இதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது!


பெரும்பான்மையான குடும்பங்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் முக்கியக் காரணம் பிள்ளைகளின் திருமணம். திருமணம் என்பது உண்மையிலேயே என்னவென யோசித்துவிட்டு, தற்போது நடக்கும் திருமணங்களை மனக்கண் முன்னே கொண்டு வந்தால் இரண்டிற்கும் இடையே இருக்கும் முரண் புரியும்.

வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் இரண்டு பேரின் இணைப்பு, அவர்தம் குடும்பங்களின் பிணைப்பு, உறவுகளோடு கூடி மகிழும் திளைப்பு என்பதையெல்லாம் துறந்து திருமணம் என்பதை குடும்பங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் மைதானமாக மாற்றி யுத்தம் செய்வது வெகு காலமாக நடைபெறுகின்றது. பகட்டு, அந்தஸ்து, பெருமை என்கிற பெயரில் நாம் திருமணங்களுக்கு செய்திருக்கும் செலவினங்களும், நிகழ்த்திய கூத்துகளும் பிறிதொரு இக்கட்டான தருணத்தில் நினைத்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய அபத்தம் என்பது புரியும்.

எத்தனையோ நம்பிக்கைகளை காலம் உடைத்து சீர்படுத்தியிருக்கின்றது. ஏதோ ஒரு புள்ளியில் நாம் மாறியிருக்கின்றோம். திருமண படோபடம் குறித்து யாரும் பாடம் நடத்தியிருக்கிறார்களா எனத் தேடினால் இயக்குனர் சேரனின்திருமணம்ஆறுதலாக அகப்படுகின்றது. ’சில திருத்தங்களுடன்நிகழ்ந்த அந்த திருமணம்வெறும் படமாக இல்லாமல் பாடம் கற்பித்து, தரமான சில கேள்விகளை எழுப்புகின்றது. எனினும் பல நேரங்களில் கேள்விகளை சாய்ஸில் விடுபவர்களுக்கு கேள்வியின் தரம் என்ன விளைவுகளை ஏற்படுத்திவிட முடியும்?.

மண்டபம் பார்க்கும்போதே, கார் பார்க்கிங், தனித்தனி டைனிங் ஹால் எனத் திட்டமிடும் மனோண்மணி தரப்பு, மண்டபத்திற்குள்ளேயே கோவில் இருந்தால் மாப்பிள்ளை அழைப்புக்கென்று ஆகும் செலவு குறையும் எனத் திட்டமிடும் அறிவுடைநம்பி தரப்பு, அவ்வளவு எளிதில் இணைந்துவிடுமா என்ன?. அடுத்தடுத்து முட்டி திருமணமே நிற்கும் நிலைக்குச் செல்கிறது. இதெல்லாம் முக்கியமா இல்லையா எனும் அறிவார்ந்த அலசலுக்கு பூட்டுப் போடும் ஒரு வசனம் அதில் இருக்கின்றது. ”இதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது!”

*

ஓரளவு நடுத்தரக் குடும்பங்கள்தான் இரண்டு பக்கமும். ஆனால் சேர்க்கை முழுக்க வசதி படைத்தவர்கள். அந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே நடந்த திருமணத்தில், மண்பட வாடகை, இரண்டு வேளைக்கும் சேர்த்து அறுபது வகைகளுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான உணவு, மணவறை, ஃபோட்டோ, ட்ரோன் வீடியோ, ஆறு வகை ஐஸ் க்ரீம், டீக்கடை, கட்டில் கடை, பெட்டிக் கடை, மெகந்தி போட்டு விடுவது உள்ளிட்ட மண்டபச் செலவு மட்டும், அந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்கு இருபத்தியொரு லட்சம் கணக்கில் வந்தது. இவையன்றி அழைப்பிதழ்கள், நகை, உடைகள் தனிக்கணக்கு. இருதரப்பும் மூச்சு தம் கட்டி கடன் பட்டு அவற்றை ஈடு கட்டினர். மணமக்கள் ஒருவாரம்கூட சேர்ந்து வாழவில்லை. இரண்டாவது திருமண நாள் வருவதற்குள் நீதிமன்றத்தில் மண முறிவு பெற்றனர். இரண்டு குடும்பங்களுமே கல்யாணக் கடனை இன்னும் அடைத்தபாடில்லை. இந்த நிலையில் திருமணத்திற்கு வந்தவர்களில் ஐந்து சதவிகிதம் பேருக்குக்கூட மண முறிவடைந்தது தெரியாது.

*

அறிவுடை நம்பி, மனோண்மணி திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சிடுவதில் முட்டிக் கொள்கிறது. மனோண்மணி தரப்பில் தேர்ந்தெடுக்கப்படும் அழைப்பிதழ் ஏறத்தாழ ஒன்பது லட்சம் வருகிறதென்றால், அறிவுடைநம்பி சில ஆயிரங்களில் நிற்கிறார்.

அச்சகத் துறையில் இருபது ஆண்டு கால அனுபவம் எனக்குண்டு. திருமண அழைப்பிதழ்களின் எண்ணிக்கையும், அழைப்பிதழ்களுக்குச் செய்யும் செலவினையும் கண்கூடாகப் பார்த்து வருகின்றேன். பத்திரிக்கை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து அச்சுக்கு கொடுக்கும்போது, ஒரு பக்கத்தினர் செலவு குறித்து கவலையில்லை என்றும், இன்னொரு பக்கத்தினர்இன்னும் கொஞ்சம் கம்மியா..’ என சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் மருகுவதையும் உடனிருந்து கண்டிருக்கின்றேன். அழைப்பிதழ் என்பது அழைப்பதற்கான ஒரு மடல் என்பதைத் தாண்டி அது அலங்காரமான பரிமாணங்களை எட்டி நீண்ட காலம் ஆகின்றது.

நகரத்தில் பரவலான அறிமுகம் கொண்டிருந்த ஒருவர் தனது குடும்ப திருமண விழாவிற்காக அச்சிட்ட அழைப்பிதழ்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரம். விழா நடக்கும் திருமண மண்டபம் பதினைந்தாயிரம் பேரை சமாளிக்கும் திறன் அற்றது. எப்படி பதினைந்தாயிரம் பேரை உபசரிக்க முடியும் எனும் கேள்விகள் எழுந்தபோது,  ஐந்தாயிரம் பேருக்கு மட்டும் உணவு தயாரிக்கச் சொல்லியிருக்கின்றனர் எனும் பதில் கிட்டியது. அப்புறம் எதற்கு பதினைந்தாயிரம்?, அவருடைய தொழிலுக்கான விளம்பரமாக அதைப் பயன்படுத்துகிறார் என்று கூறப்பட்டது. மொத்த அழைப்பிதழ்களின் மதிப்பு சுமார் ஆறு லட்சம். அத்தனை அழைப்பிதழ்கள் யாரைச் சென்றடைந்திருக்கும்? பொது அமைப்புகளில் உறுப்பினர் மற்றும் அலுவலக முகவரியை வைத்து எனக்கு மட்டும் நான்கு அழைப்பிதழ்கள் வந்தடைந்தன. அதில் ஒரு அழைப்பிதழ் பதினொரு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயர் தாங்கி வந்திருந்தது. ஆக அழைப்பிதழ் என்பது அழைப்பிதழ் மட்டுமேயல்ல!

*

சுமார் நாற்பது வீடுகள் கொண்ட கிராமம் ஒன்றில், பொருளாதார வசதி குறைந்த குடும்பம் ஒன்றில் திருமணம் ஏற்பாடாகின்றது. இளம் வயதில் கணவனை இழந்த பெண் அவர். சொந்த நிலம் கிடையாது. கல்வியும் இல்லை. கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பம் நடத்த வேண்டும். மூன்று பிள்ளைகள். மகளுக்கு தற்போது திருமண ஏற்பாடு. எல்லாம் உறுதியாகி, மாப்பிள்ளைக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் அந்த நிகழ்ச்சிக்காக சுமார் ஐம்பது பேர் வருகின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் ஐம்பது பேர் வருகின்றார்கள் என்றால் நாமும் அதேபோல் அழைக்க வேண்டுமென, ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அழைப்பு விடுக்கிறார்கள். ’மாப்ளயூட்ல அம்பது பேர் வர்றாங்க,  நீங்க எல்லாரும் வந்துடோணும்என அழைப்பு விடுக்கப்படுகிறது. கொரோனா காலமாவது ஒன்றாவது, இத்தனை பாடுபட்டு கூப்பிடும்போது போகாமல் இருக்கலாமா என அனைத்து வீடுகளில் இருந்தும் இரண்டு, மூன்று பேர் வந்து கலந்து கொள்கிறார்கள். நூறு பேருக்கு சொல்லியிருந்த சாப்பாடு போதாமல், மீண்டும் வரவழைக்கப்படுகிறது. அனைவரும் விருந்துண்டு கலைந்து செல்கிறார்கள். சாப்பாட்டிற்கான செலவு மட்டும் ஏறத்தாழ பதினைந்தாயிரம்.

நினைவில் இருக்குமென நினைக்கின்றேன், அவர் கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடந்தவேண்டும். விவசாய கூலியாக அவரின் ஒரு நாள் சம்பளம் இருநூறு ரூபாய். ஆகவே மோதிரம் போட்டதற்கு சோறு போட்ட கணக்கிற்காக மட்டும் அவர் செலவிட்ட தொகை என்பது எழுபத்தைந்து நாட்கள் கூலி.

பெருந்தொற்று காலத்தில் மிக எளிமையாக நிழத்தியிருக்க வேண்டிய செயலுக்கு, விருந்து என்று தம் எழுபத்து ஐந்து நாட்கள் ஊதியத்தைக் கொடுக்க எது நிர்பந்திக்கிறது. மாப்பிள்ளை வீட்டாருக்கு நிகராக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதா? அல்லது கிராமத்தில் அனைவரையும் தன்னோடு இணைத்துக்கொள்ள நினைக்கும் மனநிலையா?



மார்ச் இரண்டாவது வாரத்தின் ஒரு மதிய வெயிலில் அந்த கிராமத்து தம்பதியினர் எங்கள் கிராமத்து வீட்டிற்கு வாடி வதங்கி வந்தடைந்தனர். வருகின்றபோதே காரணம்  தெரியும். மகனுக்குத் திருமணம். எனக்கு நினைவு தெரிந்து இந்த நாற்பது ஆண்டுகளில் நான்கைந்து முறை அங்கு வந்திருந்திருக்கலாம். அவ்வளவுதான் வரவேண்டிய தேவை இருந்திருக்கும். அந்தத் தேவைகளில் ஏற்கனவே நடந்த ஒரு திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கவும்தான்.

சம்பிரதாயமான உரையாடல்கள் நடந்தேறியதும், அழைப்பிதழை நீட்டினார்கள். நீட்டும்போதேஎன்னுமோ கொரானானு சொல்றாங்க... ஊரெல்லாம் பத்திரிக்கை கொடுத்துட்டோம். எப்டி நடத்துறதுனுதான் ஒரே யோசனையா இருக்குங்கஎன்றனர். மேலும் பேச்சுக் கொடுத்தபோது ஏறத்தாழ இரண்டாயிராயித்து ஐநூறு பத்திரிக்கைகள் கொடுத்திருப்பதாகவும், இந்த சிக்கலால் சுமார் ஐநூறு பேருக்கு மட்டும் உணவு தயாரிக்கவுள்ளதாகவும் கூறினர்.

ஊரடங்கு காலத்தில் திருமணம் மிக நெருங்கிய ஐம்பது உறவுகளோடு இனிதே நிகழ்ந்தது. மண்டப வாடகை, மணவறை செலவு, ஃபோட்டோ வீடியோ, சாப்பாடு செலவு என மிச்சம் ஆன தொகை ஏறத்தாழ பத்து லட்சம். ஒரு திருமணச் செலவில் எப்போதும் கணக்கில் கொள்ளப்படாத ஒரு செலவு இருக்கின்றது. இரண்டாயிரத்து ஐநூறு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்ட திருமணத்திற்கு எப்படியும் இரண்டாயிடம் குடும்பங்கள் கலந்து கொள்ளும். அவர்கள் வந்து செல்லும் செலவு சுமார் நூறு ரூபாய் எனக் கணக்கிட்டாலும், அந்தக் கணக்கில் இரண்டு லட்சம் மீதமாகியிருக்கின்றது.

விலை உயர்ந்த அழைப்பிதழ் அச்சிட்டு, ஊரெல்லாம் வழங்கி, வந்தவர்களுக்கெல்லாம் இல்லையென்று சொல்லாமல் உணவு பரிமாறி, சமயங்களில் மிஞ்சிய உணவுகளை கீழே கொட்டுவதையும் பல திருமணங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

சேரன் என்ற கலைஞன் செதுக்கும் படைப்பென்பது இப்படித்தான் இருக்குமென பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப் ஆகியவை ஒரு படிமத்தை உள்ளுக்குள் தீட்டியிருக்கின்றன. அந்த சேரனின் படைப்பாக இதை ஏற்க முடியவில்லை என்றாலும், திரைப்படமாக பார்க்காமல் திரைவழியே நடத்தப்பட்ட பாடமாக இதை ஏற்கலாம். அழைப்பிதழ், உடைகள், மண்டபம் ஆகியவற்றின் மீது மிகத் தேவையான விமர்சனங்களை படம் வைத்திருக்கின்றது. இன்னும் மணவறை, சாப்பாடு ஆகியவற்றையும் இணைத்திருக்கலாம்.

வாழ்வில் ஒரே ஒருமுறைதான் செலவு செய்யப்போகிறோம் எனும் க்ளிஷே சமாதானங்களைச் சொல்லாமல், சூழலின் பொருட்டு தற்போது கைக் கொண்டிருக்கும் மாற்றத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த முடிவெடுப்பது, முயற்சியெடுப்பது தேவையான ஒன்று.

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடித்தால், பிரஸ், நகைக்கடை, துணிக்கடை, மண்டபத்தினர், சமையல்காரர், ஒப்பனையாளர், மணவறை போடுகிறவர், ஃபோட்டோ வீடியோ எடுப்பவர்கள் உள்ளிட்டவர்கள் பிழைக்க வேண்டாமா எனும் கேள்வி வரும். அதற்குமுன் ஒவ்வொருவரும் தம்மை நோக்கி எழுப்ப வேண்டிய  கேள்விநாம் பொழைக்க வேண்டாமா!?”

இதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது!” இந்த வெற்று சமாளிப்பை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் இதே நிலையைத் தொடர்வது. உண்மையில் முற்றிலுமாக மாற்ற முடியாமல் போகலாம், ஆனால் ஆங்காங்கே சில திருத்தங்களுடன் இனி திருமணத்தைத் திட்டமிடலாம். திருமணம் என்பது இரண்டு குடும்பத்தினருக்கான விழா. வெறும் பெருமைக்கும் பகட்டிற்கும் மட்டுமே நிகழ்த்தும் விழா அல்ல!

-       - ஈரோடு கதிர்



3 comments:

Unknown said...

Super writeup sir

இளையவன் Balaji said...

அருமை அண்ணா... இந்த கொரானா காலம் நான் கண்ட சில குடும்பங்களில் சேரன் அவர்கள் எதிர்பார்த்த நீங்கள் குறிப்பிடும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது ... கெட்டதில் ஒரு நல்லதே ...தொடரட்டும் அந்த மாற்றம் ... இப்போது கூட ஒர பெங்களூரில் நடக்கும் என் அத்தை பையனின் திருமணத்தை கோபியில் இருந்து webcasting ல் பார்த்துக்கொண்டே இதை டைப்புகிறேன்... பகட்டு தொலையட்டும் ...கடன்கள் இல்லாமல் போகட்டும்

Sathiyapriya said...

சிறந்த படைப்பு...👍