பாடங்கள் பலவிதம் - ’நம் தோழி’ கட்டுரை


சென்னைக்கு விரைந்தோடிக் கொண்டிருக்கும் பகல் நேரத்து வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ். மதியத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பொழுது. வெயில் அதன் உக்கிரத்தை சன்னல் வழிக்காற்றில் கலந்து புகுத்திக் கொண்டே இருக்கிறது. படுக்கை வசதிதான் என்றாலும் படுக்கவும் முடியாமல், அமரவும் முடியாமல் தடுமாற வைக்கும் பகல் நேரத்துப் பயணம்.

எதிர் வரிசையில் ஒரு தம்பதியும் அவர்களின் மகளும். குழந்தைக்கு நான் அல்லது ஐந்து வயது இருக்கும். அப்பாவிடம் எதைக் கேட்டாலும் ஆங்கிலத்திலேயே கேட்கிறது. நிச்சயமாக ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிள்ளையாக இருக்க வேண்டும்.  ”நீ என்ன இங்க்லீஷ்காரன் வீட்டு புள்ளையா, தமிழ்ல கேக்கமாட்டியா!?” என்பதை அந்தத் தந்தை எத்தனையாவது முறையாக சொல்கிறார் என்பது கணக்கில் இல்லை. அந்தக் குழந்தையின் அம்மாவும் அவ்வப்போது கவனத்தை ஈர்க்கிறார். மகள் என்ன கேட்டாலும் அதற்கு நிதானமாக பதில் சொல்கிறார். அடிக்கடி வாரி வாரி முத்தமிடுகிறார். அந்தக் குழந்தை அம்மாவைச் சார்ந்ததாகவே இருக்கிறது. எப்போதெல்லாம் அப்பாவிடம் செல்கிறதோ அங்கு ஒரு உரசல் உருவாகிறது.

என் அருகிலிருந்த நடுத்தர வயது அம்மா ஒருவர், தான் மதிய உணவு எடுத்துக்கொள்ளும்போது உடன் வைத்திருந்த நொறுக்குத்தீனியிலிருந்து கொஞ்சம் எடுத்து அந்தக் குழந்தையிடம் வற்புறுத்திக் கொடுக்கிறார். அது ஒரு கார வகை. குழந்தை வாங்க மறுக்கிறது. அன்பால் அந்த அம்மா வற்புறுத்துகிறார். குழந்தையின் அம்மாவைப் பார்க்க, அம்மா தலையாட்ட, குழந்தை அதை வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிடுகிறது. பொதுவாக இந்த வயதுள்ள குழந்தைகள் சாக்லெட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை விரும்பும், மதிக்கும். அந்தக் கார வகையை சாப்பிடாது எனத் தீர்க்கமாக நம்புகிறேன்.

குழந்தையின் அம்மா அந்தக் குழந்தையிடம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவேயில்லை. இருக்கையில் அருகே இருந்த ஒரு வார இதழின் மேல் வைத்துவிட்டு வழக்கம்போல் மகளிடம் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் வருகிறார். சற்று நேரத்திற்குப் பிறகுதான் கவனித்தேன். வார இதழின் மேல் வைத்த காரத்தின் அளவு சற்று குறைந்திருந்தது. அதன்பின் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். குழந்தையோடு விளையாடியபடியே அந்தக் காரத்திலிருந்து மிகச்சிறிய அளவை எடுத்து அவ்வப்போது குழந்தைக்கு ஊட்டுகிறார், விளையாட்டு, அரட்டை சுவாரசியத்தில் குழந்தையும் அதை சாப்பிடுகிறது. 

ங்கரநேத்ராலயா மருத்துவமனையின் காத்திருப்பு பகுதி. நான் அமர்ந்திருக்கும் வரிசைக்கு முன் வரிசையிலும், பின் வரிசையிலும் நாற்காலிகள். நெரிசல் ஏதுமில்லை. சொற்பமான மனிதர்கள். எவரையும் கவனிக்கும் எண்ணமற்று, ஏதோ சிந்தனைகள் மனதில் கூடுகட்ட கை பேசியில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பொருள் ’சொத்’ என விழும் ஓசை கேட்கிறது. சற்றே பார்வையை விரிக்கிறேன். ஒரு ஸ்லைஸ் குளிர்பான ப்ளாஸ்டிக் பாட்டில் கிடக்கிறது. மீண்டும் கைபேசியில் ஆழ்கிறேன்.

’சப்’பென ஒரு அறை விழும் சப்தம் கேட்கிறது. அது மிகக் கனமான சப்தம். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன். முன் வரிசையில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்கிறாள். மிக அழகான குழந்தை. பார்க்கும் எவருக்கும் அவள் தேவைதையென்றே மனதில் பதிகிற மாதிரியான ஒரு அழகிய குழந்தை. நான்கு வயதுக்குள் இருக்கலாம். அந்தக் குழந்தையின் காலடியில் அந்த ப்ளாஸ்டிக் ஸ்லைஸ் பாட்டில் கிடக்கிறது. அருகில் கம்பீரமான உருவமாய் ஒரு ஆண் நிற்கிறார். வயது முப்பதுகளில் இருக்கலாம். அந்தக் குழந்தையின் அப்பாவாக இருக்கலாம் எனப் புரிகிறது. நிமிர்ந்து பார்க்கிறேன். குழந்தையை எரித்துவிடுவது போல் பார்க்கிறார். மிகத் தீர்க்கமான அதே நேரம் சலனமற்ற பார்வையோடு கண் சிமிட்டாமல் அந்தக் குழந்தை அப்பாவையே பார்க்கிறது. பார்வையில் அடர்த்தியானதொரு அமைதி. அடிவிழுந்த சப்தத்தில் நான் திடுக்கிட்டிருந்தேன். அடிவாங்கிய சுவடு ஏதுமின்றி தன் தந்தையை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறது குழந்தை. ஒரேயொரு முறை கண் சிமிட்டுகிறது. நாக்கை மடித்து விரலால் சாடை காட்டுகிறார். மெல்லக் குனிந்து கீழே கிடந்த பாட்டிலை எடுத்து நிமிர்ந்து நெஞ்சோடு கட்டிக் கொள்கிறது.

விழுந்த அறை அசாதாரணமானது. குழந்தையின் மீது விழுந்த அறை என்மீது விழுந்திருந்தால் என்ன நடந்திருக்குமென ஒரு கணம் கற்பனை செய்கிறேன். அடித்த அந்த ஆள் ஒரு எதிரியாய் எனக்குள் உருவகமெடுக்கிறார். அந்தக் குழந்தையின் அமைதியும் உறுதியும் என்னை உலுக்குகிறது. என்னால் அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.

திடமாய் நின்று அந்த அப்பாவையே பார்த்தபடி இருந்தாள். அந்த அமைதியும், திடமும், கூரிய பார்வையும் வேறொன்றைச் சொல்கிறதாய் எனக்குப் படுகிறது. அப்பா எனும் ஆதிக்கத்தின் மீது, அப்பா எனும் வலிமையின் மீது, அப்பா எனும் திடகாத்திரத்தின் மீது, அப்பா எனும் அதிகாரத்தின் மீது, அப்பா எனும் பிம்பத்தின் மீது, அப்பா எனும் கண்டிப்பின் மீது, அப்பா எனும் அவசரத்தின் மீது, அமைதியாய், மிக அமைதியாய், நுணுக்கமாய், கூர்மையாய் அந்தக் குழந்தை விடும் சவாலாகவே அது எனக்குத் தோன்றியது.

மீண்டும் நான் கவனத்தை என் வசதிக்குத் திருப்பிக் கொள்கிறேன். சில நிமிடங்கள் கழித்து அந்தக் குழந்தையைப் பார்த்தபோது ஆச்சரியத்தில் உறைந்து போகிறேன். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தன் அப்பாவின் மடியில் மண்டியிட்டபடி அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறது. இது கனவா, நனவா என ஒரு நடுக்கம் எனக்கு உள்ளுக்குள் வருகிறது. அந்தச் சம்பவத்தை ஒரு நிலைத்தகவலாக என் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிகிறேன் 

"எச்சூஸ்மீ தகப்பா.... ஒரு ஸ்லைஸ் பாட்டில கீழ போட்டதுக்கு 'சப்பு'னு அறையறதுக்குப் பேரு வீரம் இல்ல.... உங்கிட்ட அடிவாங்கிட்டு அழாம அமைதியா இருந்துட்டு, அஞ்சு நிமிசம் கழிச்சு 'அப்பா'னு மடில வந்து உக்காந்தனே... அதுக்குப் பேருதான் வீரம்!' 

மீபத்திய பத்தாண்டுகள் நமக்கிடையே விதைத்திருக்கும் மாற்றங்களும் அவசரங்களும் மிக சிக்கலானவை. 1980களில் பதின் வயதில் இருந்த ஒருவர், 2010களில் பதின் வயதில் இருக்கும் ஒரு பிள்ளையை அன்றைய தம்மோடு பொருத்திப் பார்ப்பதில்தான் பல சிக்கல்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே வளர்வதற்கான காரணமாய் இருக்கின்றன.

1980களில் ஊரில் ஒரு தொலைக்காட்சி இருந்தாலே மிகப் பெரிய விசயம். தொலைபேசி என்பதும் மிகப்பெரியதொரு கனவு. புல்லட்டும் யெஸ்டியும்தான் அன்றைய வாகனங்கள். ஓரிரு வானொலி நிலையங்கள்தான் குடும்பத்தின் பொழுதுபோக்கு. எப்போதாவது அருகாமையிலிருக்கும் திரையரங்கள் படம் மாற்றி இன்றே கடைசி ஒட்டுவார்கள். ஆனால் இன்று வீடுதோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் அதில் நூற்றுக்கணக்கான சானல்கள். ஆட்கள்தோறும் கைபேசி, அதில் ஒற்றைச் சொடுக்கில் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவரை எட்டிவிடமுடிகிறது. சாலைகளுக்குச் சற்றும் பொருந்தாத வேகத்தில் விரையும் இரு சக்கர வாகனங்கள்.

தம் பிள்ளைகள் வாழும் பதின்பருவ வாழ்க்கையென்பது தாம் வாழ்ந்த பதின் பருவ வாழ்க்கைக்கு இணையானது அல்ல என்பதைப் புரிந்து கொள்வதுதான் இன்றைய பெற்றோரின் அவசியமான, அவசரமான தேவை.

வாழ்க்கையில் சூழல்களைத் தவிர ஆகச்சிறந்த பாடங்களும், மனிதர்களைவிட ஆகச்சிறந்த போதனையாளர்களும் இல்லை. அதிலும் குழந்தைகள் அற்புதமான ஒரு பாடம் சொல்லிகள்.

ஒரு பயணத்தில் ஒரு தாய்மை தன் போக்கில் கற்றுக் கொடுக்கும் பாடமும், ஒரு காத்திருப்பு அறையில் ஒரு குழந்தை தன் இயல்பில் கற்றுக் கொடுக்கும் பாடமும், சற்றே மனது திறந்து கவனித்தால் எத்தனை இதமாய் நமக்குள் பதிகிறது.

எத்தனை எத்தனை பாடங்கள் கற்றுக்கொண்டாலும், வாழ்க்கைச் சக்கரத்தின் வேகமும் அவசரமும் நம்மை ஏதாவது ஒரு கீழ்மைக்குள் இழுத்துக் கொண்டு சொருகிவிடுவதை மறுப்பதற்குமில்லை. ஒவ்வொரு தந்தையும், ஒவ்வொரு தாயும் பிள்ளைகளிடம் பாடம் கற்றுகொள்ள ஆயிரமாயிரம் இருக்கின்றன. 

பிள்ளைகள் தாயிடம் கொஞ்சம் தந்தைமையை எதிர்பார்ப்பதைவிட, தந்தையிடம் கொஞ்சம் கூடுதலாய் தாய்மையை எதிர்பார்க்கிறார்கள் என்பது நிதர்னமான உண்மை! காரணம் தந்தை மனதிலும் மாரிலும் சுமப்பவராய் இருந்தாலும், தாய் என்பவள் தன் கருவிலும் கனவிலும் சுமந்தவளாக இருக்கிறாள். 

தாயுமானவர்களாக இருக்கப் பழ வேண்டியது தந்தைகளின் தேவையாக இருக்கிறது.


-










“நம் தோழி” மார்ச் இதழில் வெளியான கட்டுரை

-




5 comments:

shanmuga vadivu said...

அருமை கதிர்.. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை அழகாய் ஊன்றிக் கவனித்து, அவற்றை எளிமையி எழுத்தில் வடிப்பது மட்டுமல்ல.. அந்த நிகழ்வுகளின் மூலம் நமக்கு வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்களையும் நீங்கள் பதிவு செய்யும் விதம் அருமை. அன்பும் வாழ்த்தும்....

Prapavi said...

Nice article

chinnadurai said...

arumaiyana pathivu

Durga Karthik. said...
This comment has been removed by the author.
Durga Karthik. said...

தந்தைகளிடம் உள்ள தாய்மையை சுட்டிக் காட்டி அதை சில சமயம் தட்டி விடுவதும் நாங்கள் தான்.உண்மையில் உள்ளதை காண்பிக்க தெரியவில்லை என்பதால் நாங்கள் பெயர் வாங்கி விடுகிறோம்.