தொலைக்காட்சிகளில் புதிய சிறப்புச் செய்திகள் மின்னும் பொழுதெல்லாம், முந்தைய செய்திகளின் பரபரப்பு தானாய்ச் செத்துப்போகிறது. அந்தச்செய்திகள் செத்துப்போவதோடு, பின்புலத்தில் உள்ள மிகக் கொடிய அநியாயங்களும் கொலை செய்யப்பட்டுவிடுகின்றன. இது தொழில் நுட்பயுகம் என மார்தட்டுவதை விட, ஊழல்களின் யுகம் என்று நம் பொடனியில் படாரென்று அடித்துக் கொள்ளத் தோன்றவில்லை என்பதும் ஆச்சரியம்தான்.
ஒன்றா இரண்டா, எண்ணிப்பார்க்க விரல்களை இரவல் வாங்கவேண்டும் என்பது போன்ற எண்ணிக்கையில் உலகத்தின் மிகப்பெரிய ஊழல்களை பெருமையோடு தின்று கொழுத்து ஏப்பம் விட்டாயிற்று. ஏனோ ஒரு சிலர் மட்டும் அஜீரணித்தால் சி.பி.ஐயிடம் தற்காலிகமாக கசாயம் குடித்துக் கொண்டிருப்பதை, நின்று நிதானித்துக் கேட்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். கேட்டு மட்டும் என்ன கிழித்துவிடப்போகிறோம் எனும் பொதுப்புத்தி ஆழ வேரூன்றிவிட்டது. மிகப் பெரிய இன அழிவிற்கு கள்ளமௌனத்தோடு துணைபுரிந்ததையும், உலகத்தின் சின்ன உண்ணாவிரதத்தையும் கசப்போடு கடந்து, கடைசியில் மறந்தும் போனவர்கள்தானே நாம்.
இதோ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் கொள்ளையடிக்க கூட்டுச்சேர்ந்து கொண்டிருக்கிறார்கள், கொள்கை என்ற ஒரு வார்த்தையை மலம் கழித்து துடைத்தெறிந்த கல்லாக தூர எறிந்துவிட்டு. எதற்காக இவர்கள் அரசியம் களம் பூண்டு நிற்கிறார்கள் என யோசிக்கும் போது எல்லோருக்குமே தெரியும், மக்களை வாழவைப்பதற்காக மட்டுமில்லை என்பது.
சாதிச்சாயம் பூசி புதிதுபுதிதாய்ப் பிறப்பெடுக்கும் கட்சிகளும் கூட, அது சார்ந்த மேல்மட்டத் தலைவர்களின் சொத்துபத்துக்களைப் விரிவாக்கம் செய்யவும், பெருகி நிற்பதைக் காப்பாற்றிக்கொள்ளவும் என்பதேயன்றி வேறெதுவுமாய்த் தோன்றவில்லை.
ஏதேதோ திசைகளில் நின்றிருந்த இந்தப் புண்ணிய ஆத்மாக்கள் எதன் பொருட்டு அணிசேர்ந்து கை உயர்த்துகிறார்கள் என்ற கேள்வியை நினைக்கும் போதே கவுண்டமணி காதுக்குள் கூவுகிறார் “இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா”
ஆளும்கட்சி போய் எதிர்கட்சி வந்தால் உருப்படலாமா என்று நினைத்தால் அங்கும் வெற்று மௌனமே பதில். வறுத்தெடுக்கப் புரட்டிக் கொண்டிருக்கும் தோசைக்கல்லிலிருந்து இன்னொரு தோசைக்கல்லுக்கு இடம் பெயர்வதுபோலத்தான் இந்தக் கட்சிக்கு அந்தக் கட்சி! அந்த தோசைக்கல்லுக்கு அடியே எந்த நிறுவனத்தின் எரிவாயு என்பதில் மட்டுமே வேறுபாடு இருக்கலாம், சூட்டில் என்ன வித்தியாசம் இருந்துவிடப்போகிறது.
எல்லாமட்டங்களில் சுருட்டப்பட்ட பணம் நேரிடையாக அடித்து சிதைத்தது விவசாய நிலங்களையும், அடித்தட்டு மக்களின் அன்றாடப் பொருட்களையும்தான். ஆசை காட்டியோ, விஷமிட்டாய் திணித்தோ, மிரட்டியோ நூதனமாய் விளைநிலங்களைப் பிடுங்கி, அதன் விலையை உயர்த்திக்காட்டும் யுக்தியைக் கையாண்டு இன்னொருவனுக்கு கை மாற்றி, அதை இன்னொருவனுக்கு கை மாற்றி என சூதானமாய் சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அரிசி விலையும், பருப்பு விலையும் ஆகாயத்திற்கு பறப்பதைக்குறித்து என்ன கவலை எப்போதும் ஏசிக்குளிருக்கு கம்பளி தேடும் அரசியல் மேதாவிகளுக்கு.
இலவச மின்சாரம் கொடுத்து, மானியம் கொடுத்து, கடன் தள்ளுபடி செய்து இங்கே உணவுப் பொருளை விளைவிக்க வேண்டுவது அவசியமா? ஏன் இறக்குமதி செய்யக்கூடாது என, இறக்குமதில் ஒரு கட்டிங் கிடைத்தாலும் கிடைக்குமே என்ற எண்ணத்தால் கேட்கும் இந்திய பொருளாதார மேதைகளுக்கு, இங்கிருக்கும் மக்கள் தொகைக்கு விளைவித்துப் போட எந்த நாட்டாலும் முடியாது என்பது குறித்து யோசிக்க நேரம் ஏது?
”அவன் அப்பமூட்டுக் காசையா கொடுக்குறான், அடிச்ச காசு தானே…… குடுக்கட்டுமே” என்ற கறைபட்ட மனோநிலையோடு விரல் நுனியில் கறைதாங்கத் துணிந்தாகிவிட்டது. ஓட்டுக்கு எவ்வளவு, ஊருக்கு என்ன செய்வாங்க என்றெ பேரம் உள்ளடங்கிய கிராமங்களிலும் தொடங்கிவிட்டது. கொடுப்பவன் ஜெயித்தால் என்ன தோத்தால் என்ன, எப்பவும் தோற்பது சாமானியர்கள்தானே!
இலவசக் காப்பீட்டை நம்பி ”டாக்டர் இல்லை, வேற ஆஸ்பிடல் பாருங்க” என்ற வார்த்தைகளை சுமந்துகொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியவர்களுக்கு, தெரியாமல் போகலாம் அதில் தூங்கும் அரசியல். இந்திய ஆட்சிப்பணியில் தேறிய புத்திசாலிகளுக்குக் கூடவா தெரியவேண்டாம், காப்பீட்டிற்கு அரசு செலுத்திய பணத்தில், எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் மிகத் தரமான அனைத்து வசதிகளையும்கொண்ட மருத்துவமனைகளை நிர்மாணித்திருக்க முடியும் என்பது?
கோபம் இல்லாத மனிதன் இங்கு யாருமில்லை. பலரிடம் ”என்ன பாஸ் பண்ண முடியும், எல்லாமே இப்படித்தான்னு ஆயிப்போச்சு” என்ற அலுப்புதான் அதிகபட்ச அறச்சீற்றமாக இருக்கிறது. அதையும் தாண்டிப் பேசமுயலும் போது, ஏதோ கிசுகிசுவோ, டாஸ்மாக்கின் சரக்கின் மப்பு குறித்த கண்டுபிடிப்போ, கிரிக்கெட் ஸ்கோர் குறித்தோ பேச்சு தடம்புரண்டுபோய் அறச்சீற்றம் தற்கொலை செய்துகொள்கிறது.
எல்லாக் கோபங்களையும் சிதைத்து நகைப்பாக உருமாற்றி மிக எளிதாக உள்வாங்கிக்கொள்ள பழகிக்கொண்டதுதான் கொடுஞ்சாபமாய்ப் போய்விட்டது. குறுந்தகவல்களாகவும், மின்னஞ்சல்களாகவும், புனைவுகளாகவும், மாற்றப்பட்ட பாடல்களாகவும் கசப்பானதொரு புன்னகையோடு கடந்து போகிறோம். ஆனால் அந்தக் கசப்பு மட்டும் அடிநாக்கில் படிந்து கிடக்கிறது.
நம்மைநாமே முழுக்க முழுக்கத்தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது என்றைக்காவது புரியுமா? அல்லது நம் வாழ்நாள் தீர்ந்து போன பிறகும், புரியாதது போன்ற நடிப்பு மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் தொடருமா?
-0-
24 comments:
உங்கள் மனதில் தோன்றியவை தான் போல தான் என் மனதிலும்!. ஆனால் இதற்கான முடிவு என்ன?
:(. அனைவர் உள்ளங்களிலும் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். நியாயமான அறச்சீற்றம். இப்புடி உங்க எத்தனை இடுகைகள்ள பின்னூட்டியிருக்கோம். பின்னயும் அப்புடியேதான்.
//எல்லாக் கோபங்களையும் சிதைத்து நகைப்பாக உருமாற்றி மிக எளிதாக உள்வாங்கிக்கொள்ள பழகிக்கொண்டதுதான் கொடுஞ்சாபமாய்ப் போய்விட்டது. குறுந்தகவல்களாகவும், மின்னஞ்சல்களாகவும், புனைவுகளாகவும், மாற்றப்பட்ட பாடல்களாகவும் கசப்பானதொரு புன்னகையோடு கடந்து போகிறோம். ஆனால் அந்தக் கசப்பு மட்டும் அடிநாக்கில் படிந்து கிடக்கிறது.//
வாஸ்தவம் கதிர். கையாலாகாத நடுத்தர வர்க்க சிரிப்பு! சோர்வுதான் மிச்சம். :-(
//ஏனோ ஒரு சிலர் மட்டும் அஜீரணித்தால் சி.பி.ஐயிடம் தற்காலிகமாக கசாயம் குடித்துக் கொண்டிருப்பதை, நின்று நிதானித்துக் கேட்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்//
உண்மைதான்... ஊழல் என்பது இயல்பாய் மாறிவிட்டது அவர்களுக்கும், நமக்கும்..
அரசியல் பற்றி அலசும் நடுநிலைவாதிகளின் பேச்சுகள் பெரும்பாலும் விரக்தியில் தான் முடிவடைகின்றன# ஏமாற்றம்
இதுவும் கடந்து போகும்...
:)))
என்ன பண்ணுவது கதிர் ஸார்.. எரிகிர கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளிங்கிற மாதிரி, இவனுக்கு அவன் சலைத்தவன் இல்லைதான். என்ன பண்ணுவது சிரிச்சுட்டு அடுத்த வேலையை பார்ப்போம். உங்கள் மனவலிதான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு.
தலைமையை அவர்களின் செயல்களை பொறுத்தே ஒரு சமூகம் கற்றுக்கொள்கிறது. சுய மரியாதையும், உண்மையும், நேர்மையும், மனச்சுத்தியும் கொண்டுள்ள தலைவர்களால் நல்ல தம்மைப்போன்ற தொண்டர்களையும், அது போலவே மக்களையும் உருவாக்கவும் வழிநடத்திச்செல்லவும் முடியும்.
முழுதும் சுயநலப்படுத்தப்பட்ட,எப்படி வேண்டுமானாலும் பொருள் சேர்த்து வாழ்வாங்கு வாழ திட்டமிட்டு செயல்படும் தலைமைகளில் இருந்து அடுத்தடுத்த மட்டங்களுக்கு அதேபோன்றதான தொண்டர்களும், மக்களும் உருவாகிவருவதை தவிர்க்கவேயியலாது.
கருத்து சார்ந்த உலகத்திலிருந்து பொருள் சார்ந்த உலகம் நோக்கி அனைவரும் மாறிவருகையில் பொருள் மட்டுமே முக்கிய குறிக்கோளாகிவிடுகிறது.
கருத்து சார்ந்த சமூகங்களை ஒரு கட்டமைப்பிற்குள் அற ஒழுங்கு சார்ந்த வாழ்வை நிர்பந்தித்து வந்த தலைமுறை சார்ந்த வாழ்வியலும் கதைகளும் குழந்தை பருவம் முதலே உண்டாக்கி வைக்கப்பட்ட பயங்களும் அறிவியல் வளர்ச்சி பெற பெற உதிர ஆரம்பிக்கையில் சமூக கட்டுமானங்களில் இந்த அறம் சார்ந்த சமூகம் சார்ந்த வாழ்க்கைமுறையும் கட்டுப்பாடுகளும் தளர்ந்து இல்லாமலே போய்விடுவது இயல்பானதொரு நடவடிக்கைகள்தான்..
தலைமுறைகள் கடக்கையில் அறம் மற்றும் நேர்மை மற்றும் சமூக ஒழுங்கமைப்புக்குள் கட்டமைக்கப்படும் வாழ்வினைவிட பொருள் சேர்த்த நுகர்பொருள் மயமான வாழ்வை நோக்கி தன்முனைப்பின்றி செலுத்தப்படும் பட்சத்தில் எல்லா ஒழுக்க விதிகளையும் புறக்கணித்து வேகமான போட்டிகளின்பால் தாமும் துறத்தப்பட்டு ஓடிக்கொண்டிருப்பது தவிர்க்க இயலாததே..
சுறுக்க சொல்ல போனா...
இந்த அறச்சீற்றமெல்லாம் நம்ம காலத்தோட அழிஞ்சுபோயிடும் மேயர்...இப்போ இருக்கிற வரப்போகிற இளைய தலைமுறைக்கெல்லாம் சம்பாதிச்சமா சவுகரியமா வாழ்ந்தமாங்கறதுதான் முக்கியமே தவிர கார் போகும்போது குருக்கே கடக்கிறவனை மிதிச்சுட்டு போகத்தான் ஆசை...
ம்ம்ம் ஆனால் இதைவிடக் கேவலமான ஆட்சிமுறையில் இருந்த மக்களெல்லாம் இன்று வீதியில் வந்து போராடி கொள்ளைக்காரர்களை விரட்டிக்கொண்டிருக்கின்றனர். எந்த இயக்கமும் கட்சியும் தலைமையும் சாராது மொத்தமாய் மக்கள் சுனாமி ஒன்று வரும் அது இந்த நாட்டை மொத்தமாய் புரட்டிப்போடும். அதுவரை
//"சிரிச்சுட்டு அடுத்த வேலையப்பார்ப்போம், வேறென்ன பண்றது?"//
:))
//முழுக்கத்தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது என்றைக்காவது புரியுமா? அல்லது நம் வாழ்நாள் தீர்ந்து போன பிறகும், புரியாதது போன்ற நடிப்பு மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் தொடருமா?//
கதிரு இன்னைக்கு தொலைக்காட்சியில
ஜப்பான் சுனாமிய சன் நியூஸ்ல அரை மணி நேரம் தொடர்ச்சியா காமிச்சாங்க.
பாத்துப் போட்டு பேயடிச்சமாதிரி ஒக்காந்திருக்கிறேன். அடுத்த தலைமுறை தொடுருமான்னு பயமா இருக்கு. ஆனாலும் இவ்வளவு கோவம் வேண்டாம். நடப்பது எதுவும் நம் கையில் இல்லை.
ம்ம்..
நேற்று ஒரு நண்பர் இங்கு சொல்லிட்டிருந்தார். இந்தியாவில இருந்து ஆங்கிலேயர் ஆட்சியில் இருநூறு வருடத்தில் சுரண்டியதை நாலே வருடத்தில் சுரண்டிக் காட்டியப் பெருமை தமிழரை சாரும் என்றார். வேறு என்ன சொல்ல?
/// கள்ளமௌனத்தோடு////
அதெல்லாம் இருக்கட்டும்..இப்ப எங்களை என்ன பண்ண சொல்லுகிறீர்கள்.
//சாதிச்சாயம் பூசி புதிதுபுதிதாய்ப் பிறப்பெடுக்கும் கட்சிகளும் கூட, அது சார்ந்த மேல்மட்டத் தலைவர்களின் சொத்துபத்துக்களைப் விரிவாக்கம் செய்யவும், பெருகி நிற்பதைக் காப்பாற்றிக்கொள்ளவும் என்பதேயன்றி வேறெதுவுமாய்த் தோன்றவில்லை.//
இதக் கூட புரிஞ்சுக்காம, நம்மாளுங்கள தலீவரு கைதூக்கி வுடுவாருன்னு நம்புற சனத்தை என்ன சொல்ல...?
//இலவச மின்சாரம் கொடுத்து, மானியம் கொடுத்து, கடன் தள்ளுபடி செய்து இங்கே உணவுப் பொருளை விளைவிக்க வேண்டுவது அவசியமா?//
கடன் தள்ளுபடி, திரும்பவும் கடன், வட்டி தள்ளுபடி, திரும்பவும் அசலே தள்ளுபடி...! எவன் வூட்டுக்காசு? :-(
//காப்பீட்டிற்கு அரசு செலுத்திய பணத்தில், எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் மிகத் தரமான அனைத்து வசதிகளையும்கொண்ட மருத்துவமனைகளை நிர்மாணித்திருக்க முடியும் என்பது?//
அரசு மருத்துவமனையிலே முன்னெல்லாம் தனியார் மருத்துவமனைகளோட புரோக்கருங்க சுத்திட்டிருந்தாங்க! இப்போ, தனியார் மருத்துவமனைகளிலே இன்சூரன்சு புரோக்கர் சுத்திட்டிருக்கானுங்க!
//தோ கிசுகிசுவோ, டாஸ்மாக்கின் சரக்கின் மப்பு குறித்த கண்டுபிடிப்போ, கிரிக்கெட் ஸ்கோர் குறித்தோ பேச்சு தடம்புரண்டுபோய் அறச்சீற்றம் தற்கொலை செய்துகொள்கிறது.//
ஹிஹி! அறச்சீற்றமா? அது எங்கிட்டு கெடைக்கும்?
//அல்லது நம் வாழ்நாள் தீர்ந்து போன பிறகும், புரியாதது போன்ற நடிப்பு மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் தொடருமா?//
நம்மளைப் பார்த்து அடுத்த தலைமுறை என்ன சொல்லப்போவுதுங்கிறதுதான் கேள்வி!
நியயாமான விஷயம் தான்
என்ன செய்வது?
நமக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு வாக்குச்சாவடி தான்
எல்லோரும் ஒரே மாதிரியா நினைக்கிறார்கள்?
//இதுவும் கடந்து போகும்...
//
yes... Kadakkanum...
//நம்மைநாமே முழுக்க முழுக்கத்தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது என்றைக்காவது புரியுமா? அல்லது நம் வாழ்நாள் தீர்ந்து போன பிறகும், புரியாதது போன்ற நடிப்பு மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் தொடருமா?
//
எல்லாரும் ஓட்டுப் போட்டாலே எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும் சார்
சரியான அறச்சீற்றம்தான் கதிர்.
எல்லாத்தையும் சகித்துக்கொண்டு மறத்துபோய்விட்டது மனமும்.. இதுல எங்கப்போயீ.. என்னத்தப்பண்றதுன்னு போகறதான் இப்ப நம்ம வாழ்க்கை.. வந்தத வாங்கிட்டு வெந்தத தின்னுட்டு போகவேண்டிதுதான்.
நல்ல கருத்துக்கள் தீயவரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். தீயவைகள் தந்தையிடமிருந்து வந்தாலும் தடுத்துப்பழகவேண்டும். செம்மறி ஆடுகளாய், வெள்ளாடுகளாய் பிரிந்து நல்லவை கேட்டவை என்பது "தான்" சார்ந்து நிற்கும் கட்சியை வைத்தோ, சாதியை வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ நிர்ணயித்து பழகிவிட்டோம். குழுநலம் சார்த்த சார்பு நிலையிலிருந்து வெளிவந்து தன்னை முன்னிறுத்தாமல் பிரச்சினைகளை முன்னிறுத்த என்றைக்கு முடிவேடுக்கிறோமோ அன்றிலிருந்து விடிவு நமக்காகும்.
Post a Comment