புத்தகத் திருவிழாவில் பாரதி கிருஷ்ணகுமார்
எழுதியது
ஈரோடு கதிர்
பாரதிகிருஷ்ணகுமார்
பாரதி கிருஷ்ணகுமார் என்னுடைய விருப்ப பட்டியலில் உள்ள ஒரு அழுத்தமான ஆளுமை படைத்த பேச்சாளர். இன்று தமிழகத்தின் ஆகச்சிறந்த பேச்சாளர்களில் பாரதி கிருஷ்ணகுமாருக்கு ஒரு சிறப்பான இடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
கீழ்வெண்மனியில் ஆதிக்க சாதியினரால் தலித்துகள் உயிரோடு எரித்த சம்பவத்தை “இராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படம் மூலமும், கும்பகோணத்தில் பள்ளிக் குழந்தைகள் எரிந்ததை “என்று தணியும்” என்ற ஆவணப்படம் மூலமும் அழுத்தமாகப் பதிவு செய்தவர். “என்று தணியும்” ஆவணப்படத்தை பார்த்த பின்பு பாரதி கிருஷ்ணகுமார் மேல் ஒரு தணியாத அன்பும், மரியாதையும் எனக்குண்டு.
கும்பகோணத்தில் அந்த கொடிய மதிய நேரத்தில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வெறும் கரிக்கட்டைகளாக மாறிப் போன துயரத்தை தற்காலிக விளம்பரமாக பல தரப்பினரும், பணம் கொடுத்தும், அபத்தமாக ஆறுதல் கூறியும், ஊர்வலம் நடத்தியும் தாங்கள் போட்ட வேசத்திற்கு ஆடி முடித்தனர். துயரம் கவ்விய அந்த பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதலாக இருந்த முதல் மனிதர் அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு. ராதாகிருஷ்ணன், பல வகைகளில் ஆறுதல் அளித்த இவர் ஒரு கட்டத்தில் அந்த தாய்மார்கள் தாங்கள் செய்திருந்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்தவர்.
அடுத்து அவர்களுடைய ரணங்களை மிக அழுத்தமாக பதிவு செய்து, அந்த கொலை பாதகக் குற்றத்தின் பின்னணியில் உள்ள பாதகர்களைப் பற்றியும், மிகக் கேவலமாக, வெறும் வியாபாரமாக சீரழிக்கப்பட்டு விட்ட கல்வியைப் பற்றிய மிகப்பெரிய ஆய்வறிக்கையாக அந்த ஆவணப்படம் மூலம் பதிவு செய்தவர்.
அந்தப் படம் என்னை உலுக்கிய ஒரு படம், அதன் பின் பாரதி கிருஷ்ணகுமார் என்ற பெயர் எனக்குள்ளே அதிர்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் ஒன்று. அவருடைய உரையென்றவுடன் மனது முழுக்க ஒரு தாகம் நிரம்பியிருந்தது.
அவர் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூட சொல்லலாம். பாரதி கிருஷ்ணகுமார் எங்கள் பகுதிக்கு அடிக்கடி வரும் பேச்சாளரும் கூட. அவர் அப்படி வருவதற்கு முக்கிய அடித்தளமிட்டவர் அரிமா. தனபாலன் என்பது மிகையில்லை. மதியம் 12 மணியிருக்கும், நண்பர் அரிமா. தனபாலன் அலைபேசியில் அழைத்து “பாரதி கிருஷ்ணகுமாரை சந்திக்கச் செல்கிறேன் வருகிறீர்களா” என கேட்க மிகுந்த மகிழ்வோடு அவரை சந்திக்கச் சென்றேன். மேடையில் பலமுறை அவரைச் சந்தித்திருந்தாலும் அறையில் பக்கத்தில் சந்திப்பது கொஞ்சம் சிலிர்ப்பூட்டத்தான் செய்கிறது. நண்பர் தனபாலன் என்னை “இவர் கதிர், வலைப்பூவில் எழுதி வருகிறார்” என்றவுடன், அவர் கேட்டது “அப்படியா... கவிதை எழுதுகிறீர்களா... அது உங்களைத் தூங்க விடாதே” என்றார். சுமார் 30 நிமிடங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது, இந்த மாதிரியான இடங்களின் நான் பேசாமல், இறுக்கமாக, உன்னிப்பாக கவனிப்பது வழக்கம். நன்றாக கவனித்தேன், பல நயம் மிகு விசயங்களையும் உள்வாங்கிக் கொண்டதொரு பயனுள்ள மதிய நேரம்தான்.
புத்தகத் திருவிழாவில்...
மூன்றாவது நாளாக செல்கிறேன். குழந்தையும், மனைவியும் வருகிறேன் எனக்கூற உடனே பக்கத்து வீடு, எதிர்வீடு என மூன்று குழந்தைகள், நான்கு பெரியவர்கள் என காரில் ஒரு ஷேர் ஆட்டோ பாணியில் அழைத்துச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சி இவர்களும் புத்தகத் திருவிழா வருகிறார்களேயென்று.
எய்த விரும்பியதை எய்தலாம் என்ற தலைப்பில் பாரதிகிருஷ்ணகுமார்
படைப்பாளிகள் சார்பில் கௌரவிக்கப்பட்ட கு.சின்னப்ப பாரதியின் பெருமைகளை நினைவு படுத்தியது உரையின் துவக்கம். 1975 ஆம் ஆண்டு அவசர நிலை நாடு முழுவதும் அமலில் இருந்தபோது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப் பட்டது, அதை உருவாக்கியதில் கு.சி.ப வின் பங்கு மிகப்பெரியது, மேலும் அது உருவாக்கப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற முதல் படைப்பாளியும் கு.சி.ப என்று குறிப்பிட்டதோடு “சக்ரவர்த்தியின் நிர்வாணத்தை குழந்தை பயமில்லாமல் சொல்லும், படைப்பாளி என்பவன் அந்த குழந்தையைப் போன்றவன்” என்ற உதாரணம் அருமையாக இருந்தது. புத்தகம் இல்லாத வீடு மயானம் என்ற கருத்து வலுவான ஒன்று. உரை நவரசங்களை தன்னுள்ளே கொண்ட ஒன்றாக இருந்தது. பேச்சு நெடுகிலும் நையாண்டியும், கோபமும், உணர்ச்சிக் களிப்பும், அழுகையின் வலியும் தொடர்ந்து மாறி மாறி நடனமாடியது சுகமான ஒன்று.
வியட்நாம் போரில் விழுந்த நைட்ரஜன் குண்டுகளிலிருந்து தப்பிக்க ஒரு குடும்பம் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொள்கிறது. பதுங்கு குழிக்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, நான்கு வருடங்கள் கழித்து குடும்பம் வெளியே வருகிறது, அந்தக் குழந்தை சூரியனைப் பார்த்து ஆச்சரியமாக கேட்கிறது “இது என்ன!?” என்று...
1992ல் மும்பையில் குண்டு வெடிக்கிறது. வேலைக்குப் போன மனைவி திரும்பவில்லை. கணவன் மனைவியின் அலுவலம் சென்று பார்க்கிறான் ஒரு பெண் கருகிக்கிடக்கிறாள். எல்லோரும் அது மனைவி என்று உறுதிப்படுத்த, சடலத்தை எடுத்து வந்து இறுதிக் காரியம் செய்துவிட்டு துக்கம் உயிரை உருக்க வீட்டில் கிடக்கிறான். அடுத்ட நாள் அதிகாலை 5.30 மணிக்கு கதவு தட்டப்படுகிறது, இந்த நேரத்தில் யார் என்று கதவைத் திறக்கிறான், அவன் மனைவி உயிரோடு நிற்கிறாள், கணவன் கதறியழுகிறான், மனைவியால் எவ்வளவு போராடியும் அவன் அழுகையை நிறுத்த முடியவில்லை. கத்திக் கேட்கிறாள் “நான்தான் வந்து விட்டேனே, இன்னும் ஏன் இப்படியழுகிறாய்” என்று. கதறலோடு சொல்கிறான் “இன்னொருவன் மனைவிக்கு கணவன் ஸ்தானத்திலிருந்து காரியம் செய்து விட்டேனே, அந்தப் பெண்ணின் ஆத்மா எப்படி துடித்திருக்கும்!?” என்று...
யூத முகாம்களில் அடைபட்டிருக்கும் கைதிகளை ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் இருவரைத் தூக்கிலிட்டு மிஞ்சியிருப்போரை வரிசையாக நேரில் வந்து பார்க்கச் சொல்வது வழக்கம். அப்படித்தான் அன்றும் இருவரை தூக்கிலிருகிறார்கள். ஒருவர் வயது 45 அவர் செய்த குற்றம் பசிக்கிறதென்று கூடுதலாக ஒரு ரொட்டியை திருடியது, மற்றொரு சிறுவனுக்கு வயது 14, அவன் செய்த குற்றம் காய்ச்சலின் காரணமாக வழங்கப்பட்ட ரொட்டியை சாப்பிடாமல் இருந்தது. இருவரும் தூக்கிலிடப்படுகிறார்கள், 45 வயது ஆள் தன் உடல் எடையின் காரணமாக சில நிமிடங்களில் இறந்து விடுகிறார், 14 வயது சிறுவன் உடல் எடை குறைவு, கூடவே வதை முகாமில் இருந்ததால் மெலிந்திருந்ததால் உயிர் பிரியாமல் துடித்து கொண்டிருக்கிறான். மரணத்தின் பக்கத்தில், அதை எட்ட முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறான். வரிசையாக பார்க்கும் மற்ற கைதிகள் துடிக்கிறார்கள். ஒருவன் கண்ணீரோடு கதறுகிறான், அவன் அந்த சிறுவனின் தந்தை, உயிருக்கும், மரணத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் தன் மகன் துடிப்பதைக்கண்ட வெம்மி வெடித்து பக்கத்திலிருப்பவனிடம் கதறுகிறான் “எமி... எமி... கடவுள் எங்கேயிருக்கிறார்” என்கிறான், பக்கதிலிருப்பவன் சொல்கிறான் “கடவுள்தான் கயிற்றில் தொங்குகிறார்” என்று...
மனிதன் மனிதன் மேல் எதை எய்த விரும்புகிறான்? இதுதான் அவர் கேட்ட முக்கிய கேள்வி.
சமூகத்தில் எய்த வேண்டிய ஆயுதம் அன்பு.
உரை முழுதும் கருத்துகள் தெறித்து விழுந்தது.
* இந்திய சினிமா கதாநாயகன் மட்டும் தான் தன் முன்னே வரும் சிங்கத்துடன் சண்டை போட்டு, அதைக் கொன்று விட்டு பின்னர் ஒரு பெண்ணுடன் டூயட் பாடி முடிக்க முடியும்.
* முன்பெல்லாம் ரயிலில் பயணம் செய்தால் நாம் உணவு எடுத்துச்செல்ல வேண்டியதில்லை, யாராவது உணவு கொடுத்து விடுவார்கள், இன்று ரயிலில் எதையும் யாரிடமும் வாங்கி சாப்பிட்டு விட முடியாது, உச்சபட்ச சாட்சி சமீபத்தில் ஒரு மத்திய புலனாய்வுத் துறையின் பெண் அதிகாரி இழந்த 10 பவுன் நகை.
* குற்றவாளியிடம் ஓசி பீடி வாங்கிக் குடிக்கும் போலீஸ்காரனின் புத்தி ஒரு சமூகத்திற்கு வந்து விடக்கூடாது.
* ஒரு புன்னகையில் யாரிடம் வேண்டுமானலும் நட்பை உருவாக்கிடலாம், ஆனால் அழுகையின் கண்ணீரை எளிதில் ஒருவரிடம் காட்டிவிட முடியாது.
* இந்தியா ஈழம் விசயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும், காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு என இங்கே தீர்க்க வேண்டியதே நிறைய இருக்கிறது என்ற வரியில் இருந்த அழுத்தமும், நக்கலும் பேச்சின் உச்சம் என்றே சொல்லலாம்...
மனதெல்லாம் நிறைவோடு, புத்தகம் வாங்க சுற்றினேன்...
மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் எட்டு புத்தகங்களும், மூன்று குறுந்தகடுகளும் வாங்கினேன்...
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
எஸ்.ரா அவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தபோது, நான் வந்திருந்தேன் கதிர்,அருமையாக இருந்தது கண்காட்சி.
பதிவை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு விரிவான பின்னூட்டமிடுகிறேன்.
கைதேர்ந்த பேச்சாளர்.
அருமையான பதிவு. தொடர்ந்து புத்தகத்திருவிழா நிகழ்வுகளை எழுதுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்த்துக்கள் கதிர்
அன்புடன்
ஆரூர்
நேரில் பார்த்த நிறைவு நண்பர் கதிர் அவர்களே
கதிர்,
உங்களை படிக்க படிக்க நிறைய பெறுகிறேன், அறிகிறேன்.
கேட்டதை சிறப்பாக கவரும் வண்ணம் சொல்லுதல் உங்களுக்கே உரித்தான அழகாயிருக்கிறது. நிறைய எழுதுங்கள் நண்பா, வாசிக்க, சந்தோஷத்தில் ஆழ காத்திருக்கிறேன்.
அசத்திய சில வரிகள் கீழே...
//நன்றாக கவனித்தேன், பல நயம் மிகு விசயங்களையும் உள்வாங்கிக் கொண்டதொரு பயனுள்ள மதிய நேரம்தான்.//
//“இன்னொருவன் மனைவிக்கு கணவன் ஸ்தானத்திலிருந்து காரியம் செய்து விட்டேனே, அந்தப் பெண்ணின் ஆத்மா எப்படி துடித்திருக்கும்!?” என்று...//
//“எமி... எமி... கடவுள் எங்கேயிருக்கிறார்” என்கிறான், பக்கதிலிருப்பவன் சொல்கிறான் “கடவுள்தான் கயிற்றில் தொங்குகிறார்” என்று...//
கதிர்.. நல்ல பதிவு! புத்தகத் திருவிழாவைப் பற்றியும், பாரதிகிருஷ்ணகுமார் பற்றியும் பதிவு செய்தது அழகு.
உங்கள் பதிவைப் படிக்கும்போது, நம்ம இருக்கற வெளியூர்களிலும் இது போல திருவிழா நடந்தால் நல்ல இருக்குமே என்று தோன்றுகிறது.
முழுமையாக படித்துவிட்டு வருகிறேன்...ம்ம்ம் இந்த தெளிவா அழகா பதிவிட நான் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறேனோ?
மிக்க நன்றி தோழரே...
பல ஊர்களிலும் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளை அறிய முடியாமல் தவற விடும் சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நல்லதொரு வாய்ப்பை வழங்கிவரும் இந்த வலைப்பதிவுலகத்தை நினைத்தால் சிலிர்க்கிறது. நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டோம்.
மீண்டும் நன்றி.
//நாடோடி இலக்கியன் said...
எஸ்.ரா அவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தபோது, நான் வந்திருந்தேன் கதிர்,அருமையாக இருந்தது கண்காட்சி.//
முடிந்தால் எஸ்.ரா. அவர்களின் நிகழ்வை இடுகையிடுங்கள் நாடோடி இலக்கியன்!
பாரதி கிருஷ்ணகுமாரின் வார்த்தைகளின் என்னை மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் (தங்களின் பதிவின் மூலம்)
1. கடவுள்தான் கயிற்றில் தொங்குகிறார்” என்று...மனிதன் மனிதன் மேல் எதை எய்த விரும்புகிறான்? இதுதான் அவர் கேட்ட முக்கிய கேள்வி.
கதறலோடு சொல்கிறான்
2.இன்னொருவன் மனைவிக்கு கணவன் ஸ்தானத்திலிருந்து காரியம் செய்து விட்டேனே, அந்தப் பெண்ணின் ஆத்மா எப்படி துடித்திருக்கும்!?” என்று...
3.“எமி... எமி... கடவுள் எங்கேயிருக்கிறார்” என்கிறான், பக்கதிலிருப்பவன் சொல்கிறான் “கடவுள்தான் கயிற்றில் தொங்குகிறார்” என்று..
••••••••••••
//ஒரு புன்னகையில் யாரிடம் வேண்டுமானலும் நட்பை உருவாக்கிடலாம், ஆனால் அழுகையின் கண்ணீரை எளிதில் ஒருவரிடம் காட்டிவிட முடியாது.//
இந்த வரிகளின் இரண்டாம் பாகம் எனக்கு புரியவில்லை. தெளிவுபடுத்தவும்.
••••••••••••
மனதெல்லாம் நிறைவோடு, புத்தகம் வாங்க சுற்றினேன்...
மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் எட்டு புத்தகங்களும், மூன்று குறுந்தகடுகளும் வாங்கினேன்...
எனக்கும் ஏதாவது புத்தகம் வாங்கவேண்டும் என்ற ஆவலில் நேற்று சென்றேன். ஞாயிறு ஆதலால் கூட்டம் மிகுதி. உள்ளே கூட நுழைய முடியவில்லை. ஈரோடு மக்களின் புத்தகம் மீதான ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மீண்டும் இன்று செல்லலாம் என்றிருக்கிறேன்.
•••••••••
//நாடோடி இலக்கியன் said...
அருமையாக இருந்தது கண்காட்சி.//
நன்றி இலக்கியன்
//பதிவை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு விரிவான பின்னூட்டமிடுகிறேன்.//
முடிந்தால் உங்கள் வருகையை ஒரு இடுகையாக எழுதுங்கள்
//காமராஜ் said...
கைதேர்ந்த பேச்சாளர்.//
ஆமாம் நண்பரே...
//ஆரூரன் விசுவநாதன் said...
அருமையான பதிவு.//
நன்றி ஆரூரன்
//நிகழ்காலத்தில்... said...
நேரில் பார்த்த நிறைவு நண்பர் கதிர் அவர்களே//
நன்றி நண்பரே
//பிரபாகர் said...
உங்களை படிக்க படிக்க நிறைய பெறுகிறேன், அறிகிறேன்.
கேட்டதை சிறப்பாக கவரும் வண்ணம் சொல்லுதல் உங்களுக்கே உரித்தான அழகாயிருக்கிறது. நிறைய எழுதுங்கள் நண்பா, வாசிக்க, சந்தோஷத்தில் ஆழ காத்திருக்கிறேன்.//
நன்றி பிரபா..
உங்கள் எழுத்தை நானும் ரசிக்கிறேன்
//ச.செந்தில்வேலன் said...
கதிர்.. நல்ல பதிவு!
வெளியூர்களிலும் இது போல திருவிழா நடந்தால் நல்ல இருக்குமே என்று தோன்றுகிறது.//
உண்மையான ஏக்கம்தான்
நன்றி செந்தில்
//தமிழரசி said...
முழுமையாக படித்துவிட்டு வருகிறேன்...//
//ம்ம்ம் இந்த தெளிவா அழகா பதிவிட நான் எப்போது கற்றுக் கொள்ளப் போகிறேனோ?//
ஆகா.. ஏன் தமிழ் அப்படி நினைக்கிறீர்கள்
//குடந்தை அன்புமணி said...
இந்த வலைப்பதிவுலகத்தை நினைத்தால் சிலிர்க்கிறது. நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டோம்.//
மகிழ்ச்சி அன்புமணி
//குடந்தை அன்புமணி said...
முடிந்தால் எஸ்.ரா. அவர்களின் நிகழ்வை இடுகையிடுங்கள் நாடோடி இலக்கியன்!//
நானும் அவரைக் கேட்டிருக்கிறேன்
//க. பாலாஜி said...
//ஒரு புன்னகையில் யாரிடம் வேண்டுமானலும் நட்பை உருவாக்கிடலாம், ஆனால் அழுகையின் கண்ணீரை எளிதில் ஒருவரிடம் காட்டிவிட முடியாது.//
இந்த வரிகளின் இரண்டாம் பாகம் எனக்கு புரியவில்லை. தெளிவுபடுத்தவும்.
எளிதில் ஒருவரிடம் புன்னகை முலம் நட்பு பெற்றிடலாம், ஆனால் தன் துயரத்திற்கு உடனே எல்லோரிடமும் கண்ணீரை காட்டிவிட முடியாது. ஆழமான நட்பு கொண்ட மனிதர்களிடம் மட்டுமே காட்டமுடியும்
குறுந்தகடு கிடைக்கிறது.வாங்கி கேளுங்கள்.
நான் நிறைய கருத்துக்களை தவற விட்டிருக்கலாம்
//ஞாயிறு ஆதலால் கூட்டம் மிகுதி. உள்ளே கூட நுழைய முடியவில்லை. ஈரோடு மக்களின் புத்தகம் மீதான ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மீண்டும் இன்று செல்லலாம் என்றிருக்கிறேன். //
வாழ்த்துகள்... நிறைய வாங்குங்கள்
நல்லதொரு பதிவு. நுனிப்புல் பாகம் 1 அங்கே தென்பட்டதா ஐயா? மிக்க நன்றி.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
நல்லதொரு பதிவு.//
நன்றி இராதாகிருஷ்ணன்.
//நுனிப்புல் பாகம் 1 அங்கே தென்பட்டதா ஐயா? மிக்க நன்றி.//
கவனிக்க மறந்துவிட்டேன்.. மன்னிக்கவும்
அன்பின் கதிர்,
திரு.பாரதி கிருஷ்ணகுமாரோடு (திரு.பி.கே.கே) எனக்கு நல்ல பழக்கமுண்டு. 'ராமையாவின் குடிசை" சென்னை ரஷியக்கலாச்சார மையத்தில் வெளியிடப்பட்டபோது அதில் கலந்து கொண்டவர்களின் நானும் ஒருவன். 'என்று தணியும்?' குறும்படத்தின் தொகுப்புப் பணிகளை திரு.பி.கே.கே ஈரோட்டில் தான் மேற்கொண்டார். அந்த சமயங்களில் அவரோடு பல சமயங்களில் அளவளாவும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். உங்களது பதிவைப் படித்ததும் அவரது மேடைப்பேச்சை நான் பலமுறை கேட்டு ரசித்த வாய்ப்புக்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. மிகச் சிறந்த சொற்பொழிவாளர்!
தமிழன் வேணு
ஈரோடு வரவிரும்புகிறேன்..உங்களையெல்லாம் சந்திக்க...
புத்தக கண்காட்சிக்கே நேரில் வந்து அவரின் சொற்பொழிவை கேட்டது போலிருந்தது. உரையை அருமையாக உள்வாங்கி மிகவும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள். அருமை நண்பரே. பாராட்டுகள்.
ரேகா ராகவன்.
Bharathi KrishnaKumar facebook link
http://www.facebook.com/profile.php?id=100001815506109
Post a Comment