இனிமே கண்டுக்காதீங்க சார்!!!

பிச்சைப்ப்ப்ப்பாத்திரம்ம்ம்ம் ஏந்ந்ந்ந்ந்திவந்தேன்.. எனச் சிணுங்கிய மொபைலை கையகப்படுத்தி அழைக்கும் எண்ணைக் பார்த்தேன், முன்பின் அறிந்திராத எண்ணாக இருந்தது. எடுத்து ஹலோ சொன்னவுடன் ”ரஞ்ஜித் சிங் மே போல்ரா”ன்னு…… கராமுரா ஹிந்தியில் எதிர்முனை ஏதோ உளறியது. அறியாத மொழிகள் எல்லாமே நமக்கு ஒரே மாதிரிதானே. அவனாகவே என்னுடைய பெயர் முகவரியைச் சொன்னான், நானும் ஆமாம் என்று சொல்லிவைத்தேன். என்னென்னவோ பேசினான், பேசிக்கொண்டேயிருந்தான் என் பெயர் முகவரி சொன்னது மட்டும் புரிந்தது அதுபோக குவாலியர் செசன்ஸ் & 3.30 மணி என்பது மட்டும் புரிந்தது.

அட வழக்கம் போல ஸ்டாக் மார்க்கெட் டிப்ஸ் ஃப்ரீ ட்ரையல் கொடுக்கிறவன் ஹிந்தியில் பேசுறான் போலன்னு தோணுச்சு. இது வழக்கமாய் நடக்கும் ஒரு நிகழ்வு. எப்படியோ மொபைல் எண்ணைத் திரட்டி தினமும் குஜராத்திலிருந்து மூன்று அழைப்புகளாவது வரும். சில அழைப்புகள் BTST (Buy Today Sell Tomorrow) டிப்ஸ்களாக இருக்கும். அது பெரும்பாலும் 3.15 மணிக்கு வரும். அவனுங்களா டிப்ஸ்னு சொல்லி மொபைல்க்கு 2 நாள் இலவசமா அனுப்பிட்டு மூனாவது நாள் சப்ஸ்கிரைப் பண்ணுனு அலப்பறை பண்ணுவாங்க. அனைத்து அழைப்புகளிலும் முதல் வரியும் நீங்க ஸ்டாக் மார்க்கெட் இருக்கீங்களான்னு கேக்கும், நானும் சாமி சத்தியமா இல்லீங்கன்னு சொல்லிடுவேன்.

ஆனால், ரஞ்சித் சிங்கோட அப்ரோச் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு, பெயர் முகவரி சரியாகச் சொன்னதில் கொஞ்ச ஆச்சரியமும் கூட, அடுத்து குவாலியர் செசன்ஸ்னு ஒரு கம்பெனி கேள்விப்பட்டதில்ல. சரி 3.30ன்னு சொன்னதால சந்தை முடியும் நேரத்தில் வாங்கச்சொல்றான்னு நினைச்சிட்டு தோள்பட்டையில் செல்போனைத் தாங்கிப்பிடிச்சிக்கிட்டு கன்ணியில் குவாலியர் செசன்ஸ்சை தேடிக்கொண்டே கேட்டேன்,

”இது BSE (மும்பை பங்குச் சந்தை)யா அல்லது NSE(தேசியப் பங்குச்சந்தை)யா”

அவன் இந்தியில் ”க்யா”ன்னு கத்தினான், மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டேன்.

”ஹிந்தி மாலும்? எனக் கேட்டான், ”மாலும் நஹி” என்றேன். எனக்கு ஹிந்தியில் மாலும் நஹி மட்டுமே மாலும்.

க்யாமுய்யா ஆங்கிலத்துக்குத் தாவியவன், ”நான் வெரிபிகேசன் ஆபீசர், நீ குவாலியர் செசன்ஸ் கோர்ட்டில் மாலை 3.30 மணிக்கு இருக்கனும், அலோக் சர்மா உன்மேல் வழக்கு கொடுத்திருக்கார்னு” சொன்னான்.

நானும் அதே க்யாமுய்யா இங்லீசில் ”நீ நினைக்கிற ஆள் நான் இல்லை, அலோக் சர்மாவைத் தெரியாது, இது ராங் நெம்பர்” எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன். அடுத்த நிமிடம் மீண்டும் அழைத்து பெயர், முகவரி உறுதிசெய்துகொண்டு மீண்டும் அதையே சொன்னான். 3.30 க்கு கோர்ட்டில் இல்லாவிடில் கோர்ட் அவமதிப்பு ஆகிடும் என்றான். அடேய் வெண்ணைனு மனசுல நினைச்சிட்டு ’பட்டர்’னு எதுவும் திட்டாம? ”என்ன விளையாடுறியா, நான் தமிழ்நாட்ல இருக்கேன், எப்படி ஒரு மணி நேரத்தில் குவாலியர்ல இருக்க முடியும்”னு கேட்டேன்.

“அது எனக்குத் தெரியாது அலோக் சர்மாகிட்டே பேசிக்கோ”ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான்.

”அடக் கொடுமையே நீ யாருடா? அது எவண்டா அலோச் சர்மா”ன்னு நினைச்சிட்டிருக்கும் போதே, குவாலியர் எங்கே இருக்குன்னு கூகிள் மேப்ஸ்சில் தேட ஆரம்பித்தேன். மீண்டும் முகம்தெரியா ரஞ்சித்சிங்கு ”யாரு(டா) அலோக் சர்மா, என்ன(டா) வழக்கு”ன்னு குறுந்தகவல் அனுப்பினேன்.

அதற்குள் புத்தி பலவாறு நினைத்தது, ”உள்ளூர்ல கேஸ் போடுற அளவுக்கே நாம வொர்த் இல்லையே, இதுல குவாலியர்ல கேஸா? என்னடா கொடுமை இது”ன்னு புலம்பிட்டிருக்கும் போதே, ரஞ்சித் சிங் பதில் அனுப்பினான், அதில் கேஸ் எண் என ஒரு எண்ணும், அலோக் சர்மாவின் மொபைல் எண்ணும். சிறிது நேர ஆசுவாசப்படுத்தலுக்குப் பிறகு அலோக் சர்மா எண்ணிற்கு அடிக்க, ”வக்கீல் அலோக்சர்மா” என அறிமுகப்படுத்திக் கொண்டு என்னவென்று கேட்டான்.

நான் ”ரஞ்சித் சிங் இந்த நெம்பர் கொடுத்தான்” எனச் சொல்லும்போதே, ”ரஞ்சித் என் நெம்பரைக் கொடுத்துட்டானா”ன்னு கொஞ்சம் ஓவராவே சலிச்சிக்கிட்டு, கேஸ் நெம்பர் கேட்டுக்கொண்டு, 15 நிமிடம் கழிச்சு கூப்பிடச்சொன்னான்.

கடுப்போடு, பதட்டத்தோடு காத்திருந்து 15 நிமிடம் கழித்து அழைக்க மீண்டும் ஒரு முறை கேஸ் நெம்பர் கேட்டான் (வெண்ண அப்போ எதுக்குடா முதல்ல கேட்டே) சொன்னபிறகு 2 நிமிடம் காத்திருக்க வைத்து ”உங்க மேல குவாலியர் செசன்ஸ் கோர்ட்ல மரியாதைக்குரிய நீதிமான் கிருஷ்ணாபகத் முன்னிலையில் மோசடிக்கேஸ் ஃபைல் ஆகியிருக்கு, 3.30 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும், அடுத்து மாலை 5.30 மணிக்கும் 58,500 ரூபாய் பணம் கட்டனும்”னான்.

இதென்னடா புது வம்பா இருக்கே, மோசடிக் கேசா!!!? அந்த அளவுக்கு கொடுக்கல் வாங்கல் இல்லையேன்னு நினைச்சிட்டே, யாரு வழக்கு தொடுத்திருக்காங்கன்னு கேட்தற்கு ஒரு நிமிடம் என்று காத்திருப்பில் போட்டுவிட்டு “மேனேஜர் - பார்தி ஏர்டெல்” என்று சொன்னான். 


“அடி செருப்பால நாயே”ன்னு தமிழில் சொல்லிட்டு போனைத் துண்டித்தேன்.

அடுத்த நிமிடம் அவனே அழைத்தான். கொடுமை இங்கிலீஸ்ல கெட்ட வார்த்தையில் எனக்குத்திட்டத் தெரியல, அடுத்து ஹிந்தியும் தெரியாததால், தமிழில் மனசுக்குள் திட்டிக்கொண்டே “யோவ் 5.30 மணிக்கு என்னால வரமுடியாது, எங்க ஊர்ல ராக்கெட் சர்வீஸ் கிடையாது, அந்த வழக்குத் தொடுத்த நாதாரிய என்கிட்டே வந்து முடிஞ்சா 58,500 வாங்கிக்கச்சொல்லு”ன்னு சொல்ல நினைச்சத வேற மாதிரி ஆங்கிலத்தில் ராக்கெட், நாதாரி தவிர்த்துவிட்டு சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

அதன் பின்னும் நிறைய ஆத்திரமும், கொஞ்சம் அச்சமுமாக உள்ளூர் ஏர்டெல் பில் தொகைக்கு வழக்கமாய் வரும் வசூல்ராஜாவை அழைத்தேன்

(அதற்குமுன் ஒரு சிறு ப்ளாஷ்பேக். நான்குவருடங்களாக ஏர்டெல் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு (8ஜிபி இலவச டவுன்லோடு) வைத்திருந்தேன். ஒரே தொகையில் வந்து கொண்டிருந்த பில் ஒரு மாதம் திடீரென அதிகரித்தது, உடனே 16 ஜிபி அளவு கணக்கிற்கு மாறிவிட்டேன். அடுத்த இரண்டுமாதம் சீராக வந்தது. மூன்றாவது மாதம் 1300 ரூபாய் பில்லிற்கு பதிலாக 7,000+ என வந்தது. வசூலுக்கு வரும் வசூல் ராஜாவிடம் இந்த பில் கட்டமுடியாது என்று சொல்லி அதை சரிபடுத்திக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டேன்.

பார்க்கிறோம் பார்க்கிறோம் என மூன்று மாதங்கள் ஓடியது, மூன்று மாதங்களுக்கும் பணம் வாங்கவில்லை. கடைசியாக நான்காவது மாதத்தில் விற்பனை மேலாளருடன் வந்த போது, நான்கு மாதத்திற்கும் வழக்கமாய் வரும் பில் தொகையை மட்டும் முழுதும் கட்டிவிடுகிறேன். அந்த 7000+ வந்ததை கட்டமுடியாது எனச் சொல்ல, அவர்களாக அவர்கள் கம்பெனி சார்ந்த ஆட்களுடன் ஏதேதோ பேசி ஒரு வழியாக அந்த நான்கு மாதப் பில் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்த 7000+ல் வழக்கமான தொகை போக மீதத்தைத் தள்ளுபடி செய்துவிடுவதாகாச் சொல்லிப்போய்விட்டார்கள். 

அடுத்த இரண்டு மாதம் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓடியது. மூன்றாவது மாதம் அதிகமாக வந்த அந்தக் குறிப்பிட்ட மாதத்தொகை நிலுவையையை தள்ளுபடி செய்ய கம்பெனி மறுத்துவிட்டது, எனவே நீங்கள் அதையும் செலுத்தினால்தான் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்த முடியும் என வசூல்ராஜா வந்து நின்றார். அவரே ஒரு யோசனையும் கொடுத்தார் நீங்க அப்படியே விட்டுட்டு வேற பேர்ல இணைப்பு வாங்கிக்குங்க என்றார். ”போங்கடா உங்க சங்காத்தமே வேண்டாம்” என்று வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டேன்)

வசூல் ராஜாவை அழைத்து பெயர் மற்றும் இடம் சொன்னவுடன் அடையாளம் புரிந்து கொண்டு, ”என்ன சார் டெல்லியில கேஸ் போடுவேன்”னு யாராச்சும் மிரட்டினாங்களா என்றார். 

அடப்பாவிகளா இதென்ன கூட்டுக் களவானித்தனமான்னு நினைச்சிட்டு, ”என்னய்யா விளையாடுறீங்களா, எவனோ போன் பண்ணி ஹிந்தியில கராமுரான்னு பேசுறான், ரெண்டு மணி நேரத்துல குவாலியர்ல வந்து 58 ஆயிரம் கட்டுன்னு சொல்றான்” என்றேன்

”அவங்க ரெக்கவரி ஏஜண்ட்ஸ்ங்க சார், இந்த மாதிரி சிக்கலாக இருக்கும் பில் தொகை, வசூல் ஆகாத பில் தொகைக்கு போன் பண்ணி டெல்லியில கேஸ், மும்பையில கேஸ்னு மிரட்டுவாங்க, பயந்து போன கஸ்டமர்ஸ் ஏர்டெல் ஆபீஸ்க்கு வந்து பணம் கட்டிடுவாங்க. அப்படிக் கட்டும் பில் பணத்தில் பாதித்தொகையை கம்பெனி அந்த ஏஜண்ட்ஸ்களுக்கு கொடுத்துடும். உங்க மேட்டர் கம்பெனி ஏத்துக்கிட்ட பிறகுதான் வெய்வர் அனுப்பினோம், ரெண்டு மாசம் கழிச்சு தள்ளுபடி ஆனதுக்கு நீங்க என்ன பண்ணமுடியும். இப்படி யாராச்சும் கூப்பிட்டா இனிமே கண்டுக்காதீங்க சார்”னு சொன்னார்

“யோவ்வ்வ்வ்வ்வ்வ்………… உலகத்துல எது எதைத்தான் கண்டுக்காமையே போறது!!!?”

-0-

17 comments:

vasu balaji said...

மதியம் வெயிலுக்கு குறும்பு சூஸ் குடிச்சீங்களாண்ணா? ஏர்டெல் காரன் கொழும்புக்கு மாறினப்பறம் இப்படி ஃப்ராடாய்டானா? இல்ல ஃப்ராடுன்னுதான் கொழும்புல சேர்த்துகிட்டானா தெரியலையே. ஓசில குடுக்குறான்னு டிடிஎச் வாங்கினவன் பாடு இருக்கே.:((. ராத்திரி 3 மணிக்கு எழுப்பி ஏன் சார் நீங்க சந்தா கட்டலைன்னு தெரிஞ்சிக்கலாமான்னு கேப்பான். ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு வெயிட் பண்ணிருக்கற நேரத்துல ட்ரோய்ங்னு வரும். ஆஹான்னு பார்த்தா உன் காசு -210.86. உடனடியா சார்ஜ் பண்ணலைன்னா புடுங்கிட்டு போயிருவேன்னு 2 வருசமா வருது=))

CS. Mohan Kumar said...

ம்ம் கொடுமையை காமெடியா சொல்லிருக்கீங்க

பிரபாகர் said...

பங்காளி கிட்டயே பகடை உருட்டுறானுவளா படுவா பசங்க!... பிச்சி புடுவேன் பிச்சி!...
சோகத்தை அழகா சொல்லியிருக்கீங்க கதிர்...

பிரபாகர்...

அன்புடன் அருணா said...

ஆஹா! இப்பிடி நிறைய கண்டுக்காம் இருக்கவேண்டிய விஷயங்கள் இருக்கா!???ஒண்ணொண்ணா எழுதுங்க..கண்டுக்க மாட்டோம்!

சௌந்தர் said...

முடியல சிரிச்சு வயிறுவலிக்குது (ஒருத்தர் கஷ்டப்பட்டா நமக்கு சிரிப்பு தான்) ....

தம்பி... said...

இப்படி எனக்கு ஐசிஐசிஐ வங்கியிலிருந்து அழைப்பு வந்தது.. உங்களுக்கு வக்கிலோடு முடிந்தது.. எனக்கு அந்த ஊரு இன்ஸ்பெக்டர் வேற.. அவரு.. உன்னை கைது பண்ண அடையாறு போலிஸ் நிலையத்தில இருந்து இன்னும் அரை மணி நேரத்தில வந்துடுவாங்க.. நீ போய் எதாவது ஐசிஐசிஐ வங்கில 58,000 ரூபாய் ரொக்கமா கட்டிடுன்னு சொன்னான்....

உங்களுக்கு ஆங்கிலத்தில பேசினான்ல.. எனக்கு ஹிந்தி மட்டும் தான்.. ஆங்கிலத்துக்கு இன்னொருத்தன விட்டு பேசச் சொன்னான்...

Kumky said...

:(((

ஒன்னும் சொல்றதுக்கில்லை..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா.. ஹா.. நல்லாத்தான் பீதிய கிளப்பியிருக்கானுக..!!
:-)


விடுண்ணா..விடுண்ணா.. சீக்கிரம் நாமளே சொந்தமா,சேட்டிலைட் விட்டுடலாம்.
அதற்கப்புறம் யாரையும் நம்பவேண்டியிருக்காது.. ஹி..ஹி

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அடப்பாவியளா!! இப்படியுமா பில் வசூல் பண்ணுவாங்க? :))

விக்னேஷ்வரி said...

பெரியாளானாளே இப்படி கேஸ் வர்றதெல்லாம் சகஜம் தான் கதிர். லூஸ்ல விடுங்க.. :)

எங்களுக்கும் ஏர்டெல்லோட இதே அதிக பில், தள்ளுபடி மோசடி பஞ்சாயத்து தான். ஆனாலும் வேற எந்த ப்ரொவைடரும் ப்ராட்பேண்ட் சேவையை சரியா செய்யாததால வேற வழியில்லாம அதிகக் கட்டணத் தொகையை செலுத்திட்டு உபயோகிச்சிட்டு இருக்கோம்.

Pranavam Ravikumar said...

Unmai thaan...!

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

பாஸ் குவாலியர்ல கலியா இல்ல சாப்படுதானா?

க.பாலாசி said...

//பெரியாளானாளே இப்படி கேஸ் வர்றதெல்லாம் சகஜம் தான் கதிர். லூஸ்ல விடுங்க.. :)//

அதேதானுங்க.. பிரபலம்னா அப்டியிருக்கத்தான் செய்யும்.. நாங்கள்லாம் யாரு வம்புதும்புக்காச்சும் போறமா ஒண்ணமா... அதனால் எங்களுக்குல்லாம் இப்டி ஆகறதேயில்ல...

Vijayaraghavan said...

ஏர்டெல் கம்பனியின் இதே போன்ற மோசடி எனக்கும் மூன்று முறை நிகழ்ந்தது.

ஆனால் பணத்தை கட்டிவிட்டு உடனே BSNL க்கு மாறிவிட்டேன்.மூன்று ஆண்டுகளாக நன்கு செல்கிறது.

நிறைய பகல் கொள்ளைகள் நம் கண்முன்னே.......கண்டுக்காம இருக்கோம்

விஜயராகவன்

☼ வெயிலான் said...

// பாஸ் குவாலியர்ல களியா? இல்ல சாப்பாடு தானா? //

சப்பாத்தி :)))

ஸ்ரீராம். said...

இதே ஏர் டெல் கார்ட் வைத்திருக்கும் என் மகன் எண்ணுக்கு அடிக்கடி 'கஸ்(ஷ்)டமர் கேர்' நபர் ஒருவன்
மன்னிக்கவும் ஒருவர் உங்கள் ஏர் டெல் லேண்ட் லைன் பில் கட்டப் படாமல் இருக்கிறது என்று சொல்லி கட்டச் சொல்லி பயமுறுத்துகிறார். கட்டா விட்டால் இந்த அலைபேசி எண்ணில் இருந்து (ப்ரி பெய்ட்) அந்தப் பணத்தை கழித்து விடுவதாகவும் சொல்வதும் கொடுமை. என்னிடம் ஏர் டெல் லேண்ட் லைன் இல்லை என்று சொன்னால் மன்னிப்பு கேட்டு வைத்து விட்டு பதினைந்து நாட்களில் மறுபடி கூப்பிட்டு அலைக் கழிக்கிறார். அவர் கூப்பிடும் பெயரும் ஒரு வட இந்தியப் பெயரே...! ஏர் டெல்லில் மட்டும் இந்த வகை தொந்தரவுகள் ஜாஸ்தி.

'பரிவை' சே.குமார் said...

நல்லாத்தான் பீதிய கிளப்பியிருக்கானுக.

கொடுமையை காமெடியா சொல்லிருக்கீங்க...