விடுபடுதலும் விடைபெறுதலும்ருவாய்ப் பிணைந்து, உயிராய்த் துளிர்த்து உருவமொன்றை அடைந்து பிறப்பாய் உலகிற்கு வந்த கணம் முதல், ’வாழ்க்கை’ எனக் கணக்கிடுகிறோம். கருவறையிலிருந்து விடுபட்டதிலிருந்து மரணம் எனும் உண்மைக்குள் கரைந்துபோகும் வரையிலிருக்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்ந்து கழிக்கிறோம் எனக் கொள்ளலாம். இன்னும் எளிதாகச் சொல்லவேண்டுமெனில்  கருவறைக்குள்ளிருந்து விடுதலை பெற்று, கல்லறைக்குள் அகப்படும் வரையிலான காலம்தானே வாழ்க்கை.

வாழ்க்கை என்பது எதிலும் அகப்படாமல் விடுபட்டிருப்பதுதாகத்தானே இருக்க வேண்டும்?. அப்படி அகப்படாமல் நம்மால் வாழ்ந்துவிட முடிகின்றதா? வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒன்று பீடித்துக் கொள்கிறது. தனக்குள் விழுங்குகிறது அல்லது சிறைப்படுத்தும் பொருட்டு, எதற்குள்ளேனும் அகப்பட்டுக் கொள்கிறோம். அகப்பட்டிருப்பதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் நாம் அதற்குள் அகப்பட்டிருக்கிறோம் என்பதே அறியாமல் இருப்பதுதான். அகப்படல் அல்லது ஒன்றினுள் அடைக்கப்படுதல் வாழ்க்கையில், தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அது அவசியமான ஒன்றா?  

வெகு அரிதாக இந்த அகப்படல் என்பது ஒருவித மகிழ்ச்சியை, பாதுகாப்பை, வசதியைத் தரலாம். அல்லது தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். மற்றபடி அகப்படல் என்பது நம்மை ஒரு எல்லைக்குள் நிறுத்துகிறது. ஒன்றினுக்குள்ளே அடக்கி அலுப்பூட்டுகிறது. அவசியமான, விரும்பிய கதவுகளைத் திறக்கவிடாமல் தடுத்து விடுகிறது. அதற்காகவேணும் அகப்பட்டிருத்தல் குறித்து சிந்திப்பதும், பேசுவதும் அவசியமாகின்றது. அது குறித்துப் பேசுவதின் முக்கிய நோக்கமே, அதிலிருந்து விடுபடுதல்தான். விடுபட விரும்பினாலும், விடுபடுதல் என்பது எளிதான ஒன்றாகவும் இருப்பதில்லை. வன் பெயர் ஜேக். ஒரு விடியலில் தனக்கு ஐந்து வயதாகிறது என்பதை அம்மாவிடம் அறிவிக்கிறான். அவனுடைய தாயும்கூட அந்த ஐந்து வயதிற்காகத்தான் காத்திருந்தாள் என்பது பின்னர் தெரிய வருகிறது. அவர்கள் இருவரும் ஒரு அறைக்குள் வசிக்கிறார்கள். வசிக்கிறார்கள் என்றாலும், ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சுடும் உண்மை. அந்த ஐந்து வயது என்பதை கொண்டாட்டமாய் வரவேற்க கேக் தயாரிக்கிறார்கள். கேக் மேல் ஊதி அணைக்க மெழுகுவர்த்தி இல்லையென ஜேக் கோபப்படுகிறான்.

ஜேக்கின் அம்மா பதினேழு வயதுப் பெண்ணாக இருக்கும்போது, ஒரு தோட்டத்தின் நடுவே இருக்கும், வெளியில் ஓசை கேட்காத தனித்த அறைக்குள் அடைக்கப்படுகிறாள். இப்போது இருபத்தி நான்கு வயதாகின்றது. அந்த அறைக்குள்ளேயே அவளுக்கு ஜேக் பிறந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

பிறந்தது முதல் அந்த ஒற்றை அறைக்குள் மட்டுமே வசிக்கிறான் ஜேக். அவனுக்கு அதுதான் மொத்த உலகம். காலையில் எழுந்ததும் அறையில் இருக்கும் பொருட்களுக்கு குட் மார்னிங் சொல்கிறான். அம்மாவோடு பேசுகிறான், பல் தேய்க்கிறான், குளிக்கிறான். ஒரு சுவரிலிருந்து மறு சுவர் வரை ஓடி விளையாடுகிறான்.

அறையில் மின்சார வசதி உண்டு. ஒரு பகுதி சமையலுக்கு, குளிக்க என இருக்கின்றன. இரகசிய எண்களால் பூட்டப்பட்டிருக்கும் அறையின் கதவுகளைத் திறந்து இரவுகளில் வருகின்றவன் காலையில் திரும்பிச் செல்கிறான். அவர்கள் இருவருக்கும் தேவையானதை அவன் கொண்டு வந்து தருகிறான், விடுதலையைத் தவிர!. ஒருவகையில் அது ஒரு குடும்பம்தான். ஆனால் அது குடும்பம் அல்ல.

அம்மாவுக்கு சிறை, ஆனால் ஜேக்குக்கு அந்த அறை மட்டும்தான் தெரியும். அதில் அம்மாவைத் தெரியும். இரவுகளில் வந்து போகும் அந்த மனிதனை நிழலாகத் தெரியும். அறையில் இருக்கும் தொலைக்காட்சியில் வரும் ’டிவி மனிதர்களை’த் தெரியும். அவ்வளவுதான்.

அவனுக்கு நான்கு பக்கமும் சுவர்களும், தரையும், கூரையிலிருக்கு கண்ணாடிச் சதுரமும்தான் உலகம். உண்மையில் உலகம் என்ற ஒன்றையே அவனுக்குத் தெரியாது. கூரையில் பொறுத்தப்பட்டிருக்கும் கண்ணாடி வழியே வரும் வெளிச்சம் மட்டுமே அவனுக்கும் உலகத்துக்குமான ஒருவித தொடர்பு. அதில் சதுர வடிவமாய் வானம் தெரியும். ஒருநாள் அந்தக் கண்ணாடி மீது ஒரு பழுத்த இலையொன்று விழுகின்றது. அம்மாவிடம் அது என்னவெனக் கேட்க ”இலை” என்கிறாள். டிவியில் கண்டிருப்பதை வைத்து ”இலையென்பது பச்சைதானே!?” எனக் கேட்கிறான்.

தாங்கள் அறை ஒன்றிற்குள் அடைபட்டிருப்பதை ஜேக்கிடம் அம்மா சொல்கிறாள். தப்பிக்க முயன்று தோற்றதை, தப்பிக்க வாய்ப்பே இல்லாததைச் சொல்கிறாள். அறைக்குள்ளேயே வாழ்ந்து பழக்கப்பட்ட ஜேக்கிற்கு ’ஏன் தப்பிக்க வேண்டும்’ எனப் புரியவில்லை. அறைக்கு வெளியே இருக்கும் உலகம் குறித்துப் பேசுகிறாள். அறை தவிர்த்து வேறு ஒரு உலகம் என்றால் என்னவென்று கேள்வி வருகின்றது. கூடவே அவனுக்கு மனிதர்கள் என்றால், வீடு என்றால் எனும் கேள்விகள் அடுத்தடுத்து வருகின்றன. சுவருக்கு அப்பால் வேறு ஒரு உலகம் இருக்கிறது என்பதை அவன் அம்மா புரியவைக்க முயல்வதும், அவன் புரிந்துகொள்ள முனைவதும் அற்புதமான ஒரு தருணம். மொத்தத்தில் அந்த சுவர்களுக்கு இன்னொரு புறம் இருக்கிறதெனும் அவசியமான புரிதல்தான், விடுபடுதலுக்கான முதற்காரணியாக இருக்க முடியும்.

ஜேக்கின் அம்மா அந்த ஏழு ஆண்டுகளில் தப்பிக்க முயற்சித்து தோற்றிருந்தாலும், தப்பிக்க வாய்ப்பில்லாத நிதர்சனத்தை உணர்ந்திருந்தாலும்கூட காத்திருந்தாள். காத்திருத்தலும் உழைப்பின், செயல்பாட்டின் ஆகச்சிறந்த ஒரு வடிவம்தான். தோற்றாலும், வாய்ப்புகளற்றிருந்தாலும் தப்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஐந்து ஆண்டுகள் காத்திருந்து ஜேக்கை கருவியாக மாற்றிடத் திட்டமிடுகிறாள். வேறு ஒரு உலகம் என்னவென்பதை அறியாத ஜேக், அந்த தப்பித்தலுக்கான முயற்சி குறித்துப் பயம் கொள்கிறான். ஆறு வயதான பிறகு முயற்சிக்கலாமே என்று தள்ளிப்போட முயல்கிறான், ஐந்து வயதானதே போதும் என்று அம்மா சொல்ல நான்கு வயதுக்குப் போய்விடுகிறேன் என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறான். தனக்குப் பிடிக்காவிட்டால் தள்ளிப்போடலும் தப்பிக்க முனைதலும் மனிதர்களின் பதில்களாக இருப்பதுதானே உண்மை.

ஒரு வகையில் ஜேக் ’உலகம்’ என்ற ஒன்றை அறிந்திருக்காததால், உலகம் குறித்து எந்தத் தேடலும் கனவும் ஆசையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் பதினேழு வயதில் அகப்பட்டுக் கொண்ட அவன் அம்மாவிற்கு உலகத்துக்கு திரும்பும் ஆசை இருக்கின்றது. சூழலின் பொருட்டு அகப்பட்டுக்கொண்டாலும், அகப்பட்டதை அறிந்துகொண்டால் மட்டுமே அதிலிருந்து வெளியேறும் சாத்தியம் கைகூடும். ஒருவேளை அகப்பட்டுக் கொண்டதிற்குள்ளேயே ஆழ்ந்து மூழ்கிப்போய் ஜேக் போன்ற ஒரு நிலைக்கு நாம் மாறிவிட்டால், விடுபடுதல் குறித்த ஆசையோ கனவோ அற்றுப்போகும் சாத்தியமுண்டு. அப்போது தெரிய வேண்டியது அகப்பட்டிருப்பது மட்டுமே உலகம் அல்ல என்பதுதான். அகப்பட்டிருக்கும் இடம், செயல், நிலையைச் சுற்றியிருக்கும் சுவர்களுக்கு மறுபக்கம் இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளும் வரை அகப்பட்டிருப்பதற்குள் இருந்து வெளியேறும் சாத்தியங்கள் இல்லவே இல்லை.

அகப்பட்டிருப்பதிலிருந்து வெளியேறும் தருணங்களில், இருக்கும் சூழலே பிடித்தோ, பீடித்தோ போயிருந்தால், ஜேக் போலவே அடுத்த ஆண்டு முயற்சிக்கலாம் அல்லது கடந்த ஆண்டுக்குள் ஓடிப்போய் தன் பலத்திலிருந்து சுருங்கி குமைந்து தன்னை கூட்டிற்குள் அடைத்துக்கொள்கிறேன் என தேய்ந்து போகலாம்.

ஜேக்கிற்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் சுவற்றுக்கப்பால் இருக்கும் உலகம் குறித்து ஒரு பிம்பத்தை உருவாக்குகிறாள். அதேசமயம் மிகப்பெரிதாக சிந்திக்க அவகாசம் தராமல் அவனை, செயல்பட தயார்படுத்துகிறாள். அந்தத் திட்டமிடலில் அவன் அதுவரை செய்திடாத செயல்களை செய்ய ஆயத்தப்படுத்துகிறாள். அந்த ஆயத்தங்கள் அவனை அச்சுறுத்துகின்றன. வலி ஏற்படுத்துகின்றது. நேசிக்கும் அம்மாவை ”ஐ ஹேட் யூ” என ஓங்கிய குரலில் கத்துகிறான்.

அவன் அதுவரை ’மனிதர்கள்’ என்றே அறிந்திடாத மனிதர்களிடம் உதவி கோருவதை பயிற்றுவிக்கிறாள். அவன் சந்திக்கும் யாரிடமாவது உதவி கோரச்சொல்கிறாள். அந்த ‘யார்’ யார் எனும் கேள்விக்கு வெளியில் நீ சந்திக்கும் முதல் மனிதர் என்று விடை தருகிறாள். அவள் விரும்பியவண்ணமே ஜேக் அந்த அறையைவிட்டு வெளியேறுகிறான்.

ந்த வருடம் சிறந்த நடிகையாக ’ப்ரி லார்சன்’ ஆஸ்கர் விருது பெற்ற ”ரூம்” திரைப்படத்தின் ஒரு பகுதி கதை இது. இந்தக் கதையில் அகப்பட்டிருத்தல் என்பது ஒரு அறை மற்றும் அம்மா, மகன். ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அகப்படல்கள் இருக்கின்றன. வியாபாரம், அரசியல், போதைப் பொருட்கள், சமூகவலைதளங்கள், சாதி, கோபம், தாழ்வு மனப்பான்மை, பொறாமை, பொய், விளையாட்டு, காமம், பணம், சூதாட்டம், இன்னபிற என நம்மை தனக்குள் பிடித்துவைத்துக்கொள்ள ஏராளமானவை இருக்கின்றன.

அகப்படுதலென்பது பிடிக்கப்படுதல், அடைக்கப்படுதல், ஈர்க்கப்படுதல், பலியாதல் என பல வகைப்படும். அது விரும்பியோ, விதிவசமென்றோ, விதிகளுக்கு உட்படுத்தப்பட்டோ, அடிமையாகியோ, அடிமையாக்கப்பட்டோ கணப்பொழுதில் நிகழ்ந்தேறிவிடலாம். ஆனால் அந்த விடுதலையென்பது ஒரு வாழ்நாளின் கனவு, உழைப்பு, திட்டமிடல். இன்னும் சொல்லப்போனால் அது தன்னால் முடியாமல் இன்னொருவர் செய்யும் தியாகத்தால், தாங்கு வலியாலும் கூட கிட்டுவதாகக்கூட இருக்கலாம்.

எந்த அகப்படலுக்கும் ஒரு விடுதலையுண்டு. விடுதலை விடுதலையாகவே கிட்டுவதும், விபரீதங்களை உருவாக்குவதும் காத்திருப்பில், திட்டமிடலில், உழைப்பில், உறுதியில், கனவில் இருக்கின்றது. காத்திருத்தல் அர்த்தம் பொதிந்ததாகவும், திட்டமிடல் கூர்மையாகவும், உழைப்பு உண்மையானதாகவும், உறுதி அடர்த்தியானதாகவும், கனவு விருப்பத்திற்குரியதாகவும் இருத்தல் ஒன்றை இன்னொன்று பலமாக்கும்.

இதில் மிக முக்கியமானது இந்த விடுபடலுக்கு பிந்தைய காலம். இங்கும்கூட உலகத்திற்குள் முதன்முறையாக காலடி வைத்திருக்கும் ஜேக்கிற்கு பரந்த உலகத்திற்குள் ஒரு அறை எனும் உலகில் இருந்ததைவிட நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள். கடலைப் பார்க்கிறான், வானத்தை, உலகின் வேகத்தை, கட்டிடங்களின் உயரத்தை என்று கண்டாலும் அந்த அறையைவிட்டு அவன் மனதால் வெளியில் வரவில்லை. அவன் அம்மா பாதிக்கப்படவும் செய்கிறாள்.

ஒரு கட்டத்தில் அறைக்குத் திரும்புகிறான். காலை வணக்கம் பகிரும் பொருட்களில் வழக்கு சாட்சியங்களுக்காக எடுக்கப்பட்ட பொருட்கள் போக எஞ்சியிருக்கும் பொருட்களிடம் தனித்தனியே விடைபெறுகிறான். வெளியேறுகையில் அம்மாவிடம் ”மா, ஸே பை பை டூ ரூம்” என அறையிடம் விடைகூறப் பணிக்கிறான்.

தங்களுக்கு வேண்டாததிலிருந்து, ஒவ்வாத ஒன்றிலிருந்து விடுபடுதல், விடைபெறுதல் தேவையானது. அது முடியும்!

-

நம் தோழி  ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை


-

3 comments:

Raja ILAmurugu said...

அருமையான அலசல், படத்தின் ஒரு பகுதியை கட்டுரையாக்கிய விதம் பிடித்திருந்தது

sangeetha vasu said...

மிகவும் நல்ல பதிவு !! இந்த பதிவு எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை !!

sangeetha vasu said...

மிகவும் நல்ல பதிவு !! இந்த பதிவு எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை !!