Aug 18, 2015

என்னுரை

      விருட்சங்கள் யாவும் அளவெடுத்து, நாள் குறித்து, குழிதோண்டி, விதையூன்றி, நீர் வார்த்ததில் முளைத்தெழுந்தவைகளல்ல. வான் கிழித்துப் பறந்தேகும் பறவையொன்றின் எச்சம் வழி வீழ்ந்தோ, பிறிதொரு பொழுதில் உண்ணலாமென மரப்பொந்தொன்றில் அணிலொன்று பதுக்கிவைத்து மறந்துபோன பழமொன்று காற்றடிக்கையில் விழுந்ததில் துளிர்த்தெழுந்தவைகளாகவும் இருக்கலாம்.

       என்னுள் இருக்கும் மௌனப் பைகள் சில நேரங்களில் நிரம்பித் தளும்பியதிலும், பல நேரங்களில் தானாக வாய் திறந்ததிலும், அரிதாக எவரேனும் அவிழ்த்து விட்டதிலும் கோர்வையாய்ச் சிதறிய சொற்களைக் கோர்த்ததில், சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆகப்பிடித்தது மௌனமேயெனினும் கருவறை விட்டு ஒவ்வொரு முறையும் வெளியேறத் துடிக்கும் வார்த்தைகளுக்கு வழிவிடுகையில் உணர்ந்திட்ட வலி, வரிவரியாய்த் தலைகோதி வாசிக்கையில் ஆசுவாசப்பட்டு விடுகின்றது. இப்படியாக இந்தச் சொற்களுக்கு பிரசவம் பார்க்காமல், உள்ளுக்குள்ளேயே தேக்கி முடக்கி வைத்திருந்திருந்தால், என்னுடைய பல நாட்களும், சில மணி நேரங்களும் மிச்சப்பட்டிருக்கலாம், ஆனால் நான் மிச்சமிருந்திருப்பேனா!?

       நான்கு தலைமுறைக்கான வாழ்க்கையை தெரிந்தோ, தெரியாமலோ ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பாகவே எழுத்து எனக்குக் கைவசப்பட்டது. நினைவுகளில் சிலிர்க்கவும், நிகழ்காலத்தில் வாழவும், எதிர்காலத்தில் நம்பிக்கைகொள்ளவுமென எல்லாக் கதவுகளையும் எழுத்துகொண்டே நான் திறந்து கொண்டிருக்கிறேன். சுவாசிக்கும் காற்று போலவே மிக இயல்பாக எழுத்தினை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். பொதுவாக இரவுகள் வெவ்வேறானவை. குளிரானவை, அடைமழை போர்த்தியவை, வெம்மை சூழ்ந்தவை, அரிதாய் வெளிச்சம் புகுத்தப்பட்டவை. அப்படியான இரவுகளில் ஆழ்ந்த நித்திரையின் முடிவாய் விடியலொன்று தரும் சுகத்திற்கு நிகரான விடுபடுதலை ஒவ்வொரு கட்டுரைகளின் நிறைவிலும் நான் சுகித்திருக்கின்றேன்.

       கணினியோடு கடிமணம் புரிந்து ஈரெட்டு ஆண்டுகள் கழித்துத்தான், கணினி வழியே எண்ணங்களை எழுத்தாக்கி அதை உலகத்தின் பார்வைக்குப் பரிமாற முடியுமென்பதை அறிந்து கொண்டேன். முதன் முதலாய் ஒரு வலைப்பக்கம் உருவாக்கி, ஒரு சேர கொஞ்சம் வரிகள் கோர்த்து அதை உலகின் பார்வைக்கு அனுப்பிட்டு நகம் கடித்த முன்னிரவுப் பொழுதொன்று இப்போதும் பசுமையாய் நினைவில். சொற்களிலிருந்து வாக்கியங்களுக்கு முன்னேறி, வாக்கியங்களிலிருந்து பத்திகளுக்கு நகர்ந்து, அங்கிருந்து பக்கங்களைத் தாண்டும் கனத்தில் ஓர் கனவிருந்தது. இப்படியாக எழுதுபவைகளில் இருபத்தைந்து படைப்புகள் வந்தவுடன், அவற்றைத் தொகுத்து அச்சிலேற்றி அழகுபார்த்து விடவேண்டுமென்பதுதான் அந்தக் கனவு. இருபத்தைந்தினைக் கடந்த வேகம், கனவினைக் கரைத்திருந்தது. அதன்பின் ஒருபோதும் புத்தகம் குறித்து கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. காலமும் அடர் மௌனத்தோடு காத்திருந்தது.
 
 


       எந்தக் கணத்தில் அந்த முடிவினை எடுத்தேனென, சரியாக நினைவுபடுத்த இயலவில்லை. ஆனால் ”ஏன் புத்தகம் வெளியிடல?” என திசைதோறும் வருடிய கேள்விகளுக்கு, என்னிடமிருந்த ஒற்றை மழுப்பல் பதில் எனக்கே சலித்த கணமொன்றில், நண்பர் வேடியப்பன் தமது டிஸ்கவரி பேலஸ் வெளியீடாகக் கொண்டுவர விரும்பியதுதான் ”கிளையிலிருந்து வேர் வரை”. செம்மையாகச் செய்து எனக்கொரு புது அடையாளத்தை அளித்த வேடியப்பனுக்கு அன்பும் பிரியங்களும்.

       எழுத்தின் ருசி உணர்த்திய நட்புகளுக்கும், கட்டுரைகளைத் தெரிவுசெய்து, பிழைதிருத்தம் செய்த தோழமைகளுக்கும், அணிந்துரையால் அலங்கரித்த படைப்பாளிகளுக்கும், எப்போதும் துணையிருக்கும் குடும்ப உறவுகளுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளில்லையென்பது நகைமுரண் தான்.

       ஆனாலும் சொல்வேன் உங்கள் அனைவரின் மீதும் எப்போதும் எனக்கு உண்டு அன்பும் பிரியமும்!

பிரியங்களுடன்
கதிர்


*
கிளையிலிருந்து வேர் வரை - என்னுரை

7 comments:

Anonymous said...

No words to say.as your words always touch my heart .apart from this I love the way you write.keep writing .

'பரிவை' சே.குமார் said...

அருமையா எழுதியிருக்கீங்க அண்ணா...
ஊருக்கு வரும்போது புத்தகம் வாங்கி வாசிக்க வேண்டும்...

Naveankumar said...

## சில மணி நேரங்களும் மிச்சப்பட்டிருக்கலாம், ஆனால் நான் மிச்சமிருந்திருப்பேனா!?

Naveankumar said...

## சில மணி நேரங்களும் மிச்சப்பட்டிருக்கலாம், ஆனால் நான் மிச்சமிருந்திருப்பேனா!?

Naveankumar said...

இந்தச் சொற்களுக்கு பிரசவம் பார்க்காமல், உள்ளுக்குள்ளேயே தேக்கி முடக்கி வைத்திருந்திருந்தால், என்னுடைய பல நாட்களும், சில மணி நேரங்களும் மிச்சப்பட்டிருக்கலாம், ஆனால் நான் மிச்சமிருந்திருப்பேனா!?

umakanth tamizhkumaran said...

இது ஒரு விடுதலையே
நீங்கள் சொன்னது போல

said...

அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை உற்று கவனிக்கும் யாருக்கும் இது போன்ற எண்ணங்கள் எழலாம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது இந்த புத்தகத்தின் மூலம்,..ஆனால் அதனை எழுத்தில் கொண்டு வரும் திறன் ?! அது யார்க்கும் வாய்க்கும் திறனும் இல்லை, வரமும் இல்லை, அது கதிருக்கு வாய்த்திருக்கிறது ...

இந்த புத்தகம் மூலம் சுஜாதாவை ( எனக்கு ) ஞாபகபடுத்துகிறார் கதிர்.... தனக்கு தெரிந்த தமிழ் /அறிவியல் போன்ற துறைகளை சார்ந்த விசயங்களை கற்றதும் பெற்றதும் புத்தகத்தில் சுஜாதா நமக்கு தந்தது போலவே...வாழ்வின் எல்லா கணங்களையும் உற்று கவனித்து அதன் மூலம் தனக்கு இருக்கும் சமூக பொருப்பு ..சமூகம் குறித்த அங்கலாய்ப்பு..தனது கோபம், ஆசை, எல்லாவற்றையும் வெளிபடுத்தும் எழுத்துக்கள் சுவராசியமானவை...அதோடு சற்று சிந்திக்கவும் வைக்கிறது.

சுற்றி நிகழும் எல்லா வகையான நிகழ்வுகளையும் கவனிக்கும் இயல்பு என்னுள்ளும் இருப்பதாலோ என்னவோ இந்த புத்தகம் சொல்ல வரும் அனேக செய்திகள் நானும் வெளிபடுத்த நினைத்தவை என்ற வகையில் அதன் சாராம்சங்கள் மயிலிறகால் தடவி செல்கிறது !

- ஷர்புதீன்
கொடைகானல்

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...