Showing posts with label சாலை விபத்து. Show all posts
Showing posts with label சாலை விபத்து. Show all posts

Jan 3, 2012

நல்லாப் பாதுகாக்குறாங்கைய்யா சாலையை!

இரவு 11.45 சுமாருக்கு (NH-47) கருமத்தம்பட்டியில் கோவை - ஈரோடு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினேன். பயணச்சீட்டைக் கிழித்த நடத்துனர் 43 என்றார். அவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். நீல வர்ணச் சீருடை மூத்த பணியாளார் என்பதைக் காட்டியாது. 43 ஆ என கேட்டுக்கொண்டே உற்றுப்பார்த்தேன். EXPRESS என்றார். ஆமாம், முன்புறக்கண்ணாடியில் EXPRESS என்று ஒட்டப்பட்டிருந்தது. பேருந்தில் என்னையும் சேர்த்து 6 பேர் மட்டுமே! 



கொஞ்சம் குளிராக இருந்ததா
லும், கூட்டம் இல்லாததாலும் பேருந்தின் முன்பக்கம் இயந்திரம் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.

EXPRESS என்ற வார்த்தையை கட்டணம் மட்டும் கூடுதலாக பயன்படுத்தும் யுக்தி என்பதை மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது அரசுப் பேருந்து நிர்வாகம். மருந்துக்குக்கூட 40 கி.மீ வேகத்தை தாண்டவில்லையென்று நினைக்கின்றேன். அடுத்தடுத்த நிறுத்தங்களிலும் யாராவது கை காட்டுகிறார்களா என பொறுமையாகத் தேடிப்பார்த்தார். யாரும் பேருந்தை மறிக்கவில்லை.

செங்கப்பள்ளி வரை நாற்கரச் சாலைப் பணிகள் நடைபெறுவதால், சாலைகள் தாறுமாறாகக் கிடந்தன. ஒவ்வொரு இணைப்பிலும் முன் செல்லும் வாகனத்தை ஒதுங்கும் போது, எதிரில் வரும் வாகனம் விலகும் போது, இடது பக்கம் உட்காந்திருந்த நடத்துனர் தன் வயதுக்குப் பொருந்தாத கெட்ட வார்த்தைகளால் அந்த ஓட்டுனர்களைத் திட்டிக்கொண்டேயிருந்தார். அதில் நகைப்பான செய்தி, என்னவெனில் திட்டுவாங்கிய பல ஓட்டுனர்கள் தமிழர்கள் அல்ல என்பதுதான். வாகனங்களை நெருங்கிக் கடக்கும் போது இவர் ஏதாவது கத்தித் திட்டுவதும் என ஒரு வழியாய் செங்கப்பள்ளியைக் கடந்தது.

ஆனாலும் வேகம் 40ஐ தாண்டவில்லை. ஓட்டுனர் ஒரு மாதிரி முதுகை வளைத்து நெளிந்து நெளிந்து, இருக்கையில் இருந்து சில அங்குலம் இப்படி அப்படியென்று நகர்ந்துகொண்டேயிருந்தார். திடீரென தண்ணீர் பாட்டிலையெடுத்து பக்கவாட்டுக் கதவைத்திறந்து, முகம் கழுவினார். அப்போதுதான் புரிந்தது, கடும் தூக்கத்தில் அவர் அவதிப்படுவது.
பேருந்து வேகம் குறைவாகப் போவதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சில நிமிடங்களில் திரும்பவும் நெளிந்தார். 

எதற்கோ என் பக்கம் திரும்பிய நடத்துனரிடம் “ட்ரைவருக்கு ரொம்பத் தூக்கம் போல” என்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லையென்பது போல் நடத்துனர் தலையை ஆட்டி மறுத்தார்.

கொஞ்சம் தூரம் சென்றபோது கவனித்தேன், ஓட்டுனர் கொஞ்சம் உயரமாகத் தெரிந்தார். நன்றாக கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன், ஒருவாறு தன் இருக்கையிலிருந்து எழுந்து பின் பக்கத்தை இருக்கையின் மேல்பக்கத்தில் அணைத்தவாறு, நின்றவாறு இருந்தார், பேருந்து அதே சீரான வேகத்தில் “டொர்ரு..ட்ட்ட்டொர்ரு” என ஓடிக்கொண்டிருந்தது.


அதுபற்றி ஏதும் கண்டுகொள்ளாத நடத்துனர், எங்கோ ஒரு உணவகத்தில் 15 ரூபாய்க்கு 4 தோசை என்றும், நன்றாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். 
நான் இரண்டு இருக்கைகள் பின்னால் சென்று  முன்பக்க நுழைவுவாயில் அருகே என் இருக்கை வாஸ்துவை மாற்றிக்கொண்டேன். நாற்கரச் சாலை என்பததால் எதிரில் வரும் வாகன ஆபத்து இல்லை என கணக்கிட்டுக் கொண்டிருக்கும் போதே பெருந்துறையை எட்டியது. அதன்பின்னும் சாலையில் எதிரில் பெரிதாக வாகனம் ஏதுமில்லை. அவரும் தன் இருக்கையில் நான்கைந்துமுறை நகர்ந்து நகர்ந்து உட்கார்ந்தார். இரு கைகளை வேகமாக உரசி, முகத்தை தேய்த்துக்கொண்டார். இன்னும் பல சேட்டைகள் செய்தார் பாவம்.

கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் மணி நேரம் கடந்திருந்தது. என் நிறுத்தம் வர  நிறுத்தச் சொல்லியும், அவர் சுதாரித்து நிற்பதற்குள், கொஞ்ச தூரம் தாண்டியிருந்தது. அவர் நிலமையை நினைத்துக்கொண்டே, எதும் பேசாமல் இறங்கினேன். நகரும் பேருந்தைப் பார்த்தேன். பின்பக்க கண்ணாடியில் ”சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 1 முதல் 7 வரை” என வண்ணமயமாக ஒட்டியிருந்தார்கள்.

ஒருவேளை சாலைகளை மட்டும் ”குண்டு குழியிலிருந்து” பாதுகாப்பார்களோ என்னவோ!

-

Feb 21, 2011

பகிர்தல் (21.02.2011)

விபத்துகள்:

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் பெரும்பாலும் நான்கு ஐந்து நபர்கள் என்ற எண்ணிக்கையில் இறந்துபோவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஒட்டுமொத்தக் குடும்பம் ஒரே வாகனத்தில் பயணித்து பெரியவர்கள் இறந்து குழந்தைகள் மட்டும் பிழைத்திருக்கும் செய்திகள், அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையொட்டி மிகப் பெரிய கலக்கத்தை உருவாக்குகின்றன. வேகம் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ளச் சொல்கிறது.

பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள்:

முதுமையில் உடன் இணையும் பிணி என்பது மரணத்தை நோக்கிய பயணம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. சில காலமாக அது எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வுதான். எனினும், மருத்துவ தஞ்சம் கேட்டு வந்த அவரை அலைக்கழித்த இந்திய அரசியல் பாவம் மனதில் கனமாய்க் கிடக்கிறது. அந்தப் பாவக்கறையை அவ்வளவு எளிதில் அழித்திட முடியாது. நல்ல தொரு பிள்ளையப் பெற்றெடுத்த மனநிறைவோடு அவரின் ஆத்மா அமைதி கொள்ளப் பிரார்த்திப்போம்.

விசாரணை:

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விசாரணை உண்மையிலேயே வெகு சிரத்தையோடுதான் நடைபெற்று வருவதாக உணரமுடிகிறது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு அரிமா மாநாட்டிற்கு ஜெகத்காஸ்பரை பேச்சாளராக அழைத்தையொட்டி, அவர் அலுவலகத்தில் சோதனை நடந்த தருணத்தில், அந்த மாநாட்டின் பொறுப்பாளராக இருந்த அரிமாசங்கத்தைச் சார்ந்த ஒரு தலைவரை அழைத்து மத்தியப் புலனாய்வுத் துறை “எந்த அடிப்படையில் ஜெகத்காஸ்பரை அழைத்தீர்கள், உங்களுக்கும் அவரோடு என்ன தொடர்பு” என்பது வரை விசாரித்திருக்கிறார்கள்.


சஞ்சய் திருமணம் – பதிவர்கள் கூடல்:

தர்மபுரி அருகே மொரப்பூரில் பதிவர் சஞ்சய்காந்தியின் திருமணம் சிறப்பாக நடந்தது. மணமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைப் பதிவு செய்துகொள்கிறேன்.

ஈரோட்டிலிருந்து நான், ஆரூரன், கார்த்திக், ஜாபர் சென்றிருந்தோம். திருமணம் மிகச்சிறப்பானதொரு பதிவர்களின் கூடலாகவும் இருந்தது.  

வாசு, ஆரூரன், மணிஜீ, ஜாக்கிசேகர்
வானம்பாடி, எறும்பு, கதிர்,கேபிள்

லக்கி, ஜாக்கி, கார்த்தி, மணிஜீ, வாசு, அதிஷா





சஞ்சய், வெண்பூ, ஜோசப், கார்த்திக், நந்து, ஜீவ்ஸ், ஜாபர், ஆரூரன்


















திருமணத்தில் நந்து, வானம்பாடிகள் பாலா, எறும்பு ராஜகோபால், தமிழ்மணம் காசி, லதானந், தமிழ்பயணி சிவா, மரு.புருனோ, ஆதி, கார்க்கி, விஜி, தாரணிப்பிரியா, சக்தி செல்வி, வடகரைவேலன், ரம்யா, லக்கி, அதிஷா, கேபிள்சங்கர், அகநாழிகை வாசு, தண்டோரா  மணிஜீ, மயில்ராவணன், ஜாக்கிசேகர், வெங்கி, உண்மைத்தமிழன், வெயிலான், பரிசல், நிகழ்காலத்தில் சிவா, சாமிநாதன், செந்தில், முரளிகுமார், கும்க்கி, ஜோசப்பால்ராஜ், சென், வெண்பூ, ரங்க்ஸ், ஜீவ்ஸ், ரோகிணிசிவா என பதிவர்கள் பட்டாளத்தைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தாமதமாய் போனதில் சில பதிவர்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.

மின்சாரம்:

தினந்தோறும் இரண்டு மணி நேர மின்நிறுத்தம் என்ற கேவலத்தைச் தொடர்ந்து தொடர்ந்து சகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இந்தக் கேவலம் தமிழகம் போல் ஆண்டு முழுதும் அரங்கேறுகிறதா என்பது சந்தேகம்தான். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் என பணிவிடை செய்யும் தமிழக அரசு, மாநிலம் முழுதும் தினமும் இரண்டு மணி நேர மின் நிறுத்தம் குறித்து சிறிதும் வெட்கம் கொள்ளவில்லை. அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்போது மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்பட்ட பெருமை வேறு. 

தர்மசங்கடம்:

ரசிக்கத் தெரியாதவர்கள் முன் எந்தவொரு அற்புதக் கலையும் உயிர்பெறுவதில்லை. முன்னாள் குடியரசுத் தலைவரோடு சேர்ந்து கிட்டத்தட்ட அனைவரும் ஆழ்ந்து ரசிக்கும் நேரத்தில் அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் பாதுகாப்பு அதிகாரி படும்பாடு பாவமாய் இருக்கிறது. முகத்தைத் தடவி, கைகளைக் கட்டி, அக்கம்பக்கம் பார்த்து, நிமிர்ந்து அமர்ந்து, ஒரு வழியாய் கொட்டாவியை வாய்க்குள்ளே காற்றுக் குமிழ்களாகச் சேமித்து என ரொம்ப தர்மச்சங்கடப் படுகிறார் பாவம்.



-0-

Jan 6, 2010

புதிய மொந்தை

இரண்டு வருடங்கள் இருக்கும், வழக்கம்போல் மதிய உணவுக்காக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தைக் கிளப்பிய, என் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் முகப்பில் கடை வைத்திருக்கும் நண்பரும் அதே சமயம் தன் இரு சக்கர வாகனத்தை கிளப்புகிறார். ஒரு விநாடி நேருக்கு நேராக பார்த்து சம்பிரதாயமாக மின்னல் போல் புன்னகைத்து புறப்படுகிறேன், அவரும் நான் போகும் சாலையிலேயே உடன் வருகிறார், சுமார் அரை மைல் தொலைவு தூரம் வரை அவர் எனக்கு சற்று பின்னால் வருவதை பக்கவாட்டில் இருக்கும் கண்ணாடி மூலம் எதேச்சையாக பார்த்தேன். அரசு மருத்துவ மனைக்கு எதிரில் இருக்கும் பிரிவில் நான் இடப்பக்கம் திரும்பி வீட்டுக்கு சென்று விட்டேன்...

சரியாக முப்பது நிமிடங்கள் கழித்து மதிய உணவை முடித்துக்கொண்டு அலுவலகம் வந்தபோது, அலுவலக கட்டிடத்தின் முன்பு கொஞ்சம் கூட்டம், எல்லோர் முகத்திலும் கடும் இறுக்கம்.

என்னவென்று விசாரிக்க, கடைக்காரர் விபத்தில் இறந்துவிட்டதாகவும், உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் ஒருவர் கூறினார்.

அரை மணி நேரம் முன்பு தானே பார்த்தோம், நான் போன சாலையில்தானே வந்தார் என பதறியடித்து அரசு மருத்துவமனைக்கு ஓடினேன்... பத்து வருடங்களுக்கு மேல் அவரோடு பழக்கம்.

அரசு மருத்துமனை பிரிவு வரை அவரைப் பார்த்தது நினைவிருக்கிறது. அதிலிருந்து வெறும் ஐம்படி தூரத்தில் விபத்து நடந்திருக்கிறது. அவருடைய வண்டி மற்றும் உடலில் சிறு சிராய்ப்பு கூட இல்லை. தட்டிவிட்டுப்போன வாகனத்தில் பட்டோ அல்லது விழுந்த வேகத்தில் நிலத்தில் பட்டோ தலையில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்தது.

மனைவி, வயதான தாயார், கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள் என இருந்த அந்தக் குடும்பத்தின் ஆணிவேரே அவர்தான். இத்தனைக்கும் அவர் சென்றது டி.வி.எஸ் 50 மொபட்தான். ஒருவேளை அவர் தலைக்கவசம் அணிந்திருந்திருந்தால் அன்று பிழைத்திருக்க வாய்ப்புண்டு என எல்லோருமே பேசிக்கொண்டோம்.

சாப்பிட புறப்படும்போது அவரை சந்திக்கிறேன். சாப்பிட்டு விட்டு திரும்பும் போது அவர் உயிருடன் இல்லை என்பதை எதன் பொருட்டும் ஜீரணிக்க முடியவில்லை....

அடுத்த சில நாட்கள், வாரங்களாக அந்த விபத்தும், அவருடைய இழப்பும் மிகப் பெரிய பாடமாக எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேயிருந்தது. பல வருடங்களுக்கு முன்பே தலைக்கவசம் வாங்கியிருந்தாலும்... தொலைவாக செல்லும் (அதில் ஒரு சல்ஜாப்பு, பக்கமா போனா மெதுவா போவோம், தொலைவா போனா வேகமா போவோமாம்) போது மட்டும் கவசம் அணிந்து வந்த நான்.... அன்று முதல் வாகனத்தை எடுக்கும் போதே தலைக்கவசம் அணிய ஆரம்பித்தேன், கவனம் கூடியிருந்தது, வேகம் குறைந்திருந்தது... காலப்போக்கில் (நாலாஞ்சு நாளிலேயே...) எல்லோரையும் பின்பற்றி தலைக்கவசம் அட்டாலிக்கு போனது, வேகம் சர்வசாதாரணம் ஆனது...

கடந்த மாதம் சென்னை சென்ற போதும், நேற்று கோவை சென்ற போதும் ஒன்றைக் கவனித்தேன், இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் எல்லோரும் தலையில் கவசம் போட்டிருந்தனர்... சட்டம் இயற்றி பலவருடம் அரசாங்கம் அதைக் கிடப்பில் போட்டாலும், ”அப்பாடா மக்கள் திருந்திட்டாங்களே”னு சந்தோசப்பட நண்பர் சொன்னார் “மக்கள் திருந்தல, அரசாங்கம்தான் வேற வழியில்லாம திருந்திடுச்சு” என்று. இந்த நாட்டில் மட்டும் தான் சட்டம் போட்டால் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து, எப்படியும் அதை அமல் படுத்த மாட்டார்கள். ஆனாலும் காலம் கடந்தேனும், தலைக்கவசம் ஒருவழியாக கட்டாயமாகி வருகிறது.

தலைக்கவசம் அணிவதால் இரண்டு நன்மைகள். கீழே விழுந்தால் முகம், தலை, ஓரளவு காக்கப்படும், அடுத்து வாகனத்தில் போகும்போது கழுத்தை வளைத்து தலைக்கும், தோளுக்கும் இடையே அலைபேசியை வைத்து கோணிக்கொண்டு பேசும் சர்கஸ் நின்று போகும். ஆனாலும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே அலைபேசியை எடுத்து, தலைக் கவசத்துக்குள் திணித்து பேசி இன்னும் சாகசம் புரிவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு தலைக்கவசம் கட்டாயம் எனச் சட்டம் வந்தபோது, அடித்துப்பிடித்து தலைக்கவசம் வாங்கியர்கள், அந்தச் சட்டம் அமல் படுத்தப்படாமல் காற்றில் மிதந்தபோது தலைக்கவசம் வாங்கிய தண்டச் செலவுக்காக கப்பல் மூழ்கிப் போனதற்கு நிகராக கவலைப்பட்டார்கள். இப்போது மீண்டும் ஆங்காங்கே அமல் படுத்தும் போது, காசு போட்டு வாங்கி, அட்டாலியில் கிடக்கும் தூசு படிந்த தலைக்கவசம் உயிர் பெறுவதை நினைத்து... மெதுவாய் மகிழ்ச்சி பிறக்கிறது...

போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கவிருக்கும் சில நூறு ரூபாய் அபராதத்திற்கும், பிடிபட்டால் குறைந்தது அரை மணி நேரமாவது சாலையோரம் நிற்க வேண்டுமே என்ற சிரமத்திற்கும் பயந்து கட்டாயமாக தலைக் கவசம் அணிவது என உறுதி பூண்டிருக்கிறேன்.... சட்டத்தை தொடர்ந்து அமல் படுத்தி காவல்துறை நான் பூண்டிருக்கும் உறுதியை நிலை நிறுத்துமா...


(ங்கொய்யாலே!!! ரொம்பத்தான் ஏத்தம்னு மனசாட்சி(!!!) திட்டுதுங்க)

_________________________________________________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...