கீச்சுகள் தொகுப்பு - 66


மௌனம் தகர்தல் ஒரு பிரசவம் போன்று வாதை நிரம்பியது. ஆனால் அதுவொரு விடுதலை, சிக்கலான கேள்விக்கான சரியான பதிலும்கூட

*

மனிதனின் சுயநலங்களில் ஒன்று, ‘தம் அன்புதான் புனிதமானது, தாம் நிறுவிய வடிவங்களுக்குள் பொருந்தாத அன்பு எப்போதும் புனிதமற்றதுஎன நினைப்பது

*

அடைத் குழாயின்
நுனியில் விழாமல்
கனத்துக் கொண்டிருக்கும்
சொட்டு நீர்த்துளியாய் மோகம்!

*

துவண்டுபோகும் சூழல்களில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றோம் என நம்புவது அவசியம்.

*

மலரில் சுரக்கும் தேனின் சுவை
மலருக்கு எப்படித் தெரியும்?
சுவைக்கும் வண்டுக்குத்தானே
தெரியும்!

*

சொற்களைக் கேட்க செவிகள் மட்டும் போதுமா...
மனமும் வேண்டுமல்லவோ!?

*

ரகசியங்கள் புதைக்கப்படுவதன் மூலம் விடுதலையாக்கப்படுகின்றன.

*

தாக்கப் பயன்படும் ஆயுதங்கள்போல் கூர்மையாக, முனையில் நஞ்சு பொருத்தி இருக்க வேண்டியதில்லை, தற்காத்துக் கொள்ள தயாரிக்கப்படும் ஆயுதங்கள்!

*

பசிக்கவில்லையென ஏமாற்றும் குழந்தைக்கு, ருசியாகப் பிணைந்த சோற்றின் முதல் கவளத்தை ஊட்டிவிட்டால் போதும்... அதேபோல்... ஒரு செயலைச் செய்யவே முடியாது என மனம் அடம் பிடிக்கும் நேரத்தில் அதைத் தொடங்கிவிட்டால் போதும்...!

*

சிக்னல் விழுந்த உடனே ஒலிப்பானை அலற விடுவதுக்குப் பேரு  புத்திசாலித்தனமல்ல... சைக்கோத்தனம்!

*

தாமதித்த இந்த மாலைப்பொழுதில் எலுமிச்சைச் சாறு பிழிந்தளிக்கப்பட்ட தேநீர் குவளையிலிருந்து, அடுத்த மிடறிலேனும், பளிங்காய் மிதக்கும் எலுமிச்சையின் புளிப்பு நிறைந்ததொரு முத்து கிட்டிவிட்டால் போதும்...  மெல்ல நாக்கில் அழுந்தி உடைத்து, அதன் ருசியை ஒரு கள்ளமுத்தம் போல் உயிரின் ஓரத்தில் தேக்கிக்கொள்ளலாம்!

*

வேப்ப மரத்திலும் எறும்பு சுவைக்க ஏதோவொன்று இருக்கிறது!

*

எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்என்ற சமாதானம் எத்தனை அழகியது அல்லது எளியது. :)

*

ஆளே இல்லாத ரயில் பெட்டியை மகிழ்வாய் நினைப்பது எவ்ளோ பெரிய பேராசை!

*

அவமானம்ங்கிறது அவங்க கொடுக்கிறதில்ல. நான் நினைச்சுக்கிறது. 

*

பகிர்ந்திடாத முத்தம்கூட சுமைதான்!

*

சற்றும் எதிர்பாராத தருணத்தில் ஒருவர் தன்னை வெளிப்படுத்தும் பாங்கே அவரின் உண்மையான ஆளுமையை காட்டுகிறது.

*

மனிதன் நம்பிக்கைஎன்ற ஒன்றைக் கண்டுபிடித்தபோதே, அதைக்கொண்டே தான் வீழ்த்த விரும்புவதை வீழ்த்துவதற்காக துரோகம்என்ற ஒன்றையும் உருவாக்கியிருக்க வேண்டும்.

*

முறுக்கேறியிருக்கும் கர்வத்தின் மீசை மழிக்க ஒரு கணம் போதும்!

*

நம்பாமல் இருக்கும் வரைக்கும் உண்மையும் பொய்தான்!

*

தண்டிப்பதற்கு அதிகாரம், உடல் வலு, பொருளாதார வசதி மட்டுமே போதும். ஆனால், மன்னிப்பதற்கு வீரமும், தெளிவும், மிகப்பெரிய மன வலுவும் தேவை.

*

மகிழ்ச்சி என்பது அதை வேண்டுவோர் கொள்ளும் நம்பிக்கையிலும், அதற்காக எடுக்கும் தீர்மானத்திலும் அடங்கியிருப்பது!

*


ரோபோ மனசு
கிராஃபிக் கிளியை
வரைந்து கொண்டிருக்கும்போது
கோவப்பழமொன்று
காற்றுவெளியில்
முழுச் சிவப்பாகிறது!

*

எல்லா அறிவுரைகளும், எல்லாருக்கும் ஒரே மாதிரி பொருந்தாது என எனக்கு நானே இப்போதைக்கு அறிவுரை சொல்லிக்கிறேன்.

*

அன்பைப் பகிர்வதென்றான பிறகு
அதில் அதிகமென்ன குறைவென்ன!?

*

பௌணர்மி இரவில் தகிக்கும்
கடலலையில் மிதக்கும் படகு
இந்த நேசம்!  #நேசமொழி

*

வேர் அறுந்த நினைவுகள்... உரமாக!

*
கொளுத்தும் வெயிலில்
சடசடத்து நம்பிக்கையூட்டி
சட்டெனக் காணாமல்போகும் 
பெருமழைச் சொட்டுகளாயும்
ப்ரியத்தின் நினைவுகள்.

*

கடைசிப் பேருந்தில் அனுப்பிவிட்டு
அசைக்கும் கையின் தளர்வில்
சிந்துகிறது பிரியம்!

*

'செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்பது போன்றதுதான் 'ஆடி'க் கார்ல போறவங்கள நிறுத்தி வாயை ஊதுனு சொல்லாம இருக்கிறதும்

*

மனிதர்களின் இல்லாமையைக் குறிப்பதல்ல தனிமை’.
புரிந்துகொள்ளா மனிதர்களின் இருப்பு மற்றும்
புரிந்துகொள்ளும் மனிதர்களின் இல்லாமையைக் குறிப்பது!

*

அணைப்பென்பது
உடல்களின் வெற்றுப் பிணைப்பா
ஆன்மாக்களின் கலவியன்றோ!?

*

வாழ்பவர்கள் செய்யவேண்டிய முக்கியமானதொரு கடமை... வாழ்ந்து முடிப்பவர்களின் இறுதிக் கணங்களில் மன்னிக்க வேண்டியிருப்பின் மன்னிப்பதுவும், நம்மால் இயன்றதை நேர்மையாகச் செய்வதும்தான். காரணம், ‘இறுதிக் கணங்கள் எப்படி அமையும்என்பதை அவ்வளவு எளிதில் யாரும் தீர்மானித்துவிட முடியாது.

*



உடனிருப்போர் விலகக் காத்திருந்து
முத்தமொன்று பகிரத்துடிக்கும்
காத்திருப்பின் அவதியைத்தான்
மொழிகிறது அந்தக் குயில்!

*

ரயில் மோதி யானை இறந்ததை ஏழாம் பக்கத்தில் சிறு செய்தியாகப்  போடுபவர்களுக்கு, வனத்தின் ஆணி வேர் ஒன்று அறுந்துபோனது தெரியவா போகிறது!?

*

"பின்வாங்கு" என மனம் சொல்லும்போது,
"இன்னும் போ" எனும் புத்திதான் இப்போதைய தேவை!

*

மோதிர விரல்
நக இடுக்கில்
புதைந்து கிடக்கும்
அந்த முத்தத்தின்
நினைவுகளைக் கிளற
அந்திப் பொழுதைவிட
அழகான நேரம் ஏது!?

*

யாருக்காக உழைக்கின்றோமோ அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் கொடிது!

*

குழப்பமான கனவொன்றின்
மையத்தில் தெளிவடைவதற்காக
விழித்துக் கொண்டேன்!

*

சந்தேகங்களின் எண்ணிக்கைகளைக் குறைக்கப் பழகுங்கள்.

*
கடவுச்சொற்களில்
ஒட்டிக்கிடக்க மட்டுமா
அத்தனை பிரியம்!

*

இன்னொருவருக்கு நஷ்டமில்லாத லாபம் சாலச் சுகம்!

*

நான் முட்டாள்எனச் சொல்லிப் பாருங்கள், உலகம் மெல்ல யோசித்தபடியே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பேசுவதாகவும், முட்டாளென்று நம்ப முடியவில்லையென்றும் சொல்லும். நான் புத்திசாலிஎனச் சொல்லிப்பாருங்கள் உலகம் உடனடியாக பொய் சொல்றான் பாரு... முட்டாப் பயஎனச் சொல்லும்.

*

பிழை பொறுத்தருள் மனமே!

*

உலர்ந்த நின் இதழ்களை
நாவால் வருடி
நீயே ஏன் சிரமப்படுகிறாய்!


2 comments:

சேக்காளி said...

//யாருக்காக உழைக்கின்றோமோ அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் கொடிது!//
ஆனாலும் வாழ்ந்து தான் தீர்க்க வேண்டியுள்ளது.

Naveankumar said...

நின் சொற்கள் உரமாகுக