54 இருள்களும் 108 வெளிச்சங்களும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதுவும் குருடராய் இல்லாமல் பிறத்தல் மிகப்பெரிய வரம்...

அதுவும் இருண்ட உலகிலேயே வாழும் அவர்களை நினைக்கும் போது மனது கல‌ங்கும்...

அவ‌ர்க‌ளுக்கு வ‌ர்ண‌ம் தெரியாது, வ‌டிவ‌ம் தெரியாது...

ஆனால் நாம் முய‌ற்சி செய்தால்..
முழு ம‌ன‌தோடு உத‌வி செய்தால்... என்ற‌ எண்ண‌த்தோடு

எங்கள் சுப்ரீம் அரிமா சங்கத்தில் கண் தான திட்டத்திற்கு தலைவராக 2008 ஜூலை முதல் 2009 ஜூன் முடிய ஒரு வருட காலத்திற்கு... பணிபுரிய வலிய நானே முன்வந்தேன்...

ஒரு சேவை அமைப்பில் வெறுமென உறுப்பினராக மட்டுமே இல்லாமல், சுவாசிக்கும் காற்றுக்கு நன்றிக் கடனாய் சமூகம் நோக்கிய சேவை எண்ணம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியான பிடிமானம் என்னை உந்தியது...

கடந்த ஒரு ஆண்டில் குறைந்தது 100 ஜோடி கண்களாவது பெற வேண்டும் என்ற முழக்கத்தோடு துவங்கினேன்.... முந்தைய வருடங்களில் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே கண் தானம் பெற்று வந்திருந்தோம். இலக்கு 100 ஜோடி கண்கள் என்றபோது எனக்கே கண்ணை கட்டியது. நாட்கள் நகர, நகர உடன் இருந்த உறுப்பினர்களும் ஒத்துழைக்க ஆரம்பித்தனர்...

ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் கண்களை தானமாக எடுக்க வேண்டும். ‌பெரும்பாலும் நள்ளிரவில்தான் அழைப்பு வரும். அதுவும் குளிர்காலத்தில் அர்த்த ஜாமத்தில் தான் அழைப்பு வரும். உடனே அரசன் கண் வங்கிக்கு தகவல் சொல்லி, செவிலியர்களை நடு நிசியில் எழுப்பி, மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்று கண்களை எடுத்து வரவேண்டும்.

குறிப்பாக எங்கள் உறுப்பினர்களில் தர்மராஜ், சசிகலா தனபாலன் மற்றும் தனவேல் முருகன் ஆகியோர் அதிக அளவில் கண்தானம் பெற உழைத்தனர். தங்களுக்கு தெரிந்து ஒரு மரணம் நிகழ்ந்திருந்தால் உடனடியாக அந்த குடும்பத்தினருக்கு கண் தானத்தின் தேவையை புரிய வைத்து (சில சமயம் கடும் போராட்டம் மற்றும் தமாஷ்கள் நடக்கும்) கண்களை தானம் கொடுக்க வைத்தனர்.

மிக பெரிய சுவாரஸ்யம் சில சமயம் நடக்கும், ஒருமுறை ஒரு பாட்டியின் கண்களை அந்த குடும்பத்தினரை ஒருவழியாக ஒத்துக்கொள்ள வைத்து கண்களை தானமாக எடுத்து வந்தோம், அடுத்த நாள் இறந்து போன பாட்டி தன் பேத்தியின் கனவில் வந்து "அடப்பாவிகளா! ஒரு கண்ணையாவது விட்டிருக்கக்கூடாதா? ரெண்டு கண்ணையும் அந்த பாவிங்க (நான் தான்)புடுங்கிட்டு போயிட்டானுங்களேனு" சொல்லுச்சாம், அதனால அந்த பேத்தி பயந்து போய், காய்ச்சல் கண்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அடுத்த முறை அந்த குடும்பத்தினரின் உறவினர் வீட்டில் மரணம் நிகழ்ந்த போது கண் தானம் எடுக்க போக.... நல்ல வேளை என்னை பிடித்து கட்டிவைக்கவில்லை, ஆனாலும் பேசிப்பேசி அங்கேயும் கண்களை தானம் பெற்று விட்டோம்.

குறிப்பாக திருமதி. சசிகலா தனபாலன் அவர்கள் தான் வசிக்கும் பகுதியில் மரணத்திற்காக ஒரு வீட்டில் பறை சத்தம் கேட்டாலே, தானே அந்த வீட்டிற்கு வலிய சென்று தன்னை அரிமா சங்க உறுப்பினர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கண் தானத்தின் அருமைகளை எடுத்துகூறி தானமாக கண்களை பெற்றதும் உண்டு.

இப்படியாக போராட்டம், புரியவைத்தல், சுவாரஸ்யம் என இலக்கு வைத்த 100 ஜோடிகளில் 54 ஜோடி கண்களை இதுவரை எடுத்துள்ளோம். கண் தானம் பெற்றுத்தந்த உறுப்பினர்களை பாராட்டி ஈரோட்டில் பிரபலமான டிப்டாப் செலக்ச‌ன் நிறுவன பங்குதாரர் அரிமா.சண்முகம் அவர்கள் தன் சொந்த செலவில் விலை மிகுந்த பரிசுகளை 54 தடவையும் வழங்கினார்.

கண் தானம் பெறுவதில் அதிக எண்ணிக்கையோடு முன்னிலையில் இருந்த தர்மராஜ் அவர்களின் தந்தையாரின் கண்கள் தான் 54வது ஜோடியாக இந்த ஆண்டு இறுதியாக எடுக்கப்பட்டது.

எங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற 54 ஜோடி கண்களை நப‌ருக்கு தலா ஒன்று வீதம் 108 நபர்களுக்கு பொருத்தியதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வெளிச்சம் கண்டிருக்கிறது. தானம் கொடுத்த 54 ஆத்மாக்களும், பார்வை பெற்ற 108 குடும்பங்களில் குலதெய்வமாக வணங்குதலுக்குரியவை.

ஊர் கூடி தேர் இழுத்தோம்.... சிறிது தூரம் கடந்திருக்கிறோம். இதுவொரு நெடிய பயணம்.

எங்கள் கைகளோடு உங்களின் உறுதியான உள்ளமும் சேர்ந்தால் புதியதொரு உலகம் விடியும்....

கண் தானத்திற்கு உதவுங்கள். தயவுசெய்து.......

13 comments:

பழமைபேசி said...

இதெல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வர்றீங்க பாருங்க.... நீங்கதான் ஒளி படைத்த கண்ணன்!

கட்டபொம்மன் said...

}}ஊர் கூடி தேர் இழுத்தோம்.... சிறிது தூரம் கடந்திருக்கிறோம். இதுவொரு நெடிய பயணம். }}

உங்கள் பயணம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

கட்டபொம்மன்

http://kattapomman.blogspot.com

கதிர் said...

பழமைபேசி
கட்டபொம்மன்
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி

Selvam said...

//அடுத்த நாள் இறந்து போன பாட்டி தன் பேத்தியின் கனவில் வந்து "அடப்பாவிகளா! ஒரு கண்ணையாவது விட்டிருக்கக்கூடாதா? ரெண்டு கண்ணையும் அந்த பாவிங்க (நான் தான்)புடுங்கிட்டு போயிட்டானுங்களேனு" சொல்லுச்சாம், அதனால அந்த பேத்தி பயந்து போய், காய்ச்சல் கண்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.//


என்ன கொடும சரவணன்!!!!

தமிழன்-கறுப்பி... said...

"54 இருள்களும் 108 வெளிச்சங்களும்"

கதிர் said...

செல்வம், தழிழன் கறுப்பி.... தங்கள் வருகை நன்றி

azhagan said...

Very good job you have taken up. Wish you all the very best. We donated our father's eyes when he passed away last Nov at the age of 82.

கதிர் said...

//We donated our father's eyes when he passed away last Nov at the age of 82.//

அழகன் உங்கள் செயல் வணக்கத்திற்குரியது...
வாழ்த்துக்கள். நன்றி

kk said...

super

வாத்துக்கோழி said...

oor koodither izuppom kaNdippakaaka.

நிகழ்காலத்தில்... said...

ஓட்டுப் போட்டு விட்டேன் கதிர்...

வாழ்த்துகள்

gowri said...

மிகவும் அருமையான பணி நீங்கள் செய்வது.. செய்து கொண்டிருப்பது...கண்டிப்பாக கண் தானத்திற்கு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை விதைத்துள்ளது உங்கள் கட்டுரை...

Amudha Murugesan said...

இருண்ட விழிகளுக்கு ஒளி கொடுத்து இருக்கிறீர்கள்... சிறந்த சேவை!