கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அடுப்புகளை, பற்ற வைக்காமல் திறந்துவிட்டு, தீப்பெட்டியோடு திரும்புகிறாள். எதிரில் நிற்கும் பிள்ளைகள் முன் மண்டியிடுகிறவள், ”ரெண்டு பேரும் அம்மாகூட வந்துடுறீங்களா!?” எனக்கேட்க ”‘எங்கம்மா, தாத்தா வீட்டுக்கா?” எனக் கேட்கும் மகளையும் மகனையும் அணைத்தபடி கதறுகிறாள். பாட்டல் ராதா திரைப்படத்தில், குடி நோயாளியின் மனைவி தற்கொலைக்கு முனையும் காட்சி இது.
இன்னொரு தருணத்தில் ”அப்படியே குழந்தைங்களோடு கொளுத்திக்கலானு நினைச்சேன். அப்புறம் உன்னை மாதிரி ஆளுக்காக ஏன் சாகனும்னு தோணுச்சு!” எனும் அஞ்சலம், தாலியை கழற்றி கணவனின் கையில் வைத்துவிட்டு, ”போதுன்ற அளவுக்கு குடி. அப்படியே விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு செத்துடு. நாங்களாவது நிம்மதியா இருப்போம்” என உறுதியான வேறொரு முகம் காட்டுகிறாள். இது சினிமாவில் வரும் அஞ்சலம் முகம் மட்டுமல்ல. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்ப தலைவிகளின் முகம்.
எதிரிகளின் மரணத்தை ஒருவர் வேண்டுவதைவிட, குடி நோயாளிகளின் மரணம், அவரை மிகவும் நேசித்த குடும்பத்தாரால் மிக அதிகமாக ஒருகட்டத்தில் வேண்டப்படுகின்றது எனும் உண்மை அவ்வளவாக ரசிக்க முடியாதது. ‘செத்து தொலைஞ்சிட்டாக்கூட நாங்க எப்படியாச்சும் நிம்மதியா இருந்துடுவோம்’ என்று பல தருணங்களில் வெகு எளிதாகச் சொல்வதைக் கேட்க முடியும்
தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேர் குடி நோயாளிகளாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அவர்களில் எழுபது லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலையில் உள்ளனர். குடிப்பதால் ஆண்டுக்கு அவர்களுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை சொல்கின்றது. அது எந்தளவு ஆதாரப்பூர்வமானது எனத் தெரியவில்லை என்றாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.
பாட்டல் ராதா, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் ஒரு குடி நோயாளியின் கதை. படத்தில் குடி மீட்பு மையம் மற்றும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA-ஏஏ) அமைப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். சமீபத்தில்தான் ஏஏ அமைப்பு குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது
2023 ஆகஸ்ட் 7-ம் தேதி காலை ஆறரை மணி சுமாருக்கு, நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது கல்லூரி நிகழ்ச்சிக்காக ஓசூர் சென்று கொண்டிருந்தேன். தேதியும் நேரமும் துல்லியமாக நினைவில் இருக்கக் காரணம், முந்தைய தினம் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ‘வாழ்தல் அறம்’ தலைப்பில் பேசியிருந்தேன். அந்த உரையைக் கேட்டுவிட்டுத்தான் அவர் அழைத்திருந்தார். சில வருடங்களுக்குப் பிறகு பேசுகிறோம். உரை குறித்து, தமக்கு நெருக்கமாக உணர்ந்தது குறித்துப் பேசியவர், தன் கடந்த காலக் கதையைச் சொல்கிறார்.
நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது யாரையும் சந்திப்பதையோ, யாருடனும் உரையாடுவதையோ தவிர்ப்பவன் நான். மனசு முழுக்க நிகழ்ச்சி குறித்த கவனம்தான் இருக்கும். ஆனால் அன்று பேசினேன். அந்த உரையாடல் பின்வரும் நாட்களில் அற்புதங்கள் செய்யப்போவதை அப்போது அறிந்திருக்க நியாயமில்லை.
அவருக்கு ஏறத்தாழ சம வயதுதான். பள்ளிப் படிப்பு, குடும்பச் சூழல், நட்புகள், படிப்பை தொடராமல் வேலைக்குச் சென்றது, தொழில், திருமணம் எனும் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான காலத்தில் குடிப்பழக்கம் ஏற்பட்டிருக்கின்றது. குடி நோயாளியாகவும் மாறியிருக்கின்றார். சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள், இழப்புகள் ஏராளம். எதுவும் அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாதவை.
பலபேர் தனித்தனியே அனுபவிக்க வேண்டிய சவால்கள், வேதனைகள், அவமானங்கள், போராட்டங்களை குடி நோயாளிகள் தனி நபராக அனுபவித்து விடுகின்றனர் என்பது ஒருபோதும் அவர்களுக்குப் புரிவதில்லை. புரியும்போது பலருக்கும் காலம் கடந்து விடுகின்றது.
ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. அவருடைய கடந்த காலம் இன்னும் மிச்சம் இருந்தது. நான் கிருஷ்ணகிரி தாண்டியிருந்தேன். மாலை பேசிக்கொள்ளலாம் என அப்போதைக்கு தொடரும் போட்டோம். பாதிக்கப்பட்டதைக் கேட்டாயிற்று, மீண்டது எப்படி எனும் ஆவல் எனக்குள் ஊஞ்சலாடிக்கொண்டேயிருந்தது.
மாலை உரையாடல் தொடங்கியது. பல அனுபவங்களைப் பகிர்ந்து இறுதியாக, குடியின் உக்கிரத்தில் இருந்தபோது ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (ஏஏ) கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைக்கப்பட்டு, அதன் வாயிலாக மீண்டதைச் சொன்னார்.
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குறித்து மேலோட்டமாகக் கேள்விப்பட்டதுண்டு. அவர் மூலமாக விரிவாக அறிந்துகொள்கிறேன். ஏஏ குடி நோயிலிருந்து மீண்டவர்கள், மீள விரும்புகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்படும் உலகளாவிய அமைப்பு. அவர்கள் இயங்கும் முறை, யாரெல்லாம் அதில் உறுப்பினர்கள் என்பதுள்ளிட்ட விபரங்களை அவர் கூறவில்லை. அந்த அமைப்பிற்குள் சென்று, ஒட்டுமொத்தமாக மீண்டு, அதில் தற்போது அவரும் பங்களிப்பதைச் சொன்னார். அவர் சென்றிருந்த எல்லையிலிருந்து, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் முற்றிலும் சிதைந்திருந்த நிலையிலிருந்து மீண்டு வந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.
ஏஏ நிகழ்விற்கு நீங்கள் ஒருமுறை வந்து பாருங்கள் என்று அழைத்தார். ஏறத்தாழ அனைத்து பெரு நகரங்களிலும் கூட்டங்கள் நடைபெறுவதுண்டு, குறிப்பாக ஈரோட்டில் அனைத்து நாட்களிலும் கூட்டம் நடைபெறுவதாக் கூறினார்.
சில மாதங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் தம் உறவினர் குடி நோயாளியாக இருப்பதைக் கூறி சைக்கியாட்ரிஸ்ட் யாரையேனும் பரிந்துரை முடியுமா எனக் கேட்க, எனக்கு ஏஏ நினைவுக்கு வந்தது. நண்பரை அழைத்து, பாதிக்கப்பட்டவரின் நிலைமையைச் சொல்லி, சரி வருமா எனக்கேட்டேன். வரச் சொல்லுங்க சரியாகிவிடுவார் என நம்பிக்கை அளித்தார்.
ஆனால், எனக்கு நம்பிக்கை வரவில்லை. காரணம், அவர் காலையில் நான்கு மணிக்கே குடியைத் தொடங்கிவிடுகிறவர். மாட்டுக் கொட்டகை, மோட்டர் ரூம், குப்பை மேடு, புதர், வாழை, இளம் தென்னை மரங்களின் மட்டைகள் என புழங்கும் இடமெங்கும் பாட்டில்களை பதுக்கி வைத்து குடிப்பவர். குடும்பத்தினர் தேடித்தேடி வேட்டையாடினாலும், அவர் தொடர்ந்து வைத்துக் கொண்டேயிருப்பார். நாள் முழுக்க போதையில் இருப்பவர். உறவினரிடம் ஏஏ குறித்து நான் கேள்விப்பட்டதைக் கூறி, கூட்டத்திற்குச் செல்வாரா எனக் கேட்டேன்.
அவருக்கும் முழு நம்பிக்கை இல்லையென்றாலும், அந்தக் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். எப்படியாவது குடி நிறுத்தப்படவேண்டும் என்பதால், எதையும் செய்யத் தயாராக அவர்கள் இருந்தனர். அவரிடமே ஒப்புதல் வாங்கி ஞாயிறு மாலை செல்லவதாக, முதல் நாள் இரவு தெரிவித்தனர். நான் நண்பரிடம் ஞாயிறு அன்று கூட்டம் நடக்கும் இடம் மற்றும் சந்திக்க வேண்டியவரின் விபரங்கள் பெற்று வழங்கினேன்.
அடுத்த நாள் மாலை செல்லலாம், அவருக்கு நிச்சயம் நல்லது நடக்கும் எனும் மெல்லிய நம்பிக்கையோடு குடும்பம் உறங்கச் சென்றது. ஆனால் விடியல் அவர்களுக்கானதாக இல்லை. காரணம் விடியும் முன்பே அவர் ஆரம்பித்துவிட்டார். குடும்பம் சோர்ந்து போனது. ஏஏ நண்பரை அழைத்து நடந்ததைச் சொன்னேன். சற்றும் சுணங்காமல் அடுத்த கூட்டத்திற்கு வர வையுங்கள் என்றார்.
குடும்பம் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றது. அவரே என் உறவினரை அழைத்து அடுத்த கூட்டத்திற்கு போகிறேன் என ஒப்புதல் அளித்திருக்கிறார். குடும்பம் அழைத்துச் சென்றது. என்னவோ மாயம் நிகழ்ந்தது. குடியை நிறுத்தி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். அங்கு அவருக்கு மிக நெருங்கிய நட்புகள் அமைந்தன. தினமும் ஃபோனில் பேசுவது, கூட்டங்களுக்கு கொண்டாட்டமாக செல்வது என அவருக்கு புதியதோர் உலகம் அமைந்தது. குடும்பம் மிகப் பெரிய நிம்மதியை அடைந்தது.
பிறிதொரு தருணத்தில் ‘ஏன் அந்த முதல் ஞாயிற்றுக்கிழமை குடித்தீர்கள்?’ எனக் கேட்டபோது, ‘எப்படியும் குடியை விடச் சொல்லுவாங்க, கடைசியா ஒருமுறை குடிச்சிட்டு விட்டுடலாம்னு குடிச்சேன்!’ எனச் சிரித்திருக்கிறார். மது இல்லாமல் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் இருக்கிறார்.
இன்னொருவர், ஒரு சாமானியன் சினிமாவில் வெற்றி அடைவதைப்போல் இருபது ஆண்டுகளில் யாரும் கற்பனை செய்ய முடியாத வளர்ச்சியடைந்தவர். அதில் பிற்பாதியில் மதுப்பழக்கம் வளர்ந்தது. அனைத்தும் முதலீடாக இருந்ததால் பொருளாதாரத்தில் சிக்கல் இல்லை. குடும்பத்தில், உறவுகளில் காயம் ஏற்பட்டது. பிள்ளைகள் தவித்தனர். இரண்டு முறை டீ-அடிக்ஷன் மையத்திற்குச் சென்றும், குடியை விடமுடியவில்லை.
அவரை யாராலும் சமாளிக்க முடியவில்லை. இரவுகளில் அவரின் ஃபோன் அழைப்புகளைக் கண்டு அனைவரும் எரிச்சல் அடைந்தனர், கூடவே கேவலாமாகப் புறக்கணித்தனர். உச்சபட்சமாக பள்ளியில் படிக்கும் மகனோடு மிகக் கடுமையான சண்டை ஏற்பட்டது. உடல் நிலையிலும் கணிசமான அச்சம் ஏற்பட்டது.
எனக்குத் தெரியவந்தபோது, அந்த ஏஏ நண்பர் மூலம் தமிழகத்தின் பெரு நகரம் ஒன்றில் உள்ள ஏஏ ஆர்வலர் ஒருவருடைய தொடர்பைப் பெற்று வழங்கினேன். அவரை சென்று சந்தித்தனர். அவர் அரசு உயர் பதவியில் இருந்தவர், குடியிலிருந்து மீண்டவர். சுமார் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு, கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஒப்புதல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.
வரும் வழியில் எதுவும் பேசமால் ஆழ்ந்த யோசனையில் இருந்தவர், அடுத்த நாள் காலை, இனி குடிக்கமாட்டேன் என வீட்டில் அறிவித்திருக்கிறார். அதனைக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஒரேயொரு உரையாடலில் இப்படி நிறுத்துவது முடியுமா, நிலைக்குமா எனும் சந்தேகம் இருந்தது. ஆச்சரியம் பேராச்சரியமானது. பல மாதங்களாக தொடர்ந்து குடிக்காமல் இருக்கிறார்.
குடி நோயாளியாக இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, ‘குடியை விட்டுடு!’ என அறிவுறுத்தியிருக்கிறார். அவர் ஆச்சரியமாகப் பார்க்க “இதெல்லாம் எப்படி உருவாக்கினேனு உனக்குத் தெரியும். ஒருகட்டத்தில் இது எதுவுமே என் அடையாளமாக இல்ல. குடிகாரன்தான் என் அடையாளமாக இருந்துச்சு. ஊர்ல யார் மதிச்சு, மதிக்காம என்ன, என் பையன் என்னை மதிக்கல. எப்படியாச்சும் நிறுத்தி தொலையனும்னு நினைச்சப்ப, ஒரு கூட்டத்துக்கு வான்னு சொல்லி ஒருத்தர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. அவரு ரெண்டு மணி நேரம் பேசினார். நல்லதுக்குத்தான் பேசினார். பேசினது காதில் விழுந்துச்சு. நான் யாரு, இந்த ஆளெல்லாம் அட்வைஸ் பண்ற நிலையில நான் இருக்கேனேனு மட்டும்தான் மனச அறுத்துச்சு. அப்ப முடிவு பண்ணினேன். நிறுத்திட்டேன். இப்பதான் என் அடையாளம் எனக்கே தெரியுது” என்றிருக்கிறார்.
உடைவதற்கும் உயர்வதற்கும் ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு போதும் எனும் வரிதான் நினைவுக்கு வருகின்றது.
பாட்டல் ராதா படத்தில் ஏஏ கூட்டங்கள், வழிமுறைகள் குறித்து ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டதும், இந்த இரண்டு பேரின் மாற்றங்களுக்கு நினைவுக்கு வந்தன. நான் இதுவரை ஏஏ கூட்டத்தில் கலந்துகொண்டதில்லை. நண்பர் வந்து பார்க்கச் சொல்லி அழைத்துக்கொண்டேயிருக்கிறார். மேலே குறிப்பிட்ட இரண்டு பேரின் மாற்றங்களும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
தேவையுள்ளோர், அந்தந்தப் பகுதியில் நடக்கும் ஏஏ அமைப்பின் நிகழ்வுகளை விசாரித்து, தங்களுக்கு சரி வரும் என்று உணர்ந்தால், நம்பிக்கையிருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். குடி நோயிலிருந்து மீள்வது சிலருக்கு உடனே நிகழலாம், சிலருக்கு ஆலோசனை, உளவியல் ஆதரவு மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.
குடியில் சிக்குண்டு தவிப்போரைப் புறந்தள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களாக, நோயாளிகளாகக் கருதி, அவர்களுக்குப் பொருத்தமான, சரியான உதவியைப் பெற்றுக் கொடுத்துவிடுதல் அனைவருக்குமான விடுதலையாக இருக்கும்.
- ஈரோடு கதிர்
.