மேற்கிலிருந்து கிழக்கிற்கு - 26 மணி நேரம் பயணம்


நவம்பர் 2, 2018 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் கசகசப்போடு அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தபோது 99% நிறைவு செய்திருந்த நிம்மதியிருந்தது. இதெல்லாம் நான் தானா?  எத்தனை வேகமாய் இவையாவும் நிகழ்ந்திருக்கின்றன! எனும் பிரமிப்பு அகலவில்லை. உண்மையில் பசிக்கவில்லை. இத்தனைக்கும் காலையிலும் சாப்பிட்டிருக்கவில்லைதான். நினைவுகள் பின்னோக்கி பயணப்பட்டன.

சரியாக ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த ஞாயிற்றுக்கிழமை, இதே நேரம் CTB (இலங்கை போக்குவரத்து சபை) பேருந்தில் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. சென்னையிலிருந்து விமானம் குறித்த நேரத்திற்கு முன்பாகவே புறப்பட்டிருந்தது. ஏழாவது முறையாக இலங்கைக்குள் இறங்கப் போகிறேன். இதுவரையில் இல்லாத ஏதோ ஒன்று கனமாக இருந்தது. முதற்காரணம் கடந்த ஆண்டு பயணம் முடித்து விமான நிலையம் வரும் வழியில்தான் பாஸ்போர்ட் தொலைந்துபோனது. அந்தக் இக்கட்டிலிருந்து மீண்டது இப்போது நினைத்தாலும் பிரமிப்பான ஒன்றுதான். விமான நிலைய வாசற்படி வரை வந்து, போலீஸ் நிலையம் சென்று மீண்டும் கொழும்பிற்குத் திரும்பி, விமானத்தை தவறவிட்டு, இந்தியத் தூதரகம் சென்று, இரவுக்குள் எல்லாம் முடித்து அன்றிரவே சென்னைக்கு மற்றொரு விமானத்தில் புதிய பயணசீட்டு வாங்கி காட்சிகள் கடந்த இரண்டு வார காலமாகவே ஓடிக் கொண்டிருந்தன.

கனத்திற்கு மற்றொரு காரணம், ஐந்து நாட்களில் திட்டமிட்டிருந்த நான்கு நிகழ்ச்சிகள் ஒன்பதாக அதிகரித்திருந்தது. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் என தொடர்ந்து இயங்க முடியுமா எனும் சிந்தனைதான் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டேயிருந்தது. இந்த முறை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மிக ஆசுவாசமாக என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களோடு தொடர்பில் இருந்தேன். இதுவரை முழு நாள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்த அனுபவம் உண்டு. இரண்டாம் நாள் மாலை பயிலரங்கை நிறைவு செய்த பின் அன்றைய தினம் உறங்கும் வரை யாரிடமும் எதுவும் பேசமால் இளைப்பாறுவேன். ஆனால் இந்த முறை தொடர்ந்து ஐந்து நாட்கள், அதிலும் நான்கு நாட்கள் காலையும் மாலையும் எனும் அழுத்தம்தான் மெலிதாய் ஒரு அயர்ச்சியையும், அதே நேரம் இதையும் சமாளிப்போம் எனும் சவாலையும் தந்தது.

பயணம் புறப்படும் தினமும் வந்தது. இரவு நீலகிரி பிடித்து சென்னையை அடைந்தபோது விடியவேயில்லை. ரயில் பயணத்தில் மூன்று மணி நேரம் கூட தூங்கியிருக்கவில்லை. விமானத்திற்கு ஏறத்தாழ ஏழு மணி நேரம் இருந்தது. விமான நிலையம் செல்லும் முன்பாக கொழும்பில் இருக்கும் ஸ்வேதாவிற்காக, நன்கு அறிமுகமான தோழமையின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தம்புரா ஸ்ருதிப் பெட்டியை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக முகவரி தேடி அலைந்த சவாலை ஒரு சிறுகதையாக எழுதலாம். பொருளைப் பெற்றுக்கொள்பவன் நான் என்பதும், தருபவர் அவர்தான் என்பதும் அறிமுகப்படுத்தப்படாத ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். என்னவோ இந்தப் பயணத்திற்கு முன்பாக இப்படியான பல்வேறு சவால்களைக் கடந்தபடியேதான் இருந்தேன்.

பயணம் குறித்து முன்கூட்டியே யாரிடமும் சொல்லவில்லை. சென்னை விமான நிலையத்திலிருந்து முதலாவதாகப் பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவில்கூட எங்கு பயணம் என்பதைக் குறிப்பிடத் தோன்றவில்லை. விமானம் கிளம்பும் முன்பாக இலங்கைக்கு எனப் பதிவிட்டதில், பாதிக்கும் மேலாக பாஸ்போர்ட் பத்திரம் எனும் பின்னூட்டங்களே கிடைக்கப்பெற்றன. வாழ்வில் ஏமாறக்கூடாத ஒன்றில் ஏமாறுவதற்கு நிகரான பாடம் உண்டா?. இந்தமுறை பாஸ்போர்ட்டை மிகக் கவனமாக வைத்திருப்பேன் எனும் உறுதியிருந்தது.முன்கூட்டியே பறக்கத்தொடங்கிய விமானம் முன்கூட்டியே இறங்கியிருந்தது. கடந்த ஆண்டு வாங்கியிருந்த டயலாக் சிம் கார்டு உயிர்ப்புடன் இருந்ததால் பேசுவதற்கு, இணையத் தொடர்பிற்கு சிரமம் இருக்கவில்லை. குடிவரவில் இந்த முறை எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. புதிய பாஸ்போர்ட்டின் முதல் முத்திரை. வரவேற்கும் முகமான புன்னகையொன்று பெரிதாகக் கிட்டியது. பயணப் பொதி அநியாயத்திற்குத் தாமதாக வந்தது.அடுத்த நாள் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு முதல் பயிலரங்கு அமர்வு தொடங்கவிருந்த சூழலில் இரவுப் பயணத்தைத் தவிர்த்து முடிந்தவரை பகலிலேயே பயணித்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்று விட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததன் விளைவு, கொழும்பு நகரத்திற்குள் செல்லாமல் கட்டுநாயகாவில் இருந்தே பயணத்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று ஒரு வாரமாகவே தேடிக் கொண்டிருந்தேன்.

வெளியில் மஞ்சு காத்திருந்தார். மஹியாங்கன செல்லும் பேருந்து ஒன்று இருப்பதாகவும், அதில் சென்று கதுருவெல எனும் இடத்தில் இறங்கி அங்கிருந்து மட்டக்களப்பு சென்றுவிடலாம் என்பதையும் அழைப்பில் தெரிவித்தார். அவரிடம் ஒரு பையை ஒப்படைத்துவிட்டால் பயணச் சுமை கணிசமாகக் குறையும். மட்டக்களப்பில் அவர் சார்பில் கொடுக்க வேண்டிய சில புத்தகங்களையும் கொண்டு வந்திருந்தார். சந்தித்து, உரையாடி, பொருட்களைப் பரிமாறி கதுருவெல செல்லும் CTB பேருந்தை அடைந்தேன். நடத்துனரும் ஓட்டுனரும் வந்தார்கள். பெட்டியை வாங்கி ஓட்டுனர் இருக்கை அருகே வைத்துக் கொண்டார்கள். 2.30 மணிக்கு கிளம்பிவிடும் என்றும், கதுருவெலயில் மட்டக்களப்பு பேருந்தில் ஏற்றிவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். செல்லும் வழி ஊர்கள் எனக்கு நன்கு நினைவில் இருந்தன. குருநாகல், தம்புள்ள, பொலணருவா, வாழைச்சேனை, மட்டக்களப்பு இதுதான் பயண வழி. இதில் கதுருவெல என்பது பொலணருவே அருகே இருக்கும் ஊர். அந்தப் பேருந்தில் கதுருவெலவில் இறங்கிக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை மறுத்தால் கொழும்பிற்குச் சென்று இரவு வரை காத்திருந்து இரவு ட்ராவல்ஸ் பேருந்தில் பயணித்து காலை நான்கு மணி சுமாருக்கு இறங்கிக் கொள்ள வேண்டும்.எப்படியும் இரவு 10 மணிக்குள் மட்டக்களப்பு சென்றடைந்து விடலாம் எனும் நம்பிக்கையில் மஞ்சுவை கொழும்பு செல்லும் பேருந்திற்கு அனுப்பிவிட்டு, நான் CTB பேருந்திலேயே காத்திருந்தேன். சரியாக 2.31 மணிக்கு பேருந்து புறப்பட்டது. நான் மட்டுமே பேருந்தில். ஒரே ஒரு பயணிக்காக பேருந்து பயணிக்குமா எனும் ஆச்சரியத்தோடு இருக்க, விமான நிலையத்திலிருந்து கட்டுநாயகா பேருந்து நிலையம் சென்று வசதியான ஒரு இடத்தில் நின்று கொண்டது. நிமிடங்கள் ஓட ஆரம்பித்தன. நான் மட்டுமே பேருந்தில், ஓட்டுனரும் நட்த்துனரும் காணவில்லை. கடைசி இருக்கைகளில் நான்கு மாணவர்கள் வந்து அமர்ந்தார்கள். அரை மணி நேரம் கழித்து அவர்களும் இறங்கிப் போய்விட, எனக்கு முன்பு இருந்த இருக்கைக்கு ஒரு நபர் வந்தார். இடையிடையேபேருந்து கிளம்பிவிட்டதா!?’ எனும் கேள்விகளுக்கு இல்லை எனும் ஒரே பதிலை அனுப்பிக் கொண்டேயிருந்தேன். மணி 3.30ஐ நெருங்க ஆரம்பித்தபொழுது, தனியார் பேருந்து நடத்துனர் வந்து ஏதோ பேசி விரட்ட இ.போ.ச பேருந்து மெல்லக் கிளம்பியது. நான் மெல்ல அதிர்ச்சிக்குள் நகர ஆரம்பித்தேன்.கதுருவெல அங்கிருந்து 200 கி.மீ தூரம். எட்டு மணிக்கு சென்று விடும் எனச் சொன்ன நம்பிக்கை இன்னும் பலமாக இருந்தது. நடத்துனர் வந்தார், டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்தில் ஏதேதோ செய்து பார்த்து ஒரு வெள்ளைத் துண்டுச் சீட்டைப் பெற்று டிக்கெட் விபரங்கள் அனைத்தையும் பேனாவால் எழுதிக் கொடுத்து பணம் பெற்றுக் கொண்டார். பயணக் களைப்பு, வெயில் தகிப்பு, பேருந்து நகர ஆரம்பித்ததில் வீசிய காற்று ஆகியவை என்னை தூக்கத்தில் ஆழ்த்தியது. நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தேன். விழித்துப் பார்த்தபோது நேரம் நான்கரை மணியைக் கடந்திருந்தது. சிங்களக் கிராமங்களின் வாயிலாக பேருந்து துள்ளி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்தில் கணிசமான தூரத்தைக் கடந்திருப்போம், குருநாகலை அண்மித்திருப்போம் எனும் ஆர்வத்தோடு கூகுள் வரைபடத்தில் தேடினேன். அப்பொழுதுதான் கட்டுநாயகாவில் இருந்து 23 கி.மீ தூரம் மட்டுமே கடந்திருப்பது புரிந்தது. குருநாகலுக்கு சுமார் 50 கி.மீ இன்னும். கதுருவெலவிற்கு ஏறத்தாழ 170 கி.மீ. எப்போது எட்டப் போகிறோம் எனும் நினைப்போடு பேருந்தின் போக்கைக் கவனித்தேன். ஓட்டுனர் நல்ல வேகம்தான், ஆனால் சுமார் ஐநூறு மீட்டர் தொலைக்கு ஒரு பேருந்து நிறுத்தம் இருப்பதாகப்பட்டது. யாரையேனும் இறக்கிவிட்டு அல்லது ஏற்றிக்கொண்டு சீறலாய்ப் புறப்பட்டு நான்காவது கியரைத் தொடும்போது அடுத்த நிறுத்தம் வந்துவிடுகிறது.

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வேறு வழியில்லாமல் பேருந்து நிறுத்தங்களை எண்ணத் தொடங்கினேன். அதுவே மேலும் கடுப்பைக் கிளற, அதைக் கை விட்டுவிட்டு மனிதர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். எல்லோரும் உள்ளூர் சிங்கள மக்கள். ஏறுவதும் இறங்குவதுமான வேடிக்கையாக இருந்தது. அவ்வப்போது மழை தூறிக் கொண்டிருந்தது. எனக்குள் சென்றடையும் நேரம் குறித்த கேள்வி கனக்கத் தொடங்கியது. பொதுவாக இலங்கையின் கிழக்கு நகரங்கள் எட்டு மணிக்கெல்லாம் அடங்கிவிடும். இந்த நிலையில் எப்போ கதுருவெல சென்று அங்கிருந்து மட்டக்களப்பு செல்வது என்பதை நினைக்கையில் தவறான முடிவெடுத்துவிட்டோமோ எனும் அச்சம் சூழ ஆரம்பித்தது. தனிப்பட்ட என் பாதுகாப்பு குறித்த அச்சமன்று அது. இரவு சென்றடைய முடியாவிடில் காலை எட்டு மணி பயிலரங்கிற்கு என்ன செய்வது எனும் அச்சமே.

ஒரு வழியாக குருநாகல் நகரத்தை அடையும்போது மாலை 6 மணியை நெருங்கியிருந்தது. சுமார் 75 கி.மீ தொலைவிற்கு இரண்டரை மணி நேரம், அதுவில்லாமல், ஒரு மணி நேரக் காத்திருப்பெல்லாம் அநியாயமா இல்லையாடா எனும் கேள்வியை என் பசிக்கு உணவாக விழுங்கிக் கொண்டேன். இதில் குருநாகல் பேருந்து நிலையத்தில் வேறு ஏறத்தாழ 20 நிமிடங்கள் பேருந்து நின்று ஆட்களை ஏற்றுக் கொண்டது. அதுவரை மக்கள் ஏறி இறங்கினாலும் என்னருகில் யாரும் அமர்ந்த நினைவில்லை.

இப்போது பேருந்து நிரம்பி வழியத் தொடங்க பர்தா அணிந்த பெண்ணும், அவர் மகனுமாய் என்னருகில் உட்கார்ந்தார்கள். தமிழ் குரல் முதன்முறையாகக் கேட்டது. தமிழா என்று அவரைக் கேட்க, அவர் இல்லை முஸ்லீம் என்றார். இலங்கை மொழி, மதம் அந்தப் பதிலில் சட்டெனப் புரிந்தது. கதுருவெல எப்போது சென்றடையும் எனக் கேட்க, தோராயமாக பதில் தந்தவர், என் தமிழை இனம் கண்டு, புதுசா வர்றீங்களா என்றார். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் என்றேன். ”மட்டக்களப்பில் கல்யாணம் பண்ணியிருக்கீங்ளா, புள்ளைகுட்டிங்களைப் பார்க்கப் போறீங்களா!?” என்றார். பதட்டப்பட்டு மறுத்து பயணம் குறித்து விளக்கினேன். கடுறுவேலா-மட்டக்களப்பு பேருந்து குறித்து தம்மோடு வந்திருக்கும் மற்றொரு பெண்ணிடம் அவர் விசாரிக்க, அவர் என்னைக் குறித்து விசாரிக்க, நான் தமிழ்நாடு என்று சொல்ல, தம் கையில் இருந்த பிள்ளையைக் காட்டி, இவரோட அப்பா கன்னியாகுமரிதான் எனச் சொல்ல, நான் மட்டக்களப்பு பேருந்தைப் பிடிப்பதிலேயே குறியாக இருக்க, அவர் ஆசுவாசமாய்அண்ணா... இந்தப் பஸ் 9 மணிக்குத்தான் போய்ச் சேரும், அங்கேதான் இறங்குவேன். உங்களை மட்டக்களப்பு பஸ்ஸில் ஏத்திவிடுறேன். பயப்படாம இருங்க!” என்றார்.

தளரும் நேரத்தில் இம்மாதிரியான சொற்கள் தரும் நம்பிக்கை எதனினும் உயர்ந்தது. நம்பிக்கை கூடினாலும் உடலளவில் நான் மிகுந்து தளர்ந்திருந்தேன். விமான நிலையத்தில் ஒரு அரை லிட்டர் தண்ணீர் வாங்கியதோடு சரி. அதில் பாதியைத்தான் இந்த நான்கு மணி நேரமாகக் குடித்திருப்பது நினைவுக்கு வந்தது. இடையில் தண்ணீர் வாங்கும் வாய்ப்பு எங்குமே கிடைக்கவில்லை. குருநாகலில் வாங்கியிருந்திருக்க வேண்டும். களைப்பு கூடிக் கொண்டே போனது.

குருநாகலில் புறப்பட்ட பேருந்து வேறு முகம் காட்டி மின்னலாய் சீறியது. இடையில் எங்கும் நிறுத்தவில்லை. தம்புள்ள, ஹபரன என ஒவ்வொன்றாய் கடக்க, நேரமும் கடந்து கொண்டேயிருந்தது. கூகுள் வரைபடத்தில் தொலைவு குறைந்து கொண்டே வந்தது. கதுருவெலவை நெருங்க மிச்சமிருந்த தண்ணீரைக் குடித்தேன். இரவு 9 மணியளவில் கதுருவெலவில் நிற்க ஓட்டுனரும், நட்த்துனரும் பின்பக்கம் இருந்த ஒரு பேருந்தை சுட்டிக் காட்டினார்கள். அந்தப் பெண் ஓடி வந்துவாங்கண்ணா அந்தப் பஸ்ல ஏறுங்கஎன அடையாளம் காட்டினார். பேருந்தை நெருங்கி ஓட்டுனரிடம் மட்டக்களப்பு எனச் சொல்ல, ஏறிக்குங்க என்றார். தமிழ் குரல். முழுத் தெம்பு வந்தது. அந்தப் பெண்ணிடம் நன்றி பகிர, உங்க நெம்பர் கொடுங்க என்றார். விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு, தமிழ்நாடு வந்தாப் பேசுங்க என்றபடி விடைபெற்றேன். அருகில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கி பாதியைச் சரித்தபின் முழுத் தெம்பும் வந்தது

நான் ஏறிய பேருந்தின் சன்னல்களை மூடியபடி வந்த நபர் ஒருவர், பின் பக்கமாய் நின்ற மற்றொரு பேருந்தைக் காட்டி அதற்கு மாறிக்கொள்ளுமாறு கூறினார். அந்து யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு செல்ல வந்திருக்கும் பேருந்து. சிலர் அமர்ந்திருந்தனர். ஏறி பெட்டிகளை வைத்து அமர, பாட்டு அதிர்ந்தது. மட்டக்களப்பு பேருந்தில் ஏறிவிட்டேன் எனும் தகவல்களைச் சொல்லிவிட்டு, பேருந்து புறப்படும் தருணத்திற்காகக் காத்திருந்தேன். நிமிடங்கள் ஓடி முக்கால் மணி நேரத்தை எட்டியிருந்தது. ஒருவரையொருவர் பார்த்து பேருந்து கிளம்புவது குறித்து புலம்பிக் கொண்டிருந்தனர். எப்போது போனால் என்ன? எப்படியும் மட்டக்களப்பு சென்று விடுவோம் என்பதே போதுமானதாக இருந்தது.

ஒரு கட்டத்தில் பயணிகள், பேருந்து புறப்பாடு குறித்து குரல் எழுப்ப சட்டெனப் புறப்பட்டது. சுமார் ஒரு கி.மீ சென்ற பேருந்து சாலையில் யூ-டர்ன் அடித்து வந்த வழியே பயணித்தது, ஒரு கி.மீ பயணித்த பேருந்து மீண்டும் யூ-டர்ன் அடித்து முன்பு நின்ற இடத்திற்கே வந்திருந்தது. “அடேய் என்னங்கடா இது!!!?” எனும் வடிவேலு பாணிக் கேள்வியை விழுங்கிக் கொண்டிருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் சீறிப் புறப்பட்டது, எங்கே யூ-டர்ன் அடிக்குமோ எனக் காத்திருக்க மட்டக்களப்பிற்கான தொலைவு கூகுள் வரை படத்தில் குறையத் தொடங்கியது. நேரம் இரவு 10 மணியைக் கடந்திருந்தது.பதினொன்று நாற்பது மணியளவில் கல்லடியில் இறங்கினேன். அது எனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட இடம். நிறுத்தத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவில் தங்கும் இடம். எளிதாக சென்றடைந்தேன். ஒருவழியாக அறை சாவிகளைப் பெற்று உள்ளே நுழைய, நான் சாப்பிடுவதற்காக நண்பர் வாங்கி வைத்திருந்த மசால் தோசை மிகப் பிரியமாகக் காத்திருந்தது. குளித்துவிட்டு வந்து தோசையைப் பதம் பார்க்க ஆரம்பித்தேன்.

காலை 5 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தேன். தமிழ்நாட்டின் மேற்குக் கோடியிலிருந்து இலங்கையின் கிழக்குக் கோடியை அடைவதற்கு 26 மணி நேரம் ஆகியிருந்தது மலைப்பாக இருந்தது. அடைய வேண்டிய இடத்தை அடைந்துவிட்டோம் எனும் தெம்பும், அடுத்த 110 மணி நேரம் எப்படியாக அமையப்போகிறது எனும் குறுகுறுப்பும் சேர்ந்து உறக்கமாய் என்னை அழுத்தியது. விடியலுக்காக நானும், எனக்காக மட்டக்களப்பு விடியலும் காத்திருக்கத் தொடங்கினோம்.

2 comments:

Blue Sky said...

அற்புதமான பதிவு ஐயா

Anandhi Bhaskaran said...

Felt that we too travelled with you...that much depth in description...