“அடுத்த கூட்டத்திற்கு பேச்சாளர் யாருங்க”
இரண்டு வாரங்களுக்கொரு முறை வியாழக்கிழமை தோறும் நடக்கும் எங்கள் அரிமா சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டத்தின் பேச்சாளர் பற்றி நண்பர் தனபாலன் அவர்களிடம் கேட்டேன்.
“சாத்தூர்ல இருந்து லட்சுமண பெருமாள்னு ஒருத்தர்ங்க”
“ஓ, அப்படியா ரொம்ப நகைச்சுவையா பேசுவாராமே, அவர் பற்றி என் நண்பர் காமராஜ் எழுதியிருக்கிறார்” என்றேன்
“ம்ம்ம்.. “பூ” படத்தில கூட நடிச்சிருக்காராம்”
“ஆமாங்க அது பத்தித்தான் படிச்சேன்”
“ஆனா என்ன கேரக்டரலே நடிச்சிருக்கார்னு தெரியல” என்றார்
எனக்கும் எழுத்தாளர் “லட்சுமணபெருமாள்” பற்றிய ஆர்வம் தொற்றிக்கொண்டது. அன்றிரவே நண்பர் அடர் கருப்பு காமராஜ் அவர்களுக்கு போன் செய்து அவர் பற்றிக் கேட்டேன். அவரும் அவர் பற்றி சிலாகித்து மகிழ்ந்து பேசினார். ஆர்வம் இன்னும் கூடிப்போனது.
எங்க சங்கத்தில் ஒரு செல்லப்பிள்ளை இருக்கிறார், செயலாளர் மகேஸ்வரன். செல்லமாக நாங்கள் அழைப்பது “கைப்புள்ள”. ஆர்வம் மிகு அரிமா உறுப்பினர், எல்லாவற்றிலும் ஆர்வமாக ஈடுபட்டு, பல இடத்தில் என்னை செல்லமாய் சிக்க வைப்பவர். ஆனால் சூதுவாது தெரியாத புள்ள அது. அதனாலதான் என்கூட எல்லாம் குப்ப கொட்ட முடியாது.
அடுத்த நாள் சந்திக்குபோது “மகேசா... நம்ம கூட்டத்துக்கு வரப்போற “லட்சுமண பெருமாள்” பத்தி நம்ம நண்பர் எழுதியிருப்பதைப் பார் என்று காமராஜ் அவர்களின் வலைப் பக்கத்தைத் திறந்து காண்பித்தேன். படித்துவுடன் முகம் முழுதும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. எதற்கு மகிழ்ச்சியென்று நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாம் நாடோடிகள் பட ஸ்டைல்தான். நான் மகேஸின் நண்பன், காமராஜ் என் நண்பர், லட்சுமண பெருமாள் காமராஜின் நண்பர், அப்போ, அவர் மகேஸ்க்கும் நண்பராகி விட்டார்.
அடுத்த நாளே அவர் போன் நம்பர் பெற்று அவருடன் பேசத் துவங்கி விட்டார்.
நான் “பூ” படம் பார்க்கவில்லை, அதனால் எந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார் என்ற போராட்டம் எனக்கில்லை. ஆனால் நம்ம கைப்புள்ள “பூ” படத்தை ரசித்து ரசித்துப் பார்த்து விட்டார், அவருக்கும் அவர் எந்த பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதில் துக்குனியூண்டு சந்தேகம் இருந்தாலும், அவராகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார். “தல பூ படத்தில் சூப்பரா நடிச்சிருந்தார் தெரியுமா” என்றார்.
“இல்ல மகேசு.. நான் படம் பார்க்கலைபா, சரி என்னவா நடிச்சிருக்காரு”
“ச்சே என்ன ஆளு நீ, பூ படம் பார்க்கலையா”
“இல்லய்யா பார்க்கல, தப்புதான்... சரி என்ன கேரக்டர்ல நடிச்சிருக்காரு”
“ஹீரோவோட அப்பா தல, பேனாக்காரர்னு சொல்லுவாங்க”
“ஓ... நானும் டிவியில பார்த்திருக்கேன் மகேசு, வண்டி ஓட்டுவாரா ஒரு சீன்ல”
“ம்ம்ம் பார்த்திருக்கேல, சூப்பர நடிச்சிருக்கார்தானே, அப்போ சூப்பரா பேசுவார்தானே”
“மகேசா, காமராஜ் கிட்டே கேட்டேன், கலக்கலா பேசுவாரம், கவலைய விடு” என்றேன்
அதுமுதல் தினம் தினம் அவரிடம் பேசுவதும், “அய்யா... எப்போ கிளம்பறீங்க, எப்படி வரப்போறிங்கனு” லட்சுமண பெருமாள் அவர்களே பயப்படும் அளவிற்கு நம்ம ஆளு அவர வரவேற்க தயாராயிட்டாரு.
வியாழக்கிழமை காலையிலேயே நம்ம கைப்புள்ள போன் செய்து “தல, நம்மாளு மத்தியானம் ட்ரெய்ன்ல வாறாரு, நீங்களும் நானும்தான் பிக்கப் பண்ண போகனும்” என்றதோடு காலை பத்து மணிக்கே என் அலுவலகம் வந்து விட்டார்.
ஒரே குஷியாக தென்பட்டார், போனை எடுத்து நெம்பரைப் போட்டு “அய்யா, எங்கிட்டு வர்றீங்க” என ஆவலோடு கேட்டார். (நம்மாளுக்கு சொந்த ஊர் போடிநாயக்கனூர்),
“தல அவரு திண்டுக்கல்லு தாண்டிட்டாராம், எப்படியும் ஒரு மணிக்கு வந்துருவார்னு” நினைக்கிறேன்.
பக்கத்தில இருந்த நண்பர்களில் ஒருவர் கேட்டார் “யாருங்க, என்ன விஷயம்”
“அட உங்களுக்கு தெரியாத, இன்னைக்கு எங்க லயன்ஸ் மீட்டிங்கு லட்சுமண பெருமாள்னு ஒருத்தர் வார்றாருங்க, பூ படத்தில கூட நடிச்சிருக்காரு, சூப்பரா பேசுவாராம்”
“ஓ... படத்தில என்னவா நடிச்சிருக்காரு”
“அதாண்ணே, அந்த வண்டிக்காரரா வருவாரில்ல, பேனாக்காரர்னு கூட கூப்பிடுவாங்கல்ல, நல்ல கருப்பா, களையாக, நம்ம நாகராஜ் மாதிரி அழகா இருப்பாரு தெரியுமா?”
பக்கத்தில இருந்த நாகராஜ் திக்கென அதிர்ச்சியோட பார்க்க
நான் பொறுக்க முடியாம “ஏ மகேசா... நாகராஜை ஏன் இதுல இழுக்கிற, அதுதான் மத்யானம் வந்துடுறாருல்ல, யாருன்னுதான் பார்த்துடுவோம்”
“தல ஒன்னு தெரியுமா, அந்த ஏரியாக்காரங்களே நல்லா கருப்பா, களையா இருப்பாய்ங்க, இன்னொன்னு தெரியுமா கருப்பா இருக்குறவங்கதான் சூப்பரா பேசுவாங்க தெரியுமா”
அட ஆமா! நம்மாளு லாஜிக்காத்தான் பேசுறாரே, அப்பிடின்னு நானும் கொஞ்சம் கொஞ்சமாக மகேஸ்வரன் பேச்சில் மயங்க, டிவியில் பார்த்த “பூ” பட பேனாக்காரர் என் மனதிற்குள் வண்டியோட்ட ஆரம்பித்துவிட்டார்.
சிறிது நேரத்தில் தன்னுடைய எடுத்து வருவதாகக் கூறி என்னை ஸ்டேஷனுக்கு போக தயார இருக்கச் சொல்லி விட்டு வீடு வரை சென்று விட்டார்.
நானும் ஆர்வம் தாங்காமல் நண்பர் காமாராஜ்க்கு போனை போட்டு “தலைவா, இந்த லட்சுமண பெருமாள் எப்படிங்க இருப்பாரு”
“ஏன் தோழா என்னாச்சு” எனக்கேட்டார்
“இல்லைங்க, பூ படத்தில என்ன கேரக்டர்லே நடிச்சாரு”
“ஹீரோக்கு மாமனா வருவாருங்க”
“ஓ... அந்த பேனாக்காரர் கேரக்ட்டரா” எல்லாம் கைப்புள்ள புண்ணியம்.
“இல்ல தோழா! மாமன் கேரக்டர்ல வருவாரு, ஏன் நீங்க படம் பார்க்கலியா”
“சும்மா கேட்டேன் தலைவா, இன்னிக்கு எங்க கூட்டத்துக்கு வந்துட்டிருக்காரு, அதான் கேட்டேன். எப்படி இருப்பாரு கருப்பா இருப்பாருங்ளா”
“நல்லா கேட்டீங்க போங்க, சும்மா செவச்செவனு, ஒசரமா, வெள்ளை வேட்டி சட்டையில சும்மா பளிச்சுனு வருவாரு பாருங்க”
எனக்குள் ஓடிக்கொண்டிருந்த பேனாக்காரர் வண்டி குடை சாய்ந்தது போல் இருந்தது.
“மவனே, மகேசா வாடா... உனக்கு இருக்கு இன்னைக்கு” என்று மனதிற்குள் கொதித்துக் கொண்டு காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில் போன் வந்தது “தல ட்ரெயின் வந்திருச்சாம், வெளிய வாங்க, நான் வந்திட்டிருக்கிறேன், அப்படியே போய்டலாம்”
மனதிற்குள் கருப்பு சிவப்பான மேட்டர சொல்லலாமா வேண்டாமா என்று நினைப்பதற்குள்
“மவனே நாலு நாள வண்டிக்காரர், பேனாக்காரர்னு கொன்னியே, அனுபவினு” நினைச்சிக்கிட்டு
“மகேசா, நான் ஓட்றேன், நீ அவர ரிசீவ் பண்ணி, ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு வாங்க” னு நான் காரை பிடுங்கிக் கொண்டேன்.
“அய்யா எங்கிருக்கீங்க, இதோ முன்னாடிதான் இருக்கோம், அப்படியே வெளியே நடந்து வாங்க, ம்ம்ம், நான் செவப்பு சட்ட போட்ருக்கேன்” நம்ம கைப்புள்ள ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்திட்டிருந்தார்.
“நான் அப்படி ஓரமா நிக்கிறேன்” என வண்டியோடு நகர்ந்தேன்
இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை, போன் அடித்தது எடுத்தால் நம்ம கைப்புள்ள.
“தல அய்யா வந்திட்டாரு, வண்டிக்காரர் இல்ல தல, எண்ணை மில் காரரு இவுரு”
“மகேசா நான் தான் படம் பார்க்கலையே, எனக்கெப்படித் தெரியும்” என்று பேசி முடிப்பதற்குள்
“அய்யா... வாங்க, முன்னால உட்காருங்க” என்று கதவு திறந்து, அவரை ஏற்றிவிட்டு சடக்கென பின் சீட்டில் பாய்ந்து உட்கார்ந்து, பின் பக்கமாய் தலையைச் சாய்த்தார்.
“கண்ணாடி வழியே மகேஸ்வரனைப் பார்த்தேன்” தலையை இட வலமாய் சிலுப்பிக் கொண்டிருந்தார்.
“ம்... கைப்புள்ளைக்கு இப்போதான் கண்ணக் கட்டும் போல”னு மனசில நினைச்சிக்கிட்டு வண்டிய ஸ்டார்ட் செய்தேன்
“ நீங்க காமராஜ் பிரண்டுங்களா” என்றார் லட்சுமண பெருமாள்
“ஆமாங்க, பிளாக்ல எழுதறது மூலமா, அவரு நண்பருங்க, ஆனா ரொம்ப நல்ல நண்பருங்க” என்றேன். பேனாக்காரர் இவரில்லை என்று சொல்லிய புண்ணியத்திற்காக.
டிஸ்கி:
1. சிவப்பாக இருந்தாலும், லஷ்மண பெருமாள் அவர்கள் அற்புதமாக, சிரிக்க சிரிக்க, கரிசல் காட்டு மொழியில் பேசி அசத்தினார்.
2. இன்று காலையில் வந்த கைப்புள்ள “தல ஒருதடவையாவது அந்த பேனாக்காரர நம்ம மீட்டிங்குக்கு கூட்டிட்டு வந்திடனும்” என்றார் ஒரு வித ஏக்கத்துடன்
-------------------------------------------------------------------------
கருத்தை பதிவு செய்யுங்கள். தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
32 comments:
மனுசன் வலையில இல்லங்றதுக்காக, எப்படி வேணாலும் எழுதிடறதா?
கருப்பு karuppu : (page 760)
கருப்பிணி karuppiṇi
, n. < garbhiṇī. Pregnant woman. See கர்ப்பிணி.
கருப்பு karuppu
, n. < கரு-மை. [T. karuvu.] Famine, dearth, scarcity; பஞ்சம். மழையின்றிப் பசையில்
கறுப்பு kaṟuppu
, n. < கறு-. [M. kaṟuppu.] 1. Blackness, darkness
உடனே, வழக்கத்துல கருமைன்னுதான் எல்லாரும் சொல்றாங்கன்னு மொடக்கடி பேசப்படாது..... கறுப்பு unambigutious, கருப்பு ambigutious as it has many meaning...
ஆனா, உங்க தலைப்பு சொல்ல வர்றது சரி.... கருப்பா, பொருள்க் கரு நிறைந்தவங்களால நிறையாப் பேசமுடியும்.... இஃகிஃகி! எப்பூடி!
கதிர்,
பூ திரைப்பட வெற்றிக்குக் கோவையில் ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அதில் பேசியவர்களிலேயே லட்சுமணப் பெருமாள்தான் நன்றாகப் பேசினார். மனிதர் ஒரு வாசகம் பேசினால் இரண்டுமுறை சிரிக்க வைக்கிறார். பழகுவதற்கு இனியவர்.
// பழமைபேசி said...
மனுசன் வலையில இல்லங்றதுக்காக, எப்படி வேணாலும் எழுதிடறதா?//
தப்புதான் மாப்பு
ஆனா எப்பிடியோ மாப்புவ வெளிய கொண்டுட்டு வந்துட்டம்ல
//உடனே, வழக்கத்துல கருமைன்னுதான் எல்லாரும் சொல்றாங்கன்னு மொடக்கடி பேசப்படாது.....//
அதென்னமோ பழகிப்போச்சுங்க
//ஆனா, உங்க தலைப்பு சொல்ல வர்றது சரி.... கருப்பா, பொருள்க் கரு நிறைந்தவங்களால நிறையாப் பேசமுடியும்.... இஃகிஃகி! எப்பூடி!//
இது சூப்பரு... மெயில்ல போட்டிருந்தீங்கனா சாமாளிச்சிருப்பேன்...
இங்கியே ஆப்பு வைத்ததால் மாப்புக்கு ஒரு பகிரங்க நன்றி
// வடகரை வேலன் said...
பூ திரைப்பட வெற்றிக்குக் கோவையில் ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அதில் பேசியவர்களிலேயே லட்சுமணப் பெருமாள்தான் நன்றாகப் பேசினார். மனிதர் ஒரு வாசகம் பேசினால் இரண்டுமுறை சிரிக்க வைக்கிறார். பழகுவதற்கு இனியவர்.//
வாங்கண்ணே... முதல் தடவையா வந்திருக்கீங்க...
இங்கேயும் அற்புதமாகப் பேசினார்,
சில கூட்டங்களில், சிலர் பேசும்போது எப்படா முடிப்பாங்க என்றிருக்கும்.
இவர் எப்போ முடிச்சிடுவாரோ என்று திக் திக்கென்று இருந்தது.
நன்றி @@ வடகரை வேலன்
அய்யய்யோ....கதிர்....
,,,,வாத்தியார்...அதான் கதிர் தமிழ் வாத்தியார் வந்திட்டாராட்ட இருக்குதே.....தென்ன பன்றதுன்னு தெரியல....நான் வேற கண்டபடி எழுதி வச்சுபுட்டனே.....என்னய கேள்வி கேட்ட நான் தென்ன பண்டுவேன்....
கதிர்,
மகேச இப்படியா கலாய்க்கறது...ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்.....
அவ்வ்வ்......
இனி மகேச எப்ப பார்த்தாலும் இந்த பேனாக் காரர் கததான் ஞாபகம் வரும்.
சூப்பர்
அன்புடன்
ஆரூரன்
நல்ல பகிர்வு கதிர் நான் இதுமாதிரி சொற்பொழிவுகள் எல்லாம் கேட்டதில்லையே
:(
தோழா அப்டியே பக்கத்தில் இருந்ததுபோலவும் கூடவே அழைத்துக்கொண்டுப்போனது போலவும் இருக்கு உங்கள் பதிவு.
பேனாக்காரர், சென்னைக்கலைக்குழு நாடக நடிகர், முன்னதாக அன்பே சிவம், சேரனின் படத்தில் அச்சகத்தில் ராஜ்கிரனுக்கு உதவியாளராக வருவார். தவிரவும் மரணகானா விஜி எனும் ஆவணப்பட இயக்குனரும் கூட.
நம்ம பங்குக்கு குத்தஞ்சொல்ல வந்துட்டம்ல.
/அதனாலதான் என்கூட எல்லாம் குப்ப கொட்ட முடியாது./
முடியாதா முடியுதா?
/சிறிது நேரத்தில் தன்னுடைய எடுத்து வருவதாகக் கூறி/
தன்னுடைய எதை? ஆனா பாருங்க சூதானமா படிச்சதால காருன்னு கண்டு புடிச்சிட்டதா நெனப்பு. சரிதானா?
கடைசியில அவரு பேனாக் காரரா, மாமனா, எண்ணெய் மில் காரரா?
இனிமே பேசக் கூப்பிட்டா யாராச்சும் வருவாங்களா? பேச வரதையே இப்படி சிரிக்க சிரிக்க எழுதறவங்க கிட்ட போய் என்னாத்த பேசுறதுன்னு ஆய்டுமே.
//ஆரூரன் விசுவநாதன் said...
,,,,வாத்தியார்...அதான் கதிர் தமிழ் வாத்தியார் வந்திட்டாராட்ட இருக்குதே.....தென்ன பன்றதுன்னு தெரியல....நான் வேற கண்டபடி எழுதி வச்சுபுட்டனே.....என்னய கேள்வி கேட்ட நான் தென்ன பண்டுவேன்....//
அவருதான் இன்னோ அங்கே வரிலியே... அப்புறம் எதுக்கு ஆப்பத் தேடிப் போறீங்க ஆரூரன்
//மகேச இப்படியா கலாய்க்கறது...ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்.....
அவ்வ்வ்......
இனி மகேச எப்ப பார்த்தாலும் இந்த பேனாக் காரர் கததான் ஞாபகம் வரும்.//
மகேசு எங்க செல்லபிள்ளைங்க
ஆனாலும் கைப்புள்ளைக்கு இது கம்மி
நன்றி @@ ஆரூரன்
//பிரியமுடன்...வசந்த் said...
நல்ல பகிர்வு கதிர் நான் இதுமாதிரி சொற்பொழிவுகள் எல்லாம் கேட்டதில்லையே//
அடப்பாவமே
வாய்ப்பு கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க
நன்றி @@ வசந்த்
//காமராஜ் said...
தோழா அப்டியே பக்கத்தில் இருந்ததுபோலவும் கூடவே அழைத்துக்கொண்டுப்போனது போலவும் இருக்கு உங்கள் பதிவு.
பேனாக்காரர், சென்னைக்கலைக்குழு நாடக நடிகர், முன்னதாக அன்பே சிவம், சேரனின் படத்தில் அச்சகத்தில் ராஜ்கிரனுக்கு உதவியாளராக வருவார். தவிரவும் மரணகானா விஜி எனும் ஆவணப்பட இயக்குனரும் கூட.//
விபரங்களுக்கு நன்றி தலைவா
இது குறித்து உங்களோடு பேசுகிறேன்.
நன்றி @@ காமராஜ்
//வானம்பாடிகள் said...
நம்ம பங்குக்கு குத்தஞ்சொல்ல வந்துட்டம்ல.
/அதனாலதான் என்கூட எல்லாம் குப்ப கொட்ட முடியாது./
முடியாதா முடியுதா?
குப்ப கொட்ட முடியுது
குப்ப கொட்ட முடியுது
குப்ப கொட்ட முடியுது
எல்லாம் கைப்புள்ளையோட சாபம்போல இருக்கு
//தன்னுடைய எதை? ஆனா பாருங்க சூதானமா படிச்சதால காருன்னு கண்டு புடிச்சிட்டதா நெனப்பு. சரிதானா?//
நீங்க புத்திசாலிங்கண்ண அதுனாலதான் தெளிவா எழுதல
//கடைசியில அவரு பேனாக் காரரா, மாமனா, எண்ணெய் மில் காரரா?//
மாமன் / எண்ணெய் மில் காரரா ஒன்னுதானாம்
சீக்கிரம படத்தைப் பார்த்து தெளிவாயிடறேன்
//இனிமே பேசக் கூப்பிட்டா யாராச்சும் வருவாங்களா? பேச வரதையே இப்படி சிரிக்க சிரிக்க எழுதறவங்க கிட்ட போய் என்னாத்த பேசுறதுன்னு ஆய்டுமே.//
எல்லாம் எங்க கைப்புள்ள புண்ணியம்தான்... அதுதான் சொன்னனே கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் ஆர்வம் ஜாஸ்தினு
நன்றி @@ பாலாண்ணா
கதிர்,
உங்க கூடவே இருந்த மாதிரி அழகான நடை.டிஸ்கிவரை ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது.
நகைசுவையா எழுத வராதுன்னு சொன்ன அந்த முகத்தை நேரில் பார்க்கணுமே.அவ்வப்போது இப்படியும் எழுதுங்க.
சுவாரஸ்யமான பதிவு. லட்சுமணப் பெருமாள் பற்றி தெரிந்து கொண்டேன் கூடவே தங்களின் நண்பர்களின் நகைச்சுவையும்.
//நல்ல கருப்பா, களையாக, நம்ம நாகராஜ் மாதிரி அழகா இருப்பாரு தெரியுமா?”//
சந்தடி சாக்குல நாகராஜ்ங்கிறவர வைச்சு கும்மியடிச்சிட்டீங்க...பாவம் அந்த மனுஷன்...
நல்லவேளை நீங்களாவது போன்பண்ணி அவர பத்தி கேட்டீங்க...இல்லன்னா ரெண்டுபேரும் அசடு வழியிர மாதிரி ஆயிருக்கும்...
நல்லாருக்கு உங்களின் அனுபவபகிர்வு...
அடடா...அத மிஸ் பண்ணிட்டனே....பாலாஜி, சரியாச் சொன்னீங்க.... எந்த நாகராஜ் கதிர்...?
// நாடோடி இலக்கியன் said...
உங்க கூடவே இருந்த மாதிரி அழகான நடை.டிஸ்கிவரை ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது.
நகைசுவையா எழுத வராதுன்னு சொன்ன அந்த முகத்தை நேரில் பார்க்கணுமே.அவ்வப்போது இப்படியும் எழுதுங்க.//
பாரி, நேத்து நடந்ததை நினைச்சு நினைச்சு இன்னும் சிரிக்கிறேன்.
நகைச்சுவை எழுதினேன் என்று சொல்வதற்கு நன்றி.
அடுத்த வாரம் திருப்பூர் வர்றேன், பாருங்கா ஆனா பயந்திடுவீங்க..
நன்றி @@ பாரி
//வெ.இராதாகிருஷ்ணன் said...
சுவாரஸ்யமான பதிவு. லட்சுமணப் பெருமாள் பற்றி தெரிந்து கொண்டேன் கூடவே தங்களின் நண்பர்களின் நகைச்சுவையும்.//
நன்றி @@ இராதாகிருஷ்ணன்
// க.பாலாஜி said...
சந்தடி சாக்குல நாகராஜ்ங்கிறவர வைச்சு கும்மியடிச்சிட்டீங்க...பாவம் அந்த மனுஷன்...//
இத போஸ்ட பண்ணறதுக்கு முன்னாடி நாகாராஜை கூப்பிட்டு படிங்கனு சொன்னேன், அவருதான் அப்புறம் படிச்சிக்கிறேனு சொன்னார்
//நல்லவேளை நீங்களாவது போன்பண்ணி அவர பத்தி கேட்டீங்க...இல்லன்னா ரெண்டுபேரும் அசடு வழியிர மாதிரி ஆயிருக்கும்...//
நான் படம் பார்க்காததால் அவ்வளவு பிரச்சனையில்லை
//நல்லாருக்கு உங்களின் அனுபவபகிர்வு...//
நன்றி @@ பாலாஜி
//ஆரூரன் விசுவநாதன் said...
அடடா...அத மிஸ் பண்ணிட்டனே....பாலாஜி, சரியாச் சொன்னீங்க.... எந்த நாகராஜ் கதிர்...?//
எங்க பில்டிங் ஓனர் நாகாராஜ் தானுங்க அவரு. அவரு கலராத்தான் இருப்பாருங்க, கைப்புள்ளதான் ஆர்வத்திலே போட்டுத்தள்ளிட்டாரு
//கருப்பா இருக்குறவங்கதான் சூப்பரா பேசுவாங்க//
இதை நான் கருமையாக .. மன்னிக்கணும் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..
//“அடுத்த கூட்டத்திற்கு பேச்சாளர் யாருங்க”//
ஓ..! மேடைப் பேச்ச சொல்லுறீங்களா.. அப்டின்னா செரியா இருக்கலாம்...
//நான் பொறுக்க முடியாம//
நல்ல உள்ளம்...
//
1. சிவப்பாக இருந்தாலும், லஷ்மண பெருமாள் அவர்கள் அற்புதமாக, சிரிக்க சிரிக்க, கரிசல் காட்டு மொழியில் பேசி அசத்தினார்.//
பெருமாளே.. வெள்ளைக்காரன் மானத்த காப்பாத்திட்டீரையா...!
சுவாரசியமான பதிவு. லட்சுமனப்பெருமாளைப்பத்தி எழுத ஆரம்பித்தாலே, நகைச்சுவை வந்துடுமோ...! அவர்து கதைகள் படித்திருக்கிறீர்களா? சிரித்துக்கொண்டே இருப்ப்பீர்கள், சட்டென்று அழுதிடுவீர்கள். இன்று தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்.
கலக்கல் பதிவு கதிர். இந்த வகை நடையும் அருமையாக வந்துள்ளது.
"பூ" படத்தில் பேனாக்காரரின் நடிப்பு அருமையாக இருக்கும்.
கறுப்பாக இருக்கும் பேனாக்காரின் குடும்பம் கருப்பு நிலையால் துன்பப்பட்டனர் படத்தில் :)
ஜனரஞ்சகமான பேச்சாளர்... ஒட்டுவாரொட்டி,பாலகாண்டம் என்ற இரண்டு தொகுப்புகளில் வேறு உயரங்களை தொட்டிருக்கிறார்.( நமக்கும் சாத்தூர்தாங்க..)
//கலகலப்ரியா said...
இதை நான் கருமையாக .. மன்னிக்கணும் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..
ஓ..! மேடைப் பேச்ச சொல்லுறீங்களா.. அப்டின்னா செரியா இருக்கலாம்...
நல்ல உள்ளம்...
பெருமாளே.. வெள்ளைக்காரன் மானத்த காப்பாத்திட்டீரையா...!//
இருங்க இருங்க... கைப்புள்ள இப்போதான் கம்ப்யூட்டர் கத்துகிட்டு இருக்கு, அப்புறம் பாருங்க... கருப்பா / சிவப்பானு பட்டிமன்றம் நடத்தச் சொல்றேன் உங்க கூட
நன்றி @@ பிரியா
//மாதவராஜ் said...
சுவாரசியமான பதிவு. லட்சுமனப்பெருமாளைப்பத்தி எழுத ஆரம்பித்தாலே, நகைச்சுவை வந்துடுமோ...! அவர்து கதைகள் படித்திருக்கிறீர்களா? சிரித்துக்கொண்டே இருப்ப்பீர்கள், சட்டென்று அழுதிடுவீர்கள். இன்று தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர்.//
ஆமாங்க...
இன்னும் கதைகள் படித்ததில்லை... இனி தேடிப்படிக்கிறேன்
அன்று உங்களையும் கைபேசியில் மீண்டும் மீண்டும் அழைத்தேன்
நன்றி @@ மாதவராஜ்
//ச.செந்தில்வேலன் said...
கலக்கல் பதிவு கதிர். இந்த வகை நடையும் அருமையாக வந்துள்ளது.
"பூ" படத்தில் பேனாக்காரரின் நடிப்பு அருமையாக இருக்கும்.
கறுப்பாக இருக்கும் பேனாக்காரின் குடும்பம் கருப்பு நிலையால் துன்பப்பட்டனர் படத்தில் :)//
எங்க கைப்புள்ளைக்கு கறுப்புமேல் ஒரு காதலே வந்துவிட்டது
பகிர்வுக்கு நன்றி @@ செந்தில்
//velji said...
ஜனரஞ்சகமான பேச்சாளர்... ஒட்டுவாரொட்டி,பாலகாண்டம் என்ற இரண்டு தொகுப்புகளில் வேறு உயரங்களை தொட்டிருக்கிறார்.( நமக்கும் சாத்தூர்தாங்க..)//
வாங்க வேல்ஜி...
தேடிப் படிக்கிறேன்
நன்றி @@ வேல்ஜி
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் கதிர். விவரித்தலில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...
சுவராஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது, வாழ்த்துக்கள்...
பிரபாகர்.
ரொம்ப நன்னா இருக்கு,பேஷ் பேஷ்
நல்ல பகிர்வு!
நன்றி.
:-)
:) நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..
//பிரபாகர் said...
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் கதிர். விவரித்தலில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...//
நன்றி @@ பிரபா
//PEACE TRAIN said...
ரொம்ப நன்னா இருக்கு,பேஷ் பேஷ்//
நன்றி @@ PEACE TRAIN
//Deepa
நல்ல பகிர்வு!//
நன்றி @@ தீபா
//முத்துலெட்சுமிsaid...
:) நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..//
நன்றி @@ முத்துலெட்சுமி
இன்னைக்கு மெளனம் கசியவும் இல்லை; கலையவும் இல்லை! போடா பழமை போ, உனக்குத்தான் நெறைய வேலை இருக்கே...போய்ப் பாரு போ.....
கைப்புள்ள நினைச்சுருப்பாரு வடை போச்சேன்னு
//பழமைபேசி said...
இன்னைக்கு மெளனம் கசியவும் இல்லை; கலையவும் இல்லை! போடா பழமை போ, உனக்குத்தான் நெறைய வேலை இருக்கே...போய்ப் பாரு போ.....//
சீக்கிரம் கலைச்சிடறேன் மாப்பு... வேலை பிடனி மேல் உட்கார்ந்து அழுத்திக் கொண்டிருக்கிறது
//நாஞ்சில் நாதம் said...
கைப்புள்ள நினைச்சுருப்பாரு வடை போச்சேன்னு//
இஃகிஃகி
நன்றி @@ நாஞ்சில் நாதம்
//நாஞ்சில் நாதம் said...
கைப்புள்ள நினைச்சுருப்பாரு வடை போச்சேன்னு//
இஃகிஃகி
நன்றி @@ நாஞ்சில் நாதம்
நகைசுவையோடு கூடிய குறும்பான எழுத்துநடை அசத்தல்...நேரில் நடந்ததை பார்த்தது போல் இருந்தது...சூப்பர்
Post a Comment