அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி வரும் வழியில் அமர்ந்திருந்தார். அவரைக் கடக்கும்போது கவனித்தேன். அவரும் என்னைப் பார்த்த நொடியில் புன்னகைத்தார். புன்னகையை எப்படிப் புறந்தள்ள முடியும். நானும் புன்னகைத்தேன்.
அந்தப் புன்னகைக்குக் காத்திருந்தவர்போல் எழுந்தார். ஏதோ கேட்க, சொல்ல வருகிறார் எனப் புரிந்தது. என் வேகத்தைக் குறைத்தேன். சிரித்த முகம். சிலருக்குத்தான் அப்படி இயல்பாக வாய்க்கும். சிலர் தன்னை அப்படி அமைத்துக் கொண்டதும் உண்டு. அவர் ஏதோ பேசத் தொடங்கியிருந்தார். காதில் இருந்த இயர்பட்ஸில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ‘சொல்லுங்க!’ என்றேன்.
”உங்களை அடிக்கடி பார்க்கிறேன். பேசனும்னு நினைப்பேன். காதில் அதைப் போட்டுட்டு வேகமாப் போவீங்க. தொந்தரவா இருக்குமோனு பேசாம போய்டுவேன். இன்னிக்குத்தான் பேச முடிஞ்சிருக்கு!” என்றபடி என்னோடு நடையில் இணைகிறார்.
அவரைக் கவனித்திருக்கிறேனா? உண்மையில் நினைவில்லை. கவனித்திருக்கலாம், மனதில் பதிந்திருக்கவில்லை. நடக்கும் வழியில் அப்படி யாரிடமும் பேசத் தோன்றியதில்லை. ஓரிரு தலையசைப்புகள் எப்போதாவது உண்டு. மற்றபடி காலை நடை என்பது எனக்கான தவ வேளை. பெரும்பாலும் ஏதாவது கேட்டபடி, எனக்குள் உரையாடியபடி நடப்பேன்.
“அப்டீங்ளா.... ஸாரி நான் கவனிச்சதில்ல... சொல்லுங்க!”
எங்கிருந்து வருகிறேன் எனக் கேட்டார். அப்படியான கேள்விகளை விரும்புவதில்லை. அங்கே என திசையை மட்டும் காட்டினேன். தம் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். சாலையின் முடிவில் நான் திரும்பும் திசைக்கு எதிர்பக்கம் அவரின் பகுதி.
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணி நிறைவு செய்திருக்கிறார். மகன் மருத்துவர். மகள் பட்டயக் கணக்காளர். பிள்ளைகளின் வயது சொல்கிறார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. சமீப ஆண்டுகளில் படிப்பு முடித்து பணிக்கு சென்றிருக்க வேண்டும். அடுத்தடுத்து அவரே சொல்லிக்கொண்டிருக்க, முடிவாக என்ன சொல்ல வருகிறார் என என்னால் இனம் காண முடியவில்லை. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
“சரிங்க... இன்னொரு நாள் பார்க்கலாம்!” என நடையை வேகப்படுத்தியிருக்க முடியும். சரி என்னதான் சொல்ல வருகிறார் எனும் சிந்தனையோடு அவருடன் தொடர்கிறேன். என்னைவிட சற்று உயரம் குறைவானர் மற்றும் வயதானவர் என்பதால் என் நடை வேகத்திற்கு அவர் சிரமப்படுவது புரிந்தது. வேகத்தைக் குறைக்கிறேன்.
அவர் குறித்த அறிமுகம் நிறைவடைந்த நிலையில், நான் என்ன செய்கிறேன் எனக்கேட்கிறார். மேலோட்டமாகச் சொன்னதும், ”நீங்க வெளியில் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போக முடியுமா? நானும் அதில் எதுவும் செய்ய முடியுமா?”
இத்தனைக்கும் நான் செய்வதாகச் சொன்னதில், பள்ளி எனக் குறிப்பிடவும் இல்லை இல்லை. பேசத் துவங்கி சில நிமிடங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? என வரிசையாகக் கேள்விகள் துளிர்க்க, கட்டுப்படுத்திக்கொண்டு, “எதுக்காக நீங்க வர நினைக்கிறீங்க?” என்கிறேன்.
”வந்தா எதாவது அடிஷனல் இன்கம் கிடைக்குமேனு!” என்றார். ஆச்சரியத்தைவிட சற்று அதிர்ச்சியாக இருந்தது.
“பென்சன் இருக்குமே உங்களுக்கு, மகனும் மகளும் நல்ல நிலையில் இருக்கிறதாச் சொன்னீங்கதானே!?”
“பென்சன் வருது. ஆனா ரொம்ப செலவு பண்ணி பழகிட்டோம். முன்ன சம்பளம் வந்தப்ப நிறைய வெளியே போறது, போன இடத்தில் காஸ்ட்லியா தங்குறது, பெருசா செலவு செய்றதுனு பழக்கமாகிடுச்சு. இப்பவும் அப்படியேதான் செலவாகுது. அதில்லாம வீட்டு லோன் போய்ட்டு இருக்கு. எதிலுமே செலவைக் குறைக்க முடியல”
இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு பெரிதாக யோசிக்க மனம் வரவில்லை. அவர் சொன்னதை கேட்க மட்டுமே செய்தேன்.
“எனக்கு சொந்த ஊர் திருச்சி பக்கம். ஃபர்ஸ்ட் போஸ்டிங் திருவண்ணாமலைல, அங்க இங்கனு சுத்தி கடைசியா இங்கே வந்துட்டோம். வொய்ஃப்க்கு இந்தப் பக்கம்தான் நேட்டிவ். முன்ன ஸ்கூல், வேலைனு எப்பவும் வெளியே போய்ட்டேன் பிரச்சனையில்ல. எனக்கும் அவங்களுக்கும் 13 வருட வித்தியாசம். முன்னெல்லாம் நல்லாதான் இருந்தாங்க. இப்ப வீட்லையே இருக்கிறதால, ரொம்ப திட்டிட்டே இருக்காங்க. இன்கமும் பாதியாகிடுச்சு. அதான் எதாச்சும் செய்யனும்னு பார்க்கிறேன்”
“என்ன வயசு உங்க ரெண்டு பேருக்கும்?”
“எனக்கு 66, அவங்களுக்கு என்னைவிட 13 வயசு குறைவு. நல்லாப் படிச்சிருக்காங்க. நான்தான் வேலைக்கெல்லாம் போக வேணாம்னு சொல்லிட்டேன். எதாச்சும் செய்யனும்னு இப்ப சொல்லிட்டே இருக்காங்க. மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மாதிரி சிலதெல்லாம் ட்ரை பண்ணினாங்க. எல்லாம் ஃபெயிலியர் ஆகிட்டு. அதில நிறைய பணம் போயிடுச்சு”
வேறு என்னவெல்லாம் செய்தார்கள் எனக் கேட்கவில்லை. தம்மால் அதைச் செய்ய முடியுமா, முடியாதா எனத் தெரியாமல் ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புவோர் பலர் உண்டு. தடாலடியாக முடிவெடுப்பார்கள், எவரையும் நம்புவார்கள், எடுத்துக்கொண்ட ஒன்றை மிகைப்படுத்தி புகழ்வார்கள், அதைச் செய்யும் அறிவும், திறனும் உண்டா என்று சிந்திக்க மாட்டார்கள். எதையாவதைச் செய்து பலர் சிறிதாகவும், சிலர் பெரிதாகவும் இழப்பினைச் சந்திப்பதுண்டு.
“எது சரி வருமோ, பார்த்து செய்ங்க!”
“நீங்க போறபக்கம் என்னையும்....” என இழுத்தார். நறுக்கென கத்தரித்துவிட்டு நான் நகர்ந்திருக்கலாம். ‘நிதானமா இரு!’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
”போகும்போது சொல்றேனு உங்ககிட்ட பொய் சொல்லிட்டுப் போய்டலாம். அதெல்லாம் சரி வராதுங்க. என்னையும் உங்களுக்குத் தெரியாது. யார் எது செய்தாலும், அது இன்னொருவருக்கு சரியா வரனும்னு இல்லை. முதல்ல உங்களுக்கு என்னென்ன பிரச்சனை இருக்கோ அதைத் சரி செய்யப் பாருங்க. உங்க மகன், மகள்கிட்ட பேசுங்க. அவங்ககிட்ட இத எப்படி சொல்றது, ஆலோசனை கேட்கிறதுனு நினைக்காதீங்க. படிச்சிருக்காங்க. புரிஞ்சுக்குவாங்க. உங்க வைஃப் எதுக்கு திட்டுறாங்கனு அமைதியா யோசிங்க. அவங்க மனசுல என்ன இருக்குனு கேளுங்க. படிச்சிருந்தும் அவங்க வேலைக்குப் போகாதது, சொந்தக் காலில் நிற்கமுடியாததுகூட மனக்குறையா இருக்கலாம். மற்றபடி செலவு செய்றது, மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நீங்க நாலு பேரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். பார்த்துக்கோங்க” என்றபடி சற்று வலுக்கட்டாயமாகத்தான் விடை பெற்றேன்.
அவர் என்னைப்போல் பலரிடமும், முன்பின் அறியாதவர்களிடமும்கூட இதுபோல் கேட்டிருக்கலாம். உண்மையான தேவைக்காக கேட்கிறாரா அல்லது ஏதேனும் உளவியல் சவால் இருந்து அதைக் கையாளத் தெரியாமல் இப்படி வெளிப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. இனியொருமுறை நான் அவரை சந்திக்காமல் போகலாம். சந்தித்தாலும் தலையசைப்போடு கடந்து, காலப்போக்கில் அதுவும் தேய்ந்து போகலாம்.
நான் அவரை மறந்துவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனமாகியிருக்க வேண்டும். ஆனால் மனதின் ஏதோவொரு ஓரத்தில் அவர் மெல்ல நடந்து கொண்டேயிருந்தார். அது அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு இல்லை. ஏன் ஒரு மனிதர் இப்படியாகிறார் எனும் என்னுடைய புரிதலுக்கான அலசல்தான்.
படித்து ஆசிரியர் ஆனவர். பல ஆண்டுகள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர். திறக்கப்படாத பல கதவுகளைத் திறப்பதுதானே கல்வியின் நோக்கம். நன்கு படித்த மனைவிக்கு திறக்கப்பட்டிருக்க வேண்டிய கதவுகளை, திறக்க உதவி செய்யாதது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தக் கதவுகளை இவரே அடைத்ததன் காரணம் என்னவாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் ஒரு பெண் கோபப்பட்டால், ஏன் கோபம் வருகின்றது என ஆராயப்படுவதேயில்லை. படித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாத மற்றும் 13 வயது குறைவான மனைவியின் மனப்போராட்டத்தை, அவருடைய நிலையிலிருந்து புரிந்துகொள்ள மறுத்து, நான் வீட்டில் இருப்பதால், வேலையில்லாமல் இருப்பதால், வருமானம் பாதியாகக் குறைந்துவிட்டதால் சண்டை வருகிறது எனக் கருதிக்கொள்வது சிக்கலை மேலும் பெரிதாக்கவே செய்யும்.
பிள்ளைகளுக்கு என்ன தெரியும் எனும் பிற்போக்குத்தனம் பல பெற்றோர்களிடம் உண்டு. ‘பிள்ளைகளுக்கு நிறையத் தெரியும். அவர்கள் நம்மைப் போன்றவர்கள் அல்ல. நம் காலம் போன்று அவர்கள் காலம் இல்லை!’ என்பதனை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் ஏற்படும் பிணக்குகளுக்கு, சிக்கல்களுக்கு, முரண்பாடுகளுக்கு அவர்களிடம் அப்பா-அம்மா எனும் அதிகாரத்தைச் செலுத்தாமல், உன்னை மதிக்கின்றேன் என்பதை உணர்த்தி அவர்களின் கருத்தைக் கேட்டால் பெரு ஆச்சரியங்கள் நிகழும். ‘இதுல எப்படிண்ணே எரியும்!’ என பெட்ரமாக்ஸ் லைட் மேண்டிலை செந்தில் உடைப்பதுபோல, ‘இதுக்கு எதுக்கு இவ்ளோ யோசிக்கிறீங்க!’ என பெரியவர்களின் குழப்பத்தை பொசுக்கென உடைத்துவிடும் திறன் வாய்ந்தவர்கள் இந்தத் தலைமுறையினர். அவர்களிடம் தீர்வுகள் தேடினால் நிச்சயம் கிடைக்கும்.
சம்பளம் வாங்கிய காலத்தில் இருபது முப்பது ஆண்டுகாலம் பெரிய அளவில் செலவு செய்து பழகிவிட்டால், பென்சன் வாங்கும் காலத்தில் வருமானம் பாதியாக குறையும் சூழலில் செலவுகளை எப்படிக் குறைக்க முடியும்? வயது முதிரும் காலத்தில் மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள், பிள்ளைகளுக்கான செலவுகள் என்று கூடத்தானே செய்யும். நிதி குறித்த அடிப்படை புரிதல் மற்றும் நிதி மேலாண்மையில்லாத பலரும் ஏதோவொரு தருணத்தில் பொருளாதார நெருக்கடியில் எளிதாக ஆட்பட்டுவிடுவதுண்டு.
எது சிக்கனம், எது கஞ்சத்தனம், எது அவசியமான செலவு, எது ஆடம்பரமான செலவு, எது ஊதாரித்தனம் என ஒவ்வொருவரும் தெளிவடைதல் முக்கியம். வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்வதை பண சுழற்சிக்கு நல்லது என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதுண்டு. ஒருவர் ஆடம்பரமாக, ஊதாரித்தனமாக செலவு செய்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர, தாமும் அதுபோல் செய்யலாம் என நினைத்தால், என்றேனும் ஒருநாள் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும்.
பணி ஓய்வு பெறுகின்றவர்களுக்கென சில உளவியல் சவால்கள் உண்டு. உண்மையில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இருபது முப்பது ஆண்டு காலம் ஒரே மாதிரியான வேலையைச் செய்தவர்கள், அதிகாரம் செலுத்தியவர்கள், பல்வேறு பலன்களை அனுபவித்தவர்கள், திடீரென ஒருநாள் அங்கிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு, ஓய்வு காலம் எனும் நிர்பந்தத்தில் ஆட்படுத்தப்படுகின்றனர். வெகு எளிதாக தனித்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதை அனைவராலும் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வீடுதானென்றாலும், அதன்பிறகு அது புதிய சூழல்தான். பொருத்திக்கொள்வது மிகச் சவாலானது. அந்த நிலையில் அவர்கள் தம்முடனே முரண்படுவர், அதைவிட மோசமானது குடும்பத்தில் இருக்கும் அனைவருடனும் ஏற்படும் முரண்கள். இதில் யாரையும் தனித்து குறை சொல்ல முடியாது. அறியாமைதான் காரணம். ஓய்வுகாலம் எனும் சூழலுக்கு தயார்படுத்துவது இருதரப்பிலும் மிகவும் முக்கியம்.
வாழ்வின் பயண வழித்தடமெங்கும் சேகரிக்கும் அனுபவங்கள் முதுமையில் உதவுவதாக இருக்க வேண்டும். எந்த அனுபவங்களையும் சேகரிக்காத, அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாதோர் முதுமை மிகவும் பலவீனமாகவே அமையும். பலவீனமான தருணங்களில் தெளிவாக சிந்திக்கவியலாது. முதுமை உடலை வேண்டுமானால் பலவீனப்படுத்தலாம். ஆனால், அறிவு மற்றும் மனதை எந்தவகையிலும் பலவீனப்படுத்தக்கூடாது.
வாழ்தல் என்பது முதுமைக்கும் தன்னை தயார்படுத்துவதுதான். தன்னைப் பாதுகாத்தல் என்பதும் தன்னை நேசித்தலின் ஓர் அங்கம்.
~ ஈரோடு கதிர்
~ ஈரோடு கதிர்