத்தனை வியாபாரம் நடந்திருக்கும் தெரியுமா?


இனிய...வசந்த்

தங்கள் விரிவான பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துகளைப் பகிர்துகொண்டைமைக்கு மீண்டும் நன்றிகள். உங்கள் கருத்துக்களை பெரிதும் மதிக்கிறேன்

நன்றி

ஈரோடு கதிர் said...

//Venkatesan said...
The topic is really excellent. this is urgent need to all.But
I'm not agree with this sir.//

நன்றி வெங்கடேஷ்

என்னுடைய எல்லாக் கருத்துகளும் இன்னொருவருக்கு ஏற்புடையாதாக இருக்க வாய்ப்பில்லை. அந்நிலையில் வலுவான காரணம் தங்களிடம் இருப்பின் என் சிந்தனையில் மாறுதல்களை ஏற்க நான் தயார்

வெங்கடேஷ்.... மனம் திறந்த தங்கள் கருத்திற்கு மீண்டும் ஒரு நன்றி

காமராஜ் said...

//போலியாய் ஒன்றைக் காட்டும் நடிகர், நடிகைகளுக்கும். மிகப்பெரும் நாயகர்களாய், நம் கனவுகளை திருடும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பங்கு உண்டு.//

அபாரம் கதிர்.

நேர்மை கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்ல
கஷ்டத்துக்குள்ளாகிறது.

காமராஜ் said...

ஐம்பதா?, அஹா வாழ்த்துக்கள் தோழா.

ஆ.ஞானசேகரன் said...

50 வது பதிவுக்கு என் வாழ்த்துகள் நண்பரே

க.பாலாசி said...

//பொழுதுபோக்கு மற்றும் பொருளீட்டுவதை மட்டுமே மையப்படுத்தும் சிந்தனையை சற்றே மாற்றினால் மட்டுமே வரும் தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் தியாகம் சென்றடையும்//

மொத்த இடுகையிலும் சிந்திக்கதக்க வரிகள். இது சரி இது தவறு என்று சொல்லிவிடமுடியாத பதிவு, நாம் செய்யும் தவறுகளை உணரும்பட்சத்தில்.

சினிமா நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு கட்அவுட்டும பாலபிஷேகமும் செய்யும் இன்றைய தலைமுறையின் தலை சரியாக வாரப்படவில்லை. காரணம் ஊடகங்கள் காட்டும் மஞ்சள் நனைத்த பக்கங்கள் கொண்ட பகட்டு விடயங்கள்.

குற்றங்கள் இல்லையென்றால் ஊடகம் என்று ஒன்று இல்லை என்று தாங்கள் ஒருமுறை கூறியிருந்தீர்கள். மறுக்கவில்லை. அதைவிட சினிமா என்றொரு மாயை இல்லையென்றால் அனைத்து பத்திரிக்கைகளும்(ஒருசில நீங்கலாக) உடலுறவை காட்சிப்படுத்துவதாகவே இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
நடிகைகளின் மார்ப்பிலும், அவளின் தொப்புலிலும் இருக்கும் ஆழத்தை காட்ட முயலும் ஒளிப்பதிவு எந்திரங்களின் கண்களுக்கு, சுதந்திரத்திற்காகவோ, அல்லது சுதந்திரத்தை பாதுக்காக்கவோ துப்பாக்கி அல்லது துப்பாக்கி இல்லாமல் போராடிய, போராடும் நம் தியாகிகளை, இராணுவ வீரர்களை, இன்னபிற பொதுநலத்தோண்டர்களை அடையாளம் காட்ட தெரியவில்லை. ஏனெனில் வர்த்தகம் என்ற ஒரே கொள்கையுடைய ஊடகங்களே நம்மை வழிநடத்துகின்றன.

நாம் நடந்து செல்லும் பாதைகளில் ஓடிக்கொண்டே இருக்கிறோமே தவிர, பாதை அமைத்தவனை நினைப்பதில்லை. தவறு என்னிடமும் இருக்கலாம், நான் செய்வது தவறு என்று நான் உணரும்வரையில்.

நன்றி அன்பரே... தங்களின் இடுகை என்போன்ற இளைஞர்களின் வாழ்வியல் வழிதனில் கிடைக்கும் அனுபவமாக கொள்ள உதவிடும் என்பதில் ஐயமில்லை.

ஈரோடு கதிர் said...

காமராஜ் said...
//நேர்மை கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்ல
கஷ்டத்துக்குள்ளாகிறது.//

//ஐம்பதா?, அஹா வாழ்த்துக்கள் தோழா.//

//ஆ.ஞானசேகரன் said...
50 வது பதிவுக்கு என் வாழ்த்துகள் நண்பரே//


நேர்மை அடையாளப்படுத்தப் படாததுதான் வேதனை

பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும்
நன்றி
@@ காமராஜ்
@@ ஞானசேகரன்

க.பாலாசி said...

கசியும் மௌனத்திலும் ஐம்பது இடுகைகள் சற்றே வேகமாக....

பகிர்வோம் நம் மௌனங்களை சப்தமாக...வாழ்த்துக்களுடன்...
க. பாலாஜி

ஈரோடு கதிர் said...

க. பாலாஜி said...

//நாம் நடந்து செல்லும் பாதைகளில் ஓடிக்கொண்டே இருக்கிறோமே தவிர, பாதை அமைத்தவனை நினைப்பதில்லை.//

சரிதான் பாலாஜி

//தங்களின் இடுகை என்போன்ற இளைஞர்களின் வாழ்வியல் வழிதனில் கிடைக்கும் அனுபவமாக கொள்ள உதவிடும் என்பதில் ஐயமில்லை.//

நல்லது...

மிக விரிவான பின்னூட்டத்தைப் பார்க்கும் போது, மிக நன்றாக உள்வாங்கிப் படித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

மிக்க நன்றி தோழா

vasu balaji said...

ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். விவரங்கள் என் திண்ணையில் http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html

ஈரோடு கதிர் said...

//க. பாலாஜி said...
கசியும் மௌனத்திலும் ஐம்பது இடுகைகள் சற்றே வேகமாக....//
பகிர்வோம் நம் மௌனங்களை சப்தமாக...வாழ்த்துக்களுடன்...

நன்றி @ பாலாஜி

//வானம்பாடிகள் said...
ஒரு சின்ன விருது நண்பரே.//

தங்கள் தரமான அன்பு பாராட்டும் விருதிற்கு நன்றி ஐயா...

சீமான்கனி said...

//இந்த தேசம் காக்க தொடர்ந்து உயிர் துறந்து கொண்டிருக்கும் உண்மையான வீரர்களை, தியாகிகளை அடையாளப் படுத்துவதில் ஏன் இல்லாமல் போய்விட்டது.//

உயர்ந்த கருத்துகள்......
தங்க பதிவு...
வாழ்த்துகள்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

நல்வாழ்த்துகளுக்கு நன்றி

@seemangani
@ஸ்ரீ

ப்ரியமுடன் வசந்த் said...

தங்கள் விளக்கங்கள் அபாரம் கதிர்

நன்றி

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

மேலும் பல இடுகைகள் வெளிவர வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
மேலும் பல இடுகைகள் வெளிவர வாழ்த்துக்கள்//

நன்றி @ வசந்த்

சந்தனமுல்லை said...

மிக அருமையான இடுகை! உங்கள் சிந்தனைகள் யோசிக்க வைக்கின்றன! வாழ்த்துகள்!

jothi said...

சமீப காலமாக இது போல நல்ல படைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நல்ல பதிவிற்கும் சிறந்த தமிழிற்கும் நன்றிகள்.

தியாகங்கள் மறக்கப்பட கூடாதுதான். உங்கள் ஆதங்கம் சரியானதுதான், ஆனால் வியாபார நோக்கம் மட்டுமே கொண்டு உருவாக்கி செயல்படும் மீடியாக்கள் இதில் கவனிக்கப்பட அவசியமில்லை. ஏன் போதிகைதான் தேசப்பற்றுள்ள நிகழ்ச்சிகளை வழ்ங்குகிறது. யார் பாக்குறா?? மக்கள் எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்து சொல்கிறோமா? இல்லை. எடுத்து செல்ல வேண்டியது நம் கடமை. நாம் குடிக்கும் தண்ணீர் நம் மூதையார்களின் ரத்தமே என்பதை நாம் உணரவில்லை. இந்த தியாகங்களை மறக்கமால் கொண்டு செல்வது ஆள்பவர்களின் கடமையும் கூட,.

jothi said...

//கடந்த 10 ஆண்டுகளில் மறக்கடித்தலைச் செய்ததில் திரைப்படங்களை ஒட்டிய விடயங்களே பொழுதுபோக்கு என நஞ்சு புகட்டிய தொலைக்காட்சிகளுக்கும், விம்மிய மார்புகளை பிரதானமாய் அட்டைப் படத்தில் போட்டு விற்கும் பத்திரிக்கைகளுக்கும், போலியாய் ஒன்றைக் காட்டும் நடிகர், நடிகைகளுக்கும். மிகப்பெரும் நாயகர்களாய், நம் கனவுகளை திருடும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பங்கு உண்டு.//

இவைகளுக்கும் நம் தியாக மறதிக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏன் தாழ்மையான கருத்து. சரி,.. சினிமாவும், கிரிக்கெட்டும் இல்லை என்று வைத்து கொள்ளுங்கள், நாம் இவர்களின் தியாகங்ககளை நினைவில் வைத்திருப்போமா?? கண்டிப்பாக கிடையாது. நமக்கே அந்த எண்ணம் இல்லாமல், ஓடுவதே வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணம் நமக்கு வேண்டும், அது இல்லை என்றால் எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டே இருப்போம். நெஞ்சில் கை வைத்து நம் நண்பர்களை சொல்ல சொல்லுங்கள் அப்துல் கலாம் ஒரு மிக சிறந்த தேசப்பற்றுள்ள தலைவர்களில் முதலில் இருப்பவர். அவர் பேரை குழந்தைகளுக்கு வைக்கும் எண்ணம் உள்ளவர்கள் யார் யார்?

jothi said...

//இரவில் வாங்கினோம் இன்னும் விடியவேயில்லை என கவிதை படித்த கவிஞன் மேல் எப்போதும் கோபம் உண்டு எனக்கு. விடிவதற்காக அந்த கவிஞன் செய்து கிழித்ததை நிரூபித்துவிட்டு, பின்னர் கவிதை படித்து கை தட்டல் வாங்கட்டும்.//

உண்மையான வரிகள். எல்லோருக்கும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு உள்ளது. மேடை ஏறி சொதப்பும் நம் குழந்தையை நாமே கேலி செய்வதற்கும் இதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.

அகல்விளக்கு said...

//ஒரு நடிக, நடிகையின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு அரசியல்வாதியின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு கிரிக்கெட் வீரனின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில், ஒரு வியாபாரியின் வெற்றி தோல்வியில், அந்தரங்கத்தில் நமக்கு இருக்கும் ஆர்வமும், சிலாகித்து பேசும் தன்மையும், அலசி ஆராயும் ஆராய்ச்சி மனப்பாங்கும்... இந்த தேசம் காக்க தொடர்ந்து உயிர் துறந்து கொண்டிருக்கும் உண்மையான வீரர்களை, தியாகிகளை அடையாளப் படுத்துவதில் ஏன் இல்லாமல் போய்விட்டது.//

உறைத்தது.

உரக்கச் சொல்வோம்........

jothi said...

//இந்த தேசம் காக்க தொடர்ந்து உயிர் துறந்து கொண்டிருக்கும் உண்மையான வீரர்களை, தியாகிகளை அடையாளப் படுத்துவதில் ஏன் இல்லாமல் போய்விட்டது//

காந்தி, காமராஜர், அம்பேத்கார், முத்துராமலிங்க தேவர் போன்றோரை வெள்ளையன் சிறையில் வைக்கப்பயந்தான். நாம்தான் அவர்களை கம்பிகளுக்குள் வைத்து அழகு பார்க்கிறோம். தியாகளுக்கு நாம் தரும் மரியாதை என்னவென்று தெரிகிறதா?

Muniappan Pakkangal said...

Nalla karuthaana pathivu.

அன்புடன் அருணா said...

சிறந்த சிந்தனைக்கும் 50-க்கும் பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!!!

ஆரூரன் விசுவநாதன் said...

கதிர்....
வாழ்த்துக்கள்

ஆட்சியாளர்களூம் அவர்தம் முட்டாள் ஆலோசகர்களும் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான் இங்கே மனிதம் கொள்ளப்படுகிறது.

பிந்தரன்வாலே வை வளர்த்துவிட்டு, பின் அவனைபிடிக்க ராணுவத்தை பொற்கோவிலுக்குள் அனுப்பி அப்பாவி ராணுவ வீரர்களை சாகடித்த பெருமை தாய்க்கு என்றால்....

அயோக்கியன் ஜெயவர்தனேயுடன் ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தம் போட்டு அமைதிப்படை என்ற பெயரில் ஒரு படையை அனுப்பி ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை உயிரிழக்க செய்த பெருமை மகனுக்கு...

அனுஆயுதம் வைத்திருக்கிறார், ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டோடு சதாம் உசேனை பிடிக்க சென்ற அமெரிக்க படையினரின் இழப்பிற்க்கு யார் பொறுப்பேற்பது.

ஆப்கானிஸ்தானில் அவதிப்படும் அமெரிக்கப் படை இதுவரை கொடுத்த விலையென்ன?

இந்த அயோக்கிய அரசியல்வாதிகளும், அவர்தம் பலமும் எக்கேடு கெட்டுப்போனால் என்ன?
24/11, மும்பை தாக்குதல், ஆப்கானிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை இதையெல்லாம் எங்கே போய்ச்சொல்ல......

ஆரூரன்

நாகராஜன் said...

கதிர்,

உங்களது கருத்துக்கள் ஒவ்வொருவரது மனசாட்சிக்கும் சளீர் சளீர் என்ற சவுக்கடி என்று நினைக்கிறேன். கொஞ்சம் பேராவது உங்களது கருத்துக்களை மனதில் நிறுத்தினாலே அது ஒரு மாற்றம் தான்...

ஐம்பதாவது இடுகைக்கு பாராட்டுகள் கதிர். தொடரட்டும் உங்களது பயணம்...

அன்புடன்,
ராசுக்குட்டி.

ஈரோடு கதிர் said...

@@ சந்தனமுல்லை

@@ Muniappan Pakkangal

@@ அன்புடன் அருணா

வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி நல்ல இதயங்களே

@@ ராசுக்குட்டி
//கருத்துக்களை மனதில் நிறுத்தினாலே அது ஒரு மாற்றம் தான்... //

திரும்ப திரும்ப இதற்காக ஏதேனும் செய்வோம்..

நன்றி ராசுக்குட்டி

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
ராணுவ வீரர்களை சாகடித்த பெருமை தாய்க்கு என்றால்....

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை உயிரிழக்க செய்த பெருமை மகனுக்கு...

அமெரிக்க படையினரின் இழப்பிற்க்கு யார் பொறுப்பேற்பது.

அமெரிக்கப் படை இதுவரை கொடுத்த விலையென்ன?

24/11, மும்பை தாக்குதல், ஆப்கானிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை இதையெல்லாம் எங்கே போய்ச்சொல்ல......//

நியாயமான கேள்விகள்தான்

வாழ்த்திற்கு நன்றி ஆரூரன்

ஈரோடு கதிர் said...

// jothi said...
ஆனால் வியாபார நோக்கம் மட்டுமே கொண்டு உருவாக்கி செயல்படும் மீடியாக்கள் இதில் கவனிக்கப்பட அவசியமில்லை.//

வியாபாரம் மட்டுமே வாழ்க்கை என்றால் யார்தான் சமூகத்தில் மாற்றத்தை விதைப்பது.

ஊடகங்கள் திரும்ப திரும்ப சொல்வதை மக்கள் மனது தானாக ஏற்கிறது. ஊடகங்களுக்கு மிகுந்த பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பது என் கருத்து


//ஏன் போதிகைதான்தேசப்பற்றுள்ள நிகழ்ச்சிகளை வழ்ங்குகிறது. யார் பாக்குறா??//

15 ஆண்டுகளில் தனியார் தொலைக்காட்டிகள் வந்து சினிமாவை கடை விரிக்கும் வரை தூர்தர்சன் பார்த்து நன்றாகத்தானே இருந்தோம்

//அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்து சொல்கிறோமா? இல்லை. எடுத்து செல்ல வேண்டியது நம் கடமை. நாம் குடிக்கும் தண்ணீர் நம் மூதையார்களின் ரத்தமே என்பதை நாம் உணரவில்லை.//

மிகச் சரியான வார்த்தைகள்

நம் தலைமுறை உழைப்போம், உணர்த்துவோம்

//இவைகளுக்கும் நம் தியாக மறதிக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏன் தாழ்மையான கருத்து. சரி,.. சினிமாவும், கிரிக்கெட்டும் இல்லை என்று வைத்து கொள்ளுங்கள், நாம் இவர்களின் தியாகங்ககளை நினைவில் வைத்திருப்போமா?? கண்டிப்பாக கிடையாது.//

சினிமாவும், கிரிக்கெட்டும் நம் நேரங்களை பெரிதும் திருடிவிட்டது. அந்த நேரங்களில். தினம் தினம் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தன் உயிரை தியாகம் செய்யும் வீரனின் தியாகத்திற்கு ஊடகம் முக்கியத்துவம் கொடுக்காமல் சினிமாவும், விளையாட்டுமே மனிதனின் முக்கிய அங்கம் என்பதுபோல் ஒரு பிரமையா வலுவாக ஏற்படுத்தியிருப்பதாக கருதுகிறேன்

//நெஞ்சில் கை வைத்து நம் நண்பர்களை சொல்ல சொல்லுங்கள் அப்துல் கலாம் ஒரு மிக சிறந்த தேசப்பற்றுள்ள தலைவர்களில் முதலில் இருப்பவர். அவர் பேரை குழந்தைகளுக்கு வைக்கும் எண்ணம் உள்ளவர்கள் யார் யார்?//

கடினமான கேள்விதான். நிச்சயம் சிந்திக்க வேண்டும்


//மேடை ஏறி சொதப்பும் நம் குழந்தையை நாமே கேலி செய்வதற்கும் இதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.//

சரிதான் ஜோதி

//காந்தி, காமராஜர், அம்பேத்கார், முத்துராமலிங்க தேவர்//

//நாம்தான் அவர்களை கம்பிகளுக்குள் வைத்து அழகு பார்க்கிறோம். தியாகளுக்கு நாம் தரும் மரியாதை என்னவென்று தெரிகிறதா?//

நிச்சயம் சிந்திக்க வேண்டிய வரிகள்

ஜோதி, தங்களது விரிவான பின்னூட்டமும், மனம் திறந்த ஆரோக்கியமான கருத்துக்களும் எனக்கு மேலும் சில நல்ல சிந்தனை விதைகளைத் தூவியுள்ளது

நன்றி

//அகல் விளக்கு said...
உறைத்தது.
உரக்கச் சொல்வோம்........//

நன்றி @@ அகல்விளக்கு

நாஞ்சில் நாதம் said...

ஆழ்ந்த கருத்துக்கள்.

ஐம்பதாவது இடுகைக்கு பாராட்டுகள் கதிர். தொடரட்டும் உங்களது பயணம்...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நாஞ்சில் நாதம்

r.sprabhu said...

read the article while reading, my thoughts are stiimulated, heart feels weighter. but if you say some fruitfil ideas to execute such changes it will be helpful for some readers to work on it. until then your article is incomplete.

reka ragavan said...

ஐம்பதாவது இடுகையில் கிடைத்த "குழந்தையின் கையில் கிடைத்த கூர்வாள்" தலைப்பை போலவே கூர்மையாக இருந்தது. வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கும் நல்ல கருத்துக்களுக்கும்.

ரேகா ராகவன்

ஈரோடு கதிர் said...

//r.s.prabhu said...
but if you say some fruitfil ideas to execute such changes it will be helpful for some readers to work on it. until then your article is incomplete.//

இனிய பிரபு...
உங்கள் கருத்தை ஏற்கிறேன், அதே சமயம், இது என் மனதில் உதித்த ஒரு சிந்தனைக் கீற்று மட்டுமே... இது குறித்த உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... ஊர் கூடித்தேர் இழுப்போம்

//reka ragavan said...
வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கும் நல்ல கருத்துக்களுக்கும்.//

நன்றி @@ ரேகா ராகவன்

வால்பையன் said...

சிரித்து கொண்டே பேட்டி கொடிஉப்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல!
அந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகலும் தான்!
பலியான வீரர்களின் குடும்பத்தினர் அரசு கொடுத்த விருதையும், பணத்தையும் திரும்ப கொடுத்த பின்னரும், அரசு அறிவில்லாமல் தீவிரவாதிகளுக்கு சொம்பு தூக்கிகிட்டு தான் இருக்கு!

ஈரோடு கதிர் said...

//வால்பையன் said...
பலியான வீரர்களின் குடும்பத்தினர் அரசு கொடுத்த விருதையும், பணத்தையும் திரும்ப கொடுத்த பின்னரும், அரசு அறிவில்லாமல் தீவிரவாதிகளுக்கு சொம்பு தூக்கிகிட்டு தான் இருக்கு!//

வேதனையானது தான்...

நன்றி @@ அருண்

பாலகுமார் said...

கதிர்... சவுக்கடி சிந்தனைகள்...

ஆனால் நம் மக்களுடைய ( அன்னைவரையும் சேர்த்து தான் ) சிந்தனையை அவ்வளவு எளிதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உங்களக்கு உள்ளதா?

ஈரோடு கதிர் said...

//பாலகுமார் said...
அவ்வளவு எளிதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உங்களக்கு உள்ளதா?//

எறும்பு ஊற கல்லும் தேயும்...

நன்றி @@ பாலகுமார்

Unknown said...

நல்ல பதிவு..

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்..

hariharan said...

நல்ல பதிவு!!!

//அரசாங்க அதிகாரியென்றாலே ஊழல் என நம் மனதிற்குள் சித்தரிக்கப்பட்ட காலத்தில் பொழைக்கத் தெரியாத ஆள் என்று சொல்லப்படும் நேர்மையான அதிகாரிகள் எண்ணற்றோர் இருக்கத்தானே செய்கிறார்கள் //

ஊழல் பேர்வழி நமக்குத் தெரிந்தவ ராயின் அவரின் முறைகேடான சம்பாதியத்தை புகழ்கிறோம், மூன்றாம் நபரானால் சாபம் கொடுக்கிறோம்.

நன்றி!!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கிருத்திகாதரன் said...

அருமை...அவர்கள் பெயரை ஒரு தெருவுக்கு வைப்பதுதான் மிக பெரிய மரியாதை..அதோடு முடிந்து விடும்..எல்லை படையில் ஒற்றாக வேலை செய்தவரின் மனைவி என் தோழி..அவள் சொல்லுவாள் தினம் ஒரு மரணம்..அதை சந்திக்காவிட்டால் எங்களுக்கு பீதி..பெரிதாக ஏதோ திட்டமிடுவதால் சில மரணங்களை நிறுத்தி வைப்பார்கள் என்று..